Jul 21, 2013

Crazy கற்பனைகள்

நமக்கு சில Crazy விருப்பங்கள் இருக்கும் அல்லவா? நடக்கவே நடக்காது என்று தெரியும் இருந்தாலும் வெட்டியாக இருக்கும் போதோ அல்லது பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ Crazy ஆக கற்பனை செய்வதில் ஒருவிதமான இன்பம் இருக்கிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கைகளை வீசியபடியே பறந்து போவது போல; நம் முன் கடவுள் வருவது போல; முதலமைச்சர் ஆவது அல்லது சச்சின் டெண்டுல்கர் போலவோ ஆவது- இப்படியான Crazyக்களை படமாக்கி ஹாலிவுட்காரர்கள் ஜெயித்துவிடுகிறார்கள். ஸ்படைர்மேன், ஜூராஸிக்பார்க் எல்லாம் அந்த வகையறாதானே?

ரோபோடிக்ஸ் பற்றியும் இப்படி சில படங்கள் வந்திருக்கின்றனவாம். தேடிப்பிடித்து ஒரு படம் பார்த்துவிட்டேன். Youtube இல் கூட இருக்கிறது.


ரோபோ மனிதனாக மாறி ஒரு பெண்ணை உருகி உருகி காதலிப்பது. பஸ்களைக் கவிழ்த்தும், ஊரை அழித்தும் அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்வது என்று நீளும் ரோபோ பற்றிய அட்டகாசமான படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. ‘எந்திரனுக்கு’ இந்தப்படம் முப்பாட்டன். க்றிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்த படத்தின் பெயர் Bicentennial Man.    

தனது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். அந்த ரோபோவிற்கு “ஆண்ட்ரு” என்று பெயர். சுட்டியாகவும் அதே சமயம் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை மார்ட்டினின் மூத்த மகளுக்கு பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரியதான சற்றே பொறாமை கலந்த வெறுப்பின் காரணமாக ரோபோவை தங்களின் வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால் அவளது முயற்சிகளில் தோல்வியடைகிறாள். வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும் படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ரோபோதான் எஜமானியின் சொல்பேச்சைக் கேட்குமல்லவா? விளைவுகளைப் பற்றி கவலைப்படாத ஆண்ட்ரு எஜமானியின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பாலான பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.

வீட்டுக்கு வரும் மார்ட்டின் ஆண்ட்ருவின் நிலைமையை பார்த்து தாறுமாறாக டென்ஷனாகிறார். கோபமடையும் மார்ட்டின் ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு ஒரு செல்லப்பிராணியைப் போல நடந்துகொள்ளத் தொடங்குகிறது. மெதுவாக மார்ட்டின் குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பை பெற்று குடும்பத்தின் இன்னொரு உறுப்பினராக மாறுகிறது. மகள்களின் உற்றத்தோழனாக அவர்களோடு விளையாடத் துவங்குகிறது. 

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை தெரியாமல் உடைத்துவிடும் ஆண்ட்ரு அதே போன்ற பொம்மையை தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு சுயமாக சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்து கொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போல சிந்திக்கும் திறன் பெற்றிருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதுதான் மார்ட்டினின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதிர்ச்சியடைகிறார். ரோபோக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடக் கூடும் என்று அஞ்சுகிறார். ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.

ஆனால் ஆண்ட்ருவை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மார்ட்டின் அதை திரும்பவும் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அதோடு நில்லாமல் ரோபோவிற்கு மனிதனின் உணர்ச்சிகளை பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறத்துவங்குகிறது . மார்ட்டினிடம் இருந்து கற்றுக்கொண்ட மரவேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாக சம்பாதிக்கவும் ஆரம்பிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவிற்கு வருமானம் கொட்டத்துவங்குகிறது. இந்நிலையில் தனக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் மிகுந்த வேதனையுடன் அனுமதியளிக்கிறார். ஆண்ட்ரு வீட்டை விட்டு வெளியேறுகிறது.

தன்னைப்போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதை தேடியலையும் ஆண்ட்ரு கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவிற்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக்கையில் இருக்கும் போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு. அவளுக்காக சிறுவயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது ஆண்ட்ரு. அப்பொழுது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்கு காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தனது காதல் மிகுந்த சொற்களாலும் பிரியத்தின் வெளிப்பாடுகளாலும் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கத் துவங்குகிறாள். 

அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு. ஆனால் மூப்படையாத, இறப்பைச் சந்திக்காத யாரையும் மனிதனாக அறிவிக்க முடியாது என ஆண்ட்ரூவின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. இதன் பிறகாக ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தனக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மரணப்படுக்கையிலும் விழுகிறார். மனித  வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கி கிடக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பை பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார். போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காவியம் முடிவடைகிறது.

ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப்படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது. ஆசை, காதல், கோபம் என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களை பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியிருக்கிறது. மனிதனாக மாறும் ரோபோவின் உணர்வுகளையும் சிக்கல்களையும் தத்ரூபமாக்கிய Bicentennial Man படத்தின் தழுவல்தான் ரஜினியின் எந்திரன் என்ற பேச்சு கூட கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக் கூடும். 

அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.