Jun 20, 2013

வந்தேண்டா பால்காரன்...

ஹோண்டா சிஆர் வி காரின் விலை இருபத்தைந்து லட்சம் வரும் போலிருக்கிறது. பழைய மேனேஜர் அந்தக் காரை வாங்கியிருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் குரு சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறான். அதனால் அவர் தொண்ணூறுகளிலேயே ஐ.டியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரில் ஏ,பி,சி,டி டைப் செய்யத் தெரிந்தால் அமெரிக்கா போய்விடுவார்கள். இவருக்கு ‘சி’ ப்ரோகிராமிங்கே தெரிந்ததாம். அதனால் வருடக்கணக்கில் அங்கேயே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டார். சைதாப்பேட்டையை சைதை என்பது போல ஹைதராபாத்தை ஹைதை என்று வைத்துக் கொள்வோம். மேனேஜர் ஹைதைக்காரர். அதனால் ‘அவர் கொல்ட்டி’ என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஹைதையில் ‘ஹை-டெக்’சிட்டி என்று ஒரு ஏரியா இருக்கிறது. இப்பொழுதுதான் அது ‘ஹை-டெக்’ தொண்ணூறுகளில் அது ‘எருமை டெக்’. எருமைகள் மேய்வதைத் தவிர ஒன்றுமே இருக்காதாம். அந்த ஏரியாவில் சீப்பாகக் கிடைத்ததால் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து கால் ஏக்கர் பொட்டல் வெளியை வாங்கிப் போட்டிருக்கிறார். அவருக்குத்தான் ஆறு லட்சம் சீப். ஆனால் அவரது அம்மா அப்பாவிற்கு அது பிடிக்கவில்லை. குதித்தார்களாம். எதிர்ப்புகளை நிராகரித்துவிட்டு துணிந்துதான் வாங்கியிருக்கிறார். நிலத்தின் மீது போடும் காசு நம்மை ஏமாற்றிவிடாதல்லவா? அவருக்கும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இவருக்குத்தான் குரு உச்சத்தில் இருக்கிறாரே! இன்றைக்கு அதே கால் ஏக்கரை ஒண்ணே முக்கால் கோடிக்கு விற்றுவிட்டார். 

சில நாட்களாக காசு, பணம், துட்டு, money money என்று சுற்றிக் கொண்டிருந்தவர் ஒண்ணே கால் கோடியில் நீச்சல் குளத்தோடு ஒரு வீடு வாங்கிவிட்டார். ‘ஒண்ணே கால் கோடி கொடுத்து அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்குவதற்கு பதிலாக தனி வீடே கட்டியிருக்கலாமே’ என்றால் ‘கட்டியிருக்கலாம்தான். ஆனால் இப்பொழுது அறுபதாயிரம் வாடகை வருகிறது, தனிவீட்டில் அவ்வளவு எதிர்பார்க்க முடியாதே’ என்று ஜெர்க் கொடுக்கிறார். வாடகை வருமானமே அறுபதாயிரம். ம்ம்! மிச்சமிருந்த பணத்தில்தான் முதல் வரியில் சொன்ன ஹோண்டா சிஆர்.வி.

அவர் இந்தக் காரை வாங்கி ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். இந்த ஓரிரு மாதங்களாக அந்தக் கார் மீது ஒரு Craze ஆகத் தான் திரிந்தேன். இத்தனை வருடங்களாக கார் மீது ஆர்வம் இருந்ததேயில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்தக் காரை பார்த்தாலும் ஆசை வருகிறது. சரி அது இருக்கட்டும். சிஆர்.வி காரின் மீது இருந்த அத்தனை ஆசையும் இன்று போய்விட்டது. காரணம்- ஃபேவரைட் பெலந்தூர் ஏரிதான். பெங்களூரிலேயே மிகப் பெரிய ஏரியாம். எனக்கென்னவோ சைஸைவிடவும் இன்னொரு Fact தான் முக்கியமானதாகத் தெரிகிறது. பெங்களூர் ஏரிகளிலேயே அதிகமான ஆய்த் தண்ணீர் கலக்கும் ஏரி இதுவாகத்தான் இருக்கும். அத்தனை நாற்றம். அத்தனை அழுக்கு.

