Jul 11, 2013

இந்த வேலையெல்லாம் நிரந்தரமா?

தன்னை விட ஆறுமாதம் சின்னப் பையன் என்று தெரிந்தால் போதும் நம் ஆட்களுக்கு மூக்கு வியர்த்து அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அட்வைஸ்களுக்கு முகத்தில் அறைந்தாற் போல சொல்லாமல் நாசூக்காக ‘எங்களுக்கு தெரியும். நீங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கண்ணே’ன்னு கவுண்ட்டர் அட்டாக் கொடுக்க ஒரு திறமை வேண்டும். அந்தத் திறமையெல்லாம் எனக்கு தலைகீழாக தொங்கவிட்டாலும் வராது. ஆனால் அப்படி ஒரு பையனை பார்த்திருக்கிறேன். 

அவர் எனக்கு சீனியர். முரளி குரப்பாட்டி என்பது பெயர். குரப்பாட்டி என்பது Surname. ஹைதராபாத்தில் எனக்கு டீம் லீடராக இருந்தார். அதே சமயம் நல்ல நண்பராகவும் இருந்தார். அந்தக் கம்பெனியில் பாக்கெட்டை நிரப்பும் அளவிற்கு சம்பளம் தர மாட்டார்கள் என்றாலும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதம் வெளிநாடு அனுப்பி வைப்பார்கள். வயிற்றைக் கட்டி வாயைக் கட்டினால் மாதம் ஒரு லட்சம் தேற்றிவிடலாம் என்பதால் அந்த நிறுவனத்தை விட்டு அவ்வளவு சீக்கிரம் யாரும் வெளியேற மாட்டார்கள். அவர் டீம் லீடராக இருந்தார் என்பதால் அவருக்கு எப்படியும் வருடத்தில் ஐந்து ஆறு மாதம் தேறிவிடும். பேச்சிலர் வாழ்க்கைக்கு அதெல்லாம் வரப்பிரசாதம். அவர் மேனேஜருக்கும் செல்லப்பிள்ளை. அதனால் அடி பின்னியெடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த ப்ரோமோஷன் சைக்கிளில் அவர் மேனேஜர் ஆகிவிடக் கூடும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். 

இப்படி சகலமும் நன்றாக போய்க் கொண்டிருந்த போது ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டார். டீமில் இருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. காரணம் கேட்ட போது அவர் மிகச் சாதாரணமாக ‘சினிமாவுக்கு போகிறேன்’ என்றார். அவர் ஒன்றும் பெரிய அழகன் இல்லை. சினிமா பின்புலம் இருப்பதாகவும் அதுவரைக்கும் எங்களுக்குத் தெரியாது- அவரது அப்பா ஆந்திர போக்குவரத்து துறையில் வேலையில் இருந்தார். பிறகு எப்படி சினிமாவுக்கு போகிறார் என்பது குழப்பமாக இருந்தது.

ஆனால் அவருடைய பெரியப்பா தெலுங்கு சினிமாவில் முக்கியமான புள்ளி. அந்தப் புள்ளியின் பெயரைச் சொன்னவுடன் ‘அவுனா?’ என்று தெலுங்குவாலாக்கள் வாயைப் பிளந்துவிட்டார்கள். தனது ரிலேஷன்ஷிப்பை அத்தனை கமுக்கமாக வைத்திருந்தார். அந்தச் சமயத்தில் அந்தப் பெரும்புள்ளியின் மகன் சினிமாவில் ஓன்றிரண்டு படங்களில் நடித்து அவை ஹிட் அடித்திருந்தன. அந்த ஹீரோவின் கதை விவகாரங்கள், கால்ஷீட், சம்பள விவகாரத்தை எல்லாம் பார்த்துக் கொள்ளத்தான் இவரை அழைத்திருக்கிறார்கள். நம் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் ஞானவேல்ராஜா மாதிரி போலிருக்கிறது.

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது சிவக்குமார் குடும்பம் பற்றி எங்கள் மாமா சில தகவல்களைச் சொன்னார். சூர்யாவின் அம்மாவுடன் பிறந்தவர்கள் அவரையும் சேர்த்து மூன்று பெண்கள். அதில் சூர்யாவின் அம்மாவை சிவக்குமார் கட்டிக்கொள்ள இன்னொரு பெண்ணை எங்கள் மாமாவின் பக்கத்து ஊர்க்காரருக்கு கட்டி வைத்திருக்கிறார்கள். மிச்சமிருந்த இன்னொரு பெண்ணையும் அந்தப் பக்கத்து ஊர்க்காரரே திருமணம் செய்து கொண்டாராம். மூன்று பெண்கள்- இரண்டு குடும்பம். அவரது மகன்கள் எல்லோரும் இப்பொழுது சென்னையில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக சூர்யா, கார்த்தியின் அலுவலகத்தில்தான் பணியில் இருப்பார்கள் என்றும் சொன்னார். அந்தச் சமயத்தில் எனக்கு வேறு ஏதோ விவகாரம் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்ததால் அதை முழுமையாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். அடுத்த முறை விவரமாக கேட்டு விட வேண்டும்.

