விருது வாங்கியாகிவிட்டது.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்தால் அதிகபட்சம் ஏழு மணி நேரம்தான் பிடிக்கும். வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குத்தான் நிகழ்ச்சி. அதிகாலையில் கிளம்பியிருந்தாலும் கூட போதும்தான் ஆனால் பகல் நேர வெயில் பயணத்திற்கு பயந்து வியாழன் இரவே கிளம்பியிருந்தேன். கிளம்பிய பிறகுதான் தெரிந்தது நம் ஆட்களோடு ஒப்பிட்டால் வெயில் எவ்வளவோ தேவலாம் என்று. கிடைத்ததை எல்லாம் நொறுக்குகிறார்கள் அல்லது கொளுத்துகிறார்கள் என்றார்கள். கிருஷ்ணகிரியிலிருந்தே கிலி ஆரம்பித்துவிட்டது. பேருந்தை கொளுத்தினால் தப்பிக்க வழியிருக்கிறதா என்றெல்லாம் மனம் கணக்கு போட ஆரம்பித்திருந்தது. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மூன்று நான்கு பேருந்துகளை வரிசையாக ஓடச் செய்து முன்புறமாக போலீஸ் ஜீப்பை ஓட்டினார்கள். எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கை எட்டிப்பார்த்த போது தூங்கிப் போனேன்.
கார்த்திக் பள்ளிப்பருவ நண்பன். சென்னையில் இறங்கியதுமே அவனது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான். பகல் நேரத்தில் வெளியில் வரும்போதெல்லாம் சூரியனார் பாட்ஷா ஸ்டைலில் ‘உள்ளேளேளேஏஏஏ போ’ என்றதால் நாள் முழுவதும் அறைக்குள் கிடந்தேன். மாலையில் ஐந்து மணிக்கு புக் பாய்ண்ட் அரங்கத்தில் இருந்தேன். அநேகமாக நான்தான் முதல் ஆள். மெதுவாக கூட்டம் சேரத் துவங்கியது. மனுஷ்ய புத்திரனின் வரவேற்புரைக்கு பிறகு விருது கொடுத்தார்கள்.
சிறுகதை, நாவல், கவிதை, உரைநடைகள், சிற்றிதழ், இணையம் என்ற வரிசையில் விருதைக் கொடுத்துவிட்டு பெற்றுக் கொண்டவர்களிடம் இரண்டு அல்லது ஒரு கேள்வியைக் கேட்டார்கள். முதலில் மேடையேறிய அஜயன் பாலாவிடம் கேள்வி கேட்டபோது என்னிடமும் அதே கேள்வியைத்தான் கேட்பார்கள் என பதிலை தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அடுத்ததாக மேடையேறிய தமிழ்மகனிடம் வேறொரு கேள்வியைக் கேட்டு குண்டு போட்டுவிட்டார்கள். இனி எந்தத் தயாரிப்பும் பயன்படாது என்று முடிவு செய்து கொண்டேன். என்னை மாதிரியான ஆட்களுக்கு மேடையில் மட்டுமில்லை, மேடைக்கு கீழாக கேள்வி கேட்டால் கூட நேர்பேச்சில் பதில் சொல்லத் தெரியாது. அதனால் எது நடந்தாலும் விதிப்படி நடக்கட்டும் என அமர்ந்திருந்தேன். இந்த கேள்வி வைபவம் முடிந்த பிறகு குறிப்பிட்ட விருதுக்கான தேர்வுக்குழுவிலிருந்து ஒருவர் பேசினார். உதாரணமாக தமிழ்மகன் நாவலுக்கான சுஜாதா விருதை பெற்றுக் கொண்டு, சுகிதாவின் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னார்- சுகிதாதான் தொகுப்பாளர்; கலைஞர் செய்தியில் வருவார் என்றார்கள். கேள்விக்கான பதிலை தமிழ்மகன் சொல்லி முடித்தவுடன் நாவலைத் தேர்ந்தெடுத்த குழுவின் உறுப்பினரான இமையம் பேசினார்.
சிறுகதைக்கு அழகிய பெரியவன், கவிதைக்கு கலாப்ரியா, உரைநடைக்கு பாரதி மணி, சிற்றிதழுக்கு அ.முத்துக்கிருஷ்ணன், சுஜாதாவின் எழுத்துலகம் பற்றி பாரதி கிருஷ்ணகுமார் என்று எல்லோருமே தத்தமது பேச்சுக்கான சிரத்தையான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். பேச்சுகளும் நேர்த்தியாக இருந்ததாகத் தோன்றியது. “அப்படீன்னா இணையத்துக்கு?”-இதுதானே உங்கள் கேள்வி. சொல்கிறேன் இருங்கள்.
