Jul 1, 2013

அகிலா யாருங்க?

இரண்டு நாட்களாக உடல்நிலை தாறுமாறாக சிதைந்து போய்விட்டது. சென்னை வெயிலும் அங்கு வாங்கித் தின்ற சிக்கன் பிரியாணியும்தான் காரணமாக இருக்கும் என நம்பிக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை மாலையிலிருந்து இன்று காலை வரைக்கும் படுத்த படுக்கை. எதையும் பேசவோ அல்லது யோசிக்கவோ தோன்றவில்லை. விட்டத்தை பார்த்துக் கொண்டு கிடந்தேன். விட்டம் எங்கே இருக்கிறது? கான் கிரீட்கூரைதான். தண்ணீரோ, உணவோ படுக்கைக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். இப்பொழுது பரவாயில்லை. இரண்டு நாட்களும் என் பிரார்த்தனை ஒன்றாகத்தான் இருந்தது. “எந்தக் காலத்திலும் படுக்கையில் விழுந்துவிடாமல் பார்த்துக்கோ சாமி”.அவ்வளவுதான். 

இந்த படுக்கைக்கு முன்பாக இருந்தே ஓரிரண்டு நாட்களாக கடலில் பயணிப்பதும், உப்புக்காற்று முகத்தில் அறைவதும், யாரோ யாரையோ வெட்டுவதுமாக கனவுகள் பயமுறுத்திக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் ‘பயமுறுத்திக் கொண்டிருந்தன’ என்ற இரண்டு வார்த்தைகளில் எளிதாகச் சொல்லிவிட்டேன். ஆனால் வீரியம் இதைவிட அதிகம். இந்தக் கனவுகளுக்கு என்ன காரணம் என்று தெரியும். வாசித்த ஒரு நாவல்தான். நாவல் அற்புதமானதுதான். ஆனால் நாவல் எடுத்துக் கொண்ட களமும், அதனோடு நான் ஏற்படுத்திக் கொண்ட ஒட்டுறவும்தான் என்னை ஒரு வழியாக்கிவிட்டது. 

மீண்டும் ஒரு முறை சென்னையை இழுத்துக் கொள்கிறேன். சென்னையைத் திரும்பத் திரும்ப இழுப்பதற்கு நீங்கள் மன்னித்துத்தான் தீர வேண்டும். ஆனால் இந்த நாவலை சென்னை போகும் போதுதான் வாசித்தேன். பெங்களூரிலிருந்து சென்னைக்கு மதிய நேரத்தில் கிளம்பினேன். பகல் நேரப் பயணத்தில் ஒரு செளகரியம் இருக்கிறது. நல்ல புத்தகமாக பையில் வைத்திருந்தால் முடித்துவிடலாம். அப்படித்தான் ‘ஆறாவடு’.நாவலை எழுதிய சயந்தன் ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார் போலிருக்கிறது. அவரோடு இதுவரைக்கும் தொடர்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த நாவலை வாசித்தவுடன் ஒரு முறை அவரோடு பேசிவிட வேண்டும் என்று தோன்றுகிறது- குறிப்பாக நாவலில் ஒரு கதாபாத்திரமாக வரும் சிறுவன் இறந்தவுடன் அவனை தூக்கி கடலில் எரியும் காட்சியை எழுதியதற்காக. நாவலின் இந்தப் பக்கங்களை வாசித்தவுடன் சில கணங்கள் நாவலை மூடி வைத்தேன். அப்பொழுது ஆம்பூர் தாண்டிய தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. நான் அழுது கொண்டிருந்தேன். 

நாவலின் நாயகன் ஈழத்தைச் சார்ந்தவன். புதிய வாழ்வைத் தேடி ஈழத்திலிருந்து இத்தாலிக்குத் திருட்டுத்தனமாக பயணிக்கிறான். அப்படியானால் அவனுடைய பழைய வாழ்வு? புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தவன். இந்தப் பயணத்திற்கு முன்பாகவும் வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றிருக்கிறான். ஆனால் விமானத்தில் பயணிக்க முயன்று பாஸ்போர்ட், விசா போன்ற பிரச்சினைகளினால் சிறைபிடிக்கப்படுகிறான். அதனால் இந்த முறை கடல்வழிப் பயணம். ஏஜன்சியிடம் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறான். எப்படியும் டைட்டானிக் கப்பல் வரும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் டப்பா வள்ளம்தான் வாய்க்கிறது. புதிய வாழ்க்கை அல்லவா? ஏறிக் கொள்கிறான். வள்ளம் இத்தாலி நோக்கி பயணிக்கிறது. 

