Jul 10, 2013

உளவாளிகள் மட்டுமில்லை- கில்லாடிகளும் கூட

 நிகழ்வு 1:

பில்லியன் டாலர்களில் பணப் பரிமாற்றம் நிகழ்த்தும் கார்பொரேட் கம்பெனி. அதன் இயக்குனர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கியமான கூட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏ.சி.அறைக்குள் ஒரு கரப்பான் பூச்சி அலை மோதுகிறது. கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவருக்கு பொறிதட்டி கரப்பானை நசுக்கினால் நிறுவனம் தப்பித்துவிடும். இல்லையென்றால் நிறுவனம் ஓட்டை விழுந்த கப்பல் ஆகி விடக் கூடும். 

நிகழ்வு 2:

போர் முனை. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இராணுவ கமாண்டர் தனது படை வீரர்களிடம் விளக்கிக் கொண்டிருக்கிறார். அசரும் எதிரிகளை தாக்குவது பற்றிய படு ரகசியமான திட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டாம் பூச்சி பறந்து வருகிறது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கதை கந்தலாகிவிடக்கூடும்.

காரணம்?

ஏ.சி அறைக்குள் கரப்பான் வடிவில் நுழைந்தது கரப்பானும் இல்லை. இராணுவ முகாமுக்குள் பட்டாம்பூச்சியாக பறந்தது பட்டாம்பூச்சியும் இல்லை. அவை ஸ்பை ரோபோக்கள் எனப்படும் உளவாளிகளாக இருக்கக் கூடும். உளவு பார்ப்பதற்கென எதிராளிகளின் இடத்தில் கேமரா வைப்பது, பபிள்காமை ஒட்டி அதன் மீது ரெக்கார்டர் வைப்பது என்பதெல்லாம் பழைய டெக்னிக்.  சரியான இடம் பார்த்து  பொருத்துவதிலிருந்து பிறகு அவற்றை திரும்ப எடுப்பது வரை ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. மாட்டிக்கொண்டால் மட்டையாக்கிவிடுவார்கள் என்பதால் இப்பொழுதெல்லாம் நிறுவனங்களும் இராணுவங்களும் தங்களது எதிராளிகளை வேவு பார்க்க ரோபோக்களை பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள். ஸ்பை ரோபோக்கள் என்ற பெயரில் மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ரோபோக்கள் மிகச் சிறியவை. 

ஸ்பை ரோபோக்களில் நுண்ணிய கேமராக்களும், ரெக்கார்டர்களும் பொருத்தப்பட்டிருக்கும். போர் முடிந்து பல நாட்கள் ஆன பிறகு எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வரப்போகிறான் என படு லேட்டாக அறிவிக்கும் இருபத்தி மூன்றாம் புலிகேசி மன்னனின் உளவாளிகள் இல்லை இவை. சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தங்களது எஜமானர்களுக்கு அனுப்பிவிடும் இன்ஸ்டண்ட் உளவாளிகள். ஸ்பை ரோபோக்களின் எஜமானர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் இவற்றை ரிமோட் மூலமாக கட்டுப்படுத்த முடியும். ரிமோட்டிலிருந்து தகவல்களை பெறுவதற்கான ரிசீவர்களையும், தகவல்களை எஜமானர்களுக்கு அனுப்பி வைக்க ட்ரான்ஸ்மிட்டர்களையும் ரோபோக்களில் பொருத்திவிடுகிறார்கள்.

ரோபோக்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு பல நிலைகளைக் கொண்டது. முதலில் தன்னைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான சிக்னல்களில் இருந்து தனக்குரிய சிக்னலை  பிரித்து எடுக்க வேண்டும். கிடைக்கும் தகவவலை ’ப்ராசஸ்’ செய்து அது தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட கட்டளைதானா என்பதை ரோபோ கண்டறிய வேண்டும். கட்டளைக்கு ஏற்ப  காரியத்தை முடித்துவிட்டு கட்டளையிட்ட முதலாளிக்கு ‘ரிசல்ட்’ அனுப்ப வேண்டும். இதையெல்லாம் ரோபோவின் தொடர்பியல் சாதனங்கள் (Communication devices) செய்து  முடிக்கின்றன. 

அமெரிக்காவின் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ‘புதிரான’ பூச்சிகளை பார்ப்பது சாதாரணமான விஷயம். 2007 ஆம் ஆண்டு போருக்கு எதிரான பேரணி வாஷிங்டனில் நடந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் “கடவுளே! அதைப் பாருங்கள்” என்று கத்தினார் . அவர் மேலே பறந்து கொண்டிருந்த தட்டான்களை பார்க்கச் சொல்லி கத்தினார். அவை தட்டான்கள்தான். ஆனால் உயிரற்ற தட்டான்கள். அரசின் போர்முறைக்கு எதிரான போராளிகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக அவை பறந்து கொண்டிருந்தன. 

