Jun 12, 2013

பொன்னியின் செல்வியும், ஏழுதமிழ் அறிஞரும்

சென்னையில் மழை, கர்நாடகாவில் மழை, வேமாண்டம்பாளையத்தில் மழை இல்லை, ஜெர்மனியில் அடித்து நொறுக்குகிறது. நீயுஸ் ரீல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. எல்லாம் சரி. மேட்டூரில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு இருந்தால் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பாட்டு பாடலாம். இல்லையென்றால் ‘குந்தினாய் வறண்ட காவேரி’தான். இப்பொழுது அணையில் பதினேழே முக்கால் அடிதான் இருக்கிறதாம். உயரமான ஆட்கள் மூன்று பேரை ஒருத்தர் மேல் ஒருத்தராக நிறுத்தினால் மூன்றாவது ஆள் தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கலாம். மேட்டூரில் இருக்கும் ஆடு மாடுகளை பிடித்து வந்து அணையில் தண்ணீர் குடிக்கவிட்டால் கூட மொத்தமாக உறிஞ்சிவிடும் போலிருக்கிறது. இந்த முப்பது குடம் தண்ணீரை வைத்துக் கொண்டு “இந்த வருடம் குறுவை சாகுபடி இருக்கிறதா?” என்று கலைஞர் அறிக்கை விட்டிருக்கிறார். இந்த வருடம் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவருக்கும் தெரியும். பிறகு எதற்கு இந்த டகால்ட்டி?

அவர் அறிக்கையில் ஒரு பாலிடிக்ஸ் இருக்கிறது.  அறிக்கையை வேறு மாதிரி புரிந்து கொண்டால் “காங்கிரஸ்காரன் கூட சண்டை போடப் போகிறாயா? இல்லையா?” என்று அம்மையாரைக் கேட்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ்க்காரன் தானே கவர்மெண்ட் நடத்துகிறான். அவனிடம் சண்டை போட்டால் தண்ணீர் வாங்குகிறோமோ இல்லையோ, காங்கிரஸூக்கும் அதிமுகவுக்கும் விரிசல் பெரிதாக வாய்ப்பிருக்கிறது. அதுதானே அவருக்கும் நமக்கும் தேவை.

கர்நாடகக்காரனிடம் மட்டும் தண்ணீர் இருக்கிறதா? அவர்களும் மைசூரில் மழை இல்லை, பெங்களூரில் மழை குறைவு என்றெல்லாம் புலம்புகிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் கே.ஆர்.எஸ் அணை, கபினி போன்ற அணைகளில் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறதுதான். ஆனால் தமிழ்நாட்டுக்கு கொடுக்குமளவிற்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. இன்றைய நிலவரத்தில் அணைகளுக்கான நீர் வரத்து சுத்தமாக இல்லையாம். தனக்கு மிஞ்சினாலும் கூட தானமும் தர்மமும் செய்வதற்கு கர்நாடக அரசு யோசிக்கும். இப்போதைய நிலைமையைப் பார்த்தால் அவர்களுக்கே லாட்டரிதான். அப்புறம் எப்படி தமிழகத்திற்கு தருவான்?

‘காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது இந்த அரசின் சாதனை’ என்று தமிழக அரசு கொடுத்த விளம்பரங்களை பார்த்த போது கர்நாடக அணைகளை பெயர்த்தெடுத்து வந்து ஓகேனக்கல்லில் ஒன்றும், தஞ்சாவூர் ஒன்றிலுமாக நட்டுவிட்டார்கள் போலிருக்கிறதுதான் என்றுதான் தினத்தந்தியும், காபி டம்ளருமாக காலையைத் துவங்கும் நாம் எல்லாம் நினைத்திருப்போம். ஆனால் அப்படியெல்லாம் எந்த மாயாஜாலமும் நடந்துவிடவில்லை போலிருக்கிறது. இன்னமும் ‘ஐயா சாரே! 4 டி.எம்.சி நீலு கொடிதான்’. இப்படி தர்மம் கேட்பது அவமானக் குறைவுதான். நம் முதலமைச்சருக்கு இரும்புப் பெண்மணி என்ற பெயர் அகில இந்திய அளவில் இருப்பதால் சற்று விறைப்பாக ‘தண்ணீர் தர முடியுமா? இல்லை கோர்ட்டுக்கு போகட்டுமா?’ என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த மிரட்டல் எல்லாம் கர்நாடகக்காரனுக்கு ஜூஜூபி மேட்டர். ஜெயம் படத்தில் வரும் சதா போல கண்ணை மூடிக் கொண்டு ‘போஓஓஓஓ’ என்று சொல்லிவிடுவான்.

