Jul 25, 2013

குடை, ஒற்றை ரோஜா - இது ரேகா டீச்சர் இல்லை

டீச்சரைக் கற்பனை செய்து பார்க்க வேண்டுமென்றால் மனசு ரேகாவைத்தான் நினைத்துக் கொள்கிறது. க்ளிஷேவான கற்பனைதான். ஆனால் அந்த ஒற்றை ரோஜா, குடை, அளவான சிரிப்பு என்று கடலோரக் கவிதைகளை மீறி மனம் யோசிப்பதில்லை. இதுவும் ஒரு டீச்சர் பற்றித்தான்- ஆனால் நிச்சயமாக ரேகா டீச்சர் பற்றி இல்லை.

                                                            ***
ஜப்பானின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஒரு சோதனை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்தன. ஐந்து முதல் ஆறு வயது உடைய குழந்தைகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பறைக்குள் அனுப்பப்பட்டது. மூன்று குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் கதை சொல்லித்தரப்பட்டது- அது  புரிந்துகொள்ள மிகச் சிக்கலான ஜப்பானிய நாட்டுப்புறக்கதை. இரண்டு குழுக்களுக்கு வழக்கமான ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள். மூன்றாவது குழுவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்தான் இந்தக் கட்டுரையின் சீப் கெஸ்ட். ரோபோ டீச்சர்.

ரோபோ டீச்சரின் தேவைக்கான சின்ன ப்ளாஷ்பேக்-

கம்யூட்டரும் இண்டர்நெட்டும் படுவேகமாக வளர்ச்சியடையத் துவங்கிய பிறகு உயர்கல்விகளில் ஆன்லைன் கல்விமுறை  சாதாரணம் ஆகிவிட்டது. படிக்க வேண்டிய பாடங்கள் இணையத்தளத்தில் இருக்கும். சமயங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வீடியோக்களும் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அனைத்து பாடங்களுக்கும் வீடியோக்கள் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மாணவர்கள் பாடங்களை சுயமாக படித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேட்டால் பதில் அனுப்பி வைப்பார்கள். இந்த பாட முறைகளினால் நேரடி ஆசிரியர்களின் தேவை குறையத் துவங்கியது.  

உயர்கல்விகளில் வேண்டுமானால் ஆன்லைன் கல்விமுறை சாத்தியமானதாகவும் சுலபமானதாகவும் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு நேரடி ஆசிரியர்கள் அவசியம். அல்லவா? ஆசிரியர்தானே வேண்டும் அது மனிதனாக இருந்தால் என்ன இயந்திரமாக இருந்தால் என்ன என்று ரோபோவிடம் அந்த வேலையைக் கொடுத்துவிட்டார்கள். 

இப்படித்தான் ரோபோ டீச்சர் அறிமுகம் ஆனது. இப்பொழுது கொரியாவில் ரோபோ டீச்சர் நல்லபாப்புலர். 

கொரியர்களைப் பற்றித் தெரியுமல்லவா? எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கில்லாடிகள். செல்போனோ, கம்ப்யூட்டரோ - உள்ளே இருக்கும் ஆயிரக்கணக்கான குட்டி குட்டி எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களில் பெரும்பாலானவை கொரியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். நம் ஊரில் முறுக்கும், எலந்த வடையும் குடிசைத் தொழிலில் தயாரிப்பது போல கொரியாவில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. என்னதான் எலெக்ட்ரானிக்ஸில் கில்லாடிகள் என்றாலும் தங்களால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிவதில்லை என்ற குறை அவர்களுக்கு உண்டு. இதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார்கள். இத்தனை செலவு செய்து ஆங்கில வாத்தியாரை வெளிநாட்டில் இருந்து கூட்டி வருவதற்கு பதிலாக ரோபோவை ஆங்கிலம் கற்றுத் தரும் ஆசிரியராக மாற்றிவிடலாம் என்று முடிவு செய்தார்கள். 

இந்தச் சமயத்தில்தான் மிட்ஷுபிஷி நிறுவனம் "வாக்கமுரு" என்னும் ரோபோவை மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தது. இந்த ரோபோக்கள் மனிதர்கள் சொல்வதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும்.  ஆரம்பத்தில் இது வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் 'கேர் டேக்கர்'களாகத்தான் பயன்படுத்தப்பட்டன.  மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்திற்கு கொடுப்பது, தான் கவனித்துக்கொள்ளும் முதியவருக்கு ஏதாவது சிக்கல் என்றால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைப்பது என்று 'மெஷின் நர்சாக' செயல்பட்டன. இந்த ரோபோக்களின் கம்யூனிகேஷன் சிஸ்டம் பிரமாதமானது எதிரில் இருப்பவர்களோடு மட்டுமில்லை, தன்னிடம் இருக்கும் தொலைபேசி எண்களை வைத்து யாருடன் வேண்டுமானாலும் போனில் கூட பேச முடியும். (inbuilt செல்போன்). 