சரி. ஹோண்டா சிஆர்.வியை வெறுக்க காரணம் என்னவாகியிருக்கும்? ஒரு நிமிடம் யோசியுங்கள், அதற்குள் இன்னொரு தகவலைச் சொல்லிவிடுகிறேன்.

இந்த ஊரில் பால் வியாபாரம் கொடி கட்டுகிறது. ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு பிடித்தோ அல்லது விலைக்கு வாங்கியோ அது நிறைய எருமைகளையும், மாடுகளையும் கட்டி வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்துபவர்களை இங்கு பார்க்கலாம். ஹாலுக்குள் பெரிய எருமையும் அதனோடு சில கன்றுக்குட்டிகளும் இருந்தால், பெட்ரூமை திருமதி.பசுமாடுகளுக்குகும், கிச்சனை மாஸ்டர் அண்டு பேபி வகையறாக்களுக்கும் ஒதுக்கி வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் பால்க்காரர் குடும்பம் இருக்கும். மாலை நேரம் ஆனால் வேப்பிலைகளைக் கொளுத்தி கொசுவைத் துரத்துகிறேன் பேர்வழி என்று அந்த வீதி முழுவதையும் ரகளையாக்குவார்கள். மாலையானால் கூட சமாளித்துவிடலாம். மழையானால்தான் சிரமம். கால் வைக்க முடியாது. கால் மட்டுமில்லை மூக்கையும் அந்த ஏரியாவில் வைக்க முடியாது.  ‘மணம்’ பின்னியெடுக்கும். ஆக, எருமைகளுக்கும், மாடுகளுக்கும் வீடு ரெடி. புவாவுக்கு?

அதுக்குத்தான் சுற்றிச் சுற்றி ஏரிகள் இருக்கின்றனவே. காலை ஏழு மணிக்கெல்லாம் ஏரிக்கரையோரங்களில் புல்லுக்கட்டுகளை பார்க்கலாம். ஏரிகளுக்குள் இறங்கி புற்களை அறுத்து எடுத்து வந்து கட்டுக் கட்டாக விற்று பிழைப்பு நடத்தும் சில குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு தொழிலே இதுதான். சில பால்க்காரர்கள் பைக்களிலும், சைக்கிளிலும் கட்டி எடுத்துப் போய்விடுகிறார்கள். லாரி, ஆட்டோ வைத்து யாரும் எடுத்துப் போவதில்லை. அதற்கு தனியாக பெர்மிஷன் வாங்க வேண்டுமா அல்லது ட்ராஃபிக் மாமாஸ் பிடித்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. லாரி, ஆட்டோவில் புற்கட்டுகளை ஏற்றி பார்த்ததேயில்லை. பிறகு? அதுதான் ஹோண்டா சிஆர்.வி மீதான் Craze போகக் காரணம். பலவித கார்களில் புற்களை நிரப்பி எடுத்து போவதை கவனித்திருக்கிறேன். ஆனால் இன்று சிஆர்.வி ஐ நிறுத்தி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நின்று அந்தக் கார்க்காரரிடம் ஏதாவது ‘விவரம்’ கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் மேனேஜருக்கு குரு சம்மணம் போட்டிருப்பது போல எனக்கு சனி சம்மணம் போட்டிருக்கிறார். பேசாமல் வந்துவிட்டேன்.

