இன்றைக்கு ‘நிசப்தம்’ தளத்தில் எழுதுவதற்காக வேறு சில விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் முந்தாநாள் பதிவிட்டிருந்த கடிதங்களும் அதற்கான சில பதில்களும் சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறது. ஃபேஸ்புக் பக்கத்தில் ‘இவனாகவே கடிதம் எழுதிக் கொள்கிறான்’ என்கிற ரேஞ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இந்த வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வரப்போகிறதா? அரசியல் மேடையில் இடம் கொடுக்கப் போகிறார்களா அல்லது வெகுஜன ஊடகத்தில்தான் இரண்டு பக்கம் ஒதுக்கப் போகிறார்களா? மேற்சொன்ன மூன்று விஷயங்களுக்கும் எழுத்தைத் தாண்டிய சில அரசியல் தேவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அதற்கு எனக்கு திராணியும் இல்லை ஆர்வமும் இல்லை. ‘ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்னும் நரியின் கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிலைமை இப்படியிருக்க எதற்காக எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக் கொள்ள வேண்டும் அல்லது பில்ட்-அப் செய்து கொள்ள வேண்டும்?
வெளிப்படையாகச் சொன்னால் நிசப்தம் தளத்தை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை exponential ஆகக் கூட்ட வேண்டும் என்று கூட விரும்புவதில்லை. வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது எழுத வேண்டிய ‘ப்ரஷரும்’ அதிகமாகும். அது ஒரு சுமையைத் தூக்கி தலைக்கு மேல் வைப்பது போலத்தான். இயலும் அளவிற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கேற்ப வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடட்டும் என்றுதான் விரும்புகிறேன்.
எதற்காக இந்த சில கடிதங்களை வெளியிட்டேன் என்றால் சென்ற வாரத்தில் வந்திருந்த மின்னஞ்சலில் ‘ஏன் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை? பயமா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விகளுக்காக இனிமேல் வாரம் ஒரு முறை கடிதங்களை வெளியிட்டுவிடலாம் என்று யோசித்திருந்தேன். அதை இந்த வாரம் செய்தேன். அவ்வளவுதான்.
வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாறு பதிவுகள் எழுதுபவனுக்கு குறைந்தபட்சம் நான்கைந்து கடிதங்கள் கூட வராது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்த மாதிரியான ‘புழுதி தூற்றல்’ பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமோ உந்துதலோ இல்லை. ‘விரும்புவதை எழுதிக் கொண்டிருப்போம், விரும்புவர்கள் வாசிக்கட்டும்’ என்ற எளிய பாலிசிதான். ஆனால் அவ்வப்போது சில பத்திகள் சிலரைச் சீண்டிவிடுகிறது. உண்மையில் ‘நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்? எல்லோருக்கும் நல்லவனாகவே இருப்போம்’ என்றுதான் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கை மீறிவிடுகிறது. போகட்டும்.
நாம் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிலர் பொங்கத்தான் செய்வார்கள். அதற்கு பின்ணணியில் அவர்களின் ராஜவிசுவாசமோ அல்லது வேறு என்ன காரணமோ இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அவர்கள் பற்றிய கவலை இல்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகள் பற்றி சம்பந்தமேயில்லாத ஒரு மனிதர் ‘ஒருவேளை இந்தக் கடிதங்களை இவனாகவே எழுதியிருப்பானோ’ என்ற சந்தேகம் அடைந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை என நினைக்கிறேன். இந்த வலைப்பதிவில் எழுதுவதும் கூட அந்த மாதிரியான மனிதர்களுக்குத்தான். அறிவுஜீவிகளுக்கும், சமூகப்போராளிகளுக்குமாக எழுதுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை, என்னிடம் சரக்கும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கும் இதைப் படிக்க வேண்டிய அவசியமுமில்லை என்று நம்புகிறேன்.
இதோ ‘ஸ்கிரீன்ஷாட்களை’ போஸ்ட் செய்தாகிவிட்டது. இந்த மாதிரி ஸ்கிரீன்ஷாட்களை போஸ்ட் செய்வதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் இத்தகைய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அப்படியே அவசியம் வந்தாலும் Ignore செய்துவிட முயற்சிக்கிறேன்.