Aug 14, 2013

இந்த உலகம் ஆப்புகளால் சூழப்பட்டிருக்கிறது

சென்ற வாரத்தில் ஒரு நாள் டைரக்டரிடம் இருந்து ஃபோன் வந்தது. சினிமா டைரக்டர் எல்லாம் இல்லை. எங்கள் நிறுவனத்தில் இருக்கும் பல டைரக்டர்களில் அவரும் ஒருவர். அவரது டீமில்தான் முன்பு வேலை செய்தேன். ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த புது டீமுக்கு மாற்றிவிட்டார்கள். அவர்கள் வேறொரு கட்டடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு கட்டடத்தில் நான் வேலை செய்கிறேன். டைரக்டர் தெலுங்குக்காரர். ரவிதேஜா பற்றியும், பாலகிருஷ்ணா பற்றியும் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார். தெலுங்கானாவின் தீவிர ஆதரவாளர்.

இவர் எதற்கு ஃபோன் செய்கிறார் என்ற குழப்பத்துடனேயேதான் எடுத்தேன். அதுவும் மத்தியான நேரம்.

“மணி, நாங்க லன்ச்சுக்கு கிளம்பிட்டோம்” என்று நிறுத்தியவர் பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரிடம் “எந்த ஹோட்டல்ன்னு சொன்னீங்க?” என்று கேட்டுவிட்டு “ஆங், இந்திராநகர்லதானே....நீ வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்றார். பெரிய மனிதரே அழைக்கிறார், போகாவிட்டால் மரியாதை இருக்காது, அதைவிடவும் முக்கியமானது இத்தகைய பெருந்தலைகளுடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு கிடைப்பதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. ஆனால் ‘என்னை எதற்கு அழைக்கிறார்’ என்பதுதான் குழப்பமாக இருந்தது. அடுத்த சில மைக்ரோ செகண்ட்களுக்கு குழப்பத்தை ஒதுக்கிவிட்டு “இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் சார்” என்றேன். ஒருவேளை தெலுங்கானாவின் வெற்றிக்கான ட்ரீட்டாக இருக்கும் என்று தோன்றியது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். எங்கள் வீட்டில் கூட்டுக் குடும்ப முறைதான். எனது மனைவியின் தங்கையைத் தான் எனது தம்பி திருமணம் செய்திருக்கிறான் என்பதால் வீட்டிற்குள் பெரிய அரசியல் எதுவும் நடப்பதில்லை. அம்மா, அப்பாவும் எங்களுடனேயேதான் தங்கியிருக்கிறார்கள். சம்பளம் வந்த இரண்டாவது நாளில் பெட்ரோல் செலவுக்கும், ஐந்து பத்து கை செலவுக்கும் போக பைசா மிச்சமில்லாமல் தம்பியிடம் கொடுத்துவிடுவேன். வீட்டுக்கடனில் ஆரம்பித்து கரண்ட் பில் கட்டுவது வரை அத்தனையும் அவனுடைய வேலை. 

குழந்தைகளை அம்மா பார்த்துக் கொள்கிறார். கடைச் செலவு, காய்கறி வாங்குவதெல்லாம் அப்பாவின் டிபார்ட்மெண்ட். என் மனைவிதான் வீட்டுச் சமையலுக்கு பொறுப்பு. தம்பியின் மனைவி அவருக்கு சமையலில் உதவுவார். ஆக மொத்தம் வீட்டில் அத்தனை பேருக்கும் ஏதாவது வேலை உண்டு- என்னைத் தவிர. அதனால்தான் ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கினால் கூட ‘இதுக்குத்தான் இவன் லாயக்கு’ என்று நக்கலடிப்பார்கள். 

