Jul 9, 2013

கணவன், மனைவி மற்றும் சின்னவீடு

‘அந்தப் புள்ள பாவஞ்சாமி. வதனாலு நாளா சோறு தண்ணியில்லாம இந்த மரத்துக்கு கீழதான் கெடந்தா. நேத்துல இருந்துதான் ஆளைக் காணோம்’ என்று அந்த ஊர்க்காரர் சொன்னது பாப்புவை பற்றி. வேலம்பாளையத்து பாப்புதான். 

பாப்புவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று சொல்லிவிடாதீர்கள். உங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை இல்லைதானே? சரி. ஆடி வெள்ளி ஏன் நம் ஊரில் படு பாப்புலர் ஆகியிருக்கிறது? வெள்ளிக்கிழமையை ஏன் பெண்கள் புனிதமாக நினைக்கிறார்கள்? அம்மன் கோவில்களில் ஏன் குண்டம் மிதிக்கிறார்கள்? எல்லாவற்றிற்குமே நம் பாப்புதான் காரணம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கதையைச் சொல்லிவிடுகிறேன். அப்புறம் நாம் பேசலாம்-

வேலம்பாளையத்து பாப்பு கொள்ளை அழகு. பாப்பு மட்டுமில்லை- அந்த ஊரே அழகுதான். ஏரியும், குளமும், வயலும், தோட்டமும், கும்மாளமிடும் குருவிகளுமாக நல்ல வசதியான ஊரும் கூட. ஊர் மட்டுமில்லை- பாப்புவின் அப்பனும் பணக்காரன்தான். வியாபாரம் செய்து தாறுமாறாக சம்பாதித்து வைத்திருந்தான். பாப்பு வயசுக்கு வந்தவுடன் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று அப்பங்காரன் முடிவு செய்தான். கல்யாணம் ஒன்றும் பெரிய காரியமாகத் தெரியவில்லை. அதே ஊரில் இன்னொரு பணக்காரக் கிழவன் இருந்தான். அவன் பையன் ராசப்பனுக்கு பதினாறு வயது முடிந்திருந்தது. இரண்டு கிழவன்களும் உட்கார்ந்து பேசினார்கள். சட்டுபுட்டென்று எல்லாம் முடிவாகிவிட்டது. கிழவர்களிடம் காசு கொட்டிக் கிடந்தது. யானையை அலங்காரம் செய்து சில ஃபிகர்களை அதன் மீது அமரவைத்து அவர்கள் மூலமாகத்தான் பத்திரிக்கையே கொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அத்தனை ரவுசு. கல்யாணம் பற்றியெல்லாம் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பட்டையைக் கிளப்பிவிட்டார்கள்.

கல்யாணம் முடிந்தவுடன் ஃபர்ஸ்ட் நைட்தானே நடக்கும்? அதெல்லாம் சரியாகத்தான் நடந்தது. A டூ Z எல்லாம் விளக்க முடியாது. கோக்குமாக்காக புரிந்து கொள்ளுங்கள். ராசப்பன் சரியான தில்லாலங்கடி ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே’ என்றெல்லாம் டயலாக் அடித்தே பாப்புவைக் கவிழ்த்துக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டு அம்மிணிகள் எல்லாம் சும்மா இருக்கவில்லை. ‘பாம்பு மாதிரி பிணைஞ்சு கெடக்கறாங்க’ என்றெல்லாம் ஊருக்குள் கிளப்பிவிட்டுவிட்டார்கள். வெளியில் தலைகாட்ட முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது. எல்லாம் ஓய்ந்த பிறகு மெதுவாக வெளியே வந்து வெளிச்சம் பார்க்கத் துவங்கினான் ராசப்பன். ஆசை அறுபது, மோகம் முப்பதுதானே!

ராசப்பன் வெளியே திரியத் துவங்கிய போது ஊருக்குள் வந்திருந்த ஆட்டக்காரி அந்த ஊரின் இளவட்டங்களுக்கு வலை விரித்துக் கொண்டிருந்தாள். அந்த நாட்டியக்காரியின் அம்மா ஒரு மாலையை தயார் செய்தாள். அதற்கு ஆயிரத்தெட்டு ரூபாய் விலை சொல்லி ஒரு கிழவியிடம் கொடுத்து அவளை ஊருக்குள் அனுப்பி வைத்தாள். அந்த மாலையை யார் வாங்குகிறார்களோ அவர் நாட்டியக்காரியோடு குதூகலிக்கலாம்- இதுதான் கண்டிஷன். ராசப்பனுக்குத்தான் அந்த மாலை மாட்டும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. மாலை ராசப்பனிடம் மாட்ட, அவனோ நாட்டியக்காரியிடம் சிக்கிக் கொண்டான். 

மீண்டும் அதே A டூ Z தான். பாப்பு மேட்டரை விட சற்று ஓவராகவும் நடந்தது. பாப்புதான் பாவம். ராசப்பன் வருவான், வருவான் என்று வீதி மேலேயே கண்ணை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் எப்படி வருவான்? விடியறதும் இருட்டறதும் கூடத் தெரியாமல் கிடக்கிறானே. நம் ஆட்கள் செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘சாமி கொடுத்துச்சு’ என்பார்களே. அதே மாதிரிதான் அவர்களுக்கும் சாமி கொடுத்தது. ஆட்டக்காரி மாசமானாள். ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது. 