இரவு பகல் தாண்டி வள்ளம் நகர்கிறது. அவனோடு சில ஈழத்தமிழர்களும், சில சிங்களவர்களும் வள்ளத்தில் இருக்கிறார்கள். அந்தக் குழுவில்தான் சிறுவன் ஒருவன் இறந்து போகிறான்- என்னை அழ வைத்த சிறுவன். மொத்த நாவலும் இந்தப் பயணத்தை மட்டுமே விவரிப்பது இல்லை. நாவலின் நாயகன் புலிகள் இயக்கத்தில் பணியாற்றியது, இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக அவனது வாழ்க்கை, ஈடுபடும் போர்கள், போரில் காலை இழப்பது, பிறகு புலிகளின் அரசியல் துறையில் சேர்வது, அகிலா என்னும் பெண்ணுடன் அவனுக்கு உருவாகும் காதல் என கலந்துகட்டிய அட்டகாசம்தான் இந்த நாவல். 

இயக்கமாக உருப்பெறுவதற்கு முன்பாக ஈழக்கனவுகளோடு உதிரிகளாகத் திரிந்த இளைஞர்கள், பிரபாகரன் மீது இயக்கத்தினர் கொண்டிருந்த நம்பிக்கை, இடையில் ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த அழிச்சாட்டியங்கள் என ஒவ்வொன்றையும் அவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருக்கிறார் சயந்தன். 

இந்த நாவலில் மொழிச்சிக்கல் இல்லை, நாவலாசிரியர் தனது அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதில்லை, நாவலின் வடிவமும் அத்தியாயங்களும் அவ்வளவு நேர்த்தியாக்கப்பட்டிருக்கிறது.

நாவலை முடிக்கும் போது ஒரு விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசி அத்தியாயமான இருபத்தொன்றாம் அத்தியாயத்தைக் கிழித்துவிட்டாலும் கூட நாவல் முற்றுப் பெற்றுவிடும். ஆனால் எதற்காக சேர்த்திருக்கிறார் என்று தெரியவில்லை. சரி இருக்கட்டும்.

இந்த நாவலைப் பற்றி விரிவாக பேச முடியும். இப்பொழுது எதற்காக இதை அவசரமாக எழுத வேண்டியிருந்தது என்பதைச் சொல்லிவிடுகிறேன். நேற்று மாலை நடக்கவே முடியாமல் போய்விட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். எனது நிலையைப் பார்த்துவிட்டு ஒரு பாட்டில் ‘ட்ரிப்ஸ்’ போடச் சொல்லிவிட்டார்கள். இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பி ஒரு மாதிரியான மயக்கத்திலேயே படுத்திருந்தேன்.  

அப்பொழுது ‘அகிலாவுக்கு தகவல் சொல்லிவிடுங்கள்’ என்று குழறியிருக்கிறேன். 

என் கெட்ட நேரம் அந்த நேரத்தில் வேணி அருகில் இருந்திருக்கிறாள். தெளியட்டும் என்று காத்திருந்தவள் இன்று காலையில் ‘அகிலா யாருங்க?’ என்று கேட்டாள். 

அகிலா என்ற பெயருடைய எந்தப் பெண்ணும் எனக்கு அறிமுகம் இல்லை என்பதால் குழம்பினேன்.  ‘யாரையும் எனக்குத் தெரியாதே’ என்றேன்.

‘உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்ல...ஆனா மயக்கத்தில் அந்தப் பெயரைச் சொன்னீங்க’ என்றாள். மண்டையைக் கசக்கி  காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்.

சொல்லிப் புரிய வைக்க முடியும் என்று தெரியவில்லை. நாவலை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். வாசித்துக் கொண்டிருக்கிறாள். நம்பிவிடுவாள் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!