அன்புள்ள மணிகண்டன்,
நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.
நான் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சவுக்கு தளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். அது இந்த விவகாரம் குறித்த தங்களின் இன்னொரு கட்டுரையை நினைவு படுத்தியது. உங்கள் பதிப்பாளருடனான அந்த ‘புத்தக எண்ணிக்கை’ பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டீர்களா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
சுஜாதா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பாலாஜி
***
அன்புள்ள பாலாஜி,
ஒரு ஊரில் துவரம் பருப்பு வியாபாரி இருந்தார். விவசாயிகளிடமிருந்து பருப்பை வாங்கி செம்மண் கட்டி, காய வைத்து, உடைத்து, சுத்தம் செய்து தனது கடையில் வைத்து மக்களுக்கு விற்பது அவரது முக்கியமான தொழில்.
இந்தக்காலத்தில் விவசாயிகளாலும் கூட உடைத்தல், சுத்தம் செய்தல் வேலைகளைச் செய்ய முடியும் என்றாலும் பருப்பை மார்க்கெட்டில் விற்பது அவ்வளவு சுலபமில்லை. சொந்தக்காரர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் ஆளுக்கு ஒரு படி பருப்பை கொடுத்துவிட்டு மிச்சமீதியை பரணில் மூட்டை கட்டித்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் விவசாயிகள் ரிஸ்க் எடுப்பதில்லை. அதுவுமில்லாமல் இந்த பருப்புக்கடைக்காரருக்கு பருப்பு வாங்குபவர்களிடையே ஒரு மரியாதை இருந்தது. சுத்தமான பருப்பையும், தரமான பருப்பையும்தான் விற்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் பல விவசாயிகள் தங்களின் பருப்பை இவரிடம் கொடுத்துவிடுவார்கள்.
இந்த வியாபாரியும் பருப்பு விவசாயம் செய்பவர்தான். காலப்போக்கில் வியாபாரம் பழகிக் கொண்டார். பருப்பை விற்ற பிறகு தனக்கு வரும் இலாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் டீலிங். விவசாயிகளுக்கு இந்த வருமானம் முக்கியமில்லை. பெரும்பாலான விவசாயிகள் வயிற்று பிழைப்புக்கு வேறு ஏதேனும் ஒரு உத்தியோகம் பார்ப்பார்கள் என்பதால் இந்த வருமானத்தை பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. மற்றபடி, தாமும் ஒரு துவரம் பருப்பு விவசாயி என்பதை வெளியில் சொல்வதை ஒரு கெளரவமாக நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
இந்த கெளரவத்தின் காரணமாக காசு படைத்த விவசாயிகள் பருப்புக்கடைக்காரருக்கு பணம் கொடுத்து தங்களது பருப்பையும் அவரிடம் கொடுத்துவிட்டு போவார்கள் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
அப்பொழுதுதான் அந்த ஊருக்கு ஒரு பொடியன் வந்திருந்தான். பருப்புக்கடைக்காரரோடு அறிமுகம் கிடைத்த பிறகு அவர்தான் இவனுக்கு துவரம் பருப்பு விவசாயம் செய்வது பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். அந்தப் பொடியனும் ‘பிக்கப்’ செய்து கொண்டான். தனது மூன்றரை செண்ட் இடத்தில் விளைந்த பருப்பை அவரிடம் கொடுத்தான். இரு போகம் விளைந்த பருப்புகள். முதல் போகத்தில் இவன் கொடுத்த பருப்பை உடைத்து, சுத்தம் செய்து அரசாங்க குடோனுக்கு கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். இரண்டாம் போக பருப்பு நன்றாக இருப்பதாக அந்தப் பருப்பை வாங்கிய சிலர் அவனிடம் சொனனர்கள். இந்த உற்சாகத்தில் ‘இரு போக பருப்பும் விற்றுவிட்டதா ஐயா?’ என்று பருப்புக்கடைக்காரரிடம் கேட்டிருக்கிறான். அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. ‘பணம் வேண்டாம், எவ்வளவு விற்றிருக்கீறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டதற்கும் பதில் இல்லை. பொடியன் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவன். அவசரப்பட்டு தனது வீட்டில் ‘பருப்புக்காரர் தனக்கு எதுவும் தரவில்லை’ என்று போர்ட் எழுதி விட்டான். அப்பொழுது அதைப் பார்த்தவர்கள் இப்பொழுது கேள்வி கேட்கிறார்கள்.