எங்கள் ஊரிலும் பால்க்காரர்கள் உண்டு. காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து பால் கறந்து சைக்கிளில் பால்கேன்களைக் கட்டிக் கொண்டு- இப்பொழுது சிலர் பைக்குகளில் போகிறார்கள்- முரட்டுத்தனமாக பெடலை மிதித்து வீடு வீடாக ஊற்றிவிட்டு காலை ஒன்பது மணிக்கு வீடு திரும்பினால், சோற்றைக் குடித்துவிட்டு எருமை, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வெயிலில் காய்ந்து நண்பகல் தாண்டி வீடு திரும்பி மதிய சோற்றை முடித்தவுடன் பால் கறக்க ஆரம்பித்துவிட வேண்டும். அப்பொழுதுதான் மாலை நேரத்திற்கான  ‘ரவுண்டு’ போக முடியும். இடையில் எருமை மாடுகளுக்கு ஏதாவது நோய்நொடியென்றாலோ, கறவைகளுக்கு மடு கட்டிவிட்டாலோ, தனக்கு உடம்பு சரியில்லையென்றாலோ- இன்னும் என்ன என்னவோ- எது வந்தாலும் சிரமம்தான். அது போக பண்டம்பாடிகளுக்கு புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை வாங்க வேண்டும், மருந்து ஊற்ற வேண்டும். அது மட்டுமா? சினை சேர்க்க வழி தேட வேண்டும். சினை கூடவில்லையென்றால் டாக்டருக்கு நடையாய் நடக்க வேண்டும். இத்தனைக்கும் இடையில் சொந்தக்காரர் வீட்டு கல்யாணம், தெரிந்தவர்கள் வீட்டில் எழவு, காதுகுத்து, கெடாவிருந்து, சீர்...எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா அத்தனையும் பார்த்தாக வேண்டும். 

இத்தனை கஷ்டங்களுக்கு இடையில்தான் தாங்கள் பால் ஊற்றும் வீடுகளில் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ பால்காசு வாங்கிப் போவார்கள். அதுவும் சும்மா போய்விட முடியாது. பால் கெட்டியாக இல்லை என்பதில் ஆரம்பித்து, புரை போட்டு வைத்த தயிரில் கும்ப வாசம் அடிக்கிறது என்ற ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட்களை வாங்கிக் கொண்டு திரும்புவார்கள். அவர்களுக்கும்தான் குடும்பம் ஓடுகிறது.

பால்க்காரர்கள் இப்படியென்றால் சம்சாரிகள் வேறு ரகம். எத்தனைதான் மேய்ச்சல் நிலம் இருந்தாலும் மேற்சொன்ன காரணங்களால் ஒரு மாடு வளர்த்துவார்கள் அல்லது இரண்டு வைத்திருப்பார்கள். அவ்வளவுதான். எம்ஜிஆர் பாடல் ஒன்று இருக்குமே ‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு’. அப்படித்தான். ஐந்தரை செண்டில் வீடு கட்டியிருந்தாலும், ஆடு மாடுகளைக் கட்டி வைக்க தொண்டுபட்டி இல்லையெனச் சொல்லிவிட்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் பால் கறந்து சொசைட்டியில் ஊற்றி அறுபதோ எழுபதோ சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.

சென்னையில் எப்படியென்று தெரியவில்லை. 

இந்த ஊரில் பாருங்கள். இவன் இருபத்தைந்து லட்சம் ரூபாய் காரில் புல்லை நிரப்பிக் கொண்டு போகிறான். அப்படியென்றால் என்றால் அந்த மாடுகளாலும், எருமைகளாலும் இந்த ஊர்க்காரர்கள் எத்தனை சம்பாதிப்பார்கள்? நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு நம் ஊர் பால்காரர்களின் அளவிற்கு சிரமம் இருக்காது என்று சொல்லவில்லை. ஆனால் நகரம் ஒரு உழைப்பாளிக்கு, அவனது உழைப்புக்குத் தகுந்த வசதி வாய்ப்புகளைக் கொடுத்துவிடுகிறது. 

சிஆர்.வி சம்பவத்தைப் பார்த்த போது இந்த ஊர் பால்க்காரர்களை சர்வசாதாரணமாக ‘பால்காரன்’ என்று நக்கலடித்துவிடுவதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டேன். ஒன்றரையணா செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு அது சொத்தையாகிவிடும் என்று கவர் போட்டு, ஸ்கிரீனுக்கு பேப்பர் ஒட்டி அழிச்சாட்டியம் செய்யும் நானெல்லாம் பெங்களூர் பால்க்காரரின் சுண்டுவிரல் நகத்திற்குக் கூட சமமில்லை போலிருக்கிறது