Jun 23, 2013

வெறியின் கதை

இருபது வருடங்களுக்கு முன்பாக தினத்தந்தி அல்லது மாலைமுரசு படித்த ஞாபகம் இருக்கிறதா? எனக்கு மங்கலாக இருக்கிறது. அந்தக் காலத்திய கொலைகளை ரீவைண்ட் செய்து பார்த்தால் பெரும்பாலனவை பங்காளிச் சண்டைகளாக இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் அத்தகைய சண்டைகள் குறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை. ஒருவேளை  கள்ளக்காதல் அல்லது திருட்டுக் கொலைகள் அவற்றை ஹைஜாக் செய்துவிட்டன போலிருக்கிறது. கணவனை கொன்ற மனைவி, மனைவியைக் கொன்ற கணவன், மனைவியின் கள்ளக்காதலனைக் கொன்ற கணவன் என்ற ரீதியிலான செய்தி தினமும் ஒன்றாவது கண்ணில்பட்டுவிடுகிறது. இப்பொழுது எழுதுவது கள்ளக்காதல் பற்றி இல்லை- பங்காளிச் சண்டைகள் பற்றி.

எங்கள் பாட்டி இப்படியான ஒரு கதை வைத்திருந்தார். பாட்டி என்றால் அம்மாவுக்கு அமத்தா. நான் கல்லூரி படிக்கும் வரைக்கும் உயிரோடுதான் இருந்தார். பழங் காலத்து மனுஷி என்பதால் அதுவரைக்கும் படு திடகாத்திரமாகவும் இருந்தார். அந்தக் காலத்தில் பாட்டியின் கணவர் நிறைய மந்திர தந்திரங்களைக் கற்று வைத்திருந்தாராம். அமாவாசையன்று சுடுகாட்டில் பூஜை செய்வது, குட்டிச்சாத்தானை ஏவுவது என்று ஊருக்குள் அட்டகாசம் செய்து திரிந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இருபது வயதுகளில் திருமணம் ஆகிவிடும் அல்லவா? அவருக்கும் அப்படித்தான். ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. பத்து வருடம் பார்த்துவிட்டு இன்னொரு கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்கள். ம்ஹூம். நோ சக்ஸஸ்.

அவருக்கு அறுபது வயதான போது ‘மந்திரத்தையெல்லாம் விட்டால்தான் குழந்தை பிறக்கும்’ என கனவில் ஏதோ ஒரு சாமி சொன்னதாம். அதன் பிறகு  தான் கற்று வைத்ததையெல்லாம் யாரோ ஒருவருக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு மீண்டும் ‘ட்ரை’ செய்திருக்கிறார். அப்பவும் நடக்கவில்லை. அதன் பிறகுதான் பாட்டியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். மூன்றாவது பார்ட்டியாக எங்கள் பாட்டி வாழ்க்கைப்பட்டிருக்கிறார். முதல் வருடத்திலேயே எங்கள் அமத்தா பிறந்துவிட்டார். அறுபத்தைந்து வயதில் குழந்தையா என்று ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இதைவிட இன்னொரு ஆச்சரியம் அடுத்த பதினேழு வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது. அப்பொழுதுதான் அமத்தாவுக்கு தம்பி பிறந்தாராம். அந்தத் தம்பி பிறக்கும் போது பாட்டனாருக்கு எத்தனை வயதாகியிருக்கும் என குத்து மதிப்பாக கணக்கு போட்டு பாருங்கள். எனக்கு கிட்டத்தட்ட மயக்கமே வருகிறது.

அந்தக்காலத்தில் அவர்தான் ஊருக்கு நாட்டாமை. சாகும் வரைக்கும் ஒற்றைக் குதிரையில் அமர்ந்தபடி வேல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு பஞ்சாயத்துக்கு போவாராம். பஞ்சாயத்து சரியாக நடக்கவில்லையென்றால் கையில் வைத்திருக்கும் வேல் யார் மீது வேண்டுமானாலும் பாயக்கூடும் என்பதால் மொத்த பஞ்சாயத்தும் நடுங்கிக் கொண்டிருக்குமாம். சினிமாவில் காட்டுவது போல நாட்டாமை என்றால் மனதிற்குள்ளும் மரியாதையாக நடத்துவார்கள் என்றில்லை. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்’ என பாட்டெல்லாம் பாடமாட்டார்கள். பஞ்சாயத்துகளில் பாதிக்கப்படும் குடும்பங்கள் நாட்டாமை மீது செம கடுப்பில் இருப்பார்களாம். புழுதிவாரித் தூற்றி சாபம் விடும் நிகழ்வுகள் சாதாரணம் என்பதால்  ‘கண்டவர்களின் சாபம் நமக்குத் தேவையில்லை’ என பாட்டிக்கு இந்த நாட்டாமை விவகாரத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை போலிருக்கிறது. பாட்டனிடம் “வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இத்தனை ஆண்டு காலம் நாட்டாமையாக இருந்துவிட்டு பாட்டி சொன்னதற்காக விட்டுவிட முடியுமா? அவர் விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க ஊருக்குள் பகை அதிகமானபடியே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பங்காளிகள் சேர்ந்து அவரைக் காலி செய்துவிட முடிவு செய்திருக்கிறார்கள்.

