Jul 19, 2013

மழை

இன்று Team Outing.

இது வழக்கமான ஒன்றுதான். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை வெளியே அழைத்துச் செல்வார்கள். கம்பெனி செலவை ஏற்றுக் கொள்கிறது. 

இன்று ஒரு வனாந்திரப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். பெங்களூரிலிருந்து வெகுதூரத்தில் அந்த இடம் இருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் பெங்களூருக்கும் கொள்ளேகாலுக்கும் இடையில்- கனகபுரா பக்கமாக. இந்த கனகப்புராவிற்கு போகும் வழியில்தான் ஸ்ரீ ஸ்ரீ- இரண்டு ஸ்ரீதானே?- ரவிஷங்கரின் ஆஸ்ரமம் இருக்கிறது. ஆற்றங்கரையோரமாகவோ அல்லது குளத்தோரமாகவோ நான்குXஐந்து அடிகளில் ஓலை வேய்ந்த கூரையோடு இருந்தால் அதை ஆஸ்ரமம் எனலாம். இதையெல்லாம் எப்படி ஆஸ்ரமம் என்பது? குத்துமதிப்பாக கணக்கு போட்டாலும் கூட கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர்கள் தேறும் என நினைக்கிறேன். ஒரு நுழைவாயிலுக்கும் அடுத்த நுழைவாயிலுக்கும் ஆட்டோ வைத்துத்தான் போக வேண்டும். பக்தர்களுக்கு அதிக சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக Gate-லேயே Auto Stand இருக்கிறது. 

நமக்கு எதுக்கு சாமியார்கள் பொல்லாப்பு? சாபம் விட்டுத் தொலைத்து விடுவார்கள். 

Team outing அல்லவா? அதற்கே வந்துவிடலாம். இன்று காலையில் ஏழரை மணிக்கெல்லாம் பஸ் வந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். நேற்றிரவே சளியும், காய்ச்சலும் தொண்டை வரைக்கும் வந்திருந்தது. ஊரெல்லாம் மழை. எதிரில் வருபவருக்கெல்லாம் சளி. நம்மை மட்டும் விட்டுவைக்குமா? நேற்று க்ரோசின் விழுங்கிவிட்டு படுத்திருந்தேன். விடியும் போது காய்ச்சலை துரத்தியாகிவிட்டது. ஆனால் தொண்டை வலியும் சளியும் க்ரோசினுக்குத் தப்பித்துவிட்டன. என்னிடமே தஞ்சம் அடைந்திருந்தன.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் ‘ரெடியா?’ என்று ஃபோன் வந்துவிட்டது. சளியோடும், இருமலோடும்தான் பஸ் ஏறினேன்.

பெங்களூரிலிருந்து ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் தாண்டி ஒரு மலைப்பகுதி கிராமம். அங்குதான் அழைத்துச் சென்றிருந்தார்கள். சென்றிருந்த ‘ஸ்பாட்டை’த் தவிர மற்ற எதுவும் உருப்படியாக இல்லை. கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து போவது, ஒரு பைப் வழியாக கோலி குண்டை இடம் மாற்றுவது என்று சலிக்க வைத்தார்கள். டீமுக்குள் ஒற்றுமையை வளர்க்கிறார்களாம். இந்த ‘ட்ரிப்’க்கு ஒரு ஆளுக்கு எண்ணூற்றைம்பது ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது என்று சொல்லலாம்தான். ஆனால் ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியா கிட்ட போனேன்’ என இவன் எழுதுகிறான் என்று நாளைக்கு யாராவது சொல்வார்கள். அதனால் அமைப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை நீங்களும் மறந்துவிடுங்கள்; நானும் மறந்து விடுகிறேன்.

சென்றிருந்த இடம் அவ்வளவு அம்சமாக இருந்தது. சுற்றிலும் மலைகள். மழைக்காலம் என்பதால் திரும்பிய பக்கமெல்லாம் பச்சைதான். இறங்கியதிலிருந்தே கருமேகம் புரட்டிக் கொண்டு வந்தது. மழையும் ‘விழுகிறேன் விழுகிறேன்’ என்று கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. இந்த இடத்தில் மழை பெய்தால் நனைந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது உடல்நிலையை புரட்டி போட்டு விடக் கூடும் என்ற பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இதை விட்டால் இப்படியான ஒரு இடத்தில் மழையை அனுபவிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடக் கூடும். 

