May 3, 2013

தலைவா...


ஐம்பத்தியேழு வயது. கறுப்பும் வெள்ளையும் கலந்த தாடி. குல்லா, பழைய லுங்கி, வெள்ளை நிற பைஜாமா.... இது ஒரு நார்மலான இஸ்லாமிய பெரியவரின் கெட்டப்தானே?...கெட்டப் சாதாரணம்தான்...ஆனால் இந்த பெரியவரின் கதை சற்று வித்தியாசமானது....

இஸ்மாயில் எப்பொழுதும் இந்த கெட்டப்பில்தான் இருப்பார். இப்பொழுது முன்பு இருப்பதைவிடவும் தேஜஸூடன் இருந்தார். முன்பு என்றால் மூன்று வருடங்களுக்கு முன்புவரை. துல்லியமாகச் சொன்னால் மூன்று வருடங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை. அப்பொழுதுதான் மும்தாஜ் படுக்கையில் விழுந்தாள். மும்தாஜ் யாரென்று சொல்லவில்லை அல்லவா? சொல்லாவிட்டால் என்ன? உங்களால் யூகம் செய்ய முடியும். இஸ்மாயிலின் மனைவிதான். 

சிறுவயதில் இஸ்மாயிலும் மும்தாஜூம் ஒரே வீதியில்தான் குடியிருந்தார்கள். இரண்டு பேரின் அப்பாவும் மார்க்கெட்டில் கடை போட்டிருந்தார்கள். ஒருவர் பூக்கடை இன்னொருவர் காய்கறிக்கடை. யார் எந்தக் கடை வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் அத்தனை முக்கியமான சமாச்சாரம் இல்லை. இஸ்மாயிலுக்கும் மும்தாஜூக்கும் பரஸ்பரம் இருவரையும் பிடித்தது. ஆனால் வெளிப்படையாக யாரிடமும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டதில்லை. அல்லாஹ்வின் கருணையாலோ என்னவோ அவர்களது பெற்றோர்களே சம்பந்தம் பேசி திருமணத்தை முடித்து வைத்துவிட்டார்கள். 

முதல் மூன்று வருடங்களுக்கு மும்தாஜின் வயிற்றில் புழுவும் வளரவில்லை பிள்ளையும் வளரவில்லை. அலோபதியிலிருந்து யுனானி மருத்துவம் வரை எந்த வைத்தியமும் கை கொடுக்கவில்லை. “வீட்டில் விசேஷம் இல்லையா?” என்று நச்சரிக்கத் துவங்கியிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது பெரிய எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. எதையாவது சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு கட்டத்தில் மும்தாஜ் மனம் தளர்ந்திருந்தாள். இஸ்மாயிலும்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவிதமாக மூன்றாம் வருடத்தில் கருத்தரித்துவிட்டாள். அப்படிப் பிறந்தவள்தான் அஸ்மா. அதன் பிறகு ஒவ்வொரு ஒன்றரை வருட இடைவெளியிலும் மும்தாஜ் ஒரு குழந்தையைப் பெற்றாள். மூன்றுமே பெண்ணாக போக, “இத்தோடு போதும்” என்று நிறுத்திக் கொண்டார்கள். அஸ்மாவுக்கு பிறகு ஹசீனா அவளுக்கு அடுத்தவளின் பெயர் ஷாஹினா.

இதன் பிறகு இஸ்மாயிலின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. ஆரம்பத்தில் லாரியில் க்ளீனராக இருந்தவர் பிறகு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு செல்லும் ஆட்டோ ஓட்டத் துவங்கினார். தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வளர்ச்சியயைக் காட்டிக் கொண்டிருந்தார். சொந்த ஆட்டோ, சொந்த வேன், வீடு, குடும்பத்தோடு ஹஜ் பயணம் என அக்கம்பக்கத்தினருக்கு வயிறெரியும்படியான வளர்ச்சி அது. அவர் கடத்தல் செய்வதாகவும், கள்ள நோட்டுக்கு ஏஜெண்ட்டாக இருப்பதாகவும் இன்னும் என்னனவோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மும்தாஜூம் அவளது பிள்ளைகளும் பூரித்துக் கிடந்தார்கள். 

