Jun 24, 2013

இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

அன்புள்ள மணிகண்டன்,

என்னோடு பணி புரிபவர்கள் உங்களது வலைப்பதிவை அறிமுகப்படுத்தினார்கள். இப்பொழுது தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் தினமும் எழுதுவது ஆச்சரியமளிக்கிறது, பெரும்பாலான பதிவுகள் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. உங்களின் சமீபத்திய பதிவு ஒன்றில், வலைப்பதிவுகளில் மட்டுமே கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்றும் மற்ற சமூக ஊடகங்கள் சிந்தனையை dilute செய்துவிடுகின்றன என்றும் எழுதியிருந்ததை வாசித்தேன். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை விரும்புகிறேன் ஆனால் என் எண்ணங்களை என்னால் தொகுக்க முடியாது அல்லது எனக்கு க்ரியேட்டிவிட்டி குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்னைப் போன்றவர்கள் ட்விட்டரை வரமாக பார்க்கிறோம் (ஃபேஸ்புக் பற்றி எனக்கு கருத்து இல்லை). என்னால் கட்டுரை எழுத முடியாது ஆனால் எனது பார்வை, கோபம், ஆச்சரியம் அல்லது Fun ஆகியவற்றை சுருக்கப்பட்ட வடிவில் ட்விட்டரில் வெளிப்படுத்திவிடுகிறேன். ஒருவேளை ட்விட்டரில் தொடர்ந்து எழுதுவது என்னை வலைப்பதிவு பக்கமாக இழுத்து வரலாம். அதனால் ட்விட்டரை நான் எனது கருத்துக்களை வெளியிடும் ஊடகமாக ட்விட்டரை பார்க்கிறேன். நிறைய எழுத முடியாதவர்களுக்கு இது மாற்று வழி. இங்கு நான் ரி-ட்வீட் செய்பவர்களைப் பற்றி பேசவில்லை.

அன்புடன்,
கைலாஷ்.

                                                                         *****

அன்புள்ள கைலாஷ், 

வணக்கம்.

நீங்கள் ட்விட்டரை இன்னொரு கோணத்தில் பார்க்கிறீர்கள். “எழுத முடியாதவர்களும்/ தெரியாதவர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமல்லவா? அதற்கான ஊடகமாகத்தானே இது இருக்கிறது” என்கிறீர்கள். ஏற்றுக் கொள்ளலாம். இப்படி லட்சக்கணக்கானோர்(அல்லது கோடிக்கணக்கானோர்) நினைப்பதால்தான் ட்விட்டர் வெற்றிகரமான தளமாகவும் இயங்குகிறது.

இந்த இடத்தில் மூன்று விஷயங்களை பேசத் தோன்றுகிறது- போரடிக்காமல் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

1) நான் எழுதியிருந்த கட்டுரை நீங்கள் குறிப்பிடும் எழுத முடியாதவர்கள்/தெரியாதவர்களை ‘டார்கெட்’ செய்யவில்லை. எழுதத் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்தவர்கள் தங்களது எண்ணங்களை நூற்றி சொச்சம் எழுத்துக்களில் Dilute செய்யாமல் கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ மாற்றுவதற்கான சரியான தளமாக வலைப்பதிவு இருக்கும் என நினைக்கிறேன்- அதுதான் சொல்ல வந்தது.

2) எழுத்தைப் பொறுத்த வரையிலும் கடும் உழைப்புத் தேவை. சும்மா சோம்பேறித்தனமாக இருந்தால் அல்லது தயங்கிக் கொண்டிருந்தால் காலம் நமக்கு டாட்டா சொல்லிவிட்டு நகர்ந்துவிடும். இன்னொரு விஷயமும் இருக்கிறது-  ‘நான் எழுதுவதெல்லாம் டாப்பாகவே இருக்கும்’ என்ற நம்பிக்கை நம்மை குப்புற கவிழ்த்துவிடும். நல்லதோ கெட்டதோ எழுதி விட வேண்டும். தயங்கவே கூடாது. இதுதான் என் பாலிஸி. இப்படி பக்கம் பக்கமாக எழுதி அதை சேகரித்தும் வைத்துக் கொள்ள வலைப்பதிவு நல்ல ஊடகம் என நம்புகிறேன். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு எழுதிய சில கட்டுரைகளைப் படித்தால் எனக்கு இப்பொழுது வெட்கமாக இருக்கிறது. இது ஒரு தொடர்ச்சிதான். இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கக் கூடும். காலப்போக்கில் நாம் எழுதியதில் நல்லது எல்லாம் தப்பித்துவிடும் கெட்டதெல்லாம் காணாமல் போய்விடும். போனால் போகட்டுமே! நல்லதாக நாற்பது பக்கம் தேறினால் போதும்- வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து. 

3) நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல ட்விட்டரில் அதிகம் எழுதுவதன் காரணமாக பின்னால் வரும் காலத்தில் கட்டுரைகள் எழுத முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் வார்த்தைகளிலேயே சொன்னால் “ஒருவேளை” சாத்தியம் ஆகலாம். ஆனால் என்னால் அப்படி உருமாறியிருக்க முடியாது என நினைக்கிறேன். எழுத்து என்பது ஒரு பழக்கம்தானே? அது ஒரு பயிற்சி. கொஞ்சம் கொஞ்சமாகவே நகர முடியக் கூடிய ஒரு பாதை. இப்பொழுது நாம் யோசிப்பதையெல்லாம் துண்டு துண்டாக்கி பழகிவிட்டு சிறிது காலம் கழித்து ஒரு துண்டத்தை விவரித்து கட்டுரையாக்குவது அவ்வளவு எளிதானதாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி எளிதாக இருந்து, புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம். அப்பொழுது எனது கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

தங்களின் கடிதத்திற்கு நன்றி. உங்களுக்கு பதில் திருப்தியில்லை எனில் தெரியப்படுத்துங்கள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

                                                                  +++++
                                                                     (2)                                                   

மணிகண்டன்,

இன்று தான் உங்கள் நிசப்தம் தளம் பற்றி அறிந்தேன், யாரோ ஒருவர் முகநூலில் ஷேர் செய்ததன் மூலம். அருமையானதொரு வாசிப்பு அனுபவத்தை பெற முடிகிறது உங்கள் எளிய நடையில். தினமும் எப்படி ஒருவரால்  இப்படி எழுதமுடியும் என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 

அருணா.
                                                                     ******

அன்புள்ள அருணா,

வணக்கம்.

தினமும் எப்படி எழுத முடிகிறது என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. அது பழக்கத்தில் வந்தது, வரம் கிடைத்திருக்கிறது, பைத்தியங்களால் மட்டுமே சாத்தியம்- இப்படி எதையாவது சொல்லிக் கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் எழுதுவதை அன்றாட வாடிக்கையாக்கிக் கொண்டேன். எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே அதையும் வாடிக்கையாக்கிக் கொண்டேன். இந்த இரண்டும் பல பிரச்சினைகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வழி செய்கிறது என்பதால் இரண்டையுமே வெகுவாக விரும்புகிறேன். உங்களை வதைக்கும் போது சொல்லுங்கள். அப்பொழுதும் எழுதுவேன். ஆனால் வெளியிடாமல் வைத்துக் கொள்வேன்.

தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி.

தொடர்ந்து வாசியுங்கள். 

அன்புடன்,
மணிகண்டன்.