Jun 11, 2013

குழி பறிக்க ஒரு குரூப் சுத்திட்டேதான் இருக்கும்

அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். முருகன். பெயர்தான் முருகனே தவிர ஆளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. பாண்டிச்சேரிக்காரர். ப்ரெஞ்ச்க்காரங்க வகையறா போலிருக்கிறது. அந்த நாட்டின் குடியுரிமை வைத்திருக்கிறார். பெங்களுர் வந்து சில பல வருடங்கள் ஓடிவிட்டன. மனைவியும் வேலைக்கு போகிறார். கையில் கொஞ்சம் காசு வைத்திருப்பார் போலிருக்கிறது. ஏதாச்சும ‘ப்ளாட்’ கிடைத்தால் வாங்கிவிடலாம் என்று துழாவிக் கொண்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து எங்கள் வீட்டுப்பக்கமாகத் தேடிப் பார்த்தோம். ஒன்றும் சிக்கவில்லை. சிக்கவில்லை என்றால் கைக்கு எட்டும் அளவில் இல்லை. சதுர அடி நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். ஒருவேளை விலை குறைவாக இருந்தால் அந்த இடத்தில் சட்டச் சிக்கல் ஏதாச்சும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று காலையிலிருந்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஒன்றும் உருப்படியில்லை.

பெங்களூரில் இடம் வாங்குவது அத்தனை சுலபமான காரியமில்லை. இடம் வாங்கிய அனுபவம் உள்ளவர்கள் யாரையாவது அறிந்திருந்தால் விசாரித்துப் பார்க்கலாம். ஒவ்வொருவரிடமும்  ஒரு சுவாரசியமான கதை இருக்கும். எங்களுக்கு அடுத்த வீதியில் ஐந்தரை செண்ட்டில் ஒரு கட்டடம் ஆரம்பமானது. தமிழ் குடும்பம்தான். இடம் வாங்கி, வீடு கட்டுவதற்கு ஏகப்பட்ட  கொள்முதல் போட்டிருந்தார்கள். முதல் தளத்தின் வேலை முடிந்து அடுத்த தளத்தின் வேலையை ஆரம்பிக்கும் சமயத்தில் யாரோ குறுக்கே வந்துவிட்டார்கள். யாரோ என்றால்  பெருங்கூட்டம். ஏகப்பட்ட கார்களிலும், பைக்களிலும் வந்து இறங்கி ‘இது எங்க இடம். நீங்க எப்படி கட்டலாம்?’ என்று தடுக்கத் துவங்கிவிட்டார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வீடு  கட்டுவதே பெரிய காரியம். அதிலும் இப்படியெல்லாம் சிக்கல்கள். ‘இடத்துக்கான டாக்குமெண்ட் இருக்கிறது’ என்கிறார். விசாரித்துத்தான் வாங்கினாராம். ம்ஹும். வேலைக்கு ஆகவில்லை.  ‘இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.  ‘பத்து லட்சம் தர்றோம், அப்படியே விட்டுட்டு போயிடுங்க’என்கிறார்கள். அந்த தமிழ்க்காரரின் மனைவி தெருவில் விழுந்து அழுது  புரண்டததுதான் மிச்சம். கோர்ட்டில் கேஸ் நடக்கிறதாம். இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. பாதியாக நிற்கும் கட்டடத்தில் எருக்கம் பூச்செடி முளைத்துக் கிடக்கிறது.

இன்னொரு வீட்டில் தடபுடலாக புதுமனைப் புகுவிழாவெல்லாம் நடத்தினார்கள்.நாதஸ்வரம், மிருதங்கக் கச்சேரியோடு நான் பார்த்த ஒரே புகுவிழா அதுதான். வீதியை அடைத்து பந்தல்  போட்டு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு விருந்து போட்டார்கள். ஆனால் விழாவோடு சரி. இன்னும் யாருமே புகவில்லை. இடையில் என்ன நடந்தது, ஏது நடந்தது என்றெல்லாம்  தெரியவில்லை. வருடக்கணக்காகத் திறவாமல் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. விசாரித்தால் ‘சட்டச் சிக்கல்’ என்கிறார்கள். என்ன சட்டமோ, என்ன சிக்கலோ?

