Jun 18, 2013

தமிழன் எப்பவுமே மூளைக்காரன்யா

வழக்கமாக திங்கட்கிழமையன்று ஒன்பதரை மணிக்கு அலுவலகத்தில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். எப்பவுமே ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமாக வருவேன் என்பதால் ‘இவன் இப்படித்தான்’ என்று H20 வை தெளித்துவிட்டார்கள். ஆனால் நேற்று பார்த்து இருபது நிமிடம் தாமதம். மீட்டிங் அறைக்குள் நுழைந்ததுதான் தெரியும். அதன் பிறகு அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு வடசட்டியில் பொரிந்து கொண்டிருந்ததால் என்ன நடந்தது என்றே தெளிவாகத் தெரியவில்லை. பொரிந்தது நான்; பொரித்தது மேனேஜர் பெருந்தகை. 

நான் என்ன வேண்டுமென்றா தாமதமாகச் சென்றேன்? காணுதற்கரிய காட்சிகள் எல்லாம் சாலைகளில் நிகழ்ந்தால் முன்பின் தாமதமாகத்தான் செய்யும். இதைக் கூட புரிந்து கொள்ளாத மேனேஜரைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதாக இருக்கிறது. நேற்றும் அப்படியொரு காட்சியால்தான் சற்று தாமதம். காட்சி என்றால் தமன்னாவின் இடுப்போ அல்லது அனுஷ்காவின் தொடையோ மட்டும்தான் காட்சியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தை ஜட்டி போடாமல் சுற்றிக் கொண்டிருப்பதும் காட்சிதான்; ஒரு பெண் துள்ளிக் குதித்து சாலையைக் கடப்பதும் காட்சிதான்.

சரி ஓவராக படம் ஓட்டாமல் நேரடியாக காட்சிக்கு வந்துவிடுகிறேன்.

பெங்களூரில் சர்ஜாப்பூர் சாலை தெரியுமல்லவா? அந்தச் சாலையோடு ஹரலூர் சாலை இணையும் இடம்? இரண்டுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நமக்குத்தான் கூகிள்பாய் இருக்கிறாரே. கீழே இருக்கும் படத்தில் தெரிகிறது பாருங்கள்.  ஹரலூர் என்பது கன்னடக்காரர்களின் உச்சரிப்பு. அருலூர் என்பதுதான் தமிழ் உச்சரிப்பு. இந்தச் சாலைகள் இணையும் இடத்தில் ஒரு பழங்கால திசைகாட்டி கல் இருக்கிறது. அதில் ‘அருலூர்’ என்று தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது கன்னடக்காரர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, தமிழ் எழுத்துக்களை மறைப்பதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இப்பொழுது முக்கியமில்லை.


இந்தப்படத்தில் நட்சத்திரக் குறியிட்ட ஸ்பாட்தான் முக்கியம். காலை ஒன்பது மணியளவில் இந்த ஸ்பாட்டில் ஒரு போர்வெல் லாரி ஓடிக் கொண்டிருந்தது. ‘ஓடி’ என்பதற்கு பதிலாக ‘நகர்ந்து’ என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். அந்த லாரிக்கு பின்னால்தான் நான் உட்பட சில பைக்காரர்களும் ஒரு ‘L' போர்ட் ஸிவிஃப்ட் உட்பட ஓரிரண்டு கார்க்காரர்களும் நகர்ந்து கொண்டிருந்தோம். ஆளாளுக்கு அலுவலகம் செல்லும் அவசரம். ஹார்னை அதிர விடத் துவங்கினோம். அந்த ஹார்ன் மொத்தத்தையும் ஸிவ்ஃப்ட்காரன் காதில்தான் அடித்திருக்க வேண்டும். காரணம் அவன்தான் லாரிக்காரனுக்கு பின்னால் போய்க் கொண்டிருந்தான். லாரிக்காரனை முந்தவும் இல்லை ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடவும் இல்லை. நடுச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தான். ‘L' போர்ட் என்பதற்காக எத்தனை நேரம்தான் பொறுப்பார்கள்? ஒரு பைக் அந்தக் காரை முந்திவிட்டது. முந்தும் போது பைக்கின் பின்னால் இருந்தவன் ஏதோ கையசைத்து பேசினான். அவனுக்கு பின்னால்தான் எனது பைக் சென்றது என்றாலும் தெளிவாக புரியவில்லை. ‘L' போர்ட் அவசரமாக கார்க்கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு ஏதோ கத்தினான். இது போதுமல்லவா? ஒரு அற்புதமான சண்டைக்காட்சிக்கு மனம் தயாராகிவிட்டது. மீட்டிங், மேனேஜரெல்லாம் மண்டையின் பின்பகுதிக்கு போய்விட்டார்கள். லாரிக்காரனை போகவிட்டவர்கள் பைக்கையும், காரையும் ஓரம் கட்டி நிறுத்தினார்கள். பின்னால் வந்தவர்களும் இவர்களை முந்திக் கொண்டு போகத் துவங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையிலும் முன்பைக் எவ்வழியோ என்பைக்கும் அவ்வழியே. ஓரம்கட்டியாகிவிட்டது.

