May 6, 2013

குலேபகாவலி

நடிகைகளின் கதைகள் எப்பொழுதும் கிளுகிளுப்புக்கானவையாக மட்டுமே இருப்பதில்லை. எந்த வெளிச்சமும் இல்லாமல் அழிந்து போகும் ஏகப்பட்ட துக்கமான கதைகளும் இருக்கின்றன...

குலேபகாவலி என்று ஒரு குழந்தைப் பருவ விளையாட்டு. சிக்கலான விளையாட்டெல்லாம் இல்லை. ஒன்று..இரண்டு..மூன்று என பத்து வரைக்கும் ஒருவர் எண்ணிக் கொண்டிருப்பார். அதற்குள் மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். எண்ணிக் கொண்டிருந்தவர் ‘குலேபகாவலி’ என்று சொல்லியவாறு தேட ஆரம்பிக்க வேண்டும். முதலில் யார் சிக்குகிறார்களோ அவர்தான் அடுத்த குலேபகாவலி. சிம்பிளான விளையாட்டு. நாங்கள் கில்லி, தெள்ளு விளையாடி பழகுவதற்கு முன்பாகவே விளையாடிய விளையாட்டு அது. 

எதற்காக அந்த விளையாட்டுக்கு ‘குலேபகாவலி’ என்ற பெயரை வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. குலேபகாவலி படத்தில் ஒரு மூலிகையைத் தேடி எம்.ஜி.ஆர் வெளிநாடு செல்வாராம். அவரைப் போலவே அடுத்தவர்களைத் தேடிச் செல்வதால் விளையாட்டிற்கும் அந்தப் பெயரை வைத்துவிட்டிருக்கக் கூடும். ஸ்ஸ்ப்பா... No more மொக்கை ஆராய்ச்சி! 

இப்பொழுது குலேபகாவலியை நினைத்துக் கொள்ள காரணம் டி.ஆர்.ராஜகுமாரி. அந்தப்படத்தில் அவர்தான் நாயகி. அந்தக் கால கனவுக்கன்னி. அந்தக் காலம் என்றால் வெகுகாலம் ஆகிவிட்டது. என் அப்பா 1948 ஆம் ஆண்டு பிறந்தார். அதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ராஜாயி சினிமாவுக்காக ராஜகுமாரி ஆகி சில படங்களில் நடித்துவிட்டார் என்பதால் நிச்சயம் என் தாத்தாவுக்குத்தான் கனவுக்கன்னியாக இருந்திருக்க முடியும்.

நடிகைகளைப் பற்றி தாத்தா ஒரு முறை பேசியது ஞாபகத்திலிருக்கிறது. வீட்டின் ஆசாரத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர் ஒருவருடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது சில நடிகைகளின் பெயர்களைச் சொன்னார். அதில் ஒன்று டி.ஆர்.ராஜகுமாரி. அவர் சொன்ன பெரும்பாலான பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. டி.ஆர்.ராஜகுமாரியை குறிப்பிடும் போது மட்டும் அவரது பங்களா ஒன்றைப் பற்றியும் சிலாகித்தார். அது மிகப்பெரிய மாளிகை என்றும் அது போன்ற மாளிகையை சினிமாக்காரனால் மட்டும்தான் கட்ட முடியும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர் மட்டும் பதிந்து போனது. ஆனால் அந்த பங்களா பற்றிய தகவல்கள் எதையும் கண்டெடுக்க முடியவில்லை.

சமீபத்தில் டி.ஆர்.ராஜகுமாரியின் பங்களா பற்றிய சிறு குறிப்பு ஒன்று கிடைத்தது.  ‘கச்ச தேவயானி’ (இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?) படத்தில் அறிமுகமாகி சில படங்களிலேயே அவர் சூப்பர் ஸ்டாரினி ஆகிவிட்டாராம். பிறகுதான் தாத்தா சொன்ன அந்த மாளிகையை சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் ராஜகுமாரி கட்டியிருக்கிறார். அந்த பங்களாவுக்கு ‘கன்னிகா பவனம்’ என்று பெயர் வைத்திருந்தாராம். சரியான பெயர்தான்- ராஜகுமாரி கடைசி வரைக்கும் திருமணமே செய்து கொள்ளவில்லை. 

சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது அந்தக் கட்டடம் இருந்த இடத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. ராஜகுமாரியின் தியேட்டர் இருந்த இடத்திற்கு போய் பார்க்கச் சொன்னார்கள். அந்தக் கட்டமும் இப்பொழுது இல்லை என்றார்கள். கிளம்பி வந்துவிட்டேன். 

குறிப்பிட்ட இடங்களையோ அல்லது கட்டங்களையோ தேடிப் போவதில் ஒரு ‘த்ரில்’ இருக்கிறது அல்லவா? அதுவும் கனவுக்கன்னிகளின் இடங்கள் என்றால் இன்னமும் த்ரில்தான். தாத்தா காலத்து ராஜகுமாரி, அப்பா காலத்து சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, அண்ணன் காலத்து ஸ்ரீப்ரியா, அம்பிகா என் காலத்து மீனா, ரம்பா, ரோஜா என்ற பட்டியலையும் அவர்கள் வாழ்ந்த இடத்தையும் பற்றிய லிஸ்ட் ஒன்றை தயாரிக்க வேண்டும் போலிருக்கிறது.