மூன்றரை செண்டில் எத்தனை விளைந்திருக்கும்? அதை முழுமையாக விற்றிருந்தாலும் கூட பருப்புக்கடைக்காரருக்கு பெரிய வருமானம் கிடைத்திருக்காது. பொடியனுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்றிருந்தால் அதிகபட்சம் முந்நூறு ரூபாய்க்குள்தான் இருக்கும். அது அவ்வளாவு முக்கியமா? கிடைக்காத ஒன்றை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதற்கு பதிலாக வேறு எதையாவது விளைவிக்கலாம் அல்லவா? இப்பொழுது இந்தக் கடையில் நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் நெல் நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
நன்றி.
+++
(2)
வா மணிகண்டன் அவர்களுக்கு,
இன்று நிசப்தம் வாசித்துக் கொண்டிருந்தேன்.
இன்று என்றால் இன்று மட்டுமில்லை. இதன் மூலம் இதற்கு முன்பே பல நாட்களாக உங்கள் வலைப்பூவை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்களாக புரிந்து கொள்க. நீண்ட நாட்களாக உங்களுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பதாக ஒரு உணர்வு. அதனாலேயே இக்கடிதம்.
விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை. நான் ஒருவன் இங்கு உட்கார்ந்து கொண்டு உங்கள் எழுத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று தங்களுக்கு கையை உயர்த்தி காண்பிக்கவே இந்த கிறுக்குத்தனத்தை இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.
இன்று இந்த வரிகளை உங்கள் வலைப்பூவில் படித்தேன். "இப்பொழுது அணையில் பதினேழே முக்கால் அடிதான் இருக்கிறதாம்.உயரமான ஆட்கள் மூன்று பேரை ஒருத்தர் மேல் ஒருத்தராக நிறுத்தினால் மூன்றாவது ஆள் தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கலாம்."
சிரித்து விட்டேன்.
என் அருகில் உட்கார்ந்து பொட்டி தட்டி கொண்டிருக்கும் நண்பனிடம் காட்டினேன். அவன் வேறு ஒரு எழுத்தாளரின் விசிறி. அதனாலேயே நான் உங்கள் எழுத்தை ரசிப்பது அவனுக்கு பிடிக்காது. சாதாரண நகைச்சுவை தான் என்றான். அப்படி இருக்கலாம் தான்.ஆனால் அவன் அவ்வாறு சொன்னது என் அகத்தை சீண்டிவிட்டது. அதனாலேயே இது ஒரு சாதாரண வரியாக இருந்தாலும் இதை மையப்படுத்தி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று 'பல்பு' எரிந்து விட்டது.
உங்கள் தளத்தில் இதைவிட பல நல்ல ஆக்கங்களை படித்திருக்கிறேன். அதையெல்லாம் விட்டுவிட்டு என் மனம் ஏன் இப்போது இந்த வரிகளை பிடித்து கொண்டு தொங்குகிறது எனப் புரியவில்லை.சொல்ல வருவது என்னவென்றால் தினமும் வாசிப்பதற்கு சுவாரசியமாக ஏதாவது தருகிறீர்கள். வாசிப்பது நிறைவை தருகிறது. தினமும் ஒரு இருபது நிமடங்களாவது உங்கள் உழைப்பை நுகர்ந்து கொண்டிருக்கிறேன்.அதனால் உங்களுக்கு கடமைபட்டிருக்கிறேன்.ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் அளிக்கும் பொருட்படுத்தலை விட மகிழ்ச்சி அளிப்பது எதுவும் இருக்காது.
ஆகவே உங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கான கடிதங்களின் வரிசையில் இதையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவ்ளோதாங்க மேட்டர்.
இப்படிக்கு,
தே.அ.பாரி
பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
***
அன்புள்ள பாரி,
உங்களின் கடைசி வரியிலிருந்தே எடுத்துக் கொள்வோம். நூற்றுக்கணக்கான கடிதங்கள் என்பதெல்லாம் டூ மச். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வரும். அவ்வளவுதாங்க.