பங்காளி வீட்டுக்கு சவரம் செய்துவிடச் சென்ற நாவிதன் இதை மோப்பம் பிடித்துவிட்டார். ஒரே ஓட்டமாக ஓடிவந்து மூச்சிரைக்க பாட்டனைக் கொல்லப் போகிறார்கள் என்ற தகவலை பாட்டியிடம் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் நடந்த போது பாட்டியின் மூத்த குடிகள் இரண்டு பேரும் மேலே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அதனால் வீட்டில் யாரும் இல்லை. பாட்டனும் அந்தச் சமயத்தில் குதிரையில் ஏறி எங்கோ போயிருக்கிறார். பாட்டியும் அமத்தாவும் சேர்ந்து ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். ஊரைச் சுற்றிவிட்டு வந்த பாட்டனுக்கு இவர்கள் அழுது கொண்டிருக்கும் காரணம் தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்பவும் இருக்கும் வேலோடு சேர்த்து இடுப்பில் ஒரு சூரிக்கத்தியை சேர்த்துக் கொண்டாராம். அவ்வளவுதான், அவருடைய Precautionary action.

ஒரு வேலும் ஒரு சூரிக்கத்தியும் எத்தனை நாளைக்கு எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவிடும்? மிகச்சரியாக திட்டமிட்ட பங்காளிகள் அடுத்த ஒரே மாதத்திற்குள் சித்திரை வெயிலில் குதிரையில் வந்து கொண்டிருந்தவரை முடித்துவிட்டார்களாம். அந்தக் கொலைச் சம்பவம் ஒரு மிகச் சிறந்த கதைகளுக்குரிய ‘ட்விஸ்ட்’களால் நிறைந்தது. இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன். 

நாட்டாமை போய்ச் சேர்ந்தாகிவிட்டது. அதன் பிறகு அடுத்த நாட்டாமை யார் ஆவது என்ற பேச்சு வந்திருக்கிறது. பாட்டனாரின் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகியிருக்கிறது. அதனால் பங்காளி ஒருவரை நாட்டாமை ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பாட்டிக்கு இந்த நாட்டாமை பதவியில் விருப்பமில்லை என்பதால் அசால்ட்டாக விட்டுவிட்டார்கள். இறந்தவருக்கு பதினாறாம் நாள் முடிந்தவுடன் ஊர்க் கோவிலில் வைத்து புது நாட்டாமை சத்தியம் செய்வார் என்று தண்டோரா போட்டிருக்கிறார்கள். அதுவரை வீட்டை விட்டு வெளியே வராத பாட்டி தலை முடியை அள்ளி முடிந்து தெருவுக்கு வந்தாராம். அத்தனை அழுகையையும் நிறுத்திவிட்டு வெறியெடுத்தவரைப் போல கத்தியிருக்கிறார்.  “எம்புருஷனைக் கொன்னுபோட்டு எந்த வக்காரோலி நாட்டாம ஆவறது? அறுத்து காக்காய்க்கு வீசிறுவேன்’ என்று அடித்தொண்டையில் இருந்து எழும்பிய அந்தக் குரலுக்கு ஊரே அதிர்ந்து ஒடுங்கியிருக்கிறது.

வெறித்தனமாக வீட்டிற்குள் புகுந்து வேலைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு போயிருக்கிறார். ஊரே திரண்டு அவர் பின்னால் போகிறது. யாரையும் எதிர்பார்க்காமல் ‘எம்பையன் வர வரைக்கும் நாந்தான் நாட்டாமையாக இருப்பேன்’ என  சாமி மீது அடித்து சத்தியம் செய்துவிட்டுத்தான் தனக்கு பின்னால் வந்த கூட்டத்தைத் திரும்பி பார்த்திருக்கிறார். தலைவிரி கோலமும், வெள்ளைப் புடவையுமாக நின்ற அவரின் உருவம் அத்தனை பயமூட்டக் கூடியதாக இருந்தது என அமத்தா சொல்லியிருக்கிறார். திரண்டு நின்ற கூட்டத்தில் துளி சப்தமில்லை. கூட்டத்தோடு கூட்டமாக பங்காளிகளும் கலந்து நின்றிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதும் சரி; அடுத்த பத்து வருடங்களுக்கும் சரி- எந்தப் பங்காளியும் மூச்சுவிடவில்லையாம். அமத்தாவின் வார்த்தைகளில் சொன்னால் “பாட்டிக் கெழவி பொசுக்கி போடுவா...சாமி மாதிரி”