Jun 29, 2013

உங்களுக்கு இன்னும் டோக்கன் வரலையா?

தமிழகத்தில் இன்னுமொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை அன்சுல் மிஸ்ரா. இனிமேல் வணிகவரித்துறையின் இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல் மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது? அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக் கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும். வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள் இருக்கிறார்கள். 

அன்சுல் மிஸ்ராவின் working style பற்றி எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அவர் எங்கள் ஊரில் கொஞ்ச நாட்களுக்கு சப்-கலெக்டராக இருந்தார்.  அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் இன்னும் சில விஷயங்களைச் சொல்லிவிட வேண்டும்.

எங்கள் அம்மா கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருந்தார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் இந்தப் பணியில் இருந்துவிட்டு ஓராண்டுக்கு முன்பாகத்தான் வி,ஆர்.எஸ் வாங்கிக் கொண்டார். குடும்பத்தை கவனிக்க விரும்பும் பெண்களுக்கு இது ஏற்ற வேலை இல்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு ஆற்றில் பிணம் மிதக்கிறது என்று ஃபோன் வரும். அப்பாவும் அம்மாவும் அந்த நேரத்தில் பைக் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள். மழைக் காலங்களில் இன்னமும் கொடுமை. ஆற்றில் வெள்ளம் வருகிறது, பள்ளத்தில் நீர் பெருக்கெடுக்கிறது என்று தகவல்கள் வரும். உடனடியாக ‘ஸ்பாட்’டில் இருக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் மழையில் நனைந்தபடியே அப்பாவும் அம்மாவும் கிளம்பிப் போவார்கள். அப்பொழுது டூ வீலர்தான் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வீடு ஓட்டு வீடாக இருந்தது. நள்ளிரவில் அம்மாவும் அப்பாவும் சென்ற பிறகு இடியும் மின்னலும் அடித்து நொறுக்கும். ஓடுகளுக்கு இடையிலான சந்தில் மின்னல் வெளிச்சத்தைப் பார்க்கும் போது நானும் தம்பியும் பயந்து நடுங்கியிருக்கிறோம். என்னதான் கண்களை மூடிக் கொண்டு படுத்தாலும் தூக்கம் வராத இரவுகள் அவை. காற்றுக்காலத்தில் வாழை மரங்கள் சாய்ந்து போன அறிக்கை கொடுக்க வேண்டும். யானை ஊருக்குள் புகுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். கொலை நடந்தாலோ, யாராவது தற்கொலை செய்து கொண்டாலோ அங்கு இருக்க வேண்டும்.

அது போக வருவாய்த் துறைக்கு வரும் பெட்டிஷன்கள், வருடாந்திர கணக்கு முடிக்கும் ஜமாபந்தி, நில அளவை, அதிகாரிகளின் ஆய்வு என கிட்டத்தட்ட வருடம் முழுவதும் பிஸியாகவே இருப்பார். அதுவும் தமிழகத்தில் இலவசக் கலாச்சாரம் வந்த பிறகு கிராமநிர்வாக அலுவலர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாகிவிட்டது. ஆரம்பத்தில் வேட்டி சேலை மட்டும்தானே இலவசமாகக் கொடுத்தார்கள். அதுவும் பொங்கல் சமயத்தில். அக்டோபர், நவம்பரில் கணக்கெடுத்துக் கொடுப்பார்கள். அந்த கணகெடுப்பிற்காகவே மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு ஒவ்வொன்றும் ‘இலவசம்’ என்ற போது மணியகாரர்கள் நொந்து பரிதாபமாகிப் போனார்கள். ஒவ்வொரு இலவசத்திற்கும் தகுதியானவர்களைத் தேடிப்பிடித்து கணக்கெடுக்க வேண்டும். இலவச டிவிக்கு ஒரு முறை கணக்கெடுக்க வேண்டும், இரண்டு ஏக்கர் நிலத்துக்கு ஒரு முறை, ஆடு மாட்டுக்கு ஒரு முறை என வருடம் முழுவதும் கணக்கெடுத்தே தேய்ந்து கொண்டிருந்தார்கள். 

