Jul 24, 2013

அரசல்புரசலாக- திரை விவகாரங்கள்

ஒரு காலத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் ஏகப்பட்ட சினிமா ஷுட்டிங் நடக்கும். ஒரே வயல்தான். இந்தப்பக்கம் சத்யராஜ் இருப்பார். இன்னொரு பக்கத்தில் பிரபு இருப்பார். லாட்ஜ்கள் சினிமாக்காரர்களால் நிரம்பி வழியும்- ஊரில் பெரிய லாட்ஜ்கள் மொத்தமே இரண்டுதான். அந்த இரண்டையும் சினிமாக்காரர்கள் மாதக்கணக்கில் பதிவு செய்து கொள்வார்கள். 

சண்டைக்காட்சிகளில் உடைப்பதற்கு பானைகள், கல்யாணக்காட்சிகளுக்கு பூக்கள், கோவில் திருவிழாக்காட்சிகளுக்கு வியாபாரிகள் என எல்லோருக்கும் ஏதாவது விதத்தில் வருமானம் இருந்தது. நடிகர் நடிகைகளை சர்வசாதாரணமாக பார்க்க முடியும் என்பதால் உள்ளூர்காரர்கள் பெரிய பிரயத்தனப்படமாட்டார்கள். அதனால் ஷுட்டிங் என்பது இன்னுமொரு அன்றாட நிகழ்வாக இருந்தது. 

அப்படியிருந்தும் ‘பாண்டித்துரை’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பாரியூர் கோவிலில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்தப் படத்தில் மன்சூரலிகானும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ‘கானங்காத்தால பொம்பளைப் புள்ளைகளைப் பார்க்க வாயைத் தொறந்துட்டு வந்துட்டீங்களா? போயி வேலையை பாருங்கய்யா’ என்று கூட்டத்தை கலாய்த்து விட்டார். அவர் சொன்னது சரிதான். குஷ்பூ மட்டும் என்றாலும் கூட பரவாயில்லை- சில்க் ஸ்மிதாவையும் சேர்த்து வைத்து ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. கூட்டம் வராமல் இருக்குமா? வந்துவிட்டது. யாருமே உண்மையைச் சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்? மன்சூர் உண்மையைச் சொன்னதும் ஊர்க்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது. அடிக்க பாய்ந்துவிட்டார்கள். மொத்த யூனிட்டும் சமாதானம் பேச வேண்டியிருந்தது.

அந்தச் சமயங்களில் நான் ஆட்டோகிராஃப் வெறியெடுத்து திரிந்தேன். ஒரு டைரியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நடிகர் நடிகையின் கையெழுத்தாக நிரப்பி வைத்திருந்த பருவம் அது.  பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. அவர்களை எப்பொழுதாவது திரையில் பார்த்திருந்தால் போதும். கையெழுத்து வாங்கிவிடுவேன். அப்படித்தான் குஷ்பூவிடம் நோட்டை நீட்டிய போது ‘அன்புடன் குஷ்பூ பிரபு’ என்று கையெழுத்திட்டார். குஷ்பூவின் கையெழுத்தில் பிரபு. அப்பொழுது இந்த விவகாரம் அரசல்புரசலாகத்தான் இருந்தது. இந்த கையெழுத்தை வைத்துக் கொண்டு நான் வீதியெல்லாம் தம்பட்டம் அடித்துத் திரிந்தேன் - உலகமகா ரகசியத்தைக் கண்டுபிடித்த மாதிரி. பிரபு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று எதிரில் வந்தவர்களிடமெல்லாம் கையெழுத்தைக் காட்டி ஜோசியம் சொன்னேன். ஆனால் என் குருவி மண்டைக்குள் இருக்கும் குட்டி மூளை எதிர்பார்த்த மாதிரி அவர்கள் திருமணம் எதுவும் செய்துகொள்ளவில்லை. ஊர்க்காரர்கள் மறந்து போனார்கள். ஆனால் அவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நான் தான் ரொம்ப நாட்களுக்கு யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கால கட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்களில் ‘பிரைவேட் செக்யூரிட்டிகள்’ எதுவும் இருக்க மாட்டார்கள். அந்தந்த ஊரில் ஆஜானுபாகுவான ஆட்கள் நான்கைந்து பேருக்கு சம்பளம் கொடுத்து பிடித்துக் கொள்வார்கள். அவர்கள்தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார்கள். அப்படியொரு ஆஜானுபாகுவான ஆசாமியாக தியாகு என்பவர் இருந்தார். அப்பொழுது அவர் ஷூட்டிங்களுக்கு ‘செக்யூரிட்டி’யாகச் சென்றுதான் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு அதில் ஒரு விருப்பம் இருந்தது. இதன் மூலம் அவருக்கு நிறைய சினிமாத் தொடர்புகள் கிடைத்தது. அவ்வப்போது சென்னை செல்லத் துவங்கினார். ‘ஹீரோவாகிவிடலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