உலகம் முழுவதும் சேர்த்து மொத்த தமிழர்கள் எட்டுக்கோடி இருப்பார்களா? அதில் இணையவசதி இருப்பவர்கள் நான்கு கோடியாவது இருக்காதா? இதில் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள்/விரும்புபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி இருக்கும் அல்லவா? இந்த ஒரு கோடியில் இரண்டாயிரம் பேர்தான் இங்கு எழுதுவதை வாசிக்கிறார்கள். இதுதான் ரேஞ்ச். ஆகவே என்னைப் பற்றிய வேறு பில்ட்-அப்கள் இருந்தால் அழித்துவிடுங்கள்.
இன்னும் வெகுதூரம் போக வேண்டியிருக்கிறது. அதுவும் இதே வேகத்தில் போக வேண்டியிருக்கிறது என்பதுதான் முக்கியம். பார்க்கலாம்.
இந்தத் தளத்தை வாசிப்பதற்கு நிறைவைத் தருகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அல்லவா? அதுதான் முக்கியம். அதற்காக நீங்கள் கடமைப்பட வேண்டியதில்லை. இங்கு யாரும் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் இல்லை. அவசியமும் இல்லை. எழுதுவதால் நான் சமூக சேவை எதுவும் செய்யவில்லை. நான் எழுதுவதில் சுயநலம் இல்லை என்று நினைக்கிறீர்களா? இந்தக்காலத்தில் அப்படியெல்லாம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமில்லை எந்தக்காலத்திலும் இருந்திருக்க முடியாது.
எழுத்து நமது திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு. எழுதுவதன் மூலமாக பிறர் நம்மை அறிந்து கொள்கிறார்கள். அது ஒரு வினோதமான போதையாக இருக்கிறது. சாமார்த்தியமானவர்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதிகாரத்தை கைபற்றுகிறார்கள். எதிரியை வீழுத்துகிறார்கள். இதெல்லாம் முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் உச்சந்தலையில் ஏறும் மொத்த ப்ரஷரையும் பஞ்சர் செய்வதற்கு ஒரு கட்டுரையோ அல்லது கவிதையோ ஒரு படைப்பாளிக்கு உதவக் கூடும்.
பணம், பதவி, அதிகாரம் என்பதெல்லாம் எனது நோக்கமில்லை. அந்த விநோத போதை மட்டும் போதுமானது.
உங்களின் இருபது நிமிடத்தை நான் எழுதுவதை வாசிப்பதற்கு செலவு செய்யும் உங்களுக்கு நன்றி. இங்கு வாசிப்பவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது அல்லவா? ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ - முதல் பத்தியிலேயே ‘இதை வாசிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா’ என முடிவு செய்துவிடலாம். அப்படியே தொடர்ந்து வாசித்தாலும் எந்த வரியைப் படிக்கும் போதும் மூடிவிட்டு அடுத்த தளத்திற்கு போய்விடலாம். அதையும் மீறி இருபது நிமிடம் நிறைவோடு வாசிக்கிறீர்கள் என்ற விதத்தில் உங்களுக்கு நல்லது என்றால், இருபது நிமிடம் ஒருவரை இழுத்துப் பிடிக்கும் வித்தையை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு நல்லது.
நண்பருக்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.
தொடர்ந்து வாசியுங்கள். தங்களின் அன்புக்கு நன்றி.
நன்றி.
+++
(3)
அன்புள்ள மணிகண்டன்,
நிசப்தம் தளத்தை தினமும் வாசித்துவிடுகிறேன். ஒவ்வொரு நாளும் எழுதுவதற்கு உங்களுக்கு போரடிக்கவில்லையா? தவறாக எடுக்க வேண்டாம். கேட்க வேண்டும் என்று தோன்றியது.
நவநீத கிருஷ்ணன்.
***
அன்புள்ள நவநீத கிருஷ்ணன்,
எப்பொழுது போரடிக்கிறதோ அப்பொழுது நிறுத்திவிடுகிறேன்.
நன்றி.