Jul 5, 2013

இளவரசனைக் கொன்ற சாதியும், மீடியாவும்

இளவரசன் இறந்துவிட்டார்.

நம் நாட்டில் தினம் தினம் காதலுக்காக நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் தற்கொலைகளின் பட்டியலில் இதையும் ஒன்றாக செருகிவிட முடியாது என நினைக்கிறேன்.

சாதிவெறியர்களுக்கு இந்த ஒற்றைக்காதலினால்தான் தங்கள் வம்சமும், குலப்பெருமையும் காலியாகிவிட்டது போன்ற பிரமை. அதேசமயம் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த ஒற்றைச் சோடியைச் சேர்த்து வைத்துவிட்டால் இனி இந்தத் தேசத்தில் சாதிப் பாகுபாடுகளே இருக்காது என்ற பிரமை. உண்மையில் இரண்டுமே சாத்தியமில்லாத விஷயங்கள்.

இளவரசனும்-திவ்யாவும் சேர்ந்திருந்தாலோ அல்லது விலகியிருந்தாலோ காலங்காலமாக புரையோடிப் போயிருக்கும் சாதிய கட்டமைப்பில் ஏதாவது மாறுபாடு வந்திருக்கும் என நினைக்கிறீர்களா? அவர்கள் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியிருந்தால் அடுத்த தலைமுறையில் கலப்புத் திருமணங்களுக்கு பச்சைக் கொடி காட்டிவிடுவார்களா என்ன? அல்லது அவர்களை பிரித்து வைத்ததால் அடுத்த தலைமுறையில் சாதி மாறிய காதல்கள் அரும்பாதா என்ன? இந்த உலகம் எப்பவும் போலவேதான் இருந்திருக்கும். அதே சாதி, அதே கட்டப்பஞ்சாயத்து, அதே வாழ்க்கை என்றுதான் நகர்ந்து கொண்டிருப்போம். 

பிறகு எதற்கு இத்தனை பிரச்சினைகள்? இத்தனை விளம்பரங்கள்? இத்தனை அலம்பல்கள்? ஒரே காரணம்தான். பெரியவர்களின் Ego. ‘அதெப்படி எங்க சாதிப் பொண்ணை அவன் கட்டுவான்?’ என்று அவர்கள் அருவாள் எடுக்க, ‘நீங்க என்னத்தை கிழிச்சுடுவீங்க’ என்று இவர்கள் பேனா எடுக்க - ரத்தக் களறியாகிப் போயிருக்கிறது இரண்டு இளநெஞ்சங்களின் வாழ்வு. இளவரசன் -திவ்யாவின் இந்தப் பிரிவும், சாவும் பெரியவர்களின் Ego என்ற காரணத்தினால் மட்டும்தான் நிகழ்ந்திருக்கிறது. வேறு எந்தக் காரணமும் இல்லை. இங்கு பெரியவர்கள் என்பது இளவரசன் -திவ்யாவைவிட வயதில் மட்டுமே பெரியவர்கள். வேறு எந்தவிதத்திலும் இல்லை. இந்தப் ‘பெரியவர்களின்’ ஓவரான அழிச்சாட்டியங்களால் ஒரு உயிர் போனதுதான் கண்டபலன். உங்களின் Egoவிற்காக அவர்களை பிரித்து வைத்தீர்கள். இப்பொழுது அதே Egoவிற்காக இருவரில் ஒருவரை கொலை செய்துவிட்டீர்கள். அவ்வளவுதான்.

அரசியல்வாதிகளும், ஊடகங்களும், சாதியப் பற்றாளர்களும் மாறி மாறி இந்தக் காதலை ஊதிப் பெருக்கி திவ்யா-இளவரசனின் வாழ்க்கையை நசுக்கி எறிந்துவிட்டார்கள். 

அரசியல்வாதிகள் இந்தக் காதலை நாடகக்காதல் என்று கேவலப்படுத்தியதிற்கு எந்தவிதத்திலும் சளைக்காமல் ஊடகங்கள் புனிதக் காதல் என்று பூதாகரப்படுத்தின. நாடகக்காதல், புனிதக்காதல், தெய்வீகக்காதல் என்பதெல்லாம் நமக்கு ஏற்றபடியில் நாமாக கொடுத்துக் கொள்ளும் அடைமொழிகள் மட்டும்தான். ஒரு செய்தி எப்படி வெறும் செய்தியாக மட்டுமே இருக்க முடியுமோ அப்படித்தான் காதலும்- அது வெறும் காதலாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் இப்பொழுதெல்லாம் செய்திக்கும் சரி, காதலுக்கும் சரி- ஏகப்பட்ட Emotional attachment ஐ கொடுத்துவிடுகிறோம். ஏகப்பட்ட கோணங்களையும் கொடுத்துவிடுகிறோம்.

