Jul 17, 2013

தம்மாத்துண்டு சைஸ்

ஒருவன் துக்கினியூண்டு இருந்தால் நம் ஆட்கள் ஒரு மார்க்கமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் தம்மாத்துண்டுள்தான் பெரிய வேலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள். அப்படியொரு தம்மாத்துண்டு பற்றிய விவகாரம் இது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேனோரோபோக்களை பரிசோதித்து பார்க்க மருத்துவர்கள் விரும்பினார்கள். இந்த பரிசோதனைக்காக மருத்துவர்களுக்கு மனிதர்கள் தேவைப்பட்டார்கள்- அதுவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்.ரோபோக்களை தங்களின் உடலுக்குள் செலுத்துவார்கள் என்று கேள்விப்பட்டு திகில் அடைந்தார்கள். பரிசோதனைக்காக தங்கள் உடலை ஒப்படைக்க யாரும் அவ்வளவு சீக்கிரமாக ஒத்துக் கொள்ளவில்லை. மருத்துவர்கள் மண்டை காய்ந்தார்கள். கடைசியாக புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவர்களால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலிருந்த மூன்று நோயாளிகள் பரிசோதனைக்கு முன்வந்தார்கள்.

உடலில் சில செல்கள்(உயிரணுக்கள்) தாறுமாறான வளர்ச்சியடைவதுதான் புற்றுநோய் என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் தமக்கு அருகில் இருக்கும் மற்ற செல்களுக்கு கிடைக்க வேண்டிய சக்தியையும் சேர்த்து உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் உடலில் இருக்கும் மற்ற செல்கள் மிக வேகமாக இறக்கத் துவங்குகின்றன. எனவேதான் கேன்சரால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய சூழலில் கீமோதெரபிதான் புற்று நோய்க்கான முக்கியமான மருத்துவமுறையாக இருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கேன்சரால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது கதிரியக்கத்தைச் செலுத்துவார்கள். அந்த கதிரியக்கத்தின் மூலமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்பதுதான் ரேடியோதெரபி. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாய்வது போல ரேடியோதெரபி சிகிச்சையில் கேன்சரால் பாதிக்கப்படாத பிற செல்களும் கூட பாதிப்படைகின்றன. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட புற்றுநோயால் பாதிப்படைந்த செல்களுக்கு மட்டும் நேரடியாக சிகிச்சயளிக்கக் கூடிய மருத்துவமுறைகளை ஆராய்ந்து கொண்டிருந்த போதுதான் ‘நாங்க இருக்கோம்’ என்று  நேனோரோபோக்கள் கைகளை உயர்த்தின.

பரிசோதனைக்காக முன்வந்திருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய ரோபோக்களை நேனோரோபோத் துறையில் திறமை வாய்ந்த வல்லுனர் குழுவினர் உருவாக்கத் துவங்கினார்கள். ரோபோ என்றால் இரண்டு கைகளுடன் மனிதனைப் போலவோ அல்லது நான்கு சக்கரங்களுடன் ஏதோ ஒரு வாகனத்தை போலவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாம்பின் வடிவத்திலோ அல்லது தட்டானின் உருவத்திலோ இருக்கும் என்ற கட்டாயமும் இல்லை. கண்ணுக்கே தெரியாத அளவில் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளைப் போல கூட இருக்கலாம். மைரோஸ்கோப் மூலமாக மட்டுமே பார்க்க முடியக் கூடிய இத்தகையை குட்டிச் சாத்தான்களுக்குத்தான் ‘நேனோ ரோபோக்கள்’ என்று பெயர். 


புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய நேனோ ரோபோக்களுக்குள் ஆர்.என்.ஏ எனப்படும் செய்தி பரிமாற்ற தூதுவர்களை வைத்து வேதியியல் பொருட்களை கண்டுணரக் கூடிய சென்சார்களை பொருத்திக் கொண்டிருந்தார்கள் வல்லுனர்கள். ஆனால் இத்தகைய வடிவமைப்பு அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளிகளை வைத்துக் கொண்டு தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் ‘பிரஷர்’ கொடுக்கத் துவங்கினார்கள். நேனோரோபோ வல்லுனர் குழுவின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் ஆலோசனையளிக்க முன்வந்தார்கள். வேகம் அதிகமானது. கடும் உழைப்பிற்கு பிறகு புற்று நோயாளிகளுக்கு ஏற்ற வகையிலான நேனோரோபோக்களை செய்து முடித்தார்கள். 

ரோபோக்கள் தயாரானவுடன் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தார்கள். மூன்று நோயாளிகளுக்கும் இரத்தக் குழாய் வழியாக இந்த நேனோரோபோக்கள் செலுத்தப்பட்டன. இரத்தம் ஏற்றுவதைப் போல நேனோரோபோக்களை உடலுக்குள் செலுத்த ஒரு மணி நேரம் வரைக்கும் தேவைப்பட்டது. நேனோரோபோக்களில் பொருத்தப்பட்டிருந்த வேதியியல் சென்சார்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடிக்க உதவின. பாதிக்கப்பட்ட செல்கள் கண்டறியப்பட்டவுடன் அவற்றுக்குள் ரோபோவில் இருக்கும் ஆர்.என்.ஏக்கள் செலுத்தப்பட்டன. இந்த ஆர்.என்.ஏக்கள் பெருகிக் கொண்டிருக்கும் கேன்சர் செல்கள் மேலும் பெருகாமல் தடுத்து நிறுத்தத் துவங்கின. சிகிச்சைக்கான காலம் மூன்று வாரங்கள் வரைக்கும் நீடித்தது. அதன் பிறகு புற்றுநோய்க்கட்டியின் சாம்பிள்களை எடுத்து பரிசோதித்தார்கள். முடிவுகள் மருத்துவர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தின. அவர்களே எதிர்பார்க்காத வகையில் கேன்சர் செல்கள் செயலிழந்திருந்தன. இனி புற்றுநோய்க்கு நேனோரோபோக்கள் வரப்பிரசாதம் என்று அறிவித்தார்கள்.

