Jul 6, 2013

‘ம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம்

பதினைந்து வயதுப் பெண். அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அந்தச் சிறுமியும் அவளது அம்மாவும் கர்ப்பத்தை கலைத்துவிடுவதற்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். அன்றைக்கு வழக்கம் போல பள்ளிக்குச் சென்றவள் அங்கு மயக்கம் அடைந்துவிட்டதால் மருத்துவமனைக்குத் தூக்கி வந்துவிட்டார்களாம். கர்ப்பத்திற்கு காரணம் யார் என்ற கேள்வியை மருத்துவரில் ஆரம்பித்து அவளது அம்மா வரைக்கும் கேட்டாகிவிட்டது. ம்ஹூம். அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறாள். இந்த கர்ப்பத்திற்கு யார் காரணமாக இருக்கும் பெற்றவர்கள் யோசிக்கத் துவங்குகிறார்கள். இப்படித்தான் ஆரம்பிக்கிறது ஷோபா சக்தியின் ‘ம்’.

இந்த நாவல் 2004 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது. நாவல் என் கைக்கு வந்தும் ரொம்ப நாள் ஆகிவிட்டது. நான் தான் படு லேட். ஆனால் அப்படியெல்லாம் பார்த்தால் முடியுமா? ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவலை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன். நாவல் வந்தவுடன் படித்திருக்க வேண்டுமென்றால் சிசேரியன் முடித்து வெளியே எடுத்துப் போட்டவுடன் அந்தப் புத்தகத்தை என் கையில் கொடுத்திருக்க வேண்டும். காரணம் கிருஷ்ண பருந்து நாவல் 1982 ஆம் ஆண்டே வந்துவிட்டது. பருந்து இருக்கட்டும். இப்போதைக்கு ‘ம்’ கொட்டுகிறேன்.

ஷோபாசக்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனநிலை உடையவர் என்றும் அவரது எழுத்துக்கள் புலிகளுக்கு எதிரானதாகவும் இருக்கும் என்று நம்புவதால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகுதான் நாவலை வாசிக்கவே ஆரம்பித்தேன். வெளிப்படையாகச் சொன்னால் புலிகளை விமர்சிக்கும் எழுத்துக்கள் பிடிப்பதில்லை. புலிகள் பற்றிய ஒரு ‘இமேஜ்’ வைத்திருக்கிறேன். அது தமிழக அரசியல் சூழலால் வடிவமைக்கப்பட்ட மிகப் புனிதமான ‘இமேஜ்’.அது அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்றுதான் தோன்றுகிறது. அடுத்தவர்கள் அதை கலைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

நல்லவேளையாக இந்த நாவல் அப்படியெல்லாம் எந்த கலைத்தலையும் செய்யவில்லை. அந்தப் பெண் ‘மாசமாக’ இருக்கிறாள் அல்லவா? இந்த மருத்துவமனைச் சம்பவம் ஐரோப்பாவில் நடக்கிறது. பிறகு அடுத்த பக்கத்திலிருந்து கதை ஃபளாஷ்பேக்கில் இலங்கைக்கு நகர்கிறது. ஏர்னஸ்ட் வாத்தியாரின் மகன் நேசகுமாரன் கிறித்துவப்பாதிரி படிப்பை படித்துக் கொண்டிருப்பவன். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு எழுபதுகளில் செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோரின் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கிறான். 

டாட்டு, கலைச்செல்வன் போன்றவர்களுடன் நேசகுமாரன் சுற்றித் திரியும் காலகட்டங்களில் இலங்கையில் எந்த இயக்கமும் ஸ்ட்ராங் இல்லை போலிருக்கிறது. பெரும்பாலும் உதிரிகளாகவே திரிகிறார்கள். நிறைய இளைஞர்கள் ஆயுதம் நோக்கி நகர்கிறார்கள். நேசகுமாரன் வகையறாவும் விதிவிலக்கு இல்லை. இவர்களாகவே யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமலேயே போலீஸ் ஸ்டேஷனை கொளுத்துகிறோம் பேர்வழி, போலீஸ்காரனை போடுகிறேன் பேர்வழி என்று சில நட்டாமுட்டி வேலைகளைச் செய்யும் போது நேசகுமாரன் சிக்கிக் கொள்கிறான். அதுதான் இலங்கையில் போலீஸாரும், ராணுவமும் உஷாராகிய காலகட்டம். விடுவார்களா? வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் சென்று ஸ்டேஷனில் வைத்து நொங்கெடுக்கிறார்கள். அடி தாங்க முடியாமல் முதன் முதலாக தனக்கு உதவிய சிறிகாந்த மலர் என்ற பெண்ணைக் காட்டிக் கொடுக்கிறான். இதன் பிறகாக தனக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியவர்களையெல்லாம் காட்டிக் கொடுக்கும் துரோகியாகவே நேசகுமாரன் இருக்கிறான். இந்தக் கதையில் அவன்தான் ஹீரோ. ஆண்ட்டி-ஹீரோ.

