Jul 27, 2013

பாலியலின் வளர்ச்சி

சைக்காலஜி என்றாலே ஃப்ராய்ட் பற்றித்தான் பேசுகிறோம் இல்லையா? அவர் மட்டுமே அந்தத் துறையில்  ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’  இல்லை என்றாலும் அவர் அட்டகாசமான base அமைத்துவிட்டார். நாம் அவரை பற்றி மட்டும் பேசிவிட்டு திருப்திப் பட்டுக் கொள்கிறோம்- அவரைத் தாண்டி பேசுவதில்லை. சமீபத்தில் கெரேன் ஹார்னி என்ற பெண்மணி பற்றி சமீபத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. ஃப்ராய்டின் பெரும்பாலான கருத்துக்களை ஏற்றுக் கொண்ட மனோவியல் ஆராய்ச்சியாளர் இவர். பெரும்பாலான கொள்கைகளை ஏற்றுக் கொண்டாலும் பெண்களைப் பற்றி ப்ராய்ட் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை மற்றும் ஏற்றுக் கொள்ளாத மகாராணி. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ‘அவன் என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்று கேட்டவர். இவர்கள் இரண்டு பேரும் ஒரு பக்கமாக இருக்கட்டும். அதற்கு முன்பாக இன்னொரு பஞ்சாயத்து இருக்கிறது.

சென்ற முறை சென்னை சென்றிருந்த போது அங்கு சந்தித்த ஒரு நண்பர் ‘என்னங்க பெரிய ப்லாக், ஃபேஸ்புக் எல்லாம்...இருபது வருஷத்துக்கு முன்னாடி சிற்றிதழ்களில் எழுதி அவுட் டேட் ஆன விஷயங்களைத்தான் இப்போ எழுதிட்டு இருக்காங்க’ என்றார். முகத்தில் அறைந்த மாதிரி அவர் சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறது. ஃப்ராய்ட் பற்றியெல்லாம் நம்மவர்கள் எப்பொழுதோ எழுதிவிட்டார்கள். ஆனால் எதை எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. இந்த மாதிரியான சில ஸ்டேட்மெண்ட்கள் நமது வேகத்துக்கு பெரிய ப்ரேக் ஆகிவிடுகிறது. ஃப்ராய்ட் பற்றி ஏதாவது பேசலாம் என்று நினைத்தால் ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரியான பழம் தின்ற ஆட்கள் ‘அதையெல்லாம் பிரம்மராஜனும், நாகர்ஜூனனும் அப்பவே எழுதிட்டாங்களே’ என்று சொல்லிவிடுவார்களோ என்று தயக்கமாக இருக்கிறது. 

உண்மையில் சைக்காலஜி போன்ற பெரிய கடலில் சில ஏரியாக்களை முன்னவர்கள் தொட்டிருந்தாலும் அடுத்த தலைமுறையினர் விளையாடுவதற்கு ஏகப்பட்ட சரக்குகள் மிச்சமிருக்கின்றன எனத் தோன்றுகிறது. ஃப்ராய்ட் எல்லாம் அப்படிப்பட்ட ஒரு பெரிய ப்ளே க்ரவுண்ட். ரவுண்ட் கட்டி விளாசலாம். 

சில நாட்களுக்கு முன்பு லன்ச் நேரத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது நான்கு வயது மகன் கையை ‘அங்கேயே’ வைத்திருக்கிறான் என்றார். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமோ என யோசிப்பதாகச் சொன்னார். தேவையில்லை என்று தோன்றியது.  வீட்டுக்கு வீடு வாசப்படிதான். சிறுவயதில் இந்த ‘லோலாயத்தை’ செய்கிறேன் என்பதற்காக சித்தி ஒருவர்  துளியூண்டு மிளகாய்ப்பொடியை கையில் தடவி விட்டுவிட்டார். பழகின கை சும்மா இருக்குமா? தொட்டுத் தொலைத்துவிட்டது. எரிச்சல் தாங்கமுடியாமல் அலறித் துடித்தது ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு கை ‘அந்த’ப்பக்கமே போகவில்லை.

மனோவியலில் தேடிப்பார்த்தால் வயது ஏற ஏற நாம் எப்படி குஜால் பார்ட்டியாக உருமாறுகிறோம் என Psychosexual development என்று ஃப்ராய்ட் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறார்- அதாவது பாலியல் வளர்ச்சியின் மனோவியல். அதுவும் stage by stage ஆன தியரி இது. 

