ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வேலைகளில் இருந்து தப்பிப்பது பெரிய வரம். ஆனால் அந்த வரம் எப்பொழுதும் கை கூடுவதில்லை. படுக்கையைவிட்டு எழுந்ததிலிருந்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். கோழிக்கடைக்குச் சென்றால் பயங்கரக் கூட்டமாக இருக்கிறது. மீன் கடைக்குச் சென்றால் விலை தாறுமாறாக இருக்கிறது. ஆட்டுக்கறி வாங்கி வரட்டுமா? என்றால் ‘உனக்கு ஆட்டுக்கறி வாங்கத் தெரியாது, கிழட்டு ஆட்டைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்கிறார்கள். இப்படி அவமானப்படுத்துவது கூட பரவாயில்லை ‘இதுக்கெல்லாம் தம்பிதான் லாயக்கு’ என்று ஒரு இடி வேறு இடிக்கிறார்கள். ‘அவனையே போகச் சொல்லுங்கள்’ என்றால் அவன் தனது பொறுப்பை நிரூபிக்க குழந்தைகளுக்கு ‘கட்டிங்’ செய்துவிட அழைத்துச் சென்றிருக்கிறானாம்.
இதையெல்லாம் தாண்டி ஆடோ, கோழியோ, மீனோ- எதையாவது எடுத்து வந்து கொடுத்தாலும் விடுவதில்லை. கறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை என்று மூன்று நான்குதடவை கடைக்குச் சென்றாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமையின் ஒரு பொழுது சர்வசாதாரணமாக கரைந்துவிடுகிறது. இனி மதியத்திற்கு மேல் என்ன சதித்திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி, அந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்கிறேன்.
இப்பொழுது கவிதை பற்றி பேசலாம்.
சற்று விலகி நின்று பார்த்தால் கவிதை ஒரு மேலோட்டமான வஸ்து. ஆனால் கவிதையில் deepness உண்டு. இந்த ஆழத்தை ‘bottomlessness' என்று கூடச் சொல்லலாம். ஒரு நல்ல கவிதை நம்மை புதிய தேசங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடும்- இப்படி எழுதிக் கொண்டே போனால் கவிதையைப் பற்றி எழுதும் போது கவிதையை சூப்பர் ஸ்டாராக்குவதற்காக இப்படியெல்லாம் உதார் விடுவது போலத் தோன்றும். ஆனாலும் அதுதான் உண்மை. நல்ல கவிதையை அதன் அர்த்தத்தின் அடிப்படையிலோ அல்லது அது உருவாக்கும் சலனத்தின் அடிப்படையிலோ எல்லைகளுக்குள்ளாக அடக்குவது மிகச் சிரமம்.
இது போன்று கவிதைகளுக்கான நல்ல அம்சங்களை வாய் வலிக்கும் வரை பேசிக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நம் ஆட்களுக்கு கவிதை மேல் எப்பொழுதுமே க்ரேஸ் உண்டு. தமிழைத் தவிர வேறு எந்தக் மொழியாவது இத்தனை கவிஞர்களை பெற்றுப்போட்டு சமாளிக்கமாட்டாமல் திணறிக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. இப்பொழுது கூட, லிங்குசாமியின் கவிதைத் தொகுப்பிற்கு ‘லிங்கூ’ என்று பெயராம். என்ன இருந்தாலும் சினிமாக்காரர் வெளியிடும் புத்தகம் அல்லவா? பல பத்திரிக்கைகளில் இரண்டு பக்கத்திற்கு கவர் செய்திருக்கிறார்கள். இனி இப்படியே ‘ங்கூ’ விகுதியில் ராமசாமி- ரங்கூ, ஷங்கர்-ஷங்கூ என்று வரிசையாக தொகுப்புகளை வெளியிடாமல் இருக்க தமிழ்த்தாய்தான் துணை இருக்க வேண்டும். ஆனால் அவளே பாவம், ஆயிரத்தெட்டு வேலை. இப்பொழுது கூட மதுரைச் சிலைக்கு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டு நிற்கிறாளாம். அவளாவது இதையெல்லாம் தடுப்பதாவது! யாராவது கேசவன் என்று ஒரு ஆள் ‘கேக்கூ’ என்று தொகுப்பு வெளியிடும் வரைக்கு ஓய மாட்டார்கள்.
அது இருக்கட்டும். நாம் கவிதைக்கே போய்விடலாம்.
ஒரு கவிதையை நாம் நல்ல கவிதை என்று சொல்லும் போது வேறு சிலர் அதே கவிதையை ‘டப்பா’ என்று சொல்வதை கவனித்திருக்கலாம். ஒருவர் ‘ஆஹா’ என்று கொண்டாடும் கவிதை நமக்கு ‘மொக்கையாக’ இருப்பதிலும் பெரிய ஆச்சரியம் இல்லை. இது நம்முடைய புரிதலின் அடிப்படையில்தான். ஒன்றாம் வகுப்புக் குழந்தைக்கு எட்டாம் வகுப்பு பாடம் புரியாமல்தான் இருக்கும். அதுவே பத்தாம் வகுப்பு பையனிடம் மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கொடுத்தால் ‘இவ்வளவுதானா?’ என்று ஒதுக்கிவிடுவான் அல்லவா? அதே லாஜிக்தான்.
கவிதையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவரால் மிக விரைவாக கவிதையின் அடுத்தடுத்த நிலைக்கு நகர்ந்து விட முடியும். ‘கவிதை புரிவதில்லை’ என்ற வசனங்கள் இப்போதைய சூழலில் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். நேரடியாக புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான கவிதைகள் நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சென்ற மாத காலச்சுவடு (மே’2013) இதழில் வெளிவந்த கவிதை இது. நீலகண்டன் எழுதிய கவிதை. முதலில் கவிதையை வாசித்துவிடுவோம்.
என் தலைக்குள் தேவையான இடமிருக்கிறது
இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்
சகிப்புத் தன்மையுடையவர் என்றாலும்
என்றாவது ஒருநாள் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்
அதற்குள் நான் எனக்கென
ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்
இந்தப் பூமியில் எனக்கென ஓர் இடமில்லாததை
சிந்தித்துக் கொண்டிருந்தபோது
என் தலைக்குள் தேவையான இடமிருப்பதைக் கண்டேன்
அங்கே தோட்டவசதியுடன் அழகான
புத்தம் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன்
அதில் மனைவிக்குப் பிடித்த மாதிரி சமையலறை
கழிவறையுடன் கூடிய இரட்டைப் படுக்கையறை
மகளுக்கு ஏற்றதுபோல் எல்லா வசதிகளோடும் ஓரறை
அம்மா அப்பாவிற்கும்
உறவினர்கள் சௌகரியமாக தங்கிச் செல்லவும் ஓய்வறை
வாஷிங் மெஷினுடன் கூடிய ஒரு துவைப்பறை
நவீன வசதிகளுடன் குளியல் அறை
நான் வணங்கும்
எல்லாக் கடவுள்களுக்குமான பெரிய பூஜையறை
அமைதியான சூழ்நிலையில் ஓர் படிப்பறை
உணவு மேசை புத்தக அலமாரி
எல்.சி.டி. டிவி புகழ்பெற்ற ஓவியங்கள்
குளிர்சாதனப் பெட்டி என
உள் அலங்காரம் செய்யப்பட்ட பெரிய ஹால்
பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அந்த
வீட்டைக் கட்டி முடித்ததின் களைப்பில்
பால்கனியில் அமர்கிறேன்
எதிரே தெரிந்த வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த
வெள்ளை ரோஜாக்களைப் பார்த்த ஆனந்தத்தில்
அயர்ந்து அப்படியே கண்மூடிவிட்டிருக்கிறேன் இவ்வீட்டில்.
நல்ல கவிதை அல்லவா? இந்தக் கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம்.
கவிதை ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுகிறது. ஒருவன் வீடு கட்ட விரும்புகிறான். விரும்புகிறான் என்று கூட சொல்ல முடியாது- அது ஒரு நிர்பந்தம். வீட்டுக்காரர் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடக் கூடும். நிர்பந்தமிருக்கிறது, வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவனிடம் கைவசம் இடம் இல்லை. அதனால் கற்பனையில் வீடு கட்டுகிறான். அவ்வளவுதான் கவிதை.
ஆனால் இந்தக் கவிதையில் ஒரு மெல்லிய சோகம் இருக்கிறது. ஒரு ஏக்கம் இருக்கிறது. இந்த ஆசை நிறைவேறாது என்ற அவநம்பிக்கை ஏதோ ஒரு இடத்தில் வெளியே வந்துவிடுகிறது பாருங்கள்.
கவிதையில் வரும் கற்பனைக்காரனுக்கு பதிலாக நம்மை பொருத்திக் கொள்ளலாம்; அவனுக்கு வீடு கட்ட வேண்டும் என்பது போல நமக்கு வேறு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும்தானே?- அது அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒரு ஆசையாக இருக்கக் கூடும். நமது ஆசை குறித்து அவனைப் போலவே கற்பனை செய்கிறோம். அவனைப் போலவே ஏங்குகிறோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வேறு வேலை ஏதாவது செய்வதற்காக போய்விடுகிறோம் அல்லது தூங்கிவிடுகிறோம். அவனுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆக நாமும் அவனும் ஒன்றுதான்.
இப்படி ஏதோவொரு விதத்தில் கவிதையை நமது மனதுக்கு நெருக்கமாக புரிந்து கொள்வது என்பது கவிதை வாசித்தலின் முக்கியமான படி என நம்பலாம்.
இந்தக் கவிதையை வேறு விதத்தில் எழுதவும் சாத்தியமிருக்கிறது எனத் தோன்றியது. வீடு குறித்தான விவரணையிலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது “தோட்டவசதியுடன் அழகான வீட்டைக் கட்டத் துவங்கினேன்” என்று தொடங்கி சமயலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை பற்றிய குறிப்புகள் என்று தொடர்ந்து, கவிதை முடியுமிடத்தில் இதுக்கெல்லாம் என்னிடம் வசதி வாய்ப்பு இல்லை, அதனால் என் தலைக்குள் இருக்கும் இடத்தில் கட்டிய வீட்டோடு தூங்கிவிட்டேன் என்பது மாதிரி முடிந்திருந்தால் ‘ட்விஸ்ட்’ இருந்திருக்கும் எனத் தோன்றியது. வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியும் உண்டாகியிருக்கும்.
ஒரு கவிதை இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்வதும் கூட ஒரு சர்வாதிகாரம்தான். கவிஞனுக்கு தெரியாதா? எதை எப்படி எழுத வேண்டும் என்று. ஆனால் ‘இப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கு’ என்று கவிதையை பிரித்து மேய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு நினைப்புதான் இது.