ஒரே செய்திதான் - ஜெயாவில் கேட்டால் ஒரு கோணம், கலைஞர் செய்தியில் கேட்டால் ஒரு கோணம், தினமலரில் ஒரு பார்வை, தினத்தந்தியில் ஒரு பார்வை. இப்படி நம்மீது திணிக்கப்படும் அத்தனை கோணங்களையும் கலந்துகட்டி நாம் நமக்கு ஏற்றபடி ஒரு அரைகுறை பார்வையை உருவாக்கிக் கொள்கிறோம். இதுதான் இன்றைய லட்சணம். இதேதான் இந்தக் காதலிலும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தகவல்களைப் பரப்பினார்கள். சிலர் திவ்யாவைக் குறை சொன்னார்கள்; சிலர் இளவரசனைக் குறை சொன்னார்கள்; சிலர் அவர்களை பெற்றவர்களைக் குறை சொன்னார்கள். உண்மையில் நம்மில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்பதுதான் உண்மை. ‘அவர்களை சேர்த்து வைக்காமல் தூங்கமாட்டேன்’ என்று சிலர் கங்கணம் கட்டியபோது, ‘அவர்களை பிரிக்காமல் ஓயமாட்டோம்’ வேறு சிலர் வெறியெடுத்துத் திரிந்தார்கள். 

இளவரசனுக்கு வெறும் பத்தொன்பது வயது. இந்த வயதுடைய இளைஞனுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்க முடியாது. இந்நிலையில் அவனுக்கு வந்த பிரச்சினைகளும், ஊடக வெளிச்சமும் அவனுடைய வயதுக்கு மீறியவை. அவை தாங்க முடியாத சுமைகள். அவனது காதலுக்கு எதிரி என்று சொல்லிக் கொண்டவர்கள் ‘பிரச்சினைகள்’ என்ற சுமையை அவனது ஒரு தோளில் சுமக்க வைத்த போது,  காதலுக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் ‘ஊடக வெளிச்சம்’ என்ற சுமையை அவனது இன்னொரு தோளில் சுமக்க வைத்தார்கள்.

இங்கு நடந்தது சாதிக்கும், காதலுக்கும் இடையிலான பிரச்சினை மட்டுமில்லை. வெறியர்கள் Vs ஊடகம் என்ற இரண்டு மாமிச மலைகளுக்குள் சிக்கிக் கொண்ட சின்னஞ்சிறுவனின் பிரச்சினை. 

பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை- ஆறவிட்டிருக்க வேண்டும். பிரச்சினைக்குள் சிக்கியிருந்தது இரண்டு இளம் உயிர்கள்.  இந்த பிரச்சினைகளின் விளைவு என்னவாக இருந்திருந்தாலும் எனக்கும், உங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஓரத்தில் நின்று கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்ப்போம். அவர்களுக்கு நாம் செய்திருக்கக் கூடிய அதிகபட்ச உதவி என்பது பாதுக்காப்பான அடைக்கலம் என்பதாக மட்டுமே இருந்திருக்க முடியும். ஆனால் நாம் விடவில்லை. அட்டைப்பட கவர்ஸ்டோரி, எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள், நேரலை விவாதங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸ்கள் என்று நெருப்புக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தோம்.  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்- நாம் அள்ளி வீசிய கருத்துக்களும், கட்டுரைகளும் சாமானிய மனிதனுக்கு ஒரு சதவீத மாற்றத்தையாவது உருவாக்கியிருக்கும் என நம்புகிறீர்களா? சத்தியமாக இல்லை. வெறியெடுத்துத் திரிந்தவர்களுக்கு சொறிந்துவிட்டதைத் தவிர இவையெல்லாம் எதையுமே சாதிக்கவில்லை.

‘அதனால் சாதிவெறியர்களை அப்படியே விட்டுவிட வேண்டுமா?’ ‘கொலைகாரர்களை தப்பிக்க விட்டுவிடலாமா?’ என்றெல்லாம் யாராவது கேட்கக் கூடும். அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. கொலையாக இருக்கும்பட்சத்தில், கொலைகாரர்களை கண்டுபிடிக்க முடியுமானால் கல்லெறிந்து கொல்லலாம். ஆனால் கண்டுபிடிக்க விடுவார்களா? சந்தேகம்தான். காதலுக்கான நண்பர்களின் ஒற்றுமையை விட இங்கு காதலுக்கான எதிரிகளின் ஒற்றுமை பன்மடங்கு பலம் வாய்ந்தது என்று நினைக்கிறேன். காதலர்களுக்குத்தான் இங்கு ‘பாதுகாப்பான அடைக்கலம்’ கிடைக்கவில்லை. ஆனால் கொலையாளிகளுக்கு இங்கு எப்பவுமே ஆகச்சிறந்த அடைக்கலம் கிடைத்துவிடும்.

சாதிய மறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு என சகலத்தையும் தொடர்ந்து செய்யலாம்- ஆனால் அதை நம்மை நாமே பகடைக் காயாக வைத்துச் செய்யமுடியுமானால் செய்யலாம். அப்பாவி இளைஞனையும் அவனது காதலியையும் முன்னால் போகவிட்டு நாம் பின்னால் இருந்து கத்திக் கொண்டிருந்தால் அவர்கள்தான் வெட்டுபட்டுச் சாவார்கள். இறுதியில் விளையும் இழப்பு என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும்தான். நமக்கு என்ன வந்தது? இன்னொரு சோடியைத் தேடி அவர்களுக்கு பின்னால் நாம் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கும் அல்லது தண்டவாளத்தின் ஓரமாக நின்று ‘உச்’கொட்ட வேண்டியிருக்கும்- இப்பொழுது செய்து கொண்டிருப்பதைப் போல.