Jul 16, 2013

ஒரு இசுலாமிய பெரியவரும் அவரது மனைவியும்

ஹைதராபாத்தில் மெஹதிப்பட்டணம் என்ற இடம் இருக்கிறது. பழங்காலத்து ஏரியா. அங்கிருந்து கோல்கொண்டா கோட்டை பக்கம்தான். அந்தக் காலத்தில் நிஜாமிடம் பணி புரிந்த அரசு ஊழியர்களும் மற்றவர்களும் இந்த பகுதிகளில் தங்கியிருந்தார்களாம். நிஜாமிடம் வேலை செய்தவர்களில் மெஜாரிட்டி இசுலாமியர்களாகத்தானே இருந்திருப்பார்கள்? அதனால் இன்னமும் இதெல்லாம் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஏரியாகவாக இருக்கிறது- பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடனே தெரிந்துவிடும். நிறைய சிறு சிறு வியாபாரிகளின் கடைகள் உண்டு. பேரம் பேசினால் சல்லிசான விலையில் வாங்கலாம்.

இப்பொழுது மெஹதிப்பட்டணத்தின் புகழ் பாடுவதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. அங்கு ஓரிரு வருடங்கள் தங்கியிருந்தேன். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு சின்ன போர்ஷன். ஓய்வு பெற்ற பொறியாளரின் வீடு அது. அந்தத் தாத்தா அந்தக்காலத்திலேயே எம்.ஈ. படித்தவர். அதற்கு தகுந்தாற்படியே வீட்டை வடிவமைத்திருந்தார். வீட்டிற்குள் பெரிய மரங்கள் இருந்தன. பூச்செடிகளும் உண்டு.  மொட்டை மாடிக்கு யாரும் வர மாட்டார்கள். மரத்தின் கிளைகள் எங்கள் போர்ஷனின் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும். ஆரம்பத்தில் இன்னொரு நண்பரும் உடன் இருந்தார். பிறகு அவர் சிங்கப்பூர் சென்ற பிறகு தனியாகத்தான் இருந்தேன். ரம்மியமான அறை அது. 

இந்தச் சமயத்தில் ஒரு குடும்பத்தோடு அறிமுகம் உண்டானது. அறிமுகம் என்றால் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்ளும் அறிமுகம் மட்டும்தான். அதற்குமேல் எதுவும் இல்லை. அதற்கு காரணம்- அவர்களுக்கு தெலுங்கு அல்லது தமிழ் தெரியாது. எனக்கு உருது அல்லது ஹிந்தி தெரியாது. அதனால் அவர்கள் என்னைப் பார்த்தால் சிரிப்பார்கள். நானும் சிரித்து வைப்பேன். அவ்வளவுதான். அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாகத்தான் இருக்கக் கூடும். அந்த ஆணிடம் இசுலாமியருக்கான அடையாளங்கள் இருந்தன. தாடி, குல்லா, லுங்கி, ஜிப்பா என்றிருப்பார். அந்தப் பெண் எப்பொழுது ஒரு கறுப்புத்துணியை சால்வை போல போர்த்தியிருப்பார். அதுதான் அடையாளம். இருவருக்குமே நாற்பது வயதைத் தாண்டியிருக்கக் கூடும். குழந்தைகள் எதுவும் இல்லையா அல்லது இவர்களைக் கைவிட்டுவிட்டார்களோ என்று தெரியவில்லை. தனியாகத்தான் வசித்தார்கள்.

வசித்தார்கள் என்றால் வீட்டை எல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம். ப்ளாட்பாரத்தில்தான். மெஹதிப்பட்டணத்தின் டி&டி காலனியின் மெயின் ரோட்டில் ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஆணியடித்து அதில் ‘டேரா’ போட்டு தங்கியிருந்தார்கள். அந்த டேரா மீது சினிமா போஸ்டர்களைக் கிழித்து மேலே போட்டிருப்பார்கள். அதுதான் அவர்களின் வீடு. எங்கள் போர்ஷனில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தால் அந்த ‘வீடு’ தெரியும். வீட்டிற்கு முன்பாக மூன்று கற்களை கூட்டி வைத்திருப்பார்கள். அடுப்பு மாதிரியான தோற்றத்தை அது தந்தாலும்  ஒரு நாள் கூட அதில் நெருப்பை பார்த்ததில்லை. 

அவர்களை மெஹதிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது பார்த்ததுண்டு. அந்த பஸ் ஸ்டாண்டில் யாராவது தரக்கூடிய சில்லரைக் காசில்தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. பார்க்க பாவமாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை பெரிய சிரமம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது போலத்தான் தெரிந்தது. காலையில் நான் அலுவலகம் கிளம்பும் போது பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இரவில் திரும்பி வரும் போது தங்கள் வசிப்பிடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். ஒரு முறை சிறு தொகையை அவர்களுக்கு கொடுத்த தினத்திலிருந்து எங்களுக்கு இடையேயான அறிமுகம் தொடங்கியிருந்தது. அதன் பிறகு சனி, ஞாயிறுகளில் அவர்கள் எதிர்ப்படும் போதெல்லாம் சிரிக்கத் துவங்கியிருந்தேன். அவர்களாக எப்பொழுதும் கை நீட்டியதில்லை. ஆனால் கொடுத்த போது வேண்டாம் என்று சொன்னதில்லை.

