Jun 14, 2013

அவனுக்கு ஏகப்பட்ட ப்ராப்ளம்...

“அவளுக்கு Attitute ப்ராப்ளம்...அதை கொஞ்சம் மாத்திக்க சொல்லுங்க”- இப்படி ஒருத்தன் இன்னொருத்தியைப் பற்றி யாரிடமோ ஃபோனில் குசலம் பேசிக் கொண்டிருந்தான். அதுவும் அலுவலகத்தில். 

சும்மா இருக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணைப் பற்றி ஆணோ அல்லது ஆணைப் பற்றி பெண்ணோ பேசிக் கொண்டிருந்தால் எனக்கு ஆட்டோமேடிக்காக காது மடல் விறைத்துக் கொள்கிறது. பக்கத்தில் நியூஸ் பேப்பர் படிப்பது போல ‘பாவ்லா’ செய்யத் தொடங்கிவிட்டேன். எங்கள் அலுவலகத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’தான் வாங்குகிறார்கள். அந்த செய்தித்தாளோடு சேர்த்து ‘பெங்களூர் டைம்ஸ்’ என்று ஒரு இலவசம் கொடுக்கிறார்கள். அதில் படிப்பதற்கு ஒன்றுமிருக்காது. ஆனால் நிறைய நிறைய ‘பார்க்கலாம்’.அப்படி பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அளந்து கொண்டிருந்தான். 

உண்மையில் Attitute problem என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் இதே பிரச்சினையின் காரணமாகத்தான் சமீபத்தில் ஒருவன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போனான். அதை ராஜினாமா என்று சொல்ல முடியாது. கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். அந்தப் பையன் திருநெல்வேலிகாரன். இங்கு வேறொரு டீமில் இருந்தான். நல்ல வேலைக்காரனும் கூட. டெக்னிகலாக பிளந்து கட்டுவான். அவனுக்கு மலேசியா போவதற்கான வாய்ப்பு வந்திருந்தது. ‘பினாங்கு’ மாநிலத்தில்தான் வேலை. போவது மட்டுமில்லாமல் சில வருடங்கள் அங்கு இருக்க வேண்டும் என்பது டீல். ஏற்கனவே சில மாதங்கள் நான் அங்கு சுற்றியிருக்கிறேன் என்பதால் அந்த ஊர் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். அது நல்ல ஊரும் கூட. வாங்கும் சம்பளத்தில் நிறைய மிச்சம் செய்ய முடியும். ராமநாதபுரம் பாய் ஒருத்தர் கடை வைத்திருந்தார். அங்கு நான்கு ரிங்கிட்களுக்குள்ளாக ஒருவேளை உணவை  முடித்துவிடுவேன். அதே ஏரியாவில் வீடுகள் சல்லிசாக வாடகைக்கு கிடைக்கும் என்பதால் அது பற்றிய விவரங்களையும் சொல்லியிருந்தேன். பையனுக்கு இன்னமும் திருமணம் ஆகியிருக்கவில்லை என்பதால் மலேசியா வாய்ப்பு வந்தவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டான்.

ஆனால் அவனுக்கு இந்தப் பயணம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கு காரணம் இடையில் ஒரு சகுனி இருந்தான். அவனது டீம் லீடர். அவனும் தமிழ்க்காரன். மதுரைப் பக்கம். இவன் அளவுக்கு அவன் டெக்னிக்கலான ஆள் இல்லை. ஆனால் மேல்மட்டத்தில் நல்ல செல்வாக்கோடு இருந்தான். பல வருடங்களாக இதே கம்பெனியில் பெஞ்ச்சை தேய்ப்பதால் நிறையப் பேரை தெரிந்து வைத்திருந்தான். நெல்லைப் பையனின் கெட்ட நேரம் மதுரைக்காரனுக்கு கீழாக வேலை செய்ய வேண்டியிருந்தது. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒத்து போனது இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டிக் கொள்வார்கள்.