எங்கப்பாவுக்கு பெங்களூர் வந்த பிறகு இதுதான் பொழுது போக்கு. எந்த இடம் என்ன ரேட்டுக்கு போகிறது, யார் இடத்தில் என்ன பிரச்சினை என்பதையெல்லாம் விரல் நுனியில் வைத்துக்  கொண்டிருக்கிறார். இந்த ஏரியாவில் தெரியாத்தனமாக யாராவது தமிழ் ஆளை பார்த்துவிட்டால் படு குஷியாகி விலாவாரியாக பேசத் தொடங்கிவிடுகிறார். ஊரில் இருந்தவரையில் மாலை  நேரமானால் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு ‘வாக்’ போகிறேன் பேர்வழி என்று எதிர்ப்படும் ஒவ்வொரு ஆளிடமும் அரை நிமிடமாவது பேசும் மனிதரை பெங்களூரில் கொண்டு வந்து சிறை வைத்து விட்டால் பாவம் என்னதான் செய்வார்? தினமும் ஒரு ரியல் எஸ்டேட் அக்கப்போரையாவது தெரிந்து கொண்டு வந்து கதையாகச் சொல்லிவிடுகிறார்.

நகையை அடகு வைத்து, வட்டிக்கு கடனை வாங்கி வாழ்நாளின் ஒரே கனவு என்று நினைத்து கிடைத்ததையெல்லாம் மூன்றரை சென்ட்டில் முதலீடு செய்தால் எவனோ ஒருவன் வந்து  பெருமொத்தமாக அள்ளிக் கொள்கிறான். முக்கால்வாசிப்பேர் இடமும் வேண்டாம், ரிஸ்க்கும் வேண்டாம் என்று அபார்ட்மெண்டுக்கு போவதற்கு காரணமே இந்த டார்ச்சர்கள்தான் என்கிறார்கள்.  ஆனால் முருகனுக்குத் தெரிந்து ஒரு வக்கீலும், லோக்கல் கவுன்சிலரும் இருக்கிறார்கள். ‘இடம் வாங்குறதுன்னா சொல்லுங்க வாத்தியாரே, நாங்க பாத்துக்குறோம்’ என்கிறார்களாம்.  ‘அப்புறம் என்ன முருகன், களமிறங்குங்க’ என்றால் ‘எறங்கலாம்...ஆனால் இவங்க ரெண்டு பேரையும் நினைச்சா பயமா இருக்கு’ என ஜெர்க் கொடுக்கிறார். இட விஷயத்தில் தெரிந்தவன் சொந்தக்காரன் என்றெல்லாம் எவனும் இல்லை- கிடைத்தால் ஆட்டையை போட்டுவிடுவார்கள் என்று பிலாசபிகலாக பேசுகிறார்.

இத்தனை ரிஸ்களுக்கிடையேதான் நாங்களும் வீடு கட்டினோம். நாங்கள் கட்டியதற்கு வேறொரு காரணம் இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா அப்பாவோடு சேர்த்து மொத்தம் எட்டுப் பேர். ஆரம்பத்தில் பி.டி.எம் லே அவுட்டில்தான் வாடகைக்கு இருந்தோம். அந்த வீட்டு ஓனர் ஒரு மார்க்கமான ஆள். மார்க்கம் என்றால் மார்க்கம்தான். தனது மனைவியோடு எட்டு வருடமாக பேச்சுவார்த்தையே இல்லை ஆனால் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். அவன் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன? நமக்கு பிரச்சினையில்லைதான். ஆனால் அத்தனை கடுப்பையும் எங்களிடம் காட்டத் துவங்கினார். தண்ணீர் பயன்பாட்டிலிருந்து காலிங் பெல் பயன்பாடு வரை அத்தனையும் கண்காணிக்கத் துவங்கினார். ஆமாம், காலிங் பெல் கூட ஒரே ஒரு ‘டிங்’அடித்தால் போதும் என்று அறிவுரை சொன்னார். பையனுக்கு  அப்பொழுதுதான் ஒரு வயது ஆகியிருந்தது. இரவில் அவன் அழுதால் அடுத்த நாள் காலையில் விடிந்தும் விடியாமலும் கதவைத் தட்டி‘தூங்கவே முடியவில்லை’ என்று எரிச்சலைக் காட்டுவார். இப்படி எதில் எடுத்தாலும் அவர் கொடுத்த அளவுக்கு மீறிய டார்ச்சரால் வேறு ஏதேனும் ஒரு வழி தேட வேண்டியிருந்தது. வேறு பெரிய வீடாகத் தேடுவதுதான் திட்டமாக இருந்ந்தது. ஆனால் எட்டு பேர் என்றால் எந்த ஓனரும் வீடு கொடுக்கத் தயாராக இல்லை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்தது. அதுவும் எட்டில் இரண்டு அரை டிக்கெட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நாய் படாத பாடுதான். கிடைத்த ஒன்றிரண்டு வீட்டிற்கும் வாடகை தாறுமாறாக இருந்தது. அவர்களுக்கு வாடகையாக கொடுப்பதற்கு பதிலாக மாதாமாதம் EMI கட்டினால் கூட குறைவாகத்தான் வரும் போலிருந்தது. அப்புறம்தான் வீடு கட்டும் படலம்.