சென்ற ஆட்சியில் டிவி கொடுக்க ஆரம்பித்த போது உள்ளூர் பிரசிடெண்ட்கள் செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை. ஆரம்பத்தில் அவர்கள்தான் கணக்கு எடுத்தார்கள். எங்கள் அம்மா பணியாற்றிய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவரும் அழிச்சாட்டியத்திலிருந்து விதிவிலக்கு இல்லை. அவசர அவசரமாக தனது கட்சிக்காரர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இலவச டிவிகளுக்கான டோக்கன்களை கொடுத்துவிட்டார். டோக்கன் வாங்கிய பெரும்பாலானோர் தோட்டங்காட்டுக்காரர்கள். வசதியானவர்கள். எதிர்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா? டோக்கன் வழங்கப்படாத ஏழைகளிடம் ‘அவியளுக்கெல்லாம் டோக்கன் கொடுத்திருக்காங்க, உங்களுக்கு கொடுக்கலியா?’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். சொல்கிற விதத்தில் சொன்னால் பற்றிக் கொள்ளும்தானே? டோக்கன் கிடைக்காதவர்கள் களமிறங்கிவிட்டார்கள். விஷயம் வருவாய்த்துறைக்குச் சென்றதும் மீண்டும் கணெக்கடுக்கச் சொல்லி அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள். அப்புறம்தான் உண்மையாகவே பிரச்சினை ஆரம்பித்தது. “டோக்கன் வாங்கியிருக்கிறது எங்களோட ஆட்கள் நாங்கள் எடுத்த அதே கணக்கை கொடுத்துவிடுங்கள்” என்று அழுத்தம் வரத் துவங்கியதும் அம்மா டென்ஷனாகிவிட்டார். “முடியாது” என்று சொன்னதும் அழுத்தம் உருமாறி மிரட்டலாகியிருக்கிறது. பிரசிடெண்ட்டும் அவருடைய அல்லக்கைகளும் சத்தம் போட்டுவிட்டுச் சென்ற போது அருகிலிருந்த இன்னொரு வருவாய் ஊழியர் இந்தப் பிரச்சினை பற்றி தாசில்தாருக்கு தகவல் கொடுத்துவிட்டார். விஷயம் தாசில்தார் வழியாக அன்சுல் மிஸ்ராவுக்கு போனதும் அம்மாவை ஃபோனில் அழைத்திருக்கிறார். அம்மாவுக்கு இருந்த டென்ஷனில் இரண்டு வார்த்தைகள் பேசியதும் உடைந்து அழுதுவிட்டார். அன்சுல் மிஸ்ரா ஃபோனை கட் செய்துவிட்டார். அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

அடுத்த இருபது நிமிடங்களில் அவர் கிராமத்திற்கு வந்துவிட்டார். துக்கிணியூண்டு கிராமத்திற்கு சப்-கலெக்டர் வந்தவுடன் அம்மாவுக்கு மட்டுமில்லை அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். வருவாய்த்துறையிலிருந்து அவரோடு வந்திருந்த ஆட்கள் ஒரே நாளில் மொத்த கிராமத்தையும் வளைத்து வளைத்து கணக்கெடுத்துவிட்டார்கள். புது டோக்கனை தகுதியானவர்களுக்கு கொடுத்துவிட்டு அம்மாவை அழைத்து “எதைப் பத்தியும் பயப்படாம சர்வீஸ் செய்யுங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்ய நான் இருக்கேன். பார்த்துக்கலாம்” என்றவுடன் அம்மா படு உற்சாகமாகிவிட்டார். 

அவர் அதோடு விடவில்லை. பிரசிடெண்ட்டை அருகில் அழைத்து “ஓவரா ஆட்டம் போடுறீங்களா? நான் நினைத்தால் இங்கேயே சஸ்பெண்ட் செஞ்சுட்டு போய்டுவேன். தெரியுமில்ல? ஒழுங்கா நடந்துக்குங்க” என்று அத்தனை கூட்டத்திற்கு முன்பாக முகத்தில் அறைந்தாற்போல பேசியிருக்கிறார். அதன் பிறகு மற்ற எல்லா இலவசங்களுக்கும் அம்மாதான கணக்கு எடுத்திருக்கிறார். எதற்குமே அந்த பிரசிடெண்ட் மூச்சுவிடவில்லை. 

இதே போல இன்னொரு விவகாரமும் இருக்கிறது. வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இடையிலான லடாய். அதை இன்னொரு முறை சொல்கிறேன். இப்பொழுது அன்சுல் மிஸ்ராவின் மனிதாபிமானம் பற்றி சொல்லிவிட வேண்டும்.

செண்டான் என்றொரு மனிதர். எங்கள் அமத்தா ஊர்க்காரர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன் வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல் விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல் சேர்ந்துவிட்டது. விவரங்களைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் தனது அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும், அவரது மகளும் சென்ற போது தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்லை. என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம் இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக் கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன் இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க வைத்தவர் அன்சுல். 

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள் செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள் பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில் உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம் ஆச்சரியமான அதிகாரிதான்.

சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக் கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர் அப்படித்தான் என்று தெரியும். இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள் என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும் நமக்குத் தெரியும் அல்லவா?