நேனோரோபோவை வடிவமைக்கும் போது ரோபோ நகர்வதற்கான போக்குவரத்து இயங்குமுறை(Transportation Mechanism), ரோபோவுக்கு தேவையான ஆற்றலைத் தரும் எரிபொருள், ரோபோவை இயக்கக் கூடிய கண்ட்ரோலர் ஆகிய மூன்றும் மிக முக்கியமான பகுதிகள். இவற்றை ஒருங்கிணைத்து வடிவமைக்கும் போதும் ரோபோ கண்ணுக்குத் தெரியாத அளவில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நேனோரோபோவில் இருக்கும் மிகப் பெரிய சவால். நேனோ ரோபோக்கள் மருத்துவத்துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இவை அளவில் பெரியதாக இருப்பின் உடலுக்குள் செலுத்த முடியாது. அப்படியே கண்ணுக்குத் தெரியாத அளவில் வடிவமைத்தாலும் கூட மனித உடலுக்குள் ரோபோ போன்ற அந்நியமான வஸ்துக்களை அனுப்பினால் உடல் அத்தனை சீக்கிரம் ஏற்றுக் கொள்ளாது. கிருமிகளின் படையெடுப்பாக இருக்க கூடும் என்ற பயத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போருக்குத் தயாராகி ரோபோக்களை தாக்கத் துவங்கிவிடும். உடலில் இருக்கும் வேதிப்பொருட்களின் அட்டாக்கை சமாளிக்கக் கூடியதாகவும் இந்த ரோபோக்கள் இருக்க வேண்டும். இதற்கும் ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தார்கள். வைரத்தை அவ்வளவு சீக்கிரம் வேதிப்பொருட்களினால் சிதைக்க முடியாது என்பதனால் நேனோரோபோக்களின் மேற்பரப்பில் வைரத்தை ஒரு மெல்லிய படலமாக அமைப்பது ஒரு ‘சமாளிபிகேஷன்’ முறை. 

ரோபோக்கள் இத்தகைய குட்டிச்சாத்தான்களின் வடிவத்தை அவ்வளவு சீக்கிரம் அடைந்துவிட முடியவில்லை. ரோபோவை பற்றிய கற்பனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியிருந்தாலும் கூட எலெக்ட்ரானிக் துறை வளர்ச்சியடையும் வரைக்கும் ரோபோக்கள் கதைகளிலும் நாவல்களிலும் தமக்கு கிடைத்த இடத்தோடுதான் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்பொழுதெல்லாம் கற்பனைகளில் உலவிய பெரும்பாலான ரோபோக்கள் மனித உருவத்தையோ அல்லது ஏதேனும் ஒரு உயிரியின் வடிவத்தையோதான் பெற்றிருந்தது. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’என்ற எந்த வரைமுறையும் இல்லாமல் ரோபோவின் வடிவங்கள் வளைத்து வளைத்து அடித்து இப்பொழுது நேனோரோபோக்களில் வந்து நிற்கின்றன.

நேனோரோபோக்கள் மருத்துவத்துறையில் மட்டுமில்லாமல் கிச்சனை சுத்தம் செய்பவராகவோ அல்லது டாய்லெட் க்ளீனராகவோ கூட கர்ம சிரத்தையாக செயல்படுகின்றன.கிச்சன் க்ளீனரில் சேர்க்கப்படும் நேனோரோபோக்கள் கெட்ட கிருமிகளை அடித்து நொறுக்கும் ‘ஹீரோ’ கிருமிகளாக செயல்படுகின்றன. பற்பசைகளில் சேர்க்கப்படும் நேனோரோபோக்கள் வாய் துர்நாற்றத்தையும், கிருமிகளையும் அழித்து நாள் முழுவதும் நம்மை புன்னகை மன்னனாக வைத்திருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

எல்லாமே பாஸிடிவாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவ்வப்போது ஆண்ட்டி-க்ளைமேக்ஸும் தேவையல்லவா? அப்படித்தான் நேனோ ரோபோவை பற்றிய திகிலூட்டக் கூடிய செய்தி ஒன்றும் இருக்கிறது. நேனோரோபோக்களை தீவிரவாதிகள் வடிவமைத்துவிட்டால் விஷவாயுவை பரப்புவதையும், நோய்க்கிருமிகளை ஊடுருவச் செய்வதையும் அவர்களால் மிக எளிதாகச் செய்துவிட முடியும். ராணுவம் சும்மா இருக்குமா? இந்த ‘தீவிரவாத’ ரோபோக்களை எதிர்த்து சண்டை போடக் கூடிய ‘ராணுவ’ரோபோக்களை பல அறிவியல் கூடங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இருவகை ரோபோக்களும் நம் கண்களுக்குத் தெரியாமலேயே நம்மைச் சுற்றிலும் போரிட்டுக் கொள்ளப் போகின்றன - கூடிய சீக்கிரத்தில்.

[கட்டுரையில் ஒரு தகவல் பிழை இருந்தது. திரு.நாச்சியப்பன், திரு.மணிகண்டன் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தார்கள். மாற்றியிருக்கிறேன். நண்பர்களுக்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவும்]