(திருமதி. சுஜாதா ரங்கராஜன் விருது வழங்குகிறார். அருகில் கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், கலாப்ரியா, எழுத்தாளர் இமையம் மற்றும் திரு.பாரதி கிருஷ்ணகுமார்)
மற்ற ஏழுபேருக்கும் விருது கொடுத்து முடித்தவுடன் எனக்கு விருதை கொடுத்துவிட்டு சுகிதா என் மீது வன்முறையை ஏவினார். அதாவது கேள்வி கேட்டார். “இனிமேல் ஃபேஸ்புக் ட்விட்டரில் எல்லாம் காவல்துறை வரப்போகிறது, ஏற்கனவே 66A சட்டம் வந்துவிட்டது..இதோட பாதிப்பு எப்படி இருக்கும்” என்ற ரீதியில் கேள்வி இருந்தது. இந்தக் கேள்வி ஏதாவது ஃபேஸ்புக் போராளிக்கு போயிருக்க வேண்டும். தெரியாத்தனமாக என்னிடம் கேட்டுவிட்டார் போலிருந்தது. “கழுவுன மீன்ல நழுவுற மீனா இருந்துட்டு இருக்கேன்..எனக்கு என்னங்க பிரச்சினை வரப்போகுது?” என்றேன். அதுதான் உண்மையும் கூட. போராளியாகவோ, செயற்பாட்டாளாரகவோ, சமூகத்திற்கான் ஊழியக்காரனாகவோ நான் இருக்கப் போவதில்லை. அப்படி இருப்பதற்கான குடும்பச் சூழலும் இல்லை; திராணியும் இல்லை. இதைச் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கப்படவும் இல்லை.
பிறகு எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வி வருகிறதல்லவா? அடிப்படையில் சுயநலம்தான். நம் அன்றாட வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு impactful event நடந்துவிடுகிறது. அது துக்கமானதாகவோ, சந்தோஷமானதாகவோ அல்லது பரிதாபத்திற்குரியதாகவோ- எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வைக் கொண்டாடக் கூடியதாக மாற்றிவிட்டால் வாழ்க்கை சுவாரசியமானதாகிவிடுகிறது என நம்புகிறேன். அந்த சுவாரசியப்படுத்தலை எழுத்து மூலமாக செய்ய முடியும் என்பது எனது எளிய நம்பிக்கை. அவ்வளவுதான்.
இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். “அப்படீன்னா இணையத்துக்கு?” பதில் : “ம்ஹூம்”. இணையத்திற்கான விருதை தேர்வு செய்த குழுவிலிருந்து இயக்குநர் ராம் பேசினார். இரா.முருகனோ அல்லது மனோஜோ ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. ப்ச்!
ஒரு சினிமாக்காரர் இலக்கியக் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று நான் உருவகம் செய்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு எந்த பங்கமும் வராமல் வந்து விட்டு போனார் இயக்குநர். எந்தத் தயாரிப்பும் குறிப்பும் இல்லாமல் வந்திருப்பார் போல. மேடைக்கு குறிப்போடுதான் வர வேண்டுமில்லை ஆனால் தயாரிப்போடு வந்திருக்கலாம்.
இயக்குநர் ராம், தனது பேச்சில் பெரும்பாலும் வலைப்பதிவுகளில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசினார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சுஜாதா காலத்திலிருந்தே பேசப்பட்ட டெம்ப்ளேட்டான பிரச்சினைகள்தான். அதாவது திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு மரத்துப் போன பிரச்சினைகள். ‘டைரி மாதிரி எழுதுகிறார்கள். ஐடியாலஜி இல்லாமல் எழுதுகிறார்கள்’etc.,etc.
வேறு ஏதாவது பேசுவோமே!
பிறமொழிகளில் வலைப்பதிவுகள் எப்படியிருக்கின்றன? தமிழில் வலைப்பதிவுகள் ஏதேனும் தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றனவா? இல்லையெனில் ஏன்? ஆமாமெனில் என்னென்ன? ஃபேஸ்புக், ட்விட்டர் என்பவை வலைப்பதிவின் வேறொரு பிம்பங்களா அல்லது வேறு உலகங்களா? பேசுவதற்கு எத்தனையோ இருக்கிறது.
