எப்பொழுதுமே புது சம்சாரமோ அல்லது சமாச்சாரமோ- அது வந்தவுடன் நம்மாட்கள் படு வேகமாக இருப்பார்கள். எங்கள் ஊர்ப்பக்கம் ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுக்குறான்’ என்ற சொலவடை உண்டு. அப்படித்தான். வலைப்பதிவுகள் வந்த சமயம் ஆளாளுக்கு Blogspot அல்லது wordpress இல் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தார்கள். கட்டுரையோ, கவிதையோ, எச்சில் துப்புவதோ, வாந்தியெடுப்பதோ- எதுவாக இருந்தாலும் ப்லாக்கில்தான் நடந்தது. சுஜாதா வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் “ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப் படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது” என்று அடித்துவிட்டு போய்விட்டார். விடுவார்களா நம் மக்கள்? வரிசைகட்டி நின்று அவரை அடித்தார்கள். இன்றைய தாலி மேட்டர் அளவுக்கு பரபரப்பு இல்லையென்றாலும் அந்தக்காலத்தில் அது ரொம்ப பரபரப்புத்தான்.
ப்லாக்கின் வசந்தகாலம் என்றால் முதல் இரண்டு மூன்று வருடங்கள்தான் என நினைக்கிறேன். வசந்தகாலமும் அதுதான், சோதனைக்காலமும் அதுதான். கண்டதையெல்லாம் எழுதிக் கொட்டினார்கள். நிறைய நல்லதும் இருந்தது; ஏகப்பட்ட குப்பையும் இருந்தது. பிறகு நிறையப் பேர் ஏதோ ஒருவிதத்தில் சலிப்படைந்தோ அல்லது போலி டோண்டு போன்ற விவகாரங்களினாலோ ஒதுங்கிக் கொண்டார்கள். அதேசமயத்தில்தான் ஆர்குட் வந்தது. கொஞ்சம் பேர் அந்தப் பக்கம் போனார்கள். அதைத் தொடர்ந்து வந்த ட்விட்டருக்கு எதிராக ஆர்குட்டினால் நின்று ஆட முடியவில்லை. சுருண்டு கொண்டது. ட்விட்டர் கோலோச்சத் தொடங்கிய காலத்திலேயே ஃபேஸ்புக்கும் வந்து சேர்ந்துவிட்டது. அதுபோக கூகிள் ப்ளஸ். ப்லாக்குக்காவது பதினைந்து நிமிட புகழ். அப்படியானால் மற்றவற்றிற்கெல்லாம் எத்தனை நிமிட புகழ்? அடுத்தவன் ஸ்டேட்டஸ் போட்டு நம்முடைய ஸ்டேட்டஸ் கீழே போகும் வரைக்கும்தான் லைஃப். பொங்கினாலும் சரி, சீறினாலும் சரி. இந்த இடைவெளியில் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள வேண்டும். அதற்குமேல் ஒன்றுமில்லை.
நம் எண்ணங்களை Dilute செய்வதைவிட நல்ல விஷயம் எதையாவது ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் செய்திருக்கின்றனவா எனத் தெரியவில்லை. மனதில் தோன்றியதை அடுத்த ஒன்றரை செகண்டில் ஸ்டேட்டஸாகவோ, ட்வீட்டாகவோ மாற்றிவிடுகிறோம்.ஒருவேளை இந்த ஸ்டேட்டஸ்களும், ட்வீட்களும் கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ மாறியிருக்கக் கூடும். அதற்கெல்லாம் பொறுமையும் இல்லை, அவசியமும் இல்லை என்று நினைத்தோ என்னவோ அவசர அவசரமாக குறைப்பிரசவம் செய்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் இந்த நூற்றி நாற்பது எழுத்து ‘குறுஞ்செய்திகள்’ கொடுத்துவிடுகின்றன.
சமூக வலைத்தளங்களில் நாம் காட்டும் அறச்சீற்றங்களும், உணர்ச்சிக் கொப்பளிப்புகளும் எந்தவிதத்திலாவது நமக்கு பயன்பட்டிருக்கின்றனவா? ‘எகிப்தில் நடைபெற்ற போராட்டம் ஃபேஸ்புக்கினால்தான் நடந்தது’ என்று தயவு செய்து கை உயர்த்த வேண்டாம். பெரும்பாலான ஃபேஸ்புக்வாசிகளுக்கு இது மட்டும்தான் உலகம் என்ற நினைப்பை விதிப்பதைத் தவிர வேறொன்றும் நடப்பதில்லை. வெளியுலகத்தின் பரப்போடும் வீச்சோடும் ஒப்பிட்டால் இணைய உலகம் என்பது Negligible. ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் செலவு செய்யும் நபருக்கு, இங்கு நடப்பதுதான் மொத்த உலகத்தையும் திசை மாற்றுகிறது என்ற நினைப்பு வந்துவிடுகிறது. அதைத் தவிர இவை வேறு எதுவும் பெரிதாக சாதித்துவிட்டதாகத் தெரியவில்லை.
ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ்ஸெல்லாம் மோசனாவை என்பதல்ல எனது வாதம். இவற்றை Just Thought Sharing ஆக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் இப்போதைக்கு ஃபேஸ்புக் என்பதை ஒரு விசிட்டிங் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் எழுத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நம்புகிறேன்.
ப்லாக் எழுதுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. ஆற அமர யோசித்து எழுதலாம். ஒரு பக்க அளவிற்காவது சொல்லவந்ததை விரிவாக எழுத வேண்டியிருக்கிறது. எப்பொழுது எழுதி வைத்தாலும் அது அங்கேயேதான் இருக்கப் போகிறது. எந்தக் காலத்திலும் Search செய்து தேடி எடுத்துவிடலாம். கூகிளில் தேடினாலும் சரி, யாஹூவில் தேடினாலும் சரி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். ஆனால் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ இதெல்லாம் நடப்பதேயில்லை- சாத்தியமே இல்லை என்று சொல்லவில்லை; நடப்பதேயில்லை.
இன்னொரு விஷயம்- வாசிப்பவர்கள். ஜெயமோகனுக்கும், சாரு நிவேதிதாவுக்கும் கிடைத்திருக்கும் வாசர்களில் கணிசமானவர்கள் ப்லாக் வழியாகக் கிடைத்தவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இந்த எழுத்தாளர்களின் அச்சுப்பிரதிகளில் ஒரு பக்கத்தைக் கூட வாசிக்காமல் இணையத்தின் வழியாக இவர்களைக் கண்டுபிடித்தவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தாங்கள் எதையுமே எழுதாவிடினும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கு மட்டும் இணையத்தின் மூலமாக அதிதீவிர வாசகராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். ‘இப்பொழுதெல்லாம் அத்தனை வாசகர்களும் எழுத்தாளராக இருக்கிறார்கள், வாசகர்கள் என்று தனியாக இல்லை’ என்பது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை என்றுதான் நினைக்கிறேன். மெளனமாக வாசித்துவிட்டுப் போகும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் நல்லதா கெட்டதா என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் வாசகர்கள் என்பவர்கள் எந்தக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதெல்லாம் ப்லாக் வழியாக சாத்தியம் ஆவதைப் போல மற்ற சமூக தளங்களின் வழியாக நிகழ்வதில்லை.
வலைப்பதிவுகளில் தரமான எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வினவும், சவுக்கும் ப்லாக் வழியாகத்தான் அத்தனையும் எழுதுகிறார்கள். ஞாநி, பத்ரி, ஆர்.அபிலாஷ் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் முக்கியமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதிஷா, யுவகிருஷ்ணா, கேபிள் சங்கர் போன்றவர்களின் தளங்களில் எப்பொழுதும் சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், இரா.முருகனுக்கும், எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும் இன்னமும் வலைப்பதிவு எழுதும் தளமாக இருக்கின்றது.
வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதால் இவன் அந்தக் கட்சிக்கு கொடிபிடிக்கிறான் என நினைக்கத் தேவையில்லை. மற்ற அத்தனை சமூக ஊடகங்களிலும் எனக்கு ‘கணக்கு’இருக்கிறது. அந்தத் தளங்களை கவனிப்பதும் உண்டு. ஆனால் Personally, மற்ற எல்லாவற்றையும் விடவும் இணையத்தின் வழியாக சமாச்சாரங்களை எழுதுவதற்கு ப்லாக் சிறந்த வழி என நினைக்கிறேன். எழுத்தை தொடர்ந்து Tune செய்து கொள்வதற்கும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கும் இது அற்புதமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் நான் கருதுவது, வலைப்பதிவை வாசிப்பவர்கள் ‘மூன்று வரிக்கு மேல் படித்தால் கொட்டாவி வருகிறது’ என்று சொல்வதில்லை. வாசிப்புக்கு தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
அப்படியானால் வலைப்பதிவுகளில் ‘கச்சடா’வே இல்லையா? அப்படியெல்லாம் இல்லை. நிறைய இருக்கிறதுதான். ஆனால் மற்ற சமூக ஊடகங்களின் வடிவங்களுக்கும், வலைப்பதிவின் வடிவத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தரமான எழுத்தை எழுதினால் மற்ற எந்த இணைய ஊடகத்தையும் விடவும் அதிகக் கவனம் பெறும் வழியாக வலைப்பதிவு இருக்கிறது.
சமீபமாக சில நல்ல வலைப்பதிவுகளை பார்க்க நேரிடுகிறது. நிறையப் பேர் திரும்பவும் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வருவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இதை இன்னொரு சமூக ஊடகத்தை தாக்கிவிட்டு பிறிதொன்றை தூக்கிபிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. வலைப்பதிவில் இன்னும் நிறையப் பேர் எழுத வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான் விஷயம். இன்னமும் பேசலாம்.
இதை இன்னொரு சமூக ஊடகத்தை தாக்கிவிட்டு பிறிதொன்றை தூக்கிபிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. வலைப்பதிவில் இன்னும் நிறையப் பேர் எழுத வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான் விஷயம். இன்னமும் பேசலாம்.