மலேசியா சென்றுவிட்டால் இந்த சகுனியிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஜூன் முப்பதாம் தேதி கிளம்புவதற்கான ஆயத்தமாகிக் கொண்டிருந்தவன் பெங்களூரில் தங்கியிருந்த மேன்சன் அறையை காலி செய்யப் போவதாக ஓனரிடம் சொல்லிவிட்டான். சில சாமான்களை பாதிவிலைக்கு விற்றாகிவிட்டது. ஆனால் அவநம்பிக்கையின் காரணமாக வெளியில் யாரிடமும் சொல்லாமல்தான் இருந்தான். ஆனால் அவனது அம்மாவும் அப்பாவும் பெருமை தாளாமல் சொந்தக்காரர்கள் பந்தக்காரர்களிடமெல்லாம் ‘பையன் மலேசியா போறேன்’ என்று தண்டோரா போட்டுவிட்டார்கள். இந்த நிலையில்தான் மேனேஜர் அழைத்திருக்கிறார். இவனும் மலேசியா பயணமாக பேசுவதற்குத்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்த போது அவரிடம் ஒரு குண்டு இருந்தது. 

‘நீ க்ளையண்ட்கிட்ட நல்லபடியா பிஹேவ் பண்ண மாட்டேன்னு ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு’ என்று சொல்லியிருக்கிறார். 

‘உங்ககிட்டதானே இவ்வளவு வருஷமா வேலை செஞ்சிருக்கேன். உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்ட போது மழுப்பியிருக்கிறார். இந்தப் பிரச்சினையை யார் கிளப்பியிருப்பார் என்று நெல்லைக்காரன் யூகித்திருந்ததால் ‘முழுமையான விசாரணை வைக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறான். அந்த மேனேஜரும் ஒத்துக் கொண்டு இந்த விவகாரத்தை மனித வளத் துறைக்கு கொண்டு போவதாகச் சொல்லிவிட்டார். அந்தத் துறைக்கு இதுதானே வேலை? யாரை யார் கிள்ளி வைத்தார்கள், யார் பென்சிலை யார் பிடுங்கிக் கொண்டார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் அடுத்த வாரத்தில் வருவதாகவும் சொல்லிவிட்டார்கள்.

விவகாரம் நடந்த தினத்தில் அவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் ஒரு முடிவு செய்துவிட்டதாகச் சொன்னான். ‘ஒன்று மலேசியா போகிறேன் அல்லது கம்பெனியை விட்டே போகிறேன்’ என்றான். இந்த விவகாரம் ஒரு வியாழக்கிழமை நடந்தது. மலேசியா போவதற்கான திட்டத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு வேலைத் தேடத் துவங்கிவிட்டான். அவனுக்கு இப்பொழுது மலேசியா போவதைவிடவும் மதுரைக்காரனுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது.

அடுத்த திங்கட்கிழமை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். மதுரைக்காரனையும் நெல்லைக்காரனையும் தனித்தனியாக அழைத்து பேசிவிட்டு பிறகு இரண்டு பேரையும் ஒன்றாக அழைத்திருக்கிறார்கள். எதிர்பார்த்ததுதான். இவனை அவன் திட்ட அவனை இவன் திட்ட ஒரே ரசாபாசம் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் இரண்டு பேரும் தமிழில் மாற்றி மாற்றி திட்டிக் கொண்டார்களாம். இதில் உச்சபட்ச காமெடி நடுவராக அமர்ந்திருந்த மனுஷன் மராத்தி. கிட்டத்தட்ட அவர் காதில் ரத்தம் வந்திருக்கும் போலிருக்கிறது. இரண்டு பேரையும் அடங்கச் சொல்லி மிரட்டியிருக்கிறார். நெல்லையனும் லேசுப்பட்ட ஆள் இல்லை, கிடைத்ததுதான் வாய்ப்பு என்று மதுரையனை ஒரு அறை விட்டுவிட்டான். கைவைக்காமல் இருந்திருந்தால் வேலை தப்பித்திருக்கும். ஆனால் இப்பொழுது நிலைமை கை மீறிவிட்டது. 

“நாங்களாக ஃபயர் செய்தால் நீ வேறு வேலை தேடும் போது உனக்கு சிக்கல் வரும். நீயா போயிடு” என்று சொல்லியிருக்கிறார்கள். சரியென்று ராஜினாமா செய்துவிட்டு கிளம்பிவிட்டான். வெளியே போகும் போது மற்றவர்களை சந்திக்க அவனை அனுமதிக்கவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறிய அரை மணி நேரம் கழித்து ஃபோன் செய்தான். வீட்டில் இறப்பைச் சந்தித்தவனிடமும், தனது வேலையை இழந்தவனிடமும் ஃபோனில் பேசுவது சங்கடமான காரியம். என்ன பேசுவதென்று தெரியவில்லை. தயக்கத்துடன்தான் எடுத்தேன்.