தட்டான்கள் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களின் மூலமாக பலரது விவரங்கள் அரசாங்கத்தால் கட்டம் கட்டப்பட்டதாகவும், சிலர் காணாமல் போனதாகவும் கூட தகவல்கள் கசிந்தன. 1970 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ உளவு பார்க்கும் தட்டான்களை வடிவமைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் காற்று எதிர்திசையில் வீசும் போது அவைகளால்  பறக்க முடியவில்லை. அப்பொழுதே உளவு பார்க்கும் தட்டான் தயாரிப்புத் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் சும்மானாச்சுக்கும் ஊரை ஏமாற்றும் அறிவிப்புகள். இன்றைக்கு அமெரிக்கர்களிடம் ஏகப்பட்ட ‘பூச்சிகள்’ இருப்பதாக பிற உளவு அமைப்புகள் அலறுகின்றன.

ஸ்பை ரோபோக்கள் என்பது வெறும் உளவுக்கான வேலையை மட்டும்தான் செய்யும் என்றில்லை வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். மருத்துவத் துறையும் அதில் ஒன்று. மிகச் சிறிய புழு வடிவிலான ரோபோவை அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை சிந்தெடிக்கால் ஆனவை. கீழே விழுந்தாலும் நொறுங்காதவை, தண்ணீருக்குள் ஊறினாலும் நைந்து போகாதவை. நோயாளியின் வயிற்றுக்குள் கட்டி இருப்பின் அது குறித்தான பரிசோதனையைச் செய்ய இந்த புழு வடிவ ரோபோவை வயிற்றுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். கட்டியை நோக்கி நகரும் இந்த ரோபோ கட்டியை ஆராய்வதிலிருந்து துளி ’சாம்பிள்’ எடுத்துவருவது வரை பல வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கின்றன.

வயிற்றுக்குள் கட்டி இருந்தால் புழு வடிவத்தில் இருக்கும் ரோபோவை அனுப்பலாம். அதுவே இரத்தக் குழாய்க்குள் அடைப்பு இருந்தால்? அதற்கும் வழி இருக்கிறது. இரத்தக் குழாய்க்குள் கூட நுழையக் கூடிய அந்த குட்டி ரோபோவிற்கு நேனோ ரோபோ என்று பெயர். புழு வடிவத்தில் இருக்கும் ரோபோ சீனியர் என்றால் நேனோ ரோபோ சப் சப் சப் ஜூனியர். அந்த அளவிற்கு மிகச் சிறியதாக கண்ணுக்கு தெரியாத உருவத்தில் நேனோ ரோபோக்கள் இருக்கும். இவற்றை இரத்தக் குழாய்க்குள் செலுத்தி கட்டி இருக்கும் இடத்திற்கு நகர்த்திவிடுவார்கள். பிறகு இரத்தக் கட்டியை சிறு சிறுதுகள்களாக உடைத்துவிட்டு வெற்றிநடையுடன் உடலிலிருந்து நேனோ ரோபோ வெளியேறும். 

எழுதுவதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் அது என்ன அத்தனை சுலபமா? கண்ணுக்கே தெரியாத ரோபோவை எப்படி வடிவமைக்கிறார்கள்? ஒரு ரோபோவை உடலுக்குள் செலுத்துவது எளிதான காரியமா? உடலுக்குள் செலுத்திய பிறகு கட்டி இருக்கும் இடத்திற்கு எப்படி நகர்த்துவது? காரியம் முடிந்த பிறகு ரோபோவை எப்படி உடலிலிருந்து வெளியேற்றுகிறார்கள்? அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் அறிவியல் துறையின் பெயர் நேனோ டெக்னாலஜி. 

நேனோ என்றாலே ‘துக்கினியூண்டு’தான். ஒரு மீட்டரை நூறு சமபாகமாக பிரித்தால் ஒவ்வொரு பாகமும் ஒரு செண்டிமீட்டர். அதே ஒரு மீட்டரை நூறு கோடி சமபாகமாக பிரித்தால் அதில் ஒவ்வொரு பாகமும் ஒரு நேனோ மீட்டர். இந்த ’துக்கினியூண்டு’ சமாச்சாரத்தை ஆராய்ச்சி செய்யும் துறைதான் நேனோ டெக்னாலஜி. சமகாலத்தில் மிக முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி துறையாக நேனோ டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமே கிட்டத்தட்ட இருபதாயிரம் கோடி ரூபாய்களை இத்துறையில் முதலீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய்களை கொட்டியிருக்கின்றன. அத்தனை மவுசான துறை இது. இந்த டெக்னாலஜியை பயன்படுத்திதான் நேனோ ரோபோக்களை தயாரிக்கிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேச்சை கேட்டவர்களுக்கு ‘நேனோ டெக்னாலஜி’ பரிச்சயமான வார்த்தையாக இருக்கக் கூடும். இது பற்றி அவர் பல முறை பேசியிருக்கிறார். சரி நேனோ டெக்னாலஜி என்றால் என்ன? இன்னொரு நாளைக்கு....