Jun 25, 2013

மனுஷ்ய புத்திரன் எழுதியதெல்லாம் கவிதை இல்லையா?

இலங்கையில் வாழும் கவிஞர் றியாஸ் குரானா ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். தமிழின் முக்கியமான கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் ஒரு தொகுப்பாக கொண்டு வரப் போகிறாராம். எந்தப் பதிப்பகம் என்று தெரியவில்லை. ஆனால் இது லேசுப்பட்ட காரியமில்லை. பட்டியலில் ஒரு கவிஞரைச் சேர்த்தால் “அந்த ஆளு எல்லாம் கவிஞனாய்யா?” என்று கேட்பதற்கு பத்துப் பேர் இருப்பார்கள். யாரையாவது சேர்க்காமல் விட்டுவிட்டால் “என்னை ஏன் சேர்க்கவில்லை” என்று விடுபட்ட கவிஞரே வந்து கேட்பார். எப்படி இருந்தாலும் றியாஸூக்கு இடி விழும். இதையெல்லாம் றியாஸ் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

ஆனால் அவர் செய்து கொண்டிருப்பது முக்கியமான விஷயம். தமிழில் இப்படியான தொகுப்பு நூல்கள் மிகக் குறைவு. இதற்கு முன்பாக ராஜமார்த்தாண்டன் தொகுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை’(தமிழினி பதிப்பகம்) பரவலான கவனம் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் ‘பரவலான கவனம் பெற்றது’ என்பதற்கு மிகத் தெளிவான பொருள் உண்டு. தனியாக விளக்க வேண்டியதில்லை. ராஜமார்த்தாண்டனின் தொகுப்பில் பெரும்பாலும் சென்ற தலைமுறைக் கவிஞர்கள்தான் இடம் பிடித்திருந்தார்கள். தொண்ணூறு அல்லது இரண்டாயிரத்துக்கு பிறகு எழுதத் துவங்கிய கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைச் சேர்த்து எந்தத் தொகுப்பும் வந்ததாக ஞாபகம் இல்லை. ஆகவே றியாஸ் குரானாவுக்கு வாழ்த்துகள்.

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக தனது உத்தேசமான கவிஞர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார். நான் தேடிய பெயர் அதில் இல்லை. தேடியது மனுஷ்ய புத்திரனை. அது மிஸ்ஸிங். இது றியாஸின் பட்டியல் - பட்டியலில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பது அவரது தனிப்பட்ட முடிவுதான். அது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் யாரோ ஒரு புண்ணியவான் ‘மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் வரமாட்டாரா?’ என்று கேட்டதற்கு றியாஸ் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். மாறாக, ‘ம.பு இந்தப்பட்டியலில் வருவார். எனது தொகுப்பில் வரவேண்டுமென்றால் அவர் கவிதை எழுதிய பிறகுதான் சாத்தியம்’. இதுதான் சுள்ளென்றிருந்தது.

என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு பொறுப்பில்லாத பதில். மனுஷ்ய புத்திரனை பிற எந்தக் காரணங்களை முன் வைத்தும் ஒதுக்கி வைக்க முடியக் கூடிய ஒரு மனிதனால் நிச்சயம் அவரது கவிதைகளை எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் நிராகரிக்க முடியாது என நம்புகிறேன். மனுஷ்ய புத்திரன் தமிழ்க் கவிதையின் வடிவத்தில் செய்திருக்கும் பரிசோதனைகளுக்காகவும், இறுகிக் கிடந்த கவிதை மொழியை நெகிழச் செய்ததற்காகவுமே அவருக்கு மிக முக்கியமான இடமுண்டு. 

றியாஸ் நிராகரிக்க விரும்பினால் அதை செய்துவிட்டு போகலாம். ஆனால் போகிற போக்கில் ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பதெல்லாம் டூ மச்.

தமிழின் முக்கியமான கவிதைகளின் பட்டியலை கறாராக தயாரித்தால் அதில் கணிசமான எண்ணிக்கையில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் இருக்கும் என நினைக்கிறேன். இன்றைய தேதிக்கு அவரது கவிதைகளை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்பொழுதும் அவரது பல கவிதைகளை உடனடியாக ஞாபகத்திற்கு கொண்டு வர முடிகிறது. ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’,‘இறந்தவனின் ஆடைகள்’,‘அரசி’, ‘கால்களின் ஆல்பம்’ போன்ற கவிதைகளை அட்சரம் பிசகாமல் சொல்ல முடியாது என்றாலும் இவற்றையெல்லாம் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. 

இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்ட முடியும். தலைப்புகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் ‘சிவப்பு நிற பாவாடை வேண்டும் என்பதற்காக தனது தொடையைக் கிழித்து ரத்தத்தின் நிறத்தைக் காட்டும் ஊமைச் சிறுமி’, ‘பெரிய அவமானத்திற்கு பிறகு நடந்து கொள்ளும் விதம்’, ‘வரவே வராத ஒருவரிடம் நீ எப்போது வருவாய் என தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்’ போன்ற கவிதைகளையெல்லாம் எப்படி கவிதைகள் இல்லை எனச் சொல்ல முடிகிறது? ஒருவேளை வாசிக்காமலேயே இருந்தால் அப்படிச் சொல்லலாம்.

மனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை நிராகரித்துவிட்டு தமிழ்க் கவிதையின் முக்கியமான தொகுப்புகளை உங்களால் வரிசைப்படுத்த முடியுமா?  ‘முடியும்’ என்று தயவு செய்து ஜோக் அடித்துவிடாதீர்கள்.

மனுஷ்ய புத்திரன் கவிதைகளே எழுதவில்லை என்றால் பிறகு கவிதை என்பதற்கான உங்களது வரையறையைச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படி வரையறை செய்தால் உங்கள் பட்டியலில் இருக்கும் கவிஞர்கள்- நான் உட்பட- அத்தனை பேரும் இந்த வரையறைக்குள்தான் கவிதை எழுதுகிறார்களா என்ற கேள்வி வரும். கடைசியில் இதெல்லாம் சண்டையில் போய்த்தான் முடிந்து தொலையும்.

ந.பிச்சமூர்த்தியிலிருந்து கவிஞர்களின் பெயர்களை வரிசையாக எழுதி பார்த்தால் என்ன டகால்ட்டி வேலை செய்தாலும் என்னால் மனுஷ்யபுத்திரனின் பெயரை தவிர்க்க முடிவதில்லை. அதுதான் உண்மை. நவீன கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் உருவாக்கிய இசைத் தன்மை, கவிதைகளில் மெல்லிழையாக விரவியிருக்கும் லயம், சீராக அடுக்கிய சொல்முறை என்பனவற்றையெல்லாம் முக்கியமான பங்களிப்பாக எடுத்துக் கொள்ளமுடியாதா என்ன? 

ஒரு பட்டியல் தயாரிக்கும் போது சில விடுபடல்கள் இருப்பதும் சில தேவையற்ற சேர்க்கைகள் இருப்பதும் சாதாரணமான விஷயம். ஆனால் முக்கியமான கவிஞர்களை நிராகரித்துவிட்டு ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பது முக்கியமான பணியைச் செய்யும் தொகுப்பாளருக்கு அழகு இல்லை. 

ஒரு மனிதனை தனிப்பட்ட காரணங்களுக்காக பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பை முழுமையாக நிராகரிப்பது எந்த விதத்திலும் நல்லதில்லை.

சரி இதையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்?

காரணம் மிக எளிமையானது. அறச்சீற்றத்தைக் காட்டுவதற்காகவோ அல்லது தார்மீக அடிப்படையிலோ இதை எழுதிக் கொண்டிருக்கவில்லை. தமிழ் கவிதையின் மிக எளிமையான வாசகனாக எழுதியிருக்கிறேன். ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள். கவிதையை மட்டுமே முன்னிறுத்தி செய்யுங்கள். அவ்வளவுதான்.

மீண்டும் சொல்கிறேன் - மனுஷ்ய புத்திரனை உங்களது பட்டியலில் நிராகரிக்க உங்களுக்கு அத்தனை சுதந்திரமும் இருக்கிறது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம் - அது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் கவிதையே எழுதவில்லை என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அப்படிச் சொன்னால் கவிதையை பின்தொடரும் சாதாரண வாசகனாக ஏதாவதொரு மூலையிலிருந்து கேள்வி எழுப்புவேன். இப்பொழுது கேட்டிருப்பது போலவே.


கால்களின் ஆல்பம்

ஆல்பம் தயாரிக்கிறேன் 
கால்களின் ஆல்பம்

எப்போதும் 
முகங்களுக்கு மட்டும்தான் 
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன் 
எண்சாண் உடலுக்குக் 
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள் 
நடனமாடும் கால்கள் 
பந்துகளையோ 
மனிதர்களையோ 
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள் 
பூஜை செய்யப்படும் கால்கள் 
புணர்ச்சியில் பின்னும் 
பாம்புக் கால்கள்

கறுத்த வெறுத்த சிவந்த 
நிறக் குழப்பத்தில் ஆழ்த்துகிற 
மயிர் மண்டிய வழுவழுப்பான 
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள் 
தத்துகிற பிஞ்சுக் கால்கள் 
உலகளந்த கால்கள் 
அகலிகையை எழுப்பிய கால்கள் 
நீண்ட பயணத்தை நடந்த 
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள் 
மெட்டி மின்னுகிற கால்கள் 
ஆறு விரல்களுள்ள கால்கள் 
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப் 
பெருவிரல் நகம் சிதைந்த 
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற 
(ஒருவர்கூட மற்றவரைப் போல நடப்பதில்லை) 
பாடல்களுக்குத் தாளமிடுகிற 
நீந்துகிற மலையேறுகிற 
புல்வெளிகளில் திரிகிற 
தப்பியோடுகிற 
போருக்குச் செல்கி
(படை வீரர்களின் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற 
சிகரெட்டை நசுக்குகிற 
மயானங்களிலிருந்து திரும்புகிற 
விலங்கு பூட்டப்பட்ட 
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட 
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற 
வரிசையில் நிற்கிற 
தையல் எந்திரத்தில் உதறுகிற 
சுருங்கிய தோலுடைய 
நரம்புகள் புடைத்த 
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிடத் தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும் 
நான் பார்ப்பது கால்கள் 
ஒட்டுவேன் 
என் கால்களின் ஆல்பத்தில் 
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்துவைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல் 
என் போலியோ கால்களை மட்டும்