Jun 19, 2013

படிப்புக்கும் பி.எம்.டபிள்யூவுக்கும் என்னய்யா சம்பந்தம்?

பத்தாவது படிக்கும் போது முந்நூற்று சில்லரைதான் மதிப்பெண் வாங்கினார். அவர் என்னை விட இரண்டு வருடங்கள் சீனியர். நெருங்கிய சொந்தமும் கூட. அதுதான் பொறியியல் கல்லூரிகள் ‘வதவத’வென துவங்கப்பட்ட காலம். ஏகப்பட்ட பேர் ‘இஞ்ஜினியரிங் வெறி’பிடித்து திரிந்தோம். இவர் வாங்கியிருந்த மதிப்பெண்ணுக்கு பதினோராம் வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் பெற்றவர்கள் இவரை வொகேஷனல் க்ரூப்பில் சேர்த்துவிட்டார்கள். அதில் நல்ல மதிப்பெண் வாங்கினால் +2 முடித்த பிறகு பொறியியல் சேர்ந்துவிடலாம். படிப்பதற்கு சுலபமான க்ரூப்தான். ஆனால் கணிதத்தில் மார்க் வாங்கியாக வேண்டும். அவர் கணிதத்தில் வீக். அதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அர்ச்சனைதான். ‘பத்தாவதில்தான் கோட்டை விட்டாச்சு, பன்னிரெண்டாவதிலாவது மார்க் வாங்குற வழியைப் பாரு’ என்பதில் ஆரம்பித்து பக்கத்துவீட்டு பையன், அடுத்த தெரு பெண் என ஒவ்வொருவரையும் ‘கம்பேர்’ செய்து காய்ச்சி எடுத்தார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். எதிர்பார்த்ததுதான் நடந்தது. தொள்ளாயிரத்து சொச்சம். கட்-ஆஃப் படு மோசம். சத்தியமாக நல்ல கல்லூரியில் பொறியியல் கிடைக்காது. வேறு வழி? டிப்ளமோ சேர்த்துவிட்டார்கள். அதுவும் ஒரு சுமாரான பாலிடெக்னிக்தான். டிப்ளமோவில் மெக்கானிக்கல் சேர்ந்து அவர் மூன்றாவது வருடம் வந்த போது நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. அவர் படித்த பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இண்டர்வியூவெல்லாம் கிடையாது. அவர் டிப்ளமோ முடித்த பிறகு வீட்டிலிருந்தவர்கள்தான் அவரை பொறியியல் படிப்பில் சேர்ப்பதாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் தெளிவாக இருந்தார்.  ‘பொறியியல் சேர்ந்தாலும் மதிப்பெண் வாங்க முடியாது’ என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகன சர்வீஸ் செண்டரில் வேலைக்கு சேர்ந்தார். எடுத்தவுடன் மேனேஜர் பதவியா கொடுப்பார்கள்? இரண்டாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து அப்ரண்டீஸ் என்று சொல்லியிருந்தார்கள். யூனிபார்மும், எண்ணெய் வழியும் முகமும், வண்டி ஆயிலும், கரியும் அப்பிய கையுமாக அவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரது அம்மா புலம்பத் துவங்கினார். 

வருமானமும் பெரிதாக இல்லை, உழைப்பும் ஆளை உருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது என யோசித்தவர் ‘பிஸினெஸ்’ செய்யப்போவதாக அறிவித்தார். யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. ஆனால் சிம்பிள் கான்செப்ட். சாக்குப்பை (கோணி)யை  வாங்கி வந்து அதில் ‘ரைஸ் மில்’ பெயர், ‘தாமரை - நெம்பர் 1 திடம் அரிசி’ என அரிசியின் பிராண்ட் போன்றவற்றை பிரிண்ட் செய்ய வேண்டும். ப்ரிண்ட் செய்யப்பட்ட சாக்குப்பைகளை அரிசி ஆலைக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். இந்தத் தொழிலை தனியாக ஆரம்பிக்கவிலலை. கூடவே பார்ட்னரை சேர்த்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டார். பார்ட்னரும் அதே பள்ளியில், அதே வொகஷனல் க்ரூப்பில், அதே பாலிடெக்னிக்கில் படித்தவர்தான். புதிய தொழிலில் ஆளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்தான் முதலீடு. அதில் ஐந்தாயிரம் ரூபாய் கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ். மிச்சமிருந்த ஐந்தாயிரம்தான் தொழிலுக்கான முதலீடு.

