Jun 9, 2013

பயமா?

ஏன்  “நிசப்தத்தில்” கமெண்ட்களை அனுமதிப்பதில்லை? அத்தனை பயமா? கருத்துக்களை எதிர்கொள்வதற்கு தைரியம் இல்லை என்றால் எதற்காக பொதுவெளியில் எழுதறீங்க? கமெண்ட்களை அனுமதிக்காத பட்சத்தில் உங்களுக்கு வரும் விமர்சனக் கடிதங்களையாவது வெளியிட வேண்டும். அதையும் செய்வதில்லை. நீங்கள் சொல்வதை மட்டும் நாங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் ஆனால் நாங்கள் சொல்வதை கேட்கக் கூடாது. அதுதானே உங்கள் எண்ணம்?
                                                                 *

வணக்கம்.

உங்களைப் போல ‘குண்டக்க மண்டக்க’ யோசிக்க வாய்ப்பிருக்கிறது என்று இதுவரைக்கும் நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. சத்தியமாக! 

உண்மையில் கருத்துக்களை எதிர்கொள்வதற்கான பயமோ அல்லது நான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற சர்வாதிகார மனநிலையோ இல்லை. 

இந்தத் தளத்தை தினமும் முந்நூறு பேர்வரைக்கும் வாசித்துக் கொண்டிருந்த வரையில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் தினமும் எழுதத் துவங்கிய சமயங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடத் துவங்கிய போது சில ‘சிக்கல்கள்’ உருவாகின. ஐந்தாறு கமெண்ட்கள் வந்தால் அதில் ஒன்று நிச்சயம் நிராகரிக்க வேண்டிய வகையில் இருந்தது அல்லது கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தது. பதில் சொல்வது கூட பெரிய காரியம் இல்லை. ஆனால் யானையைப் பற்றி எழுதிய கட்டுரையில் ‘நீங்கள் பூனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்பது குழப்பமாக இருக்கும். அல்லது ‘அங்கு பாருங்கள் நிலா’ என்று எழுதினால்  ‘நீ ஏன் சூரியனைப் பற்றி எழுதவில்லை?’ என்றால் என்ன சொல்ல முடியும்?.

இத்தகைய கேள்விகளின் நோக்கம் என்ன என்பதையும் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. உண்மையிலேயே புரியாமல் கேட்டிருக்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்தோடு கேட்டிருக்கிறார்களா என்றெல்லாம் மண்டை காய வேண்டியிருந்தது. அதற்காக நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. 

இவை போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து வசவுகள், ஆபாச சொல்லாடல்கள் etc.,

எனக்கு blog எழுதுவதற்கு யோசிக்க கிடைக்கும் நேரம் என்பது வீட்டிற்கும்-அலுவலகத்துக்குமான பைக் ஓட்டும் நேரம்தான். இந்தச் சமயத்தில் இன்றைக்கு எதை எழுத வேண்டும் என மண்டைக்குள் ‘பல்ப்’ எரிந்துவிடும். எதையெல்லாம் எழுதுவது, எதை விடுவது, எந்த sequence இல் எழுதுவது போன்ற அடிப்படையான விஷயங்களையும், கட்டுரையில் எதை சேர்த்தால் சுவாரசியம் கூடும் போன்றவற்றையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிடுவேன். பிறகு வீட்டில் இரவு நேரத்தில் பன்னிரெண்டு மணிக்கு ஆரம்பித்து அதிகாலை இரண்டு மணிக்குள் எழுதி முடித்துவிடுவேன். இதுதான் தற்சமயத்தில் இருக்கும் ‘ரைட்டிங் ஸ்டைல்’.

நிலைமை இப்படியிருக்க, வரக்கூடிய சம்பந்தமில்லாத கேள்விகளுக்கும், ஆபாத வசவுகளுக்கும் யோசிப்பது என்பது தேவையில்லாத நேர விரயம்தான் என்று நினைத்தேன். இத்தகைய வசவுகளை எதிர்கொள்வதற்கு பதிலாக ‘just ignore it' என்று யாராவது அறிவுரை சொன்னால் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை சார். நாம் ஒன்றும் துறவிகள் இல்லையே! ஏதாவதொரு விதத்தில் பாதிக்கப்பட்டு குறைந்தபட்சம் பத்து நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரைக்குமாவது மனதிற்குள் உழன்று கொண்டுதான் இருக்கும்.

இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க இன்னொரு உபாயமும் இருக்கிறது. யாரைப் பற்றியும் எழுதக் கூடாது. முடிந்தவரைக்கும் அதைத்தான் பின்பற்றுகிறேன். ஆனால் சில சமயங்களில் கை அரிப்பெடுத்து எழுதித் தொலைத்துவிடுகிறேன். அப்புறம் எப்படி வசவுகள் வராமல் இருக்கும்?

இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கத்தான் பின்னூட்டங்களை முழுமையாக அனுமதிப்பதில்லை. 

மற்றபடி, நமது எழுத்து ஏதாவதொரு விதத்தில் உந்தினால் நிச்சயம் ஓரிரு வரியாவது மின்னஞ்சல் அனுப்பிவிடுவார்கள் அல்லது தொலைபேசியில் அழைத்துவிடுவார்கள் என்று நம்பினேன். அப்படி அனுப்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது பதிலையும் அனுப்பிவிடுவது வழக்கமாகியிருக்கிறது. இவற்றை ஏன் வெளியிடுவதில்லை என்றால் “நன்றாக இருக்கிறது, சுவாரசியமாக எழுதுகிறீர்கள்” போன்ற வாழ்த்துக்களுடனான கடிதங்களை ‘எனக்கு நானே’ திட்டத்தில் வெளியிடுவது சுய சொறிதல் ஆகிவிடும். அல்லவா? அதனால் வெளியிடுவதில் சங்கடம் இருக்கிறது.

உங்களின் கேள்விக்கு பதில்- இது போன்ற சம்பிரதாயமான வாழ்த்துக் கடிதங்களைத் தவிர்த்துவிட்டு மற்றவற்றை வாரம் ஒரு முறை பிரசுரம் செய்துவிடுகிறேன். 

உங்கள் வரிகளை மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். ‘ஷாக்கிங்’காக இருக்கிறது.

நன்றி.

மணிகண்டன்.