இந்த ரோபோவை  பாடம் சொல்லித் தர வைக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்த விஞ்ஞானிகள் அதனை சோதிப்பதற்கான செட்டப்களை செய்யத் துவங்கினார்கள். இதுதான் முதல்பத்தியில் சொன்ன சோதனைக்கான செட்டப். ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலே தூங்கிவிடும் மாணவர்கள் ரோபோக்கள் பாடம் நடத்தினால் தூங்காமல் இருப்பார்களா என ஜெர்க் அடித்தவர்கள் பாடத்தை கவனிக்கவிருக்கும் மாணவர்களின் மூளைச் செயல்பாட்டைக் கண்டறிய இ.இ.ஜி எனப்படும் முறையை (Electroencephalography) பொருத்தினார்கள். இந்த இ.இ.ஜி மனித மூளை தன் செயல்களுக்கு ஏற்ப உருவாக்கும் வேறுபட்ட மின்னதிர்வுகளை பதிவு செய்து கொள்ளும். இந்த மின்னதிர்வுகளை துல்லியமாக பதிவு செய்வதன் மூலமாக மாணவர் தூங்குகிறாரா அல்லது கவனிக்கிறாரா என்பதை கண்டறிந்துவிட முடியும்.  இந்தத் தகவல் ரோபோ டீச்சருக்கு அனுப்பிவைக்கப்படும். தனது மாணவர்களில் யாரோ தூங்குகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ரோபோ அவரை நோக்கித் திரும்பும். அவரை நோக்கி கையை அசைக்கும். குரலை உயர்த்தும். அந்த மாணவர் விழித்துக் கொண்டார் என்று தெரிந்தவுடன் தனது கவனத்தை மற்றவர்களை நோக்கி திருப்பும்.

பாடம் நடத்துவது எளிதாகிட்டது. யாராவது கேள்வி கேட்டால்? வகுப்பறையில் யாராவது பேசினால் 'யார்' பேசினார் 'என்ன' பேசினார் என்பதையும் கண்டறியும் யுக்தி இந்த ரோபோ ஆசிரியர்களிடம் உண்டு. இதற்கு  Speech Recognition மற்றும் Voice Recognition என்று இரண்டு முறைகள் பயன்படுகின்றன. 'ஸ்பீச்' முறையில் பேசுபவரின் குரல் பிரதியாக (Text) ஆக மாற்றப்பட்டுவிடும். பிறகு மாற்றப்பட்ட பிரதியை படித்து ரோபோ புரிந்து கொள்ளும். 'வாய்ஸ்' முறையில் கேட்கும் குரலின் அதிர்வெண்(Frequency), ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் மூலமாக யாருடைய குரல் என்று ரோபோ கண்டறிந்துவிடும். இந்த இரண்டு முறைகளுக்கும் ஏகப்பட்ட சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன. 

குரலை கண்டுபிடித்து கேள்வியை புரிந்து கொண்டால் மட்டும் போதுமா? பதில் வேண்டுமே. அதுக்கும் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தார்கள். இந்த ரோபோதான்  கம்யூனிகேஷனில் பெரிய ஆள் அல்லவா? இந்த திறமையை பயன்படுத்தி ரோபோவை இண்டர்நெட்டோடு இணைத்துவிடுவார்கள். மாணவர்களின் கேள்விகளுக்குரிய விடையை ரோபோ இணையத்தில் தேடும்.  ஆலாம்பாளையத்தில் குதிரை என்ன விலை என்பதிலிருந்து செவ்வாய் கிரகத்தில் க்யூரியாசிட்டி விண்கலம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வரை அத்தனை தகவல்களும் கொட்டிக் கிடக்கும் இணையத்திலிருந்து மாணவர்களின் கேள்விக்கான பதிலை தேடி எடுப்பது ரோபோவுக்கு ஊதித்தள்ளுவது மாதிரி. தான் அளிக்கும் பதில் மாணவரை திருப்திப்படுத்துகிறதா என்பதை இ.இ.ஜி முறை மூலம் கண்டுபிடித்துவிடும். மாணவர் திருப்தியடையும் வரைக்கும் எத்தனை பதில்களை வேண்டுமானாலும் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

வகுப்பறைக்குள் அனுப்பப்பட்ட மூன்று குழுக்களிடமும் சொல்லித்தரப்பட்ட நாட்டுப்புற கதையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். முடிவு நாம் எதிர்பார்த்ததுதான். ரோபோ சொல்லித்தந்த குழுதான் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற குழுவில் இருந்த குழந்தைகள் புத்திச்சாலிகளாக இருக்கக் கூடும் என்று சிலர் 'கிளப்பி'விட்டார்கள். மீண்டும் குழுக்கள் கலைத்து மாற்றியமைக்கப்பட்டன. இப்பொழுது அதே சோதனைதான். ஜப்பானிய கதைக்கு பதிலாக சீன நாட்டுப்புறக் கதை சொல்லித்தரப்பட்டது. மற்ற எதிலும் மாற்றமில்லை. குழந்தைகள் மீண்டும் சோதிக்கப்பட்டார்கள். இப்பொழுதும் முடிவில் மாற்றமில்லை. இன்னொரு முறை ரோபோக்கள் "ஜெய்ஹோ" என்றன. 

இனி குடைபிடித்துக் கொண்டு ஒற்றை ரோஜாவைத் தலையில் வைத்துக் கொண்டு ரோபோ டீச்சர்கள் நம் ஊரிலும் நடக்கும் போலிருக்கிறது.