அப்பொழுதும் சொந்தக்காரர்களுக்கும் பந்தக்காரர்களுக்கும் பெரிய திருப்தி இல்லை. ‘இதெல்லாம் ஒரு பிஸினஸா? சாக்குக்கடைக்காரன் என்று சொல்லி பெண் கூட தர மாட்டார்கள்’ என்று சொன்னவர்களின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் பார்ட்னர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் பழைய சாக்கு பைகளை வாங்கி, அதில் கிழிசல் ஏதாவது இருந்தால் தையல் போட்டு, உள்பக்கமாகத் திருப்பி பிரிண்ட் அடித்துக் கொடுப்பார்கள். தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சாக்குத் தைக்க ஒரு ஆள் இருந்தார். மற்றபடி பார்ட்னர்கள்தான் பிரிண்ட் அடிப்பார்கள். சர்வீஸ் செண்டரில் வேலை செய்துவிட்டு வரும் போது கையில் அப்பியிருக்கும் கரியை சோப்பு போட்டுக் கழுவினால் போய்விடும். ஆனால் இந்த பெய்ண்ட் போகவே போகாது. அதே கலர் கையோடுதான் இருபத்தி நான்கு மணிநேரமும் சுற்ற வேண்டும். சாக்கில் இருந்து கிளம்பு சிறுதுகள்கள் மூக்கில் புகுந்து அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும். ஆனால் இதனால் எல்லாம் அவர்கள் சோர்ந்து போனதாகத் தெரியவில்லை.

தொடக்கத்தில் ஒரு சாக்கை வாங்கி, கிழிசலை சரி செய்து, ப்ரிண்ட் போடுவதற்கு இருபது ரூபாய் செலவு பிடிக்கும். அதையே அரிசி ஆலைக்காரர்கள் இருபத்தியொரு ரூபாய்க்கு வாங்கிக் கொள்வார்கள். ஆக ஒரு சாக்குக்கு ஒரு ரூபாய் லாபம். ஆரம்பத்தில் நூறு, இருநூறு சாக்குகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு நிறைய அரிசி ஆலைகளில் ஆர்டர் பிடித்தார்கள். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரிஸா, பீகார் போன்ற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சாக்குகள் முதல் பத்தாயிரம் வரை எண்ணிக்கை அதிகமானது. கணக்குப் போட்டால் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் இலாபம். பிறகு பழைய சாக்குகளை வாங்குவதை நிறுத்திவிட்டு புது சாக்குகளை பங்களாதேஷிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும் இறக்குமதி செய்யத் துவங்கினார்கள். புது சாக்குகளில் இலாபம் அதிகம் என்பதால் இன்னமும் ஒரு படி மேலே போனார்கள்.

நான் எம்.டெக் முடித்துவிட்டு ஹைதராபாத் போன போது ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்று தெலுங்குப் பழமொழி கற்றுக் கொண்டதுதான் மிச்சம். பெரிய வேலையும் இல்லை; நல்ல சம்பளமும் இல்லை. ஆனால் இந்தச் சமயத்தில் அவர்கள் தொழிலில் ஸ்திரமாகிவிட்டார்கள். வாசிப்பதற்கு என்னவோ ஒரே பாடலில் பணக்காரராகும் அண்ணாமலை ரஜினி போலத்தான் தெரியும். ஆனால் தொழிலில் ஸ்திரமடைவதற்கு தேவையான அத்தனை சிரமங்களையும், அவமானங்களையும் இரண்டு பேரும் தோளில் சுமந்துதான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மிகப் பெரிய அடி வாங்கிய சம்பவங்களும் நடந்தது. ஒரிரு வருடங்களுக்கு முன்பாக இரு குடோன்களில் ஒரு சாக்கு குடோன் முழுமையாக எரிந்து போனது. குடோனுக்கு மேலே போய்க் கொண்டிருந்த மின்வயர் அறுந்து விழுந்தது என்றார்கள். ஆனால் உண்மையில் அதுதான் காரணமா என்று யாருக்கும் தெரியாது. வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அது மீளவே முடியாத அடி என்றுதான் நினைத்திருக்க முடியும். சில கோடிகளாவது தீக்கு இரையாகியிருந்தது. அத்தனை மெஷின்களும், அத்தனை ஸ்டாக்கும் கருகிப் போயின. ஆனால் மற்றவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. அடுத்த ஐந்தே நாளில் புதிய மெஷின்களை இறக்கினார்கள். கடன் வாங்கினார்களா என்றெல்லாம் தெரியாது- ஆனால் கடுமையான உழைப்பும், திறமையும் பெரிய அளவிற்கு கொண்டு போய்விட்டது. இடம் வாங்குவதாக இருந்தாலும், புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் இரண்டு பேரின் பெயரிலும்தான் செய்கிறார்கள்.

