May 14, 2013

அவ்வளவுதான்


துளசிமணி சித்திக்கும் பாப்பு சித்திக்கும் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களது அம்மாவை ஏதோ ஒரு நோய் வாரிக் கொண்டு போய்விட்டது. புற்று நோய் என்றார்கள். அது சரியாக ஞாபகம் இல்லை. அவர் இரண்டு பெண்களையும் தவிக்கவிட்டு போய்விட்டதாக அவ்வப்போது யாராவது அழுததுதான் மங்கலாக ஞாபகத்தில் இருக்கிறது. திக்குத் தெரியாத வயதில் இருந்த சித்திகள் சம்பந்தமான அத்தனை பொறுப்புகளையும் அவர்களது அண்ணனான சின்னச்சாமி மாமாதான் ஏற்றுக் கொண்டார். 

இரண்டு சித்திகளும் எனது அம்மாவுக்கு சித்தப்பாவின் மகள்கள். அம்மாவின் ஊரில்தான் சித்திகளும் இருந்தார்கள். சிறுவயதில் நான் அமத்தாவிடம் அதிகமாக இருந்ததனால் சித்திகளின் வீட்டிலும் ஏகபோகமாக திரிந்திருக்கிறேன். அப்பொழுது அந்த ஊரில் டி.வி வந்திருக்கவில்லை. ரேடியோவும் கூட யாராவது ஒரு சிலர் வீட்டில்தான் இருக்கும். அப்படியிருந்தும் பிரச்சினையில்லாமல் பொழுது போய்க் கொண்டிருந்தது. சித்திகள்தான் எனக்கு தாயம் விளையாட்டு சொல்லித் தந்தார்கள், ஐந்தாங்கல் அவர்களிடம் கற்றுக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து வெளியேறிய புத்தம் புதுக் கோழிக் குஞ்சு ஒன்றை முதன்முதலாக தொட்டுப்பார்த்ததும் அவர்கள் வீட்டில்தான்.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் துளசிமணிச் சித்தி சமையல் செய்யப் பழகியிருந்தார். அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இருக்காது. குடி நீருக்காக ஒரு அடி பம்பு இருக்கும். அதில் இருந்துதான் குடத்தில் நிரப்பிக் கொள்வார்கள். கியாஸ் அடுப்பும் கிடையாது. விறகு வெட்டித்தான் எரிக்க வேண்டும். வெள்ளை நிற ட்யூப்லைட்டும் கூட அரிதுதான். தோட்டத்தில் மோட்டார் ஓடும் போது பெண்கள் துணி துவைப்பார்கள். ஓடும் தண்ணீரில் ஊர்க்கதைகள் அத்தனையும் கரைந்து கொண்டிருக்கும். குழந்தைகளான நாங்கள் கதைகளைக் கேட்டுக் கொண்டே குளித்துக் கொண்டிருப்போம்.

ஆழ்துளைக் கிணறுகளோ, சொட்டு நீர்ப்பாசனமோ வந்திருக்காத அந்த வானம் பார்த்த பூமியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் நிலக்கடலை பயிர் செய்வார்கள். கொஞ்சம் தண்ணீர் இருந்தால் புகையிலை காற்றில் ஆடும். இதுதான் வாழ்வாதாரமாக இருந்தது. இடையில் வரும் வறட்சியின் காரணமாக அவ்வப்போது வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கமும் அடமானத்திற்கு போகும் அல்லது தெரிந்தவர்களிடம் ஆயிரம் ஐந்நூறு ‘கைமாத்தாக’ வாங்குவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. கையில் பணம் சேரும் போது திருப்பிக் கொடுத்தால் போதும். மனிதர்கள் அத்தனை நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.

சின்னச்சாமி மாமா வீட்டில் எப்பொழுதும் அரை மூட்டை கடலைக்காய் இருக்கும். அவ்வப்போது வறுத்து பொரியில் கலந்து கொடுப்பார்கள். மிக்சரும், ஜிலேபியும் சர்வ சாதாரணமான தின்பண்டங்களாக உருமாறியிராத காலம் அது. விஷேசங்களின் போது மட்டும்தான் அதையெல்லாம் வாங்குவார்கள். ஊருக்குள் எந்த வசதியும் இல்லை என்றாலும் வாழ்க்கை ஒன்றும் சிக்கலானதாக இல்லை. மாறாக அத்தனை சுவாரசியமானதாக இருந்தது. 

துளசிமணிச் சித்தி படித்தாரா என்று தெரியவில்லை. வீட்டு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளத் துவங்கியிருந்த போது பாப்புச் சித்தி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தார். எண்பதுகளின் பருவப் பெண்ணிற்கான எந்த அம்சமும் குறையாமல் ஒற்றை சடை, கொஞ்சம் மல்லிகையோ அல்லது கனகாம்பரமோ சூடிய வாடை,பாவாடை தாவணி, அளவான சிரிப்பு என்று இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறார். இதெல்லாம் எனது ஐந்து வயதுக்குள் நடந்தவை.