கல்லூரியில் படித்த போது இதைவிடக் கடுமையான சளியும் காய்ச்சலுமாக இருந்தது. அப்பொழுது மங்களூருக்கும்- ஊட்டிக்கும் இடையேயான மலைப்பாதையில் நண்பர்களோடு மொத்தமாக நனைந்தோம். சளி அதிகமானது. அது பிரச்சினையில்லை- ஆனால் நனைந்த அந்த தினம் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மண்டைக்குள் அப்படியேதான் நிற்கும். அப்படியானதொரு தருணத்திற்காக காத்திருந்தேன். 

விருப்பம் பொய்க்கவில்லை. மதியம் இரண்டு மணிக்கு மழை ஆரம்பித்தது. ஆரம்பித்தது என்பதை விடவும் ஊற்றத் துவங்கியிருந்தது என்பது சரியானதாக இருக்கும். துளிர்க்க ஆரம்பித்தவுடனே பெரும்பாலானவர்கள் கூரைகளுக்கு கீழாக ஒளிந்து கொண்டார்கள். மிகச் சிலர் மட்டும் மழையில் நின்று கொண்டிருந்தார்கள். அதில் சில பெண்களும் அடக்கம். அவசரமும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நான் மழைக்குள் நடந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த ஏரிக்கரை வரை சென்று வந்த போது மழை நின்றிருந்தது. நான் தொப்பலாகியிருந்தேன். 

அதன் பிறகு அந்த இடத்தில் அனுபவிக்க எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. உச்சம் அடைந்த பிறகு மிச்சம் என்ன இருக்கும்?

ஒரு நண்பர் தனது காரில் வந்திருந்தார். மழை நின்றவுடன் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். அவருடன் தொற்றிக் கொண்டேன். ஈரத்தோடு ஏறி காரை நனைக்கிறேன் அவர் நினைத்திருக்கக் கூடும். வீடு வரும் வரைக்கும் வழியெங்கும் தூறலும் ஊற்றலுமாக மழை. பெருமழை.

வீடு வந்து சேர்ந்தவுடன் அம்மா திட்டினார். தவிர்க்க முடியாமல் நனைந்துவிட்டதாக பொய் சொல்ல வேண்டியிருந்தது. துணியை மாற்றிவிட்டு அமர்ந்த போது கவிதைகளை வாசிக்க வேண்டும் போலிருந்தது. அதுவும் மழைக் கவிதைகள். கைவசம் இருக்கும் தொகுப்புகளையெல்லாம் புரட்டிக் கொண்டிருந்தேன். மழை பற்றிய கவிதைகள் இல்லாத கவிதைத் தொகுப்புகள் தமிழில் மிகக் குறைவு போலிருக்கிறது. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு கவிதையாவது மழையைப் பற்றியதானதாக இருக்கிறது.

அப்படியான சில கவிதைகள்... 

                                                (1)

மழை பெய்துகொண்டிருக்கும்
தி.நகரிலிருந்து
மழை இல்லாத அபிராமபுரத்திற்கு
போனேன்
ஈர உடையோடு வந்திருந்தவனைப்
பார்த்து உறவினர் கேட்டார்
எங்கிருந்து வருகிறீர்கள்?
மழையிலிருந்து


                                                  (2)

ப்ளாஸ்டிக் மலையைத் தூக்கிக் கொண்டு
பறக்கும் போஸில் இருந்த
ஹனுமார் கிடைத்தார்,
பழைய பெட்டியை சுத்தம் செய்த போது.
இவரை ரொம்ப நேரம் வேண்டிக்கொண்டு
மழை வந்த மாதிரி ஒரு
சின்ன வயசு ஞாபகம், மங்கலாக.
வேண்டிக் கொண்டதால் வந்ததா, இல்லை,
மழை நாள் என்பதால் வந்ததா
என்று குறித்து வைத்துக் கொள்ளவில்லை
அப்போது.
நல்லவேளை, அவரே கிடைத்துவிட்டார்.
அவரிடமே கேட்டேன்.
‘என் சக்தியில் நம்பிக்கை இல்லாவிட்டால் 
சோதித்துப் பாரேன்’ என்றார்.
அது என்னால் முடியாது.

- முகுந்த் நாகராஜன்

                                                 (3)

ஒரு மழை இரவில்
திடீரென இறங்கிய 
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்.


                                                 (4)

ஒரு 
பெரு மழையின் 
மறுநாள் இது.
பாதி எரிந்திருந்த வாகனத்தை
தள்ளிக் கொண்டிருந்தனர் சிலர்
கட்டடங்களின் 
உடைந்த கண்ணாடிகளில்
சகதியுடன் சிரித்துக் கொண்டிருந்தன
பூக்கள்
பாதி எரிந்திருந்த
பிரேதத்தின்
ஆண் குறியினை
பிய்த்துக் கொண்டிருந்தது
நாயொன்று


                                                      (5)

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.