இப்பொழுதெல்லாம் யார் நினைத்தாலும் புரட்சியாளர்கள் ஆகிவிட முடிகிறது. ஒரு லேப்டாப்பும், இண்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும். இதுபோக ஃபேஸ்புக்கில் கணக்கு இருந்தால் காரியம் இன்னமும் சுலபம் ஆகிவிடுகிறது. சமூக ஆர்வலர், கவிஞர், கம்யூனிஸ்ட், கட்சிக்காரன் என்று எந்த வடிவமும் எடுத்துவிடலாம். தேவைப்படும் போது வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம்.
ச்சீ. சம்பந்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டேன். உண்மையான புரட்சிக்காரன் பற்றித்தான் இன்றைக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். நட்சத்திரப் பலனில் விரலில் சூலம் என்றிருந்தது. பலித்துவிடும் போலிருக்கிறது. இப்படி டைப் செய்து தொலைத்துவிட்டேன். புர்ச்ச்சியாளர்கள் மன்னிக்கக் கடவது.
உண்மையான புரட்சிக்காரன் என்று சொன்னேன் அல்லவா? யார் உண்மையான புரட்சிக்காரனாக இருக்க முடியும் என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் என் கெட்ட நேரம் காந்தி கண்ணதாசன்தான் ஞாபகத்துக்கு வருகிறார். தமிழில் சே குவேராவின் படம், அவருடைய எழுத்து என சகலத்துக்கும் காந்தி கண்ணதாசன் காப்பிரைட் வாங்கி வைத்திருக்கிறாராம். அதனால் அவர் அனுமதியில்லாமல் இதையெல்லாம் பயன்படுத்தினால் “கேஸ் போட்டுடுவேன், பீ கேர்புல்’ என வடிவேல் கணக்காக முறைக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கண்ணதாசனின் ஆவி அவரை மன்னிக்குமாக! “ஆகட்டும் சார், கொஞ்சம் ஒதுங்குங்க” என்று காந்தியாரை ஒதுக்கிவிட்டு இன்னும் ஒரு நிமிடம் யோசித்தால் புரட்சிக்காரனாக சே குவேரா வருகிறார்.
சே எதனால் புரட்சியாளராக மாறினார் என்று கேட்டால் ‘மோட்டார் சைக்கிள் டைரி’யை சுட்டிக்காட்டுவார்கள். 1952 ஆம் ஆண்டு தனது நண்பன் அல்பர்ட்டோவுடன் தென்னமெரிக்கா முழுவதும் சுற்றியிருக்கிறார் எர்னெஸ்டோ குவேரா. பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் அது. தேசங்களைச் சுற்றுவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட வாகனம் ஒரு சுமாரான பைக். அந்தச் சமயத்தில் சேவுக்கு இருபத்து மூன்று வயது; அல்பர்ட்டோவுக்கு முப்பது முடிகிறது. இந்தப் பயணத்தின் போது எர்னெஸ்டோ தான் பார்த்த விஷயங்கள், எதிர் கொண்ட மனிதர்கள், தனது மனதில் உண்டான சலனங்கள் என சகலத்தையும் குறிப்புகளாக எழுதி வைக்கிறார். இந்தக் குறிப்புகள்தான் பிற்காலத்தில் ‘தி மோட்டார் சைக்கிள் டைரி’ என்று புத்தகமாக வந்திருக்கிறது.
அதே புத்தகத்தை படமாகவும் எடுத்துவிட்டார்கள்- ஸ்பானிஷ் மொழியில். இந்தப் புத்தகத்தை இதுவரை நான் வாசித்ததில்லை. ஆனால் அந்தப் படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. நல்ல படம். ‘துப்பாக்கியில்லாமல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது’ என்று எர்னெஸ்டோ சொல்லும் ஒரு வாக்கியத்தைத் தவிர புரட்சி பற்றிய எந்தக் குறிப்புகளும் படத்தில் கிடையாது.
சினிமாவைப் பொறுத்தவரையில் நல்லவர்கள் அடிவாங்கக் கூடாது, பார்வையாளர்களை அழச் செய்யக் கூடாது, நாயகனும்- நாயகியும் லவ் ஃபெயிலியரால் பிரிந்துவிடக் கூடாது போன்ற சில விஷயங்களை எதிர்பார்த்துத் தொலைத்துவிடுகிறேன். ‘தில்’படத்தில் விக்ரம் அடிவாங்கிய போது கண்ணீர் கசிந்த எமோஷனல் க்ரூப்பைச் சார்ந்தவன் நான். அடுத்த பாட்டிலேயே ஹீரோ எழுந்து நடனமாடும் இத்தகைய மசாலாப்படங்களை பார்க்கும் போது கூட அழுதிருக்கிறேன் என்றால் சோகப்படங்களை நினைத்துப் பாருங்கள். தியேட்டரில் தெரியாத்தனமாக யாராவது வேகமாக நடந்தால் பெருக்கெடுத்து ஓடும் எனது கண்ணீரில் வழுக்கி விட வேண்டியிருக்கும். நல்லவேளையாக, மோட்டார் சைக்கிள் டைரி அப்படியான அழுவாச்சி காவியம் இல்லை.