அதன் பிறகு என்னை எங்கள் ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்கள். எப்பவாவது விடுமுறைக்கு செல்லும் போது அரைமணி நேரமோ அல்லது கால் மணி நேரமோ பார்த்து பேசுவதோடு சரி. பிறகு அதுவும் இல்லை. அதற்கு காரணமிருக்கிறது. துளசிமணி சித்திக்கு முதலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பாப்புச் சித்திக்கும் நிகழ்ந்தது. அவர்கள் திருமணம் முடிந்து வேறு ஊருக்குப் போன பிறகு அவர்களை பார்ப்பதும் பேசுவதும் முற்றாக நின்று போனது. ஏதாவது குடும்ப விழாக்களில் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். சில வார்த்தைகள் பேசிக் கொள்வோம். அந்த சில வினாடிகளில் குழந்தைப் பருவம் நினைவில் ஊஞ்சலாடும். அவ்வளவுதான்.

துளசிமணி சித்திக்கு ஒரு பெண்; பாப்பு சித்திக்கும் ஒரு பெண். சித்திகளின் மகள்கள்தான் என்றாலும் அவர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பள்ளி, கல்லூரி என அவர்கள் பிஸியாகிவிட, வேலை, குடும்பம் என நாங்களும் ஒதுங்கிவிட அவ்வப் போது அவர்களை நினைத்துக் கொள்வதோடு சரி. 

சென்ற ஞாயிற்றுக்கிழமை துளசிமணிச் சித்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஈரோட்டில் வீடு கட்டிவிட்டார்கள். புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதற்காக வந்திருந்தார். தனது மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்ல்வதாகவும், கணவருக்கு இன்னும் ஓராண்டில் பணி ஓய்வு கிடைக்கப் போவதாகவும், கிட்டத்தட்ட வாழ்வில் பெரும்பாலான கடமைகளை தான் வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும்- அத்தனை சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். பாப்புச் சித்தியின் மகளும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாளாம். அவர்களும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பூரித்தார். இரவு பேசிவிட்டு கிளம்பும் போது வெகுநேரமாகிவிட்டது.  

ஒரு வாரம் ஆகிவிட்டது. நேற்று வழக்கம் போல அலுவலகப் பணியில் இருந்த போது ஒரு ஃபோன். துளசிமணிச் சித்தி இறந்துவிட்டாராம். தூக்கி வாரிப் போட்டது. துக்கம் தொண்டையை அடைக்கத் துவங்கியது. காரணம் கேட்ட போது சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். காலன் அதோடு நிற்கவில்லை. பாப்பு சித்தியின் கணவரையும், பாப்பு சித்தியின் மகளையும் சேர்த்து வாரிக் கொண்டான்.பாப்பு சித்திக்கும், துளசிமணிச் சித்தியின் மகளுக்கும் பலத்த அடி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

ஐந்து பேரும் காரில் போயிருக்கிறார்கள். ஏதோ ஒரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரில் வந்த வாகனத்தில் மோதி விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பேரை பறித்துக் கொண்டு, இரண்டு பேரை படுகாயப்படுத்திவிட்டு போயிருக்கிறது அந்த விபத்து.

விரும்புவதை மட்டும் எடுத்துக் கொள்ள வாழ்க்கை நம்மை அனுமதிப்பதில்லை, அதே சமயம் அது கொடுப்பதையெல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கு அத்தனை எளிதானதாக இல்லை.

தகவல் தெரிந்த பிறகு நேற்று மதியத்திலிருந்து எதையும் செய்ய இயலவில்லை. மொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்து அஸ்தமனாக்குவதை ‘விதி’ என்று ஆறுதல்படுத்திக் கொண்டு விட முடியவில்லை. இரண்டு குடும்பங்களின் இருபது ஆண்டுக் கனவுகள் வாகனத்தின் சக்கரங்களில் ரத்தச் சகதியோடு நசுக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து எனது மொத்த பால்யமும் கருகியது போல ஒரு உணர்வு. பாப்புச் சித்தியின் மகள் குழலினியின் ஃபேஸ்புக் பக்கத்தை துழாவிக் கொண்டிருந்தேன். அந்த பிஞ்சுப்பெண்ணின் விரல்கள் தட்டச்சிய வாக்கியங்களின் மூலமாக சில வார்த்தைகளாவது அவளோடு பேச வேண்டும் எனத் தோன்றியது. அவளுக்கு காது கேட்கவில்லை. அவளுடனான பேசும் முயற்சியில் எனது மொத்த இரவும் தீர்ந்திருந்தது. அவர்களின் மொத்த வாழ்வும் தீர்ந்துவிட்டது என்று புரிந்த போது தூக்கமே வராமல் தூங்கிப் போயிருந்தேன்.