Jul 22, 2013

சில நிமிடங்கள்தான் - என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

அவர்கள் குல்பர்காவைச் சேர்ந்தவர்கள்- பெங்களூரில் கட்டட வேலைகளைச் செய்யும் கன்னடக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்துதான் வருகிறார்கள். மற்ற ஊர் கன்னடக்காரர்களுக்கு உடம்பு வளைவதில்லை போலிருக்கிறது. கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி என கர்நாடகாவில் திரும்பிய பக்கமெல்லாம் அணைகள் இருக்கிறதல்லவா? சோற்றுக்கு பிரச்சினையில்லை. சீதோஷ்ணமும் நன்றாக இருக்கிறது. அதனால் விடிந்தும் விடியாமலும் குந்த வைத்து பீடி குடித்துக் கொண்டிருப்பவர்களை சர்வசாதாரணமாக பார்க்கலாம். தண்ணீர் வசதி இருக்கிறது என்பதற்காக தோட்டங்காடுகளில் பாடுபடுபவர்களும் குறைவுதான். நிலபுலன்களை குத்தகைக்கு விட்டுவிட்டு வாழ்க்கையை பெரிய அலட்டல் இல்லாமல் எதிர்கொள்கிறார்கள். கொள்ளேகால், நகரம், தாளவாடி பகுதிகளில் பெரும்பாலும் தமிழர்கள்தான் விவசாயம் செய்கிறார்கள். கன்னடக்காரர்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

இந்த குல்பர்கா குடும்பமும் கட்டட வேலைக்குத்தான் வந்திருக்கிறார்கள். கணவன்,மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இரண்டுமே பெண் குழந்தைகள். மூத்த பெண்ணுக்கு ஐந்து வயது இருக்கும். பாய் என்றழைப்பார்கள். லட்சுமிபாயோ அல்லது ரமாபாயோ- சரியாகத் தெரியவில்லை. இரண்டாவது பெண் இன்னமும் நன்றாக நடப்பதில்லை. எப்பொழுதும் பாயின் இடுப்பிலேயேதான் இருக்கும். பல சமயங்களில் எங்கள் வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிஸ்கட், சாப்பாடு, முறுக்கு என எதைக் கொடுத்தாலும் பாய் தனது தங்கைக்கு ஊட்டித்தான் பார்த்திருக்கிறேன். பாய் உண்டதில்லை. விளையாடட்டும் என்று விட்டுவிடலாம்தான். ஆனால் வீட்டின் முன்னால் இருக்கும் செடிகளின் கொழுந்துகளை பறித்துவிடுகிறார்கள் என்று சற்று கோபமாக இருக்கும். ஓரிரு முறை அவர்களைப் பார்த்து பல்லைக் கடித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் பயப்பட்டதில்லை.  ‘ஈஈஈ’ என்று சிரித்தவாறே பாய் நகர்ந்து போவாள்.

அவளது அப்பா எங்களுக்கு சில வேலைகளைச் செய்து கொடுத்திருக்கிறார். இதே செடிகளை வைப்பதற்காக குழி தோண்டுவதற்கென திணறிக் கொண்டிருந்த போது அவர்தான் வந்து தோண்டிக் கொடுத்தார். பணம் கொடுத்த போதும் வாங்கிக் கொள்ளவில்லை. அதே போல சுவரில் இருந்த சில வெடிப்புகளை அடைப்பதற்கும் அவராகவே முன்வந்து செய்து கொடுத்தார். இதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடந்தது. மற்ற நாட்களில் அவரும் வேலைக்கு போய்விடுவார். எனக்கும் அவரை கவனிப்பதற்கு நேரம் இருக்காது.

