Jun 13, 2013

மனநோய், சூது கவ்வும்

சூது கவ்வும் படம் பார்த்தாகிவிட்டது. தியேட்டரில் இல்லை- டிவிடியில்தான். திருட்டு டிவிடியில் பார்த்தேன் என எழுதினால் ‘குண்டர்’ தடுப்புச் சட்டம் பாயாதுதானே? நண்பர் ஒருவரிடமிருந்து இரவல் வாங்கி ராத்திரியோடு ராத்திரியாக பார்த்துவிட்டேன். அதில் ஒரு பாட்டு வருகிறது. ‘மாமா டவுசர் கயண்டுச்சே’ என்று. ஆண்ட்ரியா வாய்ஸ். அந்தக் குரலின் மயக்கத்திலேயே என்னையும் அறியாமல் ஓரிரு முறை பாடித் தொலைத்துவிட்டேன். மகன் பிடித்துக் கொண்டான். வீட்டில் யார் இருந்தாலும் கவலையே இல்லாமல் ‘மாமா டவுசர் கயண்டுச்சே’ என்கிறான். இன்று காலையில் அந்த பாடல் வரிகளைத் தேடி இணையத்தில் கண்டுபிடித்துவிட்டேன். அற்புதமான வரிகள். இறுதியில் இருக்கிறது. இன்புறுக!

படத்தை பற்றியும் எழுதலாம்தான். ஆனால் சினிமா பற்றி எழுதுவது ஒரு கலை. அதற்கு சினிமா குறித்தான ரசனை வேண்டும் அல்லது அதன் பின்ணனியில் இருக்கும் உழைப்பு பற்றிய அறிவாவது தேவை. இரண்டும் இல்லையென்றால் குறைந்தபட்சம் அதன் தொழில்நுட்பம் பற்றியாவது தெரிய வேண்டும். இதெல்லாம் எனக்கு சுத்தமாக இல்லாததால் படம் பிடித்ததா இல்லையா என்று வேண்டுமானால் சொல்லலாம். 

கொஞ்சம் பிடித்திருந்தது. கொஞ்சம் பிடிக்கவில்லை. 

கல்லூரி மேடைகளில் பார்க்கும் ‘ஸ்கிட்’ மாதிரி இருந்தது. செலவு செய்யப்பட்டு சுவாரசியமாக எடுக்கப்பட்ட காஸ்ட்லி ஸ்கிட். படம் வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு அதைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பது நமுத்து போன பொரியை அரைத்துக் கொண்டிருப்பது போல. அதுவும் இண்டர்நெட்டில் எழுதுவது என்பது உள்ளேயும் போகாமல் அரைவையும் ஆகாமல் வாயில் சிக்கிக் கொள்ளும் நமுத்துப் போன பூரியை மெல்லுவது போல. வெள்ளிக்கிழமை படம் வெளியானால் சனிக்கிழமைக்குள் சுக்கல் சுக்கலாக மேய்ந்து பிரித்துவிடுகிறார்கள். இனிப் போய் எதை எழுதுவது? அதனால் வேறு ஏதாவது பேசலாம். 

படத்தில் விஜய் சேதுபதி ஒரு மனநோயாளியாக நடித்திருக்கிறார். எப்பொழுதும் ஒரு பெண் கூடவே இருப்பது போல கற்பனை செய்து கொள்ளும் நோய் அது. ஆனால் ‘கேஷூவலான’ நோயாளி. இப்படியான கேஷூவல் மனநோயாளிகளை சர்வசாதாரணமாக கவனித்திருப்போம். இத்தகைய மனநோயாளிகள் நம்மிடையே நிறைய உண்டு. ‘உதாரணமாக சிலரைச் சொல் பார்க்கலாம்’ என்னிடம் கேட்டால் முதலில் என்னைக் காட்டுவேன் அப்புறம் உங்களைத்தான் காட்டுவேன். நிஜமாகத்தான். நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒருவகையில் மனச்சிக்கல்கள் உடையவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். 

இது நானாக யூகித்துக் கொண்டதில்லை. கல்லூரியில் படிக்கும் போது ஒரு சைக்யாட்ரிஸ்டுடன் பழக்கம் இருந்தது. அவர் வேலூர் சி.எம்.சியில் வேலையில் இருந்தார். கொஞ்ச நாட்களுக்கு அந்த மருத்துவமனையில் அனுபவம் பெற்றுவிட்டு பிறகு சொந்த ஊரில் அல்லது சென்னையில் ஒரு க்ளினிக் ஆரம்பிக்க போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். 

விளையாட்டுத்தனமாக அவரிடம் “இந்தியாவில் எத்தனை மனநோயாளிகள் இருக்கக் கூடும்?” என்றேன்  

“இந்த நாட்டில் மூன்று வயதுக்கு மேலானவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?” என்றார். 

“approximate ஆ தொண்ணூற்றைந்து கோடி பேர் இருப்பார்கள்” - இது என் பதில். 