பாருங்கள், முருகன் கதையை ஆரம்பித்து நாங்கள் வீடு கட்டிய கதைக்கு வந்துவிட்டேன். இந்தக் கதையெல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கவே இல்லை. உண்மையில் ஹைதர்  அலியைப் பற்றித்தான் எழுத விரும்பினேன். ஹைதர் அலியா? ஆமாம், திப்புசுல்தானின் அப்பா ஹைதர் அலியேதான். தேங்காய் பொறுக்கும் அமாவாசை, நாகராஜன் சோழன் எம்.ஏ.,  எம்.எல்.ஏ ஆனதுக்கான இன்ஸ்பிரேஷன் ஹைதரின் கதையிலிருந்து கூட உருவப்பட்டிருக்கலாம். அவ்வளவு இண்ட்ரெஸ்டிங் கேரக்டர். கிடைத்த நாடுகளையெல்லாம் வளைத்து வளைத்து  அவர் மைசூர் மன்னர் ஆனது அத்தனை சுவாரசியமான கதை.

ஒரு சமயத்தில் மைசூர் மன்னனின் தளவாய் தேவனஹல்லி கோட்டையை பிடிக்க சண்டை போட்டுக் கொண்டிருந்தான். தளவாய் என்றால் போர்ப்படைத் தளபதி- இப்பொழுதுதான் யாரை வேண்டுமானாலும் தளபதி என்கிறோம் (No politics,Please) இந்த தளவாய் உண்மையிலேயே போர்ப்படைத் தளபதிதான். பொதுவாக போர்களில் மன்னர்கள்தானே சண்டையிடுவார்கள்? ஆனால் இங்கே தளவாய். அதற்கு காரணம் இருக்கிறது. மைசூரில் ரொம்ப காலமாக தளவாய்களின் ராஜ்ஜியம்தான் நடந்தது. ஒரு டம்மி பீஸை மன்னராக்கிவிட்டு மற்ற சங்கதிகளையெல்லாம் தளவாய்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஆர்க்காட்டுப் போரில் ஒரு இசுலாமிய இளைஞன் ‘பட்டையைக் கிளப்பினான்’. இதைப் பார்த்த அமைச்சன் நஞ்சராயனுக்கு அவனை மிகப் பிடித்துப் போனது. ஒரு பரிசு தர வேண்டும் என விரும்பியவர், ஐம்பது குதிரைகளையும், இருநூறு காலாட்படைகளையும் கொடுத்து ‘இனி நீ தான் இந்தப்படைக்குத் தலைவன்’ என்றார். அந்த முஸ்லீம் பையன் ஹைதர்தான். இந்த ‘சோட்டா’படையை வைத்துத்தான் மொத்த மைசூர் சாம்ராஜ்யத்தையும் அமைத்தான். கடைசியில் இந்தப் படையைக் கொடுத்த நஞ்சராயனையே காலியாக்கினான் என்பது வேறு விஷயம். அத்தனை வீரம், அத்தனை திறமை, அத்தனை கிரிமினல்த்தனம்.

இப்பொழுது இடம் விற்கும் விலைக்கும், இருக்கும் பிரச்சினைகளுக்கும் சும்மாவெல்லாம் வாங்க முடியாது - ஹைதர் அலி மாதிரி வளைத்தால்தான் உண்டு என்று நினைத்துக்  கொண்டிருந்தேன். அது வளைத்து வளைத்து இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இன்னொரு நாளைக்கு ஹைதரை பார்த்துக் கொள்ளலாம்.