இரண்டு நண்பர்கள் ஜாலியாக பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு நாடாக பயணிக்கிறார்கள். மலைகள், பனிப்பிரதேசங்கள் என வெவ்வேறு நிலங்களை படம் முழுவதும் காட்டுகிறார்கள். சாலையோர வாய்க்காலில் பைக்கோடு விழும் போதும் சரி, மாடு மீது மோதி தெறிக்கும் போது சரி ஒருவித நகைச்சுவையோடு படம் பார்க்க முடிந்தது. சீலேயில் காசில்லாமல் சிரமப்படும் இரண்டு கம்யூனிஸ்ட்களைச் சந்திக்கும் போதும், பெருவில் தொழுநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் போதும் எந்த சினிமாத்தனமும், ‘நெஞ்சுருக்கி’த்தனமும் இல்லாமல் பார்த்தாலேயே இந்தப்படம் மிகப் பிடித்துப் போனது.
எர்னெஸ்டோ குவேராவும், அல்பெர்ட்டோவும் தங்களது பயணத்தில் பெண்களை பிக்கப் செய்வதும், படம் முழுவதும் நாயகர்களின் பாவனைகளும் அட்டகாசமாக இருக்கிறது. இத்தனை ஜாலியான காட்சிகளுக்கிடையேயும் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் புரட்சியாளன் ஆவதற்கான காரணங்களை மிகத் தெளிவாகக் காட்டிவிடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்தது.
போதும். ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்று கூகிளில் அடித்தால் தமிழிலேயே கூட ஏகப்பட்ட பேர் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். நிறுத்துவதற்கு முன்பாக இந்தப்படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் சொல்லிவிட வேண்டும்.
அல்பர்ட்டோவும், எர்னெஸ்டோவும் பெருவுக்கு வரும் போது கிட்டத்தட்ட கிழிந்த துணிகளைப் போல வந்து சேர்வார்கள். இடையில் பைக் இனி வேலைக்கு ஆகாது என்பதால் நடந்தே பயணத்தை தொடர்வார்கள். இந்த அலைச்சலும், பசியும் அவர்களை ஒரு வழியாக்கியிருக்கும். அப்பொழுது டாக்டர் ஹூகோ அவர்களுக்கு உணவு, உடை தங்க இடம் என அத்தனையும் கொடுத்து பெருவில் இருக்கும் தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை மையத்திற்கு செல்வதற்கான டிக்கெட்டையும் இவர்களுக்குத் தருவார். இந்தச் சமயத்தில் தான் எழுதிய நாவல் ஒன்றின் கையெழுத்து பிரதியைக் கொடுத்து ‘வாசித்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்பார். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் இருவரும் நாவல் பற்றி எந்த பதிலும் சொல்லியிருக்க மாட்டார்கள். தொழுநோயாளிகள் சிகிச்சை மையத்திற்கு கிளம்பும் போது கப்பல் ஏறும் சமயத்தில் ஹூகோ, “நீங்கள் நாவல் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?” என்பார். அல்பர்ட்டோ முந்திக் கொண்டு “தூளாக இருந்தது” என்பார்.
எர்னெஸ்டோவிடமும் பதிலை எதிர்பார்த்து மருத்துவர் நிற்கும் போது “நல்ல முயற்சிதான். ஆனால் நிறைய க்ளிஷே இருக்கிறது, கதை சொன்ன முறையும் சரியில்லை” என்பார். ஹூகோ ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டு பிறகு நார்மலாகிவிடுவார். “இவ்வளவு நேர்மையாக யாரும் விமர்சனம் செய்ததேயில்லை” என்று சொல்லிவிட்டு அல்பர்ட்டோவின் முகத்தைப் பார்த்து “ஒருவர் கூட” என அழுத்தமாகச் சொல்வார். அப்பொழுது அல்பர்ட்டோ தலையைக் குனிந்து கொள்வார். படம் முடிந்த பிறகும் கூட இந்தக் காட்சி மட்டும் ஏனோ தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.
இப்படி யாரையாவது நம் ஊரில் விமர்சனம் செய்ய முடியுமா என்று தோன்றியது. அப்படியே விமர்சனம் செய்வதாக இருந்தாலும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் வெறியெடுத்து திரிபவர்கள்தானே அதிகம்? ஒருவன் மீது பொறாமைப் பட்டு எதையாவது எடுத்து வீசினால் அவனை காலி செய்துவிட முடியுமா என்ன? உண்மையில் எழுத்தைப் பொறுத்தவரையிலும், எழுதுபவனாகப் பார்த்து தன்னை காலி செய்து கொண்டால்தான் முடியுமே தவிர, மற்றபடி யாரையும் யாராலும் காலியாக்க முடியாது. அவனவன் இடம் அவனவனுக்கு உண்டு- எப்பவும்!