இப்பொழுது சாக்கு பிஸினஸ் தனியாக நடக்கிறது. அது போக நூல் பிஸினெஸ், நூல் மில்களுக்குத் தேவையான் ‘கோன்’ தயாரிப்பு என்று கிளை விரித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிஸினஸ் பற்றி எனக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதால் அதிகமாக கேட்டுக் கொள்வதில்லை. ஃபோன் செய்வதும் கூட குறைந்து விட்டது. ‘கலெக்‌ஷனில் இருக்கிறேன்’ ‘சப்ளையரை பார்க்க போகிறேன்’ என்று ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் பிஸியாக இருக்கும் மனிதரை தொந்தரவு செய்வதற்கு மனம் வருவதில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இரண்டு பி.எம்.டபிள்யூ பதிவு செய்தாகிவிட்டது என்றார். ஒன்று இவருக்கு, இன்னொன்று பார்ட்னருக்கு. இது முன்பே நடந்திருக்க வேண்டியதுதான். ஆனால் தீ விபத்தினால் தாமதமாகிவிட்டது என நினைக்கிறேன். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது.

பதிவு செய்த கார் வந்துவிட்டதா என்பதைக் கேட்க வேண்டும் என நேற்று காலையில் தோன்றியது. திடீரென ஞாபகம் வந்ததால் ஓட்டிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்திவிட்டு அழைத்தேன். 

“சொல்லு மணி” என்றார். 

“கார் வந்துடுச்சுங்களாண்ணா?” என்றேன். 

“நேத்தே எடுத்துட்டு வந்தாச்சு. பண்ணாரி கோயிலுக்கு போய்ட்டு வந்தோம். இப்போ மாமன் ஊருக்கு கெடா விருந்துக்கு போயிட்டிருக்கோம்” என்றார். மற்றதெல்லாம் பேசி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன். 

மற்றவர்களின் தன்னம்பிக்கையை வளர்பதற்காகவோ அல்லது படித்தால் உருப்பட முடியாது என்பதை பறைசாற்றவோ இந்தக் கட்டுரையை எழுதவில்லை. ‘நீ பிஎம்.டபிள்யூ வாங்கவில்லையென்றால் படித்த மற்றவர்களாலும் வாங்க முடியாது என்று அர்த்தமில்லை’ என்றோ, அல்லது ‘அவர் தொழிலில் வென்றுவிட்டார் என்பதால் பிஸினஸ் ஆரம்பிப்பவர்கள் எல்லாரும் ஜெயித்துவிடுவார்கள் என்றோ அர்த்தமில்லை’ என யாராவது சொன்னால் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஒன்றை குறிப்பிட வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது, ஒரே காலகட்டத்தில்தான் வளர்ந்தோம். அவர் டிப்ளமோதான். ஆனால் என்னால் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத காரில் போய்க் கொண்டிருக்கிறார். நான் எம்.டெக்தான் ஆனால் ஸ்பெண்டர் ப்ளஸ்ஸில் அலுவலகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் படிப்புக்கும் வசதி வாய்ப்புக்குமான ரிலேஷன்ஷிப்.