மூன்று பெண்களும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால் ஹசீனா மட்டும்தான் கல்லூரி வரைக்கும் சென்றாள். மற்ற இரண்டு பேரும் பள்ளி தாண்டியதே பெரும்பாடாக இருந்தது. மும்தாஜூம், இஸ்மாயிலும் ஓவராக செல்லம் கொடுப்பதாக அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இருவரையும் அழைத்து கண்டித்தார். ஆனால் இருவரும் அது பற்றி சிரத்தை காட்டவில்லை.  “படிச்சவரைக்கும் போதும்” என பெண்களும் வீட்டிலேயே அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டார்கள். இப்படி ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில்தான் அந்தப் புயல் அடித்தது. மூன்று வருடம் ஐந்து மாதங்களுக்கு முன்பான புயல். 

வீட்டிற்கு முன்பாக ஏதோ ஒரு வேலையாக நடந்து போனவளை குடித்துவிட்டு கார் ஓட்டி வந்த ‘அடையாளம்’ தெரியாத நபர் அடித்து வீசிவிட்டார். வெளியேறிய ரத்தத்தை பார்த்தவர்கள் அப்பொழுதே அவள் முடிந்து போனதாக நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் ஆகியிருக்கவில்லை. தூக்கிக் கொண்டு பக்கத்து மருத்துவமனைக்கு ஓடிய போது அவர்கள் உடனடியாக பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பி வைத்தார்கள். ப்ளட் டெஸ்ட்டில் ஆரம்பித்து ஸ்கேன் வரைக்கும் அத்தனையும் முடித்து பார்த்த போது தண்டுவடத்தில் அடிபட்டிருப்பதாகவும் இடுப்புக் கீழே இனி இயங்காது என்றும் சொல்லிவிட்டார்கள்.

இஸ்மாயில் தன் வாழ்நாளின் மிகப்பெரியதான அதிர்ச்சிக்கு ஆளானார். அதே மருத்துவமனையில் மூன்று பெண்களும் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார்கள். இஸ்மாயில் இன்னொரு பக்கம் அழுது கொண்டிருந்தார். அந்த இடத்தில் யாரும் யாரையும் சமாதானம் படுத்துவதாக இல்லை. ஆறு மாதங்களுக்கு சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்தார்கள். முன்னேற்றம் எதுவும் இல்லை. இஸ்மாயில் இந்தச் சமயத்தில் தனது சொந்த வேன்கள் மூன்றையும் டிரைவர்களை நம்பி விட்டிருந்தார். அவர்கள் ஐந்நூறு ரூபாய்க்கு டீசல் அடித்துவிட்டு ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டிக் கொண்டும், சரக்குகளின் வாடகையில் ‘நியூட்டர்’விட்டுக் கொண்டும் இருந்தார்கள். இஸ்மாயிலுக்கு அப்பொழுது அது பற்றிய எந்தக் கவலையும் இல்லை- மும்தாஜ் நடமாடினால் போதும் என்று மட்டும்தான் நினைத்தார்.  

சிங்கப்பூர் அழைத்துச் சென்றால் வாய்ப்பிருக்கிறது என்று யாரோ சொன்னதால் அதையும் முயன்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். வீடு அடமானத்திற்கு போனது. கட்டுபடியாகவில்லை என்று விற்பனையும் ஆனது. ஆனாலும் மும்தாஜ் அப்படியேதான் இருந்தார். மும்தாஜூக்கு நன்றாக பேச்சு வந்தது. “நம் ஊருக்கே போய்விடலாம்” என்பதில் பிடிவாதமாக இருந்தார். திரும்பி வந்த போது வாடகை வீட்டில்தான் குடியேறினார்கள். அதன் பிறகு சிறுநீர்ப்பாதையில் தொற்று, சிறுநீரக செயலிழப்பு என மும்தாஜின் பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போனால் வெறும் சோகக் கதையாக முடிந்துவிடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