நேரடியாக ஆரம்பித்தான்- வேறு எது பற்றியும் பேசவில்லை “அவனை ஓங்கி ஒரு அறை விட்டுட்டேன். கண்ணாமுழி கலங்கியிருக்கும்”.

ஆச்சரியமாக இருந்தது. “வேலை போன கவலை இல்லையாடா?” என்றதற்கு அசால்டாகச் சொன்னான்.

“அது போவட்டும் மயிரு. இன்னொன்னு பார்த்துக்கலாம்” அதற்கு மேல் நான் சகஜமாகிவிட்டேன்.அதன் பிறகு எங்களுக்குள் நடந்தது எல்லாம் எப்பொழுதும் போலான வழக்கமான உரையாடல்தான்.

இதில் யாருடையது Attitute problem? இன்னமும் புரியவில்லை. ஒரு டீமில் அல்லது நிறுவனத்தில் மலையாளி இருந்தால் அந்தக் குழுவில் மிக விரைவாக மலையாளிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கிவிடுகிறார்கள். ஆளாளுக்கு உதவி செய்து சக மலையாளியை மேலே கொண்டு வந்துவிடுகிறார்கள். தெலுங்கர்களும் இதில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. கன்னடர்கள் சக கன்னடர்களை தூக்கிவிடுகிறார்களோ இல்லையோ ஆனால் காலை வாரி விடுவதில்லை.

ஆனால் தமிழர்கள்தான் இதில் விதிவிலக்கு. இது பொதுப்படையான வாதமாக இருந்தாலும் பெரும்பாலும் நம் சகாக்கள் மீது பொறாமை மிகுந்தவர்களாகத்தானே இருக்கிறோம்? வேறு எவனோ பிழைத்தால் பிழைக்கட்டும் ஆனால் நம்மைச் சார்ந்தவன் நம்மோடு இருப்பவன் மேலே வரக்கூடாது என்பதில் தமிழர்களாகிய நாம் கண்ணுங்கருத்துமாக இருக்கிறோம்.

ஞான பீட விருது தமிழுக்கு கிடைக்கவில்லை, அந்த விருது கிடைக்கவில்லை, இந்த விருது கிடைக்கவில்லை என்று புலம்பினால் எப்படிக் கிடைக்கும்? எவன் மேலே போனாலும் கீழே இழுத்துவிட்டுவிடுகிறொம். முடிந்தால் கீழே போட்டு மிதித்துவிடுகிறோம். இதுதான் நமது Attitude.

கர்நாடகத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி, க்ரிஷ் கர்னாட் போன்றவர்களின் படங்களை ஒவ்வொரு நூலகத்திலும் பார்க்க முடியும். எந்த விழாவிலும் அவர்களின் பேனர்களை கட்டுகிறார்கள். தமிழகத்தில் அரசியல் சாராத அறிவுஜீவிகளுக்கு என்ன மரியாதை கொடுத்து வைத்திருக்கிறோம்? இங்கு எந்த அரசியல்வாதி நாகரீகத்தோடு சக அரசியல்வாதியை பாராட்டுகிறான்? ஒரு பிறந்தநாள் வாழ்த்தைக் கூட கூட்டணியோடும், தேர்தல் கணக்குகளோடும் பிணைக்கும் சில்லரைத்தனமான மனநிலைதானே நம்மிடையே புரையோடிக் கிடக்கிறது? 

சக எழுத்தாளனை பொறாமை இல்லாமல் வாழ்த்தும் ஒரு எழுத்தாளனைப் பார்க்க முடிகிறதா? சக போட்டியாளனோடு வாஞ்சையோடு பழகும் தமிழர்கள் இருக்கிறார்களா? 

விடியும் போதே முட்டுச்சந்தில் விட்டு சாத்துவதற்கு இன்றைக்கு எந்தத் தமிழன் கிடைப்பான் என்றுதானே கண் விழிக்கிறோம். இதில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பற்றி “அவனுக்கு Attitude problem” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறான்.

பேசி என்ன பிரயோஜனம்? இதெல்லாம் இன்றைக்கு நாளைக்கு மாறவா போகிறது? நாம் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்தால் போதும்.

தொலையட்டும் விடுங்கள். 

முதல் பத்தி பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஃபோனில் புகார் வாசித்தவனும் தமிழ்தான், அவன் யார் மீது புகார் வாசித்தானோ அவளும் தமிழ்தான். 

சரி! ஆனது ஆகிவிட்டது. இதுவும் தொலையட்டும் விடுங்கள்.