சென்ற வாரத்தில் இரண்டு காரியங்கள் நடந்தன. ஒன்று நல்ல காரியம். மற்றொன்றை கெட்டகாரியம் என்று சொல்ல முடியாது- ஆனாலும் கெட்டகாரியம்தான். முதலில் நல்ல காரியத்தைச் சொல்லிவிடுகிறேன்.
பெங்களூரில் ஹென்னூர் பக்கமாக ஒரு விடுதி இருக்கிறது. விடுதியென்றால் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விடுதி. பெரும்பாலும் அநாதையாக்கப்பட்ட குழந்தைகள்தான். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதிகள். அதே வளாகத்தில் பள்ளிக் கூடமும் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் அதே வளாகத்தில் தங்கி, படிக்கிறார்கள். இவற்றை கிறித்துவ மிஷனரிகள் நடத்துகின்றன. ஆசிரியர்களும் கிறித்துவ கன்னியாஸ்திரிகள்தான்.
வெளியாட்கள் கொடுக்கும் அரிசி, பருப்பு போன்றவற்றை தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அது போக நிதியும் வாங்கிக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. எங்கள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் வந்திருக்கும் போல. உடன் பணியாற்றும் சில நல்ல உள்ளங்கள் முன்னின்று வசூல் செய்தார்கள். ஆளாளுக்கு நூறும், இருநூறுமாக கொடுத்ததில் பத்தாயிரத்துச் சொச்சம் சேர்ந்தது. சேர்ந்த தொகையில் அரிசி ஒரு மூட்டை, கொஞ்சம் மளிகை சாமான்கள் என்றெல்லாம் வாங்கிவிட்டு மிச்சமிருந்த பணத்தில் ஒரு கூடை ஆப்பிளும் அது போக சாக்லெட்களும் வாங்கிக் கொண்டார்கள். வசூலித்தவர்கள் மட்டுமே கூட விடுதிக்குச் சென்று அவற்றையெல்லாம் கொடுத்து வந்திருக்கலாம். ஆனால் மொத்த டீமும் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு தயக்கமாக இருந்தது. போகக் கூடாது என்றில்லை- அந்தக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டால் நிச்சயம் ஏதாவது ஒருவிதத்தில் மனதுக்குள் சலனமாகவே இருக்கும் என்றிருந்தது. ஆனால் எல்லோரும் போகும் போது தவிர்க்க முடியவில்லை.
எதிர்பார்த்தது போலவேதான் நடந்தது. அத்தனையும் பிஞ்சுக்குழந்தைகள். நான்கைந்து வயதிலிருந்து பத்து வயதுக் குழந்தைகள். பார்த்தவுடன் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்கள் யாருமற்றவர்கள், அன்பிற்காக ஏங்குபவர்கள் என்பதை உணர்ந்து விட முடியும். முகங்களே அதைச் சொல்லிவிடும். நாங்கள் சென்றவுடன் வகுப்பறைகளில் இருந்த குழந்தைகளை விடுதிக்கு அழைத்து வந்துவிட்டார்கள். விடுதியில் ஒரு பெரிய வராந்தா இருக்கிறது. அங்குதான் அமர்ந்தார்கள். குழந்தைகளுக்கு மிகுந்த சந்தோஷம். வகுப்பறைகளில் இருந்து கிடைத்த விடுதலையா அல்லது புதியவர்களைப் பார்த்த உற்சாகமா என்று தெரியவில்லை- சந்தோஷமாக இருந்தார்கள்.
ஏற்பாட்டாளர்கள் சில விளையாட்டுகளை திட்டமிட்டிருந்தார்கள். எல்லாமே குழந்தைகளுடன் விளையாடுவது போலத்தான். ஆனால் அவை எதுவும் சரிப்பட்டு வரவில்லை. பிறகு குழந்தைகளை குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்குக்கும் இரண்டொருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உடன் வந்த நண்பர்கள் குழந்தைகளை உற்சாகமூட்டும் செயல்களில் இறங்கினார்கள். சிலர் நடனமாடினார்கள். சிலர் பாடினார்கள். சிலர் ஃபுட்பால் விளையாடினார்கள். பெண்கள் அமர்ந்து ‘அந்தாக்ஷரி’ நடத்தினார்கள். அப்படியிருந்தும் சில குழந்தைகள் மட்டும் இதில் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அவர்களுக்கு கன்னடம் தவிர வேறெந்த மொழியும் தெரியவில்லை. அதனால் ‘நெசுரேனு?’ அல்லது ‘ஊட்டா ஆயித்தா?’ என்பதைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் பேச முடியவில்லை.