நிசப்தம் பற்றியும் பேச வேண்டும் என்பதற்காக ஒரு பதிவு பற்றி ஆரம்பித்தார். “நான் துலுக்கம்பாளையம் வழியாக அடிக்கடி போய் வந்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது” என்று ஆரம்பித்தார். அப்படி ஒரு ஊர் இருப்பது எனக்கும் தெரியாது என்பதால் “அது Fiction தான்” என்று சொல்லி அவரை நிறுத்திவிட்டேன். உண்மையாகச் சொன்னாரோ அல்லது நக்கலாகச் சொன்னாரோ தெரியாது- “அது Fiction என்று முன்பே தெரிந்திருந்தால் நிசப்தத்தை சிபாரிசு செய்திருக்கவே மாட்டேன்” என்றார். அந்தக் கதை இத்தனைக்கும் ‘மின்னல் கதைகள்’என்ற லேபிளில்தான் இருக்கிறது. பிறகு எப்படி நிகழ்ந்த சம்பவம் என்று நினைத்தார் என்று தெரியவில்லை. குத்துமதிப்பாக சிபாரிசு செய்திருக்கிறார் போலிருக்கிறது.
விருது வாங்கிய பிறகு நடுவர்களில் ஒருவரைப் பற்றி பேசுவது நாகரீகம் இல்லையோ என்று தோன்றியது. ஆனால் எனக்கு கிடைத்திருக்காத பட்சத்தி ல் நடுவர்களில் ஒருவரை திட்டினால் அது நாகரீகம் இல்லை. அதுவே எனக்கு கொடுத்த பிறகு “ஒழுங்காக பார்த்திருந்தால் என்னைவிட தரமான இன்னொருவருக்கு கொடுத்திருக்கலாமே” என்று திட்டுவதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. சரி, அது நம் பிரச்சினை இல்லை.
போகிற போக்கில் “தமிழ் சினிமா இன்றைய தமிழ் இலக்கியத்தை விட ஒரு படி மேலே இருக்கிறது” என்று ராம் பீற்றிக் கொண்டு போனதுதான் எனது ஒட்டுமொத்த கடுப்பையும் கிளறிப் போட்டுவிட்டது. அஜயன் பாலாவும், மனுஷ்ய புத்திரனும் அவருக்கு பதில் சொன்னார்கள். ஆனாலும் ராம் பேசியதுதான் மனதுக்குள் பதிந்திருக்கிறது.
‘நீ எப்படி அப்படிச் சொல்லலாம்?’ என்று இலக்கியத்திற்கான வக்கீலாக மாறி ராமை நோக்கி கை நீட்ட நான் மாற விரும்பவில்லை. அதே சமயம் ராம் எந்த இலக்கியத்தை படித்துவிட்டு இதைச் சொன்னார் என்று தெரியவில்லை. எந்தச் சினிமாவை முன்வைத்து பேசினார் என்றும் புரியவில்லை. சினிமாவில் இரண்டு படம் எடுத்தவுடன் ‘ஜட்ஜ்மெண்ட்’ எழுதும் இடத்தை பிடித்துக் கொள்கிறார்கள். நாமும் சிரித்து கைதட்டி விடுகிறோம். இன்றைய சினிமா X இலக்கியம் என்ற ஒப்பீட்டை ஒரு மேடையில் பேசும் போது குறைந்தபட்சம் இன்றைய இலக்கியத்தில் தனக்கான பரிச்சயத்தை ஒரு சினிமாக்காரன் சொல்லிவிட்டு பேசுவதுதான் முறையாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் வெளிவருகிற புத்தகங்களில் மோசமான புத்தகங்கள் என்று நிராகரித்துவிட்டாலும் கூட குறைந்தது ஐந்து கவிதைத் தொகுதிகள் தப்பித்துவிடும். நான்கு சிறுகதைத் தொகுதிகளாவது கையுயர்த்திக் காட்டும். இரண்டு நாவல்களாவது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும். இதில் எதை வாசித்துவிட்டு ராம் பேசுகிறார் என்று சொல்லியிருந்தால் எழுந்து நின்று தட்டாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் அமர்ந்து கொண்டாவது கை தட்டியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு கலகலப்புக்கும், பரபரப்புக்குமாக இத்தைகைய Sweeping statement களை பயன்படுத்தினால் ஒன்றுதான் சொல்ல முடியும். அதுவும் வேண்டுகோளாக..
“ப்ளீஸ்.. உங்களின் இத்தகைய காமெடிகளுக்கு ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”