பைக்கில் இருந்தவர்கள் தமிழ். இறங்கியவுடன் ‘நீதான் ‘L' போர்ட் ஆச்சே வழி விட மாட்டியா?’ என்று தமிழில்தான் ஆரம்பித்தார்கள். காரில் இருந்தவனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்கள் தென்னிந்தியர்கள்தான். ஆனால் தமிழ் இல்லை. ‘என்கிட்ட DL இருக்கு’ என்று ஆங்கிலத்தில் கத்தியபடியே இறங்கினான். ‘L’ போர்ட் என்றது அவனது ஈகோவை சீண்டியிருக்க வேண்டும். சொற்பிரயோகங்கள் தடிக்க ஆரம்பித்தன. கார்க்காரன் பைக்பையன்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கினான். அவர்கள் அதிகம் பேசவில்லை. கார்க்காரனின் மனைவியும் களத்தில் குதிக்க ஆரம்பித்தாள். எங்களுக்கு பின்னால் சைக்கிளில் வந்த பெரியவர் ஒருவர் கார்க்காரனிடம்‘ஏம்ப்பா உன்மேலதானே தப்பு?’ என்றார். அவர் கட்டடவேலைக்கு போகுபவர் போலிருந்தது. காரைச்சட்டி, கைக்கரண்டியெல்லாம் சைக்கிள் கேரியரில் கட்டி வைத்திருந்தார். அவர் சொன்னதையெல்லாம் கார்வாலாக்கள் கண்டுகொள்ளவே இல்லை. 

பைக்கார பையன்கள் இருவரும் விடலைகள். இப்பொழுதுதான் கல்லூரி முடித்திருக்க வேண்டும். பில்லியனில் அமர்ந்திருந்தவன் துடிப்பானவனாக இருந்தான். 

‘இப்போ என்ன செய்யணும்?’என்றான். அதில் சற்று விறைப்பு இருந்தது.

ஸாரி கேட்கச் சொன்னார்கள்.

‘எதுக்கு?’ என்று எகிறினான்.

இப்பொழுது மீண்டும் பெரியவர் சமாதானம் செய்ய முயன்றார். அவரோடு நானும் ஏதோ சொல்ல எத்தனித்த போது ‘கன்னடா கொத்தாயல்லவா?’ என்று கார்க்காரன் ஆரம்பித்தான். பெங்களூரில் சண்டைகளின் போது தமிழில் பேசினால் இதுதான் பிரச்சினை. அதையே பிடித்துக் கொள்வார்கள். விடாமல் ‘கன்னடத்தில் பேசு’ என டார்ச்சர் செய்யத் துவங்குவார்கள். கன்னடம் தெரியவில்லை என்றால் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியே இருக்காது. நான் பின்வாங்கிக் கொண்டேன். பெரியவருக்கு கன்னடம் தெரிந்திருக்கக் கூடும். இங்கு கட்டடவேலை செய்யும் பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் பேசுவார்கள். ஆனால் ‘கார்க்காரனுக்கும் பைக்காரனுக்கும் சண்டை நடக்கும் போது சைக்கிள்காரனுக்கு என்ன வந்தது’ என்று நினைத்தாரோ என்னவோ விலகிவிட்டார்.

என்னைத் தவிர அந்த இடத்தில் வேடிக்கை பார்க்கும் ஆட்கள் யாருமே இல்லை. பெரும்பாலான வண்டிகள் சற்று வேகத்தை குறைத்து வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டன. அந்தச் சாலையில் ட்ராபிக் போலீஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. வேடிக்கை பார்ப்பது மட்டுமே என் நோக்கம் என்பதால் நானும் சற்று விலகி நின்று கொண்டேன்.