இப்படியான பல பிரச்சினைகளுக்கு பிறகு அடுத்த சில மாதங்களில் மும்தாஜ் அவர்களை விட்டு நீங்கிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மும்தாஜ் விரும்பியதால் அஸ்மாவுக்கு சொந்தக்காரப் பையனை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். திருமணச் செலவுகளுக்காக ஓடிக் கொண்டிருந்த மூன்று வேன்களில் இரண்டை விற்க வேண்டியிருந்தது. அடுத்த சில மாதங்களில் இரண்டாவது மகள் ஹசீனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை துபாய் வாசம். ஹசீனா படித்திருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ‘வாழ்ந்து நொடிந்த’குடும்பம் என்று மாப்பிள்ளை வீட்டாரே செலவுகளைச் செய்து திருமணத்தை முடித்துக் கொண்டார்கள்.

மனைவி மறைந்த பிறகு இப்பொழுது கொஞ்ச நாட்களாக இஸ்மாயில் தானே வேன் ஓட்டுகிறார். ஓசூருக்கும் சேலத்திற்கும் ரெகுலர் சர்வீஸ் அடிக்கிறார். வண்டி ஓட்டுவது அவருக்கு பெரிய சிரமமாக இல்லை. முன்பெல்லாம் லாரிகளுக்கும்,வேன்களுக்கும் க்ளீனர்கள் உண்டு. இஸ்மாயிலே கூட க்ளீனராக வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான். ஆனால் இப்பொழுதெல்லாம் யாரும் க்ளீனராக வருவதில்லை. தானே வலம் இடம் பார்த்து, ரிவர்ஸ் பார்த்து திருப்புவதுதான் இஸ்மாயிலுக்கு சிரமம். மற்றபடி இரவில் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் பெரும்பாலும் பி.பி.ஸ்ரீனிவாஸோ, நாகூர் அனீபாவோ துணை இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் மூன்றாவது பெண்ணுக்கும் திருமணத்தை முடித்துவிட்டால் தனது கடமைகள் முடிந்துவிடும் என இஸ்மாயில் நம்பத் துவங்கியிருந்தார். ஷாஹினாவுக்கு அப்பாவை விட்டு பிரிவதில் அத்தனை விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால் எதிர்த்து எதுவும் பேசாமல் இருந்தாள். 

சில நாட்களுக்கு முன்பாக இஸ்மாயில் தனது பால்ய நண்பரான அபிபுல்லாவை சந்தித்தார். அவர் தனக்குத் தெரிந்த பையன் ஒருவனை ஷாஹினாவுக்கு முடித்துவிடலாம் என்றார். பையனுக்கு வேலையும் இல்லை, குடும்பமும் இல்லை. ஒழுக்கமான பையன் என்பது மட்டும்தான் தகுதி. பிழைப்புக்கு என்ன செய்வது என்று யோசித்த போது தனது வேனையே மாப்பிள்ளைக்கு கொடுத்துவிடலாம் என்று இஸ்மாயில் முடிவு செய்தார். பையனுக்கும் சம்மதம்தான். சாஹினாவும் தலையாட்டிவிட்டாள்.

நேற்றிரவு தனது வேனில் கடைசி ட்ரிப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு. இந்த ட்ரிப்புக்கு பிறகு திருமண வேலைகளைத் தொடங்க வேண்டும். இரவு பன்னிரெண்டு மணி ஆகிக் கொண்டிருக்கிறது. “இறைவனிடம் கையேந்துங்கள்..அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்று ஹனீபா பாடிக் கொண்டிருக்கிறார். ஆம்பூர் தாண்டிய பிறகு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பாரம் சுமந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வண்டியிலிருந்து முப்பது அடிக்கு முன்பாக சாலையின் குறுக்காக பெரிய மரம் போல ஒன்று கிடக்கிறது. இஸ்மாயில் லைட்டை அணைத்து ப்ரைட் ஆக்கினார். மரமேதான். ஏதோ விபரீதம் நடக்கிறது என இஸ்மாயில் யூகம் செய்து கொண