இரண்டாயிரத்து ஆறாம் வருடம் ரம்ஜான் மாதம் தொடங்கியிருந்தது. ரம்ஜான் மாதம் வந்தால் ஹைதராபாத் களை கட்டிவிடும். ஒவ்வொரு ஹோட்டலின் முன்பாகவும் பெரிய அடுப்பைக் கூட்டி அதன் மீது பித்தளை பாத்திரத்தை வைத்துவிடுவார்கள். அதில்தான் ஹலீம் தயாராகும். ஹலீம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று துல்லியமாகத் தெரியாது. ஆனால் ஆட்டுக்கறியை அந்த பெரிய பாத்திரத்தினுள் போட்டு அதோடு கோதுமையையும் சேர்த்து ஒரு குச்சியை வைத்து கிளறிக் கொண்டேயிருப்பார்கள். இரவு முழுவதும் வெந்து கறியும் கோதுமையும் சேர்ந்து களி மாதிரி ஆகிவிடும். அதுதான் ஹலீம். பிரியாணியெல்லாம் ஹலீமின் ருசிக்கு பக்கத்தில் கூட வர முடியாது. ரம்ஜான் மாதங்களில் எனது இரவு உணவாக பெரும்பாலும் அதுதான் இருக்கும். 

ஹலீம் இருக்கட்டும். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு டேராக்காரர்கள் கண்களில் படவில்லை. வீட்டு ஓனரிடம் பேச்சுவாக்கில் கேட்ட போது சிரித்தார். அவரே தொடர்ந்து அநேகமாக மசூதிகளுக்கு போய்விடுவார்கள் என்றார். அது உண்மைதான். அந்த மாதத்தில் அவர்களுக்கு உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இசுலாமியர்கள் பார்த்துக் கொண்டார்கள். 

ரம்ஜான் மாதத்தின் கடைசிப்பகுதியில் வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர்கள் தங்கள் டேராவில் இருந்தார்கள். அப்பொழுது மீண்டும் சிரித்துக் கொண்டோம். “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டதற்கு இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல சிரித்தார். அந்தச் செய்கையை ‘ரொம்ப திருப்தியா சாப்பிட்டோம்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பத்து ரூபாய்தான் கையில் வைத்திருந்தேன். கொடுத்த போது சிரித்தபடியே வாங்கிக் கொண்டார். அதுதான் அவர்களை கடைசியாக பார்த்தது. அதன் பிறகும் பார்த்தேன். ஆனால் அப்பொழுது உயிர் இல்லாமல் இருந்தார்கள்.

அந்த வாரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் பயங்கரமான மழை. ஜன்னலைத் திறந்து வைக்க முடியவில்லை. காற்றும் மழையும் கூத்தாடின. இரவு பதினோரு மணியளவில் மழை நின்று சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருந்தது. அவர்களின் டேராவெல்லாம் விழுந்துவிட்டது. ஜன்னல் வழியாக பார்த்த போது டேராவைக் காணவில்லை. அந்த இரவில் இடம் மாறி படுத்திருக்கிறார்கள். அவர்கள் படுத்திருந்த இடம் எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகாமையில் இருந்தது. அது சற்று மேடான பகுதி. ஆனால் நடை மேடை இல்லை. சாலையின் விளிம்புதான் அது. 

எனக்கு நல்ல தூக்கம் வந்திருந்தது. குளிருக்கு இதமாக கம்பளியை போர்த்தி தூங்கியிருந்தேன். நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டதாக நினைவு இருக்கிறது. ஆனால் அது நிஜமா கனவா என்று தெரியவில்லை. விடிந்த போது அது நிஜம்தான் என்று தெரிந்தது. இரவில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தவர்கள் மீது ஒரு கார் ஏறிவிட்டது- அந்த பெரியவரின் நெஞ்சு மீது அவரது மனைவியின் முகத்தின் மீதும். கார் நிற்கவில்லை. அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு எழுந்த போது போலீஸ் வாகனம் வந்து விட்டது. வேகமாக கீழே இறங்கிய போது பெரியவர் அமைதியாக படுத்திருப்பது போலிருந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை துணியால் மூடியிருந்தார்கள். அடுத்த கால் மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அவர்களின் உடல்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அடுத்த சில நிமிடங்களில் சாலை இயல்புக்கு வந்துவிட்டது.

“அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து” என்று கேஸ் எழுதிக் கொள்வார்கள் என வீட்டு ஓனர் சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அலுவலகம் போக வேண்டும் என்று தோன்றவில்லை. கோல்கொண்டா கோட்டைக்கு சென்றிருந்தேன். அன்று இரவும் மழை பெய்தது. பேய் மழை. ஆனால் யாரைக் கொன்றது என்று தெரியவில்லை.

மு.சுயம்புலிங்கத்தின் கவிதை ஒன்று-

தீட்டுக்கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம். வாங்கிக் கொண்டு 
ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.

இச்சையைத் தணிக்க 
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.

கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது

திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காத போது
களிமண் உருண்டையை வாயில் போட்டு 
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.