கர்நாடகத்தையும், ஆந்திராவையும், காவிரியையும் பொன்னியின் செல்வியும், ஏழுதமிழறிஞரும் பார்த்துக் கொள்வார்கள்- ஏழு தமிழ் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. வாழ்த்துவதுதான் வாழ்த்துகிறோம்- சென்னைத் தமிழ், கோவைத் தமிழ், நெல்லைத் தமிழையெல்லாம் ஒவ்வொரு தமிழாகக் கணக்கு வைத்து குத்துமதிப்பாக ஏழுதமிழ் என்று சொல்லிவிட்டேன். என்னை மிஞ்ச வேண்டும் என்று விரும்பினால் பிராமி தமிழ், கல்வெட்டுத் தமிழையெல்லாம் கணக்கில் எடுத்து பதினாறுதமிழறிஞர் என்றோ அல்லது வேறு ஏதேனுமோ சொல்லி அந்தப் பொற்கிழியை பெற்றுக் கொள்ளுங்கள். 

இந்த விவகாரங்களை அவர்கள் இரண்டு பேரும் பார்த்துக் கொண்டால் நாம் என்ன செய்வது? நமக்கு பேச வரலாறுகளும் சங்கதிகளுமா இல்லை? சினேகா மாசமா இருக்காங்களா என்பதில் ஆரம்பித்து பிரியங்கா சோப்ராவுடைய அப்பாவின் ஆன்மாவுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி வரைக்கும் ஏகப்பட்ட ஐட்டங்கள் பாக்கியிருக்கிறது.

இதையெல்லாம் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பொங்கி பொங்கல் வைக்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். இதுதான் ரியாலிட்டி. நமக்கு நேரடியாக பாதிப்பு வராத வரைக்கும் எந்தச் செய்தியும் நமக்கும் முக்கியமானதில்லை என்பதுதானே நிதர்சனம்? நேற்று ஃபேஸ்புக்கில் அசோக்குமார் என்ற நண்பர் ஒரு ஸ்டேட்டஸ் எழுதியிருந்தார். “எல்லாத்துக்கும் மோடி மேல கவலை. எனக்கு இன்னைக்கு மூடி சுத்த கூடாதேன்னு கவலை..” உடனடியாக சிரிப்பு வந்துவிட்டாலும், ரொம்ப நேரத்திற்கு இதையே யோசித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. சிம்பிளான ஸ்டேட்மெண்ட்தான். ஆனால் இந்த தேசத்தின் மொத்த பிரச்சினைகளையும் திறக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் பிராந்தி பாட்டிலின் மூடிக்குள் புதைத்துவிடுகிறான் என்பது எவ்வளவு பெரிய சோக நகைச்சுவை? ‘அவனவன் பிரச்சினைதான் அவனவனுக்கு முக்கியம்’. அதுதான் பாஸிபிளும் கூட. 

பாருங்கள், ஐந்தாறு மாதம் இப்படியே போனால் ‘காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலை’ என்று தினத்தந்தியில் செய்தி வரும். ‘நீதான் காரணம்’ என்று கட்சிக் காரர்கள் ஆளாளுக்கு இன்னொருத்தனை நோக்கி கை நீட்டுவார்கள். ஒருத்தன் கஞ்சித்தொட்டி திறப்பான். இன்னொருத்தன் பிரியாணி பொட்டலம் கொடுப்பான். அவ்வளவுதான். ஆங்..சொல்ல மறந்துவிட்டேன் - இன்னொரு நடிகை மாசமாவாள்.