குழந்தை பிறந்ததிலிருந்து முதல் வருடம் வரை- Oral stage. 

குழந்தை எதை எடுத்தாலும் வாயில் வைக்கிறது அல்லவா? அது குழந்தைக்கு ஒரு வித பாலியல் திருப்தியைத் தருகிறது என்கிறார் ப்ராய்ட். தனது விரலை சூப்புவதில் ஆரம்பித்து அம்மாவின் மார்பில் பால் உறிஞ்சுவது வரையிலும் அத்தனையையும் இந்த லிஸ்டில் சேர்த்துவிடுகிறார். இந்த stage குழந்தையின் முதல் வருடத்தோடு நின்று விடுவதில்லை. விட்டகுறை தொட்டகுறையாக நீண்டு சிகரெட், பாக்கு, நகம் கடித்தல் என்று நாம் வளர்ந்த பிறகும் நமது வாயோடு சம்பந்தப்பட்ட பழக்கமாக நம்மோடு ஒட்டிக் கொள்கிறதாம். நல்லவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். ஒரு அடல்ட்ஸ் மேட்டர் இருக்கிறது. பிற்காலத்தில் Oral sex இல் உருவாகக் கூடிய விருப்பம் கூட இந்த முதல் வருடப் பழக்கத்தின் தொடர்ச்சிதானாம். 

அடுத்தது ஆய் மேட்டர். Anal stage- இது ஒன்றிலிருந்து மூன்று வயது வரை. இப்பொழுது குழந்தைகள் ‘இதை’த்தான் இன்பம் தரும் ஏரியாவாக கருதுகின்றன. இதை விலாவாரியாக எழுத வேண்டியதில்லை. மேற்படி விவகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் கூகிளில் தேடிக் கொள்ளலாம்.

நான் எழுத நினைத்தது அடுத்த stage-Phallic Stage. இது ஆறு வயது வரை. ஆண் குழந்தைகள் அம்மாவிடம் ஒட்டிக் கொள்வதும், பெண் குழந்தைகள் அப்பாவிடம் ஒட்டிக் கொள்வதையும்தான் சொல்கிறார்.ஒட்டிக் கொள்ளவில்லையென்றாலும் கூட, இந்தப் பருவத்தில் ஆண் குழந்தைகள் தனது அம்மாவை ‘வில்லனான’ அப்பாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக் கொள்கின்றன. பெண் குழந்தைகள் தங்களது அப்பாவை காப்பாற்ற முடிவு செய்துவிடுகிறார்கள். 

பெண் குழந்தை தனது தாயைப் போல நடை உடை பாவனையை மாற்றிக் கொண்டு அப்பாவை ‘பிக்கப்’ செய்துவிடலாம் என நினைக்கிறது. ஆண் குழந்தை தனது அப்பாவை ரோல் மாடலாக நினைப்பது அம்மாவை பிக்கப் செய்யத்தானாம். இந்த வயது குழந்தைகளை கவனித்துப் பார்த்தால் சரி என்றுதான் தோன்றுகிறது.

இப்படியே சொல்லிக் கொண்டு போய் Penis envy என்ற கான்செப்டை ஃப்ராய்ட் சொல்லியிருக்கிறார். அதாவது பெண் குழந்தை தனக்கு ‘ஆணுறுப்பு’ இல்லாததை நினைத்து பொறாமைப் படத் துவங்குகிறதாம். தனது அம்மாவை கட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கத் துவங்குகிறது. இந்த இடத்தில்தான் ஹார்னி அட்டாக் கொடுக்கிறார். Penis envy பெண்களைக் கேவலப்படுத்துகிறது என்கிறார். ‘அந்தக் கருமத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்’ என்று யோசித்தபடியே பெண்களின் மனோவியல் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். 

இனிமேல் இதை அவ்வப்போது பேசலாம். இப்போதைக்கு-

Oral Stage என்று வாசித்தோம் இல்லையா? அதே விட்டகுறை ஃப்ராய்டுக்கும் தொடர்ந்திருக்கிறது. ஏகப்பட்ட சிகரெட் பிடிப்பாராம். சிகரெட்தான் தனது மூளையைத் தூண்டி விடுவதாக நம்பி கடைசியில் வாயில் கேன்சர் வந்து செத்திருக்கிறார். சரி போகட்டும், நமக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. ஃப்ராய்ட் ஆஸ்திரியாக்காரர். அதுதான் முக்கியம்! காசு கொடுத்தால் ஸ்டாம்பு அடித்து தருவார்களே! அதே ஆஸ்திரியாதான்.