கார்க்காரன் தனது கையில் சாவியை வைத்துக் கொண்டு எகிறிக் கொண்டிருந்தான். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த துடிப்பானவன் மற்றவனை போகச் சொன்னான். எதற்காக போகச் சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் பெரிதாக மறுக்காமல் கிளம்பிவிட்டான். ஸிவிஃபிட்க்கு சில அடிகளுக்கு முன்பாக கார்கள் வரிசையாக நிற்கத் துவங்கின. அனேகமாக சர்ஜாப்பூர் சாலையில் ட்ராஃபிக்காக இருக்கக் கூடும்.  அதனால் நகர முடியாமல் அருலூர் சாலையில் வண்டிகளின் க்யூ நீளமாகிக் கொண்டிருந்தது.

இப்பொழுது கார்க்காரனும், துடிப்பானவனும் தாறுமாறாக கத்திக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்களோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டாள். இவர்கள் இப்படியேதான் இழுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருந்தது. கிளம்பிவிடலாம் என்று நினைக்கத் துவங்கிய போதுதான் அந்தக் கண்கொள்ளாக் காட்சி அரங்கேறியது. பைக்காரப் பையன் கார்க்காரன் கையிலிருந்த சாவியை பறித்துவிட்டான். அது ஒரு லாவகமான பறிப்பு. கோழிக்குஞ்சை அடிக்கும் பருந்தின் லாவகம். எதற்கு பறிக்கிறான் என்று யோசிப்பதற்குள் அவன் செயலில் இறங்கிவிட்டான்.

அடுத்த வினாடி ஓடத் துவங்கிவினான். சர்ஜாப்பூர் சாலையை நோக்கி ஓடுகிறான். கார்க்காரனுக்கும் அவனது மனைவிக்கும் என்ன நடக்கிறது என்றே சில கணங்கள் புரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ஓடத் துவங்கும் போது அவளும் கூடவே ஓடினாள். கோபம் அடைந்தவனாக ‘வெயிட் செய்யி. கார் உந்துகாதா? ஒஸ்தானு’ என்று கத்தினான். அடப்பாவி! தெலுங்குப்பயல். கன்னடக்காரன் போல நடித்திருக்கிறான்.

பைக்பையன் ஒருவித உற்சாகத்துடன் ஓடத் துவங்கினான். அந்த ஓட்டத்தில் ஒருவித நடனத்தன்மை கலந்திருந்தது. நக்கலான நடனமும் ஓட்டமும் கலந்த வேகம். அவனது வேகத்திற்கு இவனால் தொப்பையைத் தூக்கிக் கொண்டு ஓடி சத்தியமாக பிடிக்க முடியாது. ‘வெயிட்ரா..ரேய்..அர்ஜெண்ட்ரா...ப்ளீஸ்ரா’ என்று கத்திக் கொண்டே பின் தொடர்ந்தான். இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட நூறு அடி தூரம் இடைவெளி இருந்தது. இடைவெளி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சாவியோடு ஓடும் அவன் சர்ஜாப்பூர் வாகனநெரிசலுக்குள் கரைந்துகொண்டிருந்தான். கார்க்காரனைப் பார்கக் பாவமாக இருந்தது என்றாலும் ‘இவனுக்கு இது தேவைதான்’ என்று தோன்றியது. சர்ஜாப்பூர் சாலையில் நின்று கொண்டிருந்த ட்ராபிக் போலீஸை நோக்கி கார்க்காரன் நகர்ந்தான். அவர்களால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? போன சாவி போனதுதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இனி வாழ்நாளில் யாரோடும் சாலையில் இறங்கிச் சண்டை போடமாட்டான் எனத் தோன்றியது. மாறாக சாவியைப் பறித்துக் கொண்டு ஓடியவன் ‘எவன் கிடைப்பான்’ என்று ஏதாவதொரு கைப்புள்ளையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கவும் கூடும். இப்பொழுது எனது பின் மண்டையிலிருந்த மேனேஜர் முன் மண்டைக்கு வந்திருந்தார். ஆக்ஸிலேட்டரை முறுக்கத் துவங்கினேன். பிறகுதான் நீங்கள் முதல் பத்தியில் படித்த வடசட்டி மேட்டர் நடந்தது.