அவரும் “approximate ஆ தொண்ணூற்றைந்து கோடி மனநோயாளிகள் இருப்பார்கள்” என்றார். 

எப்படி?

எவையெல்லாம் நாம் விரும்பாலும் கூட நம்மை விட்டு விலகாமல் இருக்கிறதோ அதையெல்லாம் ‘நோய்’ என்று பெருமொத்தமாக வரையறை செய்கிறோம் என்று வையுங்கள். சிகரெட் பிடிப்பதில் ஆரம்பித்து, புகழ் மீதான வெறிபிடித்து அலைவதன் வழியாக, துறவியாக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்வது வரை எல்லாவற்றையும் மனநோய் என்று பட்டியலிட்டுவிடலாமாம்.

அடிக்கடி கோபப்படுவது, எதிர்பாலினரிடம் அத்துமீறுவது, சுயமோகம், இணைய addiction, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஃபோனில் பேச விரும்புவது, அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் ‘ஹெட் போனை’ எடுத்து காதில் செருகுவது என அனிச்சையாகச் செய்யும் சகலமும் மனநோய்தான். அவற்றையெல்லாம் மனநோய் என்று சொல்வதற்கு கூச்சமாக இருப்பதால் ‘habit' அல்லது ‘timepass' அல்லது வேறு ஏதாச்சும் நமக்கு பிடித்தமான வார்த்தையை பயன்படுத்திக் கொள்கிறோம் என நினைக்கிறேன்.

சிகரெட் பிடிப்பதை மனநோய் என்று சொன்னால் யாராவது சண்டைக்கு வரக் கூடும். “சிகரெட் பிடிப்பதை மனதளவில் விரும்பிச் செய்கிறேன். அதை எப்படி மனநோய் என்று சொல்ல முடியும்” எனக் கேட்பார்கள். ஒரேயொரு எதிர்கேள்வி பதிலைக் கண்டுபிடித்துத் தந்துவிடும் என நினைக்கிறேன். “நினைத்த நேரத்தில் உங்களால் சிகரெட்டை முழுவதுமாக கைவிட்டுவிட முடியுமா?” என்று கேட்கலாம். நமக்கு அவரது பதில் தேவையில்லை. ஆனால் அவரே முடிவு செய்து கொள்ளலாம். தனக்கு மனதில் சிக்கல் இருக்கிறதா இல்லையா என்பதை. சிகரெட் என்பது உதாரணம்தான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒருவரை திரும்பத் திரும்ப வசை பாடுவதும் அல்லது ஒரு மனிதரை சகட்டு மேனிக்கு புகழ்வதும் கூட இப்படியான ஒரு சிக்கல்தான். 

  • சிலரோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாவிட்டாலும் கூட ஏன் அந்த ஒரு சிலரை முரட்டுத்தனமாக வெறுக்கிறோம்?
  • யாரென்றே தெரியாத ஒரு சிலர் செய்வது மட்டும் ஏன் நமக்கு பிடிப்பதேயில்லை?
  • இதுவரை ஒரு முறை கூட பேசியிருக்க மாட்டோம். ஆனால் ஏன் சிலரின் முகத்தை பார்த்தாலே எரிச்சல் வருகிறது?
  • ஒரு நாளில் எத்தனை பேரை வேண்டுமென்றே ignore செய்கிறோம்?

எல்லாவற்றிற்கும் யோசித்துப் பார்த்தால் ஒரு பதில் கிடைக்கும் அல்லவா? என்ன பதில்? அதுதான். அதேதான்.

நமது பெரும்பாலான மனச்சிக்கல்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் சமாளித்து விடுவதால் மற்றவர்கள் நம்மை ‘சாதாரணமானவர்கள்’ என்று நினைத்துக் கொள்கிறார்கள். நாமும் அவர்களை ‘சாதாரணமானவர்கள்’ என்று நினைத்துக் கொள்கிறோம்.  அவ்வளவுதான்.

இப்படி திரும்பத் திரும்ப ‘நாமெல்லாம் மனநோயாளிகள்’ என்று சொல்லிக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டுமா? 

தேவையில்லைதான். 

பிறகு எதற்கு எழுத வேண்டும்? ச்ச்சும்மா இது ஒரு Timepass அல்லது Habit. 

ஓ மாமா டவுசர் கயண்டுச்சு
ஆமா டவுசர் அவுந்துச்சு
ஓ மாமா டவுசர் கயண்டுச்சு
ஆமா ட்ரவுசர் அவுந்துச்சு

மாமா டவுசர் அவுந்துச்சு
மாமா மாமா
மாமா டவுசர் மாமா ட்ரவுசர்ர்ர்ர்

ஆமா டவுசர் அவுந்துச்சு
மாமா டவுசர் கயண்டுச்சு
ஆமா ட்ரவுசர் அவுந்துச்சு

மாமா மாமா
மாமா மாமா
ஏய்ய்ய் மாமா..