அந்தச் சமயத்தில்தான் திருவிழா வந்தது. ஊர் முழுக்க கொண்டாட்டம். ஆட்டம், பாட்டம், அமர்க்களம்தான். ஆளாளுக்கு பாடினார்கள். பாட்டுக்கள் எல்லாம் நேரடியாக இருக்காது. குண்டக்க மண்டக்க எதையாவது மறைத்து வைத்து பாடுவார்கள். நாமாக அர்த்தம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியதுதான். ராசப்பனுக்கு வாயில் சனி. காவிரி இருக்க, கங்கையில் குளித்தேன் என்று பாட அதை நாட்டியக்காரி டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டாள். வேறு எவளுடனோ தொடுப்பு வைத்திருக்கிறான் என நினைத்து அவளும் ஒரு எதிர் பாட்டு பாட மொத்தமாக இவர்களின் உறவில் மங்களம் பாடிவிட்டது.

இந்த உறவு விரிசல் நடந்து கொண்டிருந்த போது ராசப்பன் திவால் ஆகியிருந்தான். அப்பன் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தும் கரைந்திருந்தது. நாட்டியக்காரி ராசப்பனுக்கு ‘லவ் லெட்டர்’ எல்லாம் எழுதினாள். ஆனால் திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிட்டான். ஓடி வந்தாகிவிட்டது. இனி எங்கே போவது? ஓடற நாய்க்கு ஒன்பதாம் மடத்துல சனி என்கிற கணக்காக அத்தனையையும் தொலைத்தவன் பாப்புவிடமே திரும்பி வந்தான். நம் ஊர் பெண்களுக்குத்தான் தாலி செண்டிமெண்ட் ஓவர் அல்லவா?  செருப்பை எடுத்து நாலு சாத்து சாத்தாமல் ‘வந்துட்டியா ராசா’ என்று வாரியணைத்துக் கொண்டாள். 

சேர்ந்தது சேர்ந்தாச்சு. இனி புவாவுக்கு வழி?

வீட்டில் இருந்த சட்டி பானையை எல்லாம் ராசப்பனிடம் கொடுத்து விற்று வரச் சொன்னாள்.  ‘வை புள்ள நான் போய் மூட்டைத் தூக்கி உனக்கு சோறு போடுறேன்’னு சொல்லியிருந்தால் அவன் மனுஷன். இந்த எழவெடுத்த ராசப்பன் வெட்கமே இல்லாமல் அத்தனையும் எடுத்துக் கொண்டு கருவம்பாளையம் போனான். போனவன் போனவன் தான். ஆளையே காணவில்லை. ஊரைவிட்டே ஓடிவிட்டான் போலிருக்கிறது என பாப்புவும் பொங்காம் பொசுக்கானென அவனைத் தேடி கருவம்பாளையம் வந்தாள். வந்து பார்த்தால்தான் தெரிகிறது அவனை நடு மண்டையிலேயே சாத்தி கொன்றுவிட்டார்கள். கருவம்பாளையத்துக்காரர்கள் ராசப்பனை திருடன் என்று நினைத்தார்களாம். 

‘அட கொல்லையில போறவனுகளே அத்தனையும் எங்கப்பனூட்டு சீதனண்டா’ என்று கதறி அத்தனை பேர் மீது மண்ணள்ளி வீசினாள். ‘நல்லவர்கள், பண்டம்பாடி, கொழந்த குட்டி தவிர அத்தனையும் கருகட்டும்’ என்றாள் பாப்பு. பத்தினி அல்லவா? சாபம் பலித்துவிட்டது. அவளது கோபத்தில் மண்ணே பற்றியெரிய ஊரே கருகியிக் கொண்டிருந்தது. புல் பூண்டு மிச்சமாகவில்லை. எப்படி மண் தீப்பிடிக்கும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. நடந்துவிட்டது. இது அத்தனையும் நடந்தது ஆடி மாதத்து வெள்ளிக்கிழமை. கருவம்பாளையம் கருகிக் கொண்டிருக்க பாப்பு சொன்னது படியே எரிந்த தீயிலும் கூட குழந்தைகளும், மாடுகளும் சேதாரமில்லாமல் நடந்து தப்பித்திருக்கிறார்கள்.

ஒரு ஊரையே எரித்துவிட்டு தலைவிரி கோலமாக வந்தவள்தான் வள்ளியாம்பாளையத்தில் பதினான்கு நாட்கள் சோறு தண்ணியில்லாமல் கிடந்திருக்கிறாள். பிறகுதான் காணாமல் போயிருக்கிறாள். அதைத்தான் முதல் பத்தியில் ‘அந்த புள்ள பாவஞ்சாமி’ ஒரு பெரியவர் புலம்பினார்.

இந்தக் கதை நடந்தது ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால்தான் இன்னமும் ஆடிவெள்ளியும், வெள்ளிக்கிழமையும் நம் பெண்களுக்கு புனிதமான நாளாக இருக்கிறதாம். அக்னியில் நல்லவர்கள் தப்பித்து போனதைதான் இன்னமும் நம் ஊர் அம்மன் கோவில்களில் குண்டமாக ‘ரெப்ரஸண்ட்’ செய்கிறார்களாம். 

கதை முடிந்துவிட்டது. இப்பொழுது உங்களுக்கு பாப்பு பற்றிதெரியுமல்லவா? நமக்குத் தெரிகிறதோ இல்லையோ கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியும்- பாப்புவுக்கு சிலை வைக்கலாமா வேண்டாமா என்பது.