அவருக்கு நிச்சயம் என்னை விட வயது குறைவாகத்தான் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளின் காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்துவிட்டு ஈரத்துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருப்பார். சந்தித்துக் கொண்டால் ‘ஊட்டா ஆயித்தா சார்?’ என்பார். ‘ஆயித்து. நிம்து?’ என்று பதில் கேள்வி கேட்பதோடு எங்களின் பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பாயின் அம்மா அந்த நேரத்தில் துணி துவைத்துக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் துவைத்து போட்டால்தான் அவர் மற்ற வேலைகளைப் பார்க்க முடியும். 

அவர் கட்டட வேலைகளுக்கு போவதில்லை. அருகில் இருக்கும் சில வீடுகளில் சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்கிறார். பாயின் அப்பா மட்டும்தான் கட்டட வேலையைச் செய்கிறார். இத்தகைய பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் கட்டடதுக்கு அருகிலேயே சிறியதாக ‘செட்’ ஒன்று அமைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தங்குவதற்கு இடம் ஆகிவிட்டது. கட்டட உரிமையாளருக்கு இரவு வாட்ச்மேன் கிடைத்தாகிவிட்டது. இதுதான் பெரும்பாலும் டீலாக இருக்கும். அதுபோக மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாயை கட்டட உரிமையாளர் கொடுத்துவிடுவார். 

கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு குல்பர்கா போய் வருவார்கள். பெரிய அளவில் பணம் சேரும் என்று சொல்ல முடியாது. குல்பர்காகாரர்களில் மேஸ்திரிகளாக இருப்பவர்கள் மிகக் குறைவு. அவர்கள் அனேகமாக  ‘மம்பட்டி ஆள்’வேலையைத் தான் செய்வார்கள். குழி தோண்டுவது, மண் அள்ளிப் போடுவது போன்று உடல் உழைப்பைக் கோரும் வேலைகள் இவை. மேஷன் ஆட்களின் கூலியோடு ஒப்பிடும் போது ‘மம்பட்டி ஆட்களின்’ கூலியும் குறைவாகத்தான் இருக்கும். பெங்களூர் போன்ற நகரத்தில் அவர்களின் வருமானத்தில் பெரிதாக மிச்சம் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. சேர்ந்த பணத்தோடு ஊருக்குச் செல்பவர்கள்  பெரும்பாலும் ‘திரும்பி வர மாட்டோம்’ என்றுதான் சொல்லிச் செல்கிறார்கள். ஆனால் வேறு வழியில்லாமல் திரும்பி வந்துவிடுவார்கள். ஒரு வகையில் பாவப்பட்ட மக்கள்.

பாயின் குடும்பம் தங்கியிருந்த கட்டடத்தின் வேலை முடிந்துவிட்டது. அதனால் தங்களின் ‘செட்’டை காலி செய்ய வேண்டியிருந்தது. எங்கள் ஏரியாவில் நிறைய புதுக்கட்டடங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதால் பெரிய பிரச்சினை இல்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இரண்டு வீதிகள் தள்ளி ‘செட்’டை இடம் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இடம் மாறினாலும் பாயும் அவளது தங்கையும் தங்களது பழைய ‘செட்’ அருகில் தினமும் விளையாட வந்துவிடுகிறார்கள். அவர்களுடன் நாயொன்றும் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அவர்களது அம்மா சில நாட்கள் தனது குழந்தைகளைக் காணவில்லை என்று தேடி வந்திருக்கிறாராம். சொல்லாமல் இங்கு வந்துவிட்டதாக பாயின் முதுகில் இரண்டு சாத்து சாத்தி அழைத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு.