சரி இந்த சொந்தக் கதை எதற்கு என்றால்- எந்த நேரத்திலும் என் கையில் அதிகபட்சம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்தான் இருக்கும் என்பதைச் சொல்லத்தான்.  அப்படியான ஒரு நன்னாள்தான் இந்த டைரக்டர் அழைத்ததும். அவராகத்தான் கூப்பிடுகிறார் என்றாலும் அந்த மாதிரியான இடங்களுக்கு பணம் இல்லாமல் போவது நல்லது இல்லை என்பதால் நண்பனிடம் பணம் கேட்டேன். கையில் இல்லையென்றும் ஏடிஎம் கார்டை வைத்துக் கொள் என்றும் கொடுத்துவிட்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் ரெஸ்டாரண்டுக்குச் சென்றாகிவிட்டது. தாறுமாறாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். இந்த ஹோட்டல் நடத்துபவர்களின் கிரியேட்டிவிட்டிக்கு இணையாக வேறு யாரிடமும் க்ரியேட்டிவிட்டி இல்லை எனத் தோன்றுகிறது. மீன் தொட்டி, தண்ணீர் ஊற்று என்பதெல்லாம் அந்தக் காலத்திய சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சுவர் அலங்காரத்தில் ஆரம்பித்து லைட்டிங், கழிவறை வடிவமைப்பு என எல்லாவற்றிலுமே பட்டையைக் கிளப்புகிறார்கள். கிளப்பாமல் என்ன? ஒரு ஆளுக்கு அறுநூற்றுச் சொச்சம் ரூபாய்க்கு பில் போடுகிறார்கள்.  பஃபே சிஸ்டம். இந்த பொக்கனாத்தி சிஸ்டத்தை எவன் கண்டுபிடித்தான் என்று தெரிந்தால் அவனை அடிப்பதற்காக நான்கைந்து பேரை ஆட்டோவில் அனுப்பி வைக்கலாம். இந்த முறையில் சாப்பிடுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் உணவை வீணடிக்கிறார்கள். ஐந்து ரூபாய் கிடைத்தால் ஒருவேளை சோறு தின்ன முடியுமா முடியாதா என சண்டை போடும் அற்புத தேசத்தில்தான் ஒரு வேளை சோற்றுக்கு அறுநூற்றுச் சொச்சம் கொடுத்து வீணடிப்பவர்களும் வாழ்கிறார்கள். தெருவில் நிற்க வைத்துச் சுட வேண்டும். என்னை மட்டும் வலி கொடுக்காத துப்பாக்கி இருந்தால் சுட்டுக் கொல்லுங்கள்.

டைரக்டர் அண்ட் குழாம் எனக்கு முன்பாகவே வந்திருந்தார்கள். டைரக்டர், இரண்டு சீனியர் மேலாளர்கள், அப்புறம் நான்கு டீம் லீடர்கள். இவர்கள் எல்லோரிடமும் வேலை செய்திருக்கிறேன் என்பதால் பெரிய சங்கோஜம் இல்லை. இயல்பாக கை கொடுத்துவிட்டு ஆளாளுக்கு தட்டு ஒன்றைத் தூக்கிக் கொண்டோம். ஸ்டார்ட்டர் என்று சில்லி சிக்கன், மீன் வறுவல் எல்லாம் வைத்திருந்தார்கள். தனியாக ஹோட்டலுக்கு போகும் போது நூற்றைம்பது ரூபாய் பிரியாணி வாங்கக் கூட கை கூசும். ஆனால் இப்படி யாராவது ஓசி பார்ட்டி தரும் சமயங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தின்றுவிடுவது வழக்கம்- காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி- மீன் வறுவலையும், சிக்கனையும் மிக்சராக்கித் தின்று கொண்டிருக்கும் போது ‘புது டீம் எப்படியிருக்கிறது?’ ‘குடும்ப வாழ்க்கை எப்படி போகிறது?’ என்றெல்லாம் விசாரித்தார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதை விடவும் மற்ற ஐட்டங்களை ஒரு கை பார்ப்பதுதான் முக்கியமானதாகத் தெரிந்தது. அரைகுறையாக பதில் சொல்லிக் கொண்டே வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தேன். 

ஸ்டார்ட்டர் முடிந்த பிறகு மெயின் பிக்சர். தட்டில் பிரியாணியை நிரப்பிவிட்டு வந்து அமரும் போது கிட்டத்தட்ட எல்லோரும் மெயினுக்கு வந்திருந்தார்கள். டைரக்டரும் பிரியாணிப் ப்ரியர். எண்ணிப்பார்த்தால் எனது தட்டில் இருந்ததைவிட பதினோரு பருக்கையாவது அவரது தட்டில் அதிகமாக இருக்கும். பிரியாணிச் சட்டிக்குள் நல்ல லெக் பீஸாக நான் தேடிய போது கிடைக்கவில்லை. அது எப்படிக் கிடைக்கும்? நல்ல லெக் பீஸ் அத்தனையும் டைரக்டரின் தட்டில்தான் இருந்தது. ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.