எங்கள் பங்காளி ஒருவர் தியாகுவுக்கு நல்ல நண்பர். அவர் மூலமாக நானும் தியாகுவிடம் ஒட்டிக் கொண்டேன். இதன் பிறகு எனக்கும் நிறைய சினிமாச் செய்திகள் கிடைக்கத் துவங்கின. பெரும்பாலானவை கிசுகிசுக்கள்தான். இந்தச் செய்திகளில் எத்தனை சதவீதம் உண்மை என்றெல்லாம் தெரியாது. ஆனால் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். குஷ்பூவை பிரபு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் தான் விபரீத முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என சிவாஜி கணேசன் மிரட்டினார் என்றும், அதே சமயத்தில் இன்னொரு சினிமாக் குடும்பம் குஷ்பூவை மிரட்டியதாகவும் தியாகு சொன்னார். நம்பிக் கொண்டேன். நம்பித்தான் ஆக வேண்டும்- தானே நேரில் பார்த்தது போல தியாகு விவரிப்பார்.

அதே சினிமாக் குடும்பம்தான் நக்மாவை சினிமாவைவிட்டு விரட்டியதாகவும் இன்னொரு முறை தியாகு சொல்லியிருக்கிறார். இந்த மாதிரியான விவகாரங்கள் நட்சத்திரங்களின் பெர்சனல் விவகாரம் என்பதால் இதையெல்லாம் வெளியில் பேச வேண்டியதில்லை எனத் தோன்றும். ஆனால் சினிமாவில், சிலரால் அல்லது சில குடும்பங்களால் ஒருவரின் பெர்சனல் விருப்பம் எதுவாக இருப்பினும் சிதைக்கப்படுவது நடந்து கொண்டுதானே இருக்கிறது? அவ்வளவு பெரிய ஸ்டார்களையே ஒரு குடும்பம் மிரட்ட முடியுமா என்று அந்தக் காலத்தில் சந்தேகம் வந்ததுண்டு. ஆனால் கேள்வி கேட்கும் போதெல்லாம் ‘சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்று தியாகு நமது வாயை அடக்கி விடுவார். இப்பொழுது தியாகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அவர் சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக இருப்பதாக கேள்விப்பட்டேன். 

இப்பொழுது தியாகுவும் அவரது கதைகளும் ஞாபகத்திற்கு வரக் காரணம் மிகச் சமீபத்தில் ஒரு நடிகையுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டவர். பெயரைச் சொன்னால் எல்லோருக்குமே தெரியும். ஆனால் இப்போதைக்கு பெயர் வேண்டாம். சினிமாவில் தோல்வியடைந்துவிட்டார். அதைத் தோல்வி என்று சொல்ல முடியாது- ஒரு சினிமாக் குடும்பம் கவிழ்த்துவிட்டது. சினிமா வாய்ப்பிற்கு ஆசைப்பட்டு தனது படிப்பை இழந்தது, வாழ்க்கையை தொலைத்தது, இன்னமும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பது என விரிவாகப் பேசினார். இது மேற்சொன்ன விவகாரத்தில் வந்த குடும்பம் இல்லை. இன்னொரு சினிமாக் குடும்பம். 

எனது நண்பருக்கு அந்த நடிகை குடும்ப நண்பர். நண்பருடன் சேர்ந்து பெங்களூரில்தான் சந்தித்தோம். பேசிக் கொண்டிருந்த போதே உடைந்து அழுதார். பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் ‘ம்ம்’ கொட்டிக் கேட்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் விலாவாரியாக எழுதி அவருக்கு இன்னும் கொஞ்சம் பிரச்சினைகளை தேடித் தரலாம். அதனால் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.

நிறுத்துவதற்கு முன்பாக, ‘பத்து வயதில் மகள் உடைய ஒரு பெண்மணிதானே உங்கள் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரம்’ என்றார். யாரைச் சொல்கிறார் என்று தெரிந்துவிட்டது. உண்மையோ, பொய்யோ இதற்கு மேல் ஒரு ரசிகனின் நினைப்பில் குண்டு விழ முடியுமா? சமாளிப்பதற்காக ‘அதனால என்னங்க ரஜினிக்கு முப்பது வயதில் பெண் இருக்கிறார். ஆனா இன்னமும் அவர்தானே இன்னமும் சூப்பர் ஸ்டார்’ என்றேன். நான் உண்மையாகச் சொன்னேனா நக்கலாகச் சொன்னேனா என்று தெரியாமல் சிரித்து வைத்தார். நாங்களும் சிரித்துவிட்டு கிளம்பினோம்.

வீட்டுக்கு வந்தும் அவர் அழுததுதான் நினைவில் இருந்தது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் மின்னிக் கொண்டே இருப்பதில்லை!