பிறகு இன்ஸ்பெக்டரிடம் கலைச்செல்வனை காட்டிக் கொடுக்கிறான். அவன் கிட்டத்தட்ட அப்பாவி- போலீஸைப் பார்த்தவுடன் தப்பிக்க முயல்கிறான். நேசகுமாரனின் கண்களுக்கு முன்பாகவே  அவனை சுட்டுத் தள்ளிவிடுகிறார்கள். இதன் பிறகு நேசகுமாரனை பனாகொட என்னுமிடத்தில் இருக்கும் சிறைச்சாலைக்கு மாற்றுகிறார்கள். அது ஒரு சித்ரவதைக் கூடம். உடுகம்பொல ஒரு போலீஸ்காரன் பின்னியெடுக்கிறான். அந்தச் சிறைச்சாலையில் ஒரு சிங்கள போலீஸ்காரன் வெளியில் நடக்கும் தகவல்களை எல்லாம் சிறைக்கைதிகளுக்குச் சொல்கிறான். அவனுடைய கெட்டநேரம், அவனையும் உடுகம்பொலவிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறான் நேசகுமாரன். 

பிறகு அடுத்த நாற்பது-ஐம்பது பக்கங்களும் நாவலின் டக்கரான பக்கங்கள். பனாகொட சிறைச்சாலையிலிருக்கு நேசகுமாரனை வெலிகட சிறைக்கு மாற்றிவிடுகிறார்கள். அந்தச் சிறைச்சாலையின் கொடுமைகளும், அங்கு ‘டெலோ’ உறுப்பினர்களான குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட பல பேர் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் சிங்கள் கைதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டதும் விவரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட கைகள் நடுங்கும் அளவிற்கான கொடூர காட்சிகள் அவை. 

வெலிகட சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்களில் டேவிட் அய்யாவும் ஒருவர். நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். தொண்ணூறு வயதைக் கடந்த அவர் தற்பொழுது சென்னையில் வசிக்கிறார் போலிருக்கிறது. அவரது சமீபத்திய நேர்காணலை இங்கு வாசிக்கலாம். 

வெலிகட சிறைக் கொலைகளுக்கு பிறகு மிச்ச மீதியிருக்கும் வெகுசிலரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு போகிறார்கள். அங்கு சிறையதிகாரிகள் தமிழர்கள். பிற சிறைச்சாலைகளை விட இந்த சிறைச்சாலை நன்றாக இருக்கிறது. இங்குதான் புகழ்பெற்ற ‘மட்டக்களப்பு சிறை உடைப்பு’ சதி நடைபெறுகிறது. திட்டமிட்டு சிறையை உடைக்கிறார்கள். தப்பித்தவர்களில் - நேசகுமாரனும், அவனோடு சிறையில் இருந்த இன்னொரு கைதியான பக்கிரியும் தனியாக போகிறார்கள்- நாவல் முழுவதும் சீனா, பக்கிரி போன்ற Characterizationகளை கவனிக்க வேண்டும். ஷோபா சக்தி அதில் தூள் கிளப்பியிருக்கிறார். 

எங்கு விட்டேன்? ஆங், தப்பித்து போகிறார்கள். விதி வலியது அல்லவா? மீண்டும் போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பிக்க உதவிய ஒரு குடும்பத்தை தேவையில்லாமல் பலியாடு ஆக்குகிறான் நேசகுமாரன். 

பிறகு கொஞ்ச நாட்களில்- அதாவது எண்பத்தாறாம் ஆண்டில் இலங்கையில் சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழியத் துவங்குகின்றன. சிலருக்கு விடுதலை அளிக்கிறார்கள். இப்படித்தான் பக்கிரிக்கும், நேசகுமாரனுக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது. சிறைச்சாலையிலிருந்து வெளியேறிடவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்திற்கு போகிறார்கள். அங்கு பக்கிரியைக் காட்டிக் கொடுக்கிறான் - அவர் வேறு இயக்கத்தில் இருந்தவர் என்பதால் உயிர் போகிறது. 

காட்டிக் கொடுக்கிறான் என்னும் இடங்களில் அவனாகவே சென்று ‘இவன் இப்படி’ என்று மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இவனை விசாரிக்கும் போதெல்லாம் ரகசியங்களை இவன் பாதுகாப்பதில்லை. அடிக்கு பயந்தோ அல்லது சித்ரவதைக்கு பயந்தோ கூட இருந்தவர்களையே போட்டு கொடுத்துவிடுகிறான்.

பக்கிரி இறந்த பிறகு மீண்டும் நாவல் ஐரோப்பாவிற்கு செல்கிறது. 

இப்பொழுது, கர்ப்பம் அடைந்த நேசகுமாரனின் மகளை ‘யார் கர்ப்பமாக்கினார்கள்’ என்ற விசாரணை தொடங்குகிறது. அடுத்த சில பக்கங்களில் யார் என்பது தெரிந்தவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது- க்ளாஸிக்காக.

நாவல் ஆன்லைனில் கிடைக்கிறது. டவுன்லோட் செய்து கொள்ளலாம்

ஷோபா சக்தியின் மீது எத்தனை எதிர்மறை விமர்சனங்களும் இருந்தாலும் ஒரு படைப்பாளியாக அவரை யாராலும் நிராகரிக்க முடியாது. அதற்கான நேரடி சாட்சி- ‘ம்’.