அவர்களை நேரில் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் கொடிகட்டிய காலத்தில், மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்த நேரத்தில், சினிமாக்காரர்களாலும் பத்திரிக்கையாளர்களாலும் நிரம்பி வழிந்த அந்த இடம் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் அது எப்படி இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

அஜயன் பாலாவின் சிறுகதை ஒன்றில் இப்படியான சம்பவம் இருக்கிறது-

பத்து வருடங்களுக்கு முன்பாக கதையின் நாயகன் ஏதோ ஒரு புள்ளிவிவர கணக்கீட்டுக்காக ஊட்டிக்குச் செல்கிறான். அப்பொழுது அவனுக்கு பெண்களின் மீது குறுகுறு பார்வையைச் செலுத்துகிற விடலைப் பருவம். ஊட்டி போகிற வழியில் பேருந்து நின்றுவிடுகிறது. மழை பெய்து ஓய்ந்த அந்த இரவில் நாயகனின் கண்காணிப்பாளர் தனது சொந்தக்காரரின் வீடு ஒன்றிற்கு அவனை அழைத்துச் செல்கிறார். அது மசினகுடி என்ற சிற்றூர். அந்த இரவின்  வானமும் நட்சத்திரங்களும் பள்ளத்தாக்குகளும் நாயகனை பெரிதும் பரவசப்படுத்துகின்றன. வீட்டிற்கு முன்பாக நின்று கதவைத் தட்டுகிறார்கள். அந்த வீட்டில் இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களது அம்மாவும் அப்பாவும் ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள். இரண்டு பெண்களையும் பார்த்து நாயகன் பெரும் உற்சாகம் அடைகிறான். ஆனால் திடீர் திருப்பமாக அந்தப் பெண்கள் நாயகனை தனது இறந்து போன சகோதரனுடன் ஒப்பிடுகிறார்கள். அவர்களில் இளையவள் அவனை அண்ணா என்று அழைக்கிறாள். பெண்களை பெண்களாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு ‘அண்ணா’ என்றழைப்பது வித்தியாசமாகத் தெரிகிறது. இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறான். உற்சாகமாக சீட்டு விளையாடியவாறே தூங்கிப் போகிறார்கள். அந்த இரவு அவனுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்துவிடுகிறது. 

அடுத்த நாள் வெளிச்சம் வருவதற்கு முன்பாகவே கிளம்ப வேண்டியிருக்கிறது. அந்த இரவும், நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும், பள்ளத்தாக்கும் அவனுக்குள் அரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.

பத்து வருடங்களுக்கு பிறகாக நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் ஐடியாவாக அந்த வீட்டிற்கு போகலாம் என்கிறான். நண்பரும் சரி என்கிறார். வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதோ அந்தப் பெண்களை பார்ப்பதோ அவர்களின் நோக்கம் இல்லை. அந்தக் கதவை இரவில் தட்டிவிட்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான். 

ஊட்டிக்குச் செல்லும் போது பேருந்து பழுதடைந்துவிடுகிறது. அந்தப் பெண்களின் வீட்டிற்கு திட்டமிட்டபடி இரவில் போக முடிவதில்லை. விடிந்த பிறகுதான் செல்கிறார்கள். போகும் போது அந்த இடமே மாறியிருக்கிறது. அந்த வீடுகள் இடிக்கப்பட்டு ஒரு ரிஸார்ட் கட்டப்படுவதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறார்கள். நாயகன் அதிர்ச்சியடைகிறான். எதை எதையோ நினைத்து அழத் துவங்குகிறான் என்பதாக கதை முடியும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஆணும் தன் வாழ்நாளின் ஒரு கட்டத்தில் ஒரு நடிகையால் அவஸ்தை அடைந்திருப்பான் அல்லவா? நான் அடைந்திருக்கிறேன் - அந்த நடிகைகள் வாழ்ந்த இடங்களையும் அவர்களது கவர்ச்சி முடிந்து போன காலத்தில் அவர்களின் நிலையையும் தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. ஆனால் அது பெரும்பாலும் துயரமான சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் நடிகையாகி, கனவுக்கன்னியாக கொடிகட்டி, மிகப்பெரும் செல்வந்தப் பெண்மணியான ராஜகுமாரி, பிறகு படங்களைத் தயாரித்து, நஷ்டமடைந்து, சொத்துக்களை எல்லாம் இழந்து கடைசியில் எதுவுமே இல்லாமல் கெட்டிவாக்கத்தில் ஒரு உறவினரின் வீட்டில் இறந்து போனாராம். 

சிதிலமடைந்து கிடக்கிறதாம் தியாகராஜ பாகவதரின் சமாதி.

பி.யு.சின்னப்பாவுக்கு நினைவிடம் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. அவரது மகன் பி.யு.சி.ராஜபகதூர் சில படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுது என்ன ஆனாரோ?

சூப்பர் ஸ்டார்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நடிகர்களைப் பற்றி யோசிப்பது கூட பரிதாபமாகத்தான் இருக்கிறது.

தேடிப்போனால் குலேபகாவலிதான்.