ஒரு வாயை ஸ்பூனில் அள்ளி உள்ளே தள்ளிக் கொண்டு அவர்தான் ஆரம்பித்தார். ‘கங்க்ராட்ஸ் மணிகண்டன்’. எதற்கு வாழ்த்துச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ‘நன்றி’ என்றேன். ‘ஆனால்.....’ நான் முடிப்பதற்கு முன்பாகவே ‘ஆனால்....ஜனவரி மாதம் வாங்கிய ப்ரோமோஷனுக்கு ஆகஸ்டில் ட்ரீட் கொடுப்பது டூ மச்’ என்றார் இடையில் புகுந்த ஒரு மேனேஜர். தொண்டைக்குள் சிக்கியிருந்த இரண்டு பருக்கைகள் மண்டைக்குள் ஏறி புரை தட்டியது.  ‘ட்ரீட் கொடுக்கிறேன்’ என்று நான் சொல்லவே இல்லை. அப்படியானால் அந்த முடிவில்தான் இந்தக் கட்டு கட்டுகிறார்களா இந்தப் பாவிகள்? 

பில் எவ்வளவு வரும் என்று மண்டைக்குள் கணக்கு ஓட ஆரம்பித்துவிட்டது. எப்படியும் வரிகளோடு சேர்த்து ஒரு ஆளுக்கு எழுநூறு ரூபாயைத் தொடும். எட்டு பேருக்கு ஐயாயிரத்து அறுநூறு ரூபாய். காலுக்கு கீழாக உலகம் வழுக்கிக் கொண்டிருந்தது. நான் பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக இப்படி அழைத்து மிளகாய் அரைக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. நெற்றியில் இனாவானாவென்று எழுதி யாராவது ஒட்டி வைத்து தொலைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. கண்ணீர் வருவது போல இருந்தது. இது பணத்துக்கான கண்ணீர் மட்டும் இல்லை- ஏமாற்றத்துக்கான கண்ணீரும்.

அவர் குறிப்பிட்ட அந்த ப்ரோமோஷனும் சர்வசாதாரணமாகக் கிடைக்கவில்லை. இங்கு வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே ஒவ்வொரு வருடமும் கெஞ்சி கூத்தாடி மூன்றாவது வருடக் கடைசியில் கொடுத்தார்கள். சம்பள உயர்வு என்று கிள்ளிக் கொடுத்தார்கள். வயிறெரிந்து கிடந்தேன். நான் போராடி வாங்கிய பதவி உயர்வுக்கு இவர்களுக்கு எல்லாம் எதற்காக செலவு செய்ய வேண்டும் என்றுதான் புரியவில்லை. 

நல்லவேளையாக கையில் ஏ.டி.எம் கார்ட் இருந்து மானத்தைக் காப்பாற்றியது. அதுவும் இல்லையென்றால் அசிங்கப்பட்டிருக்க வேண்டும். ஏடிஎம் கார்டை உரைத்துவிட்டு கிளம்பும் போது ஆளாளுக்கு ‘தேங்க்ஸ்’ என்றார்கள். உங்கள் நன்றிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கத்தத் தோன்றியது. திரும்ப அலுவலகத்துக்கு போகும் போது ஏதோ பாரமாக இருந்தது. டைரக்டர் அளவில் கூட இப்படி மட்டமாக நடந்து கொள்வார்களா என்று குழப்பமாக இருந்தது. இனி யார் அழைத்தாலும் போய்விடக் கூடாது என்று நினைப்போடு அலுவலகத்தை அடைந்து கம்யூட்டரைத் திறந்தேன்.

ஒரு பன்னாடை மெயில் அனுப்பியிருந்தான். ‘இன்று நீ ட்ரீட் வைப்பதாகச் சொல்லி நாங்கள்தான் உனது மெயிலில் இருந்து சிலருக்கு மெயில் அனுப்பியிருந்தோம். எங்கள் திட்டம் மிகச் சரியாக நடந்து முடிந்தது குறித்து எங்களுக்கெல்லாம் பரம திருப்தி. Hope you had a good time with them. இனிமேல் எங்கு செல்வதாக இருந்தாலும் கம்ப்யூட்டரை லாக் செய்துவிட்டுச் செல்லவும்’.