இப்படியான ஒரு தொடர்பில்தான் எனது டீம் லீடர் ராஜினாமா செய்திருக்கிறார். மேனேஜருக்கு இவரை விட்டுவிட விருப்பம் இல்லை. ‘சினிமா எல்லாம் நிரந்தரம் இல்லை அது இது’ என்று படம் ஓட்டியிருக்கிறார். முரளி வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. மேனஜ்மெண்டில் பேசி உடனடியாக ப்ரோமோஷனுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார். இப்பொழுதுதான் முதல் பத்தி விவகாரம் நடந்தது. ‘ஓகே சார். நான் ராஜினாமா செய்யலை. ஒரு வருடம் விடுமுறையில் போகிறேன். ஒருவேளை தோற்றுவிட்டால் திரும்பி வந்துவிடுகிறேன். ஆனால் ஜெயிச்சுட்டா?’ என்று நிறுத்தியிருக்கிறார். மேனேஜர் என்னவோ சொல்ல ‘ஜெயிச்சுட்டா என்னோட ஸ்டேட்டஸ், காண்டாக்ட்ஸ், சொத்து என்பதில் பத்து சதவீதத்தைக் கூட ஆயுசுக்கும் கஷ்டப்பட்டாலும் இந்த வேலை மூலம் வாங்க முடியாது’ என்று சொன்னாராம். அவர் சொன்னது சரிதானே! மேனேஜர் கப்சிப் ஆகிவிட்டார்.

ஐடியில் நல்ல சம்பளத்தில் இருந்துவிட்டு ‘சினிமாவுக்கு போகிறேன்’ என்று கிளம்பிய வேறு சிலரையும் பார்த்திருக்கிறேன். ரஞ்சிதா பிரசாத் என்று ஒரு பெண் எங்கள் டீமில் இருந்து சினிமாவில் நடிகையானார். அலுவலகத்திலேயே நல்ல அழகி ரஞ்சிதாதான். சினிமாவுக்கு போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று அனிகா என்று பெயரை மாற்றி ‘இரண்டு முகம்’ படத்தில் நடித்தார். அவ்வளவுதான். அப்புறம் காணாமல் போய்விட்டார். அவரைப் பற்றி தனியாக எழுதலாம். அத்தனை இருக்கிறது.  ஆனால் முரளியின் கதை ப்ளாப் ஸ்டோரி இல்லை. டபுள் சக்ஸஸ்.

பெங்களூர் வந்த பிறகு ஓரிருமுறை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தது. என்னுடைய பெங்களூர் எண் அவரிடம் இருந்திருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில் அழைத்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது. பெங்களூர் வந்திருப்பதாகவும் நேரில் வரமுடியுமா என்றார். ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகச் சொன்னார். சென்றிருந்தேன். நட்சத்திர ஹோட்டல் அது. அறையின் கதவைத் தட்டிய போது முரளிதான் திறந்தார். ஹீரோவும் அருகில் இருந்தார். ஹீரோவிடம் ‘பாகு உண்ணாரா அண்டி?’ என்றேன். சிரித்துக் கொண்டே கை கொடுத்தார். அவரது ஒரு படம் மட்டுமே பார்த்திருந்தேன். ஆனால் ‘உங்களின் அத்தனை படங்களையும் பார்த்துவிடுவேன்’ என்று கதை விட்டேன். ஆமோதிப்பது போலும் இல்லாமல் நிராகரிப்பது போலும் இல்லாமல் சிரித்தார். 

அந்த நாயகன் இங்கு ஒரு சொத்து வாங்கியிருக்கிறார். அது பற்றிய டீலிங் போலிருக்கிறது. அறைக்குள் நிறைய ஆட்கள் இருந்தார்கள். சைக்கிள் செயினை தங்கத்தில் செய்து கழுத்தில் மாட்டியிருந்தார்கள். பார்த்தாலே தெரியும்- ரியல் எஸ்டேட்காரர்கள் என்று. நான் இருந்ததால் ‘டீலிங்’ விவகாரத்தை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு நிமிடங்கள்தான். முரளி என்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். 

நிறைய பேசினார். ஐடி துறை பற்றி அதிகமான கேள்விகள் கேட்டார். அவர் இன்னமும் அதையெல்லாம் மறக்கவேயில்லை. எனக்குத்தான் எரிச்சலாக இருந்தது. அனுஷ்கா பற்றியும் தமன்னா பற்றியும்தான் நான் பேச விரும்பினேன். சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் ஒரு போதை இருக்கிறது. முரளி இன்னொரு போதையில் இருந்ததால் கொஞ்சமாக பேசி, நிறைய உளறி போதையேற்றினார். ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. கிளம்ப வேண்டும் என நினைத்தேன். கிளம்பிய போது அவரும் பார்க்கிங் வரைக்கும் வந்தார். ஸ்பெண்டர் ப்ளஸ் வண்டி நட்சத்திர ஹோட்டலின் ஒட்டுமொத்த பார்க்கிங்கையும் கேவலப்படுத்திக் கொண்டிருந்தது. ஆடி, பிஎம்டபிள்யூவை எல்லாம் கவனிக்காதது போல வெளியேறினேன்.

முரளி ‘ரொம்ப சந்தோஷம்’ என்றார். பைக்கில் அமர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது-

‘இந்த வேலையெல்லாம் நிரந்தரமா முரளி?’ என்று எங்கள் மேனேஜரின் கேள்வியையே நான் கேட்டேன். 

‘யாருக்குத் தெரியும். ஆனால் இப்போ என்கிட்ட செகந்திராபாத்தில் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸ் இருக்கு’ என்றார். 

இது எனது கேள்விக்கான நேரடியான பதில் இல்லை. ஆனால் எனக்கான அத்தனை பதிலும் இருந்தது. பெருமொத்தமாக சிரித்து வைத்தேன். பிறகு வேறு சிலவற்றை பேசிவிட்டு கிளம்பிய போது மழை தூறத் துவங்கியிருந்தது. செகந்திராபாத் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அவ்வப்போது நினைவில் வந்து போனது. பினாமியாக வாங்கியதோ அல்லது அவரது சம்பளத்தில் வாங்கியதோ- இப்பொழுது அவருடையது. அவ்வளவுதான்.