நேற்று மதியம் பாயின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டதாக எதிர்வீட்டுக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். பாயின் அம்மா அவரது வீட்டில் வேலை செய்து கொடுக்கிறார். சண்டையின் காரணமாக வேலைக்கு வரவில்லையாம். ‘என்ன பிரச்சினை’ என்று அப்பா விசாரித்துக் கொண்டிருந்தார். ‘அவங்க அடிச்சுக்குவாங்க அப்புறம் சேர்ந்துக்குவாங்க சார்’என்று அவர் பதில் கொடுத்துவிட்டு தனது வேலையில் மூழ்கிவிட்டார். அப்பாவும் அதையே எங்களிடமும் சொன்னார். வழக்கம் போலவே ஞாயிறு நகர்ந்து கொண்டிருந்தது. மதியம் உணவை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது யாரோ காலிங் பெல் அடித்தார்கள். அம்மா அப்பா என அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் நான்தான் கதவைத் திறந்தேன். எதிர்வீட்டுக்காரர்தான் நின்று கொண்டிருந்தார். ‘கிருஷ்ணப்பா செத்துட்டான் சார்’ என்றார். கிருஷ்ணப்பா யார் என்று தெரியவில்லை. விவரங்களைச் சொன்னார். பாயின் அப்பாதான்.

அதிர்ச்சியாக இருந்தது. அம்மா, அப்பாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு அவரோடு சென்ற போது அப்பாவும் கூடவே வந்தார். அவர்கள் தங்கியிருந்தது வெறும் ஆறு அல்லது ஆறரை அடி உயர செட்தான். பாயின் அம்மா சண்டைக்கு பிறகாக கடைக்குச் சென்றிருக்கிறாள்.சில நிமிடங்களிலேயே திரும்பி வந்துவிட்டாளாம். ஆனால் அதற்குள் செட்டின் விட்டத்தில் மனைவியின் சேலையை கோர்த்து தொங்கிவிட்டார். இன்னமும் பிணத்தை இறக்கவில்லை. பாதம் கிட்டத்தட்ட நிலத்தை தொட்டுக் கொண்டிருந்தது. பாயின் அம்மா அழுது கொண்டிருந்தார். பாய் வழக்கம் போலவே தனது தங்கையை இடுப்பில் சுமந்து கொண்டு நின்றிருந்தாள். சுற்றிலும் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே போலீஸ் வந்து விட்டது. கூடவே ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்துக் கொண்டு கட்டட ஓனரும் வந்திருந்தார். சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பிணத்தை எடுத்து ஆம்புலன்ஸில் வைத்த போது பாய் அழுதாள். 

அந்த மனிதனின் முகத்தை பார்க்க முடியவில்லை. நூறு ரூபாயை வாங்குவதற்கும் கூட அத்தனை வெட்கப்பட்ட முகம் அது. புன்னையோடு மறுத்த முகத்தை இப்பொழுது பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தோன்றியது. முகத்தை பார்க்காமல் தவிர்க்க விரும்பினேன். ஒரு வெள்ளைத் துணியை முகத்தின் மீது போர்த்தினார்கள்.

ஞாயிறு என்பதால் நாளைக்குத்தான் போஸ்ட்மார்ட்டம் செய்வார்கள் என்று போலீஸ்காரர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாயின் அம்மா தானும் ஆம்புலன்ஸில் வருவதாக ஏறிக் கொண்டாள். பாயும் அவளது தங்கையும் கீழேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் கிளம்பிய போது ஒவ்வொருவராக விலகினார்கள். சில வினாடிகளில் அந்த இடம் வெறிச்சோடியது. ‘இன்னைக்கு ராத்திரி எங்க வீட்டு வராண்டாவில் படுத்துக்குங்க’ என்று எதிர்வீட்டுக்காரர் பாயிடம் சொல்லிவிட்டுச் சென்றார். பாய் தலையை ஆட்டினாள். பக்கத்துக் கடையில் ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கிக் கொடுத்த போது வழக்கம்போலவே பிரித்து தனது தங்கைக்கு கொடுத்தாள். அந்தக் குழந்தை எதையுமே அறியாமல் பிஸ்கட்டைக் கடிக்கத் துவங்கியது. அப்பொழுது அந்த நாய்க்குட்டி அந்த இடத்தில்தான் சுற்றிக் கொண்டிருந்தது.