வளாகத்தை சுற்றிப் பார்க்க மனம் விரும்பியது. மிஷனரியின் கன்னியாஸ்திரிகள் ஒரு சர்ச்சுக்குள் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் சென்றிருந்தது அவர்களுக்கும் ஓய்வை கொடுத்திருக்கக் கூடும். வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசலாம் என்று தோன்றியது. ஆனால் தயக்கமாக இருந்தது. எங்கள் டீமில் இருந்து இன்னும் இரண்டு பேர் ஒட்டிக் கொண்டார்கள். மூன்று பேருமாகச் சேர்ந்து அவர்களிடம் பேசத் துவங்கினோம். அவர்களிடம் ஏகப்பட்ட கதைகள் இருந்தன. அவை அங்கிருந்த ஒவ்வொரு குழந்தைகளுக்குமான கதைகள்.
நம் மனிதர்களின் குரூரமான, வன்மமான முகங்களையெல்லாம் தெரிந்து கொள்வது எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரசியமானதோ அதே அளவுக்கு துக்ககரமானது கூட. அவன் அவளை ஏமாற்றினான், இவள் அவனோடு ஓடிப் போனான், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசியிருந்தார்கள், மருத்துவமனையிலேயே சிசுவை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்பதையெல்லாம் செய்திகளாக வாசித்து பழகிப் போன மனம்தான் என்றாலும் நேரடியாக பார்க்கும் போது மனசை உழாத்தியது. அந்தக் குழந்தைகளில் சிலருக்கு தங்களின் கதைகள் தெரியுமாம். ஆனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தெரியாது என்றார்கள்.
எல்லாவற்றையும் விடக் கொடுமை- சில குழந்தைகளுக்கு நோய் முற்றிவிடும் போது மற்ற குழந்தைகள் மனதளவில் பயந்துவிடக் கூடாது என்பதற்காக தனிமைப்படுத்துகிறார்கள். அந்தச் சமயங்களில் சில குழந்தைகள் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என விடாமல் அழுது கொண்டிருப்பார்களாம். “அவர்களைக் கூட சமாளித்து விடுவோம். ஆனால் சில குழந்தைகள் ‘அத்தனையும் முடிந்துவிட்டது’ என்பது போல மெளனமாகிவிடுவார்கள். என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் அவ்வப்போது வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கும் அவர்களை எதிர்கொள்வதுதான் ரொம்பச் சிரமம்” என்றார்கள். அப்படியொரு சிறுவனின் கதை ஒன்றைச் சொன்னார்கள். சென்ற மாதத்தில் நடந்த கதை. எதுவுமே பேசாமல் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தவன் சில நாட்களிலேயே இறந்து போனானாம். அவன் இறந்தது இங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். கதையை முடிக்கும் போது மூன்று பேரின் கண்களும் கலங்கியிருந்தது. இனிமேல் இன்றைய தினத்தை இந்த இடத்தில் கழிக்க முடியாது என்று தோன்றியது. கதை கேட்டவர்களில் சீமா என்ற பெண் அவசரமாக வெளியேறி ஆட்டோ பிடிக்க விரும்பினாள். ஏற்பாட்டாளர்களிடம் சொல்லிவிட்டு அவள் வெளியே வந்த போது மற்ற இரண்டு பேரும் அவளுடன் சேர்ந்து கொண்டோம். அலுவலகம் வந்து சேரும் வரை ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
இப்பொழுது இன்னொரு காரியத்தையும் சொல்லிவிடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து அதே டீம் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். டீமில் ஒருவன் ப்ரோமோஷன் வாங்கி மேனேஜர் ஆகிவிட்டான். அவன்தான் மொத்த செலவும் செய்யப் போகிறான் என்பது டீல். பேலஸ் க்ரவுண்ட் சாலையில் இருக்கும் கே.சி.பேலஸ் என்ற ‘க்ளப்பில்’தான் நடந்தது. பார்ட்டி என்றால் குடித்து, தின்று கும்மாளம் அடிப்பது. இரண்டு நாட்கள் முந்தைய ‘விசிட்’ பற்றி யாருமே யோசித்ததாகத் தெரியவில்லை. ப்ளாக்டாக், கிங் ஃபிஷர் என்று வரிசையாக வந்து கொண்டிருந்தன. இன்னொருவனும், நானும் குடிக்காத ஆட்கள். ஸ்ப்ரைட் குடித்துக் கொண்டிருந்தோம். என்ன என்னவோ பேச்சு ஓடியது. அங்கிருந்தவர்களின் அத்தனை அசிங்கங்களையும் சாராயம் கழுவிக் கொண்டிருந்தது போலிருந்தது. சிக்கனும், மட்டனும், மீனுமாக காலியாகியவாறே மணி பன்னிரெண்டை நெருங்கியது. பில் கேட்டார்கள். மொத்தமாக பத்தொன்பதாயிரத்து முந்நூறு ரூபாய். இப்பொழுது இரண்டாவது பத்தியில் எத்தனை வசூலானது என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். இந்த பார்ட்டிக்காக செலவு செய்தவன் அந்தத் தொகையில் தனது பங்களிப்பாக இருநூறு ரூபாய் வாரி வழங்கியிருந்தான்.