May 14, 2013

சொல்லியடித்தால் அது கில்லிதான்..


“பையன் புத்திசாலி, ஐ.ஏ.எஸ் கூட ஈஸியா பாஸாகிடுவான்...அதனால் அவன் கலெக்டர்தான் ஆக வேண்டும்” இப்படி உசுப்பேத்தி ரணகளமாக்கும் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஒரு அட்வைஸ் செய்யச் சொன்னால் என்ன சொல்வீர்கள்? 

நானாக இருந்தால் “Please..கொஞ்சம் அடங்குங்க” என்பேன்.

+2 முடிக்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பில் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். ஐ.ஏ.ஏஸ் ஆனாலும் சரி; ஏரோநாட்டிகல் சயின்ஸானாலும் சரி- அந்த ஆர்வம் மாணவர்களிடமிருந்துதான் வர வேண்டும். அதை விட்டுவிட்டு நமது விருப்பத்தை எல்லாம் பிள்ளைகளிடம் திணிக்கக் கூடாது.
‘நான் கலெக்டராக நினைத்தேன். என்னால்தான் முடியவில்லை அதனால் எனது மகனாவது கலெக்டர் ஆகவேண்டும்’ என்று அழிச்சாட்டியம் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும்  இருக்க முடியாது. 

பையன் பத்தாம் வகுப்பில் 450 வாங்கியிருப்பான். அவனுக்கு பொருளாதாரமோ அல்லது வணிகவியலோ படிக்கலாம் என்ற விருப்பம் இருந்திருக்கும். ஆனால் இங்குதான் 425  மதிப்பெண்ணைத் தாண்டிவிட்டால் முதல் க்ருப்பில்தான் சேர வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆயிற்றே. பொடனியில் கையைப் வைத்துத் தள்ளி ஃபர்ஸ்ட் க்ரூப்பில் சேர்த்திருப்பார்கள்.  அதோடு நில்லாமல், +2வில் 1150 மதிப்பெண்களைத் தாண்டி விட வேண்டும் என அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அவன் கழுத்தை நெரிப்பார்கள். கடைசியில் அவன் நொந்து 800+  மதிப்பெண்களோடு நூடுல்ஸ் ஆகிவிடுவான். அவ்வளவுதான். சோலி சுத்தம்.

இக்பால் சிங் தலிவால்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1996 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியவர் யாரென்று தேடினால் இந்தப் பெயரை கேள்விப்படக்  கூடும்.

ஆமாம். அந்த ஆண்டு இக்பால்சிங்தான் சிவில் சர்வீஸஸ் தேவில் முதல் ரேங்க். 

இக்பால் சிங் பள்ளிப் படிப்பிலேயே பட்டாசு கிளப்பியவர். அந்த படி படித்ததற்கு நாமாக இருந்தால் அடுத்த குறி டாக்டர் அல்லது இஞ்ஜினியராக இருந்திருக்கும். ஆனால் இக்பால் சிங் தலிவால் டாக்டரும் ஆகவில்லை, இஞ்ஜினியரும் ஆகவில்லை. பொருளாதாரம் படித்தார். டெல்லி யுனிவர்சிட்டியிலேயே ‘தல’தான் முதல் ரேங்க். அடுத்து எம்.ஏவிலும் அடித்து தூள் கிளப்பிவிட்டு அதே ஆண்டு எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் 229வது ரேங்க். ஆனால் அதோடு திருப்தியடையவில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதில் முதல் ரேங்க்கை அள்ளி எடுத்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்வதற்கு கூட ஆளாளுக்கு ஐந்து முறை, ஆறு முறை முக்கிக் கொண்டிருக்க இரண்டாவது முறையே இந்திய அளவில் முதல் ரேங்க் எடுக்கக் அவர் சொன்ன ஒரே காரணம் “ஆர்வம்”. பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது.

ஐ.ஏ.எஸ் பயிற்சியை தமிழ்நாடு Cadre இல் வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்பால் சிங் பணிக்கு சேர்ந்த இடம் கோபிச்செட்டிபாளையம். துணைக் கலெக்டராக வந்து சேர்ந்தார். அப்பொழுது  நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழாசிரியர் பாரிமணியம்தான் அவருக்கு தினமும் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் அவர் மூலமாக அவ்வப்போது  இக்பால் சிங்கிடம் பேசியிருக்கிறேன். அப்பொழுது எனக்கு ஆங்கிலம் பேச வராது. துணைக் கலெக்டருக்கு தமிழ் முழுமையாகத் தெரியாது என்பதால் இரண்டு பேருமே உளறிக் கொள்வோம்.  வீட்டில் ‘துணைக் கலெக்டரிடம்’ பேசுவேன் என்று சொன்ன போது யாருமே நம்பவில்லை. பிறகு அவர் பிறந்த ஊர், அவர் வாக்கிங் அழைத்து வரும் நாய்க்குட்டியின் பெயரை எல்லாம்  சொல்லத் துவங்கிய போது வீட்டில் எனக்கு மரியாதை உண்டாகியிருந்தது. அவர்தான் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் ‘கில்லி’.

அனுமதியில்லாத கடைகளை தூக்குவதும், மணல் கடத்தல் லாரிகளை மடக்குவதும், அரசியல்வாதிகளை அடக்குவதுமாக இக்பால்சிங் தலிவால் எங்கள் ஏரியாவில் கதாநாயகன் ஆகிக் கொண்டிருந்தார். ‘அதிகாரிகள் ஆரம்பத்தில் இப்படித்தான் துள்ளுவார்கள் பிறகு அடங்கிவிடுவார்கள்’ என்று விமர்சித்தார்கள். விமர்சித்தவர்களின் முகத்தில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கரியைப் பூசினார். அவர் நினைத்திருந்தால் ஆட்களை மிரட்டியும், தனது பாக்கெட்டை நிரப்பியும் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ‘அடங்காப்பிடாரி’ என்பதைத்தான் தொடர்ந்து தனது அடையாளமாக்கிக் கொண்டிருந்தார். 

தனது வேலையோடு சேர்த்து கிராமங்களின் சமூக-பொருளாதார நிலை குறித்தான கட்டுரைகளை எழுதினார். ஈரோடு மாவட்டத்தின் மலைவாழ் பிரதேசங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்  குறிப்புகளை உருவாக்கினார், நிலச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். கவனித்துப் பாருங்கள். இந்தச் செயற்பாடுகள் அனைத்துமே அவரது விருப்பமான பொருளாதாரவியல் சார்ந்தே இருந்தது.

இதன் பிறகு சில அரசுத் துறைகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்பொழுதும் அவர் யாருக்கும் ‘அடங்கவில்லை’ என்றுதான் பேசிக் கொண்டார்கள். அவரை நம்மவர்கள் பந்தாடியிருக்கக் கூடும் அல்லது தனது பொருளாதார ஆர்வப் பசிக்கு ‘பெஞ்ச் தேய்க்கும்’ வேலைகளின் மூலமாக சோறு கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும். அவர் செய்த காரியம் சிம்பிளானது. ஐ.ஏ.எஸ்ஸைத் தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். 

இப்பொழுது பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஐ.ஏ.எஸ் என்பது அந்தத் தேர்வில் ஜெயித்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நான்கைந்து ஆண்டுகளில்  ஒருவர் தூக்கியெறிந்தார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? அதுவும் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தவர் .அவர் விரும்பியிருந்தால் அரசியல்வாதிகளின் காலை நக்கிக்  கொண்டு சைரன் வைத்த காரும், கஜானா நிறைய பணமுமாக இருந்திருக்க முடியும். ஏதாவது துறையில் ‘செகரட்டரி’ ஆகி பதவியின் பந்தாவிலும், பணத்தின் குளுமையிலும்  வாழ்க்கையின் மீதி நாட்களை ஓட்டியிருக்க முடியும்.

ஆனால் அதிகாரம், பதவி, பணம் என அத்தனையும் துறந்த இக்பால் சிங் தாலிவால் இப்பொழுது அமெரிக்காவின் நெம்பர்.1 பல்கலைக்கழகமான மாசச்சூசெட்ஸில் பொருளாதாரத் துறையில்  பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் கூட அவரிடம் ஏன் ஐ.ஏ.எஸ்ஸைத் துறந்தீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லக் கூடிய காரணம் “ஆர்வம்” என்பதாக இருக்கும் என  நம்புகிறேன்- பொருளாதாரத் துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வம்.

இப்பொழுது இக்பால் சிங் தலிவாலைப் பற்றிக் குறிப்பிடக் காரணம்- ஆர்வம் மட்டுமே ஒருவனது கல்வியையும், வாழ்க்கையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்துவதற்காக. அப்படி மட்டும் அமைந்துவிட்டால் அந்தத் துறையில் அவன் ‘கிங்’ ஆகிவிட முடியும். எங்கெல்லாம் நாம் அரைகுறையாக இருக்கிறோமோ அங்கெல்லாம்தான் நாம்  அடுத்தவனுக்கு பயப்படுவோம். எங்கெல்லாம் நாம் கோலோச்சும் அளவுக்கு ‘சப்ஜெக்டை’ அறிந்து வைத்திருக்கிறோமோ அங்கெல்லாம் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். கோலோச்ச  வேண்டுமானால் அந்தத் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வம்தான் கற்பதற்கான மனநிலையை உருவாக்கும். இந்த கற்றல்தான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். 
அந்தத் தன்னம்பிக்கைக்கு ஒரே வழி- நமக்கு பிடித்த, நமக்கு ஒத்துவரக் கூடிய துறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான். 

உங்களின் மகனோ அல்லது மகளோ அவர்களுக்கு விருப்பமான துறையத் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். ஜெயிப்பதையும் தங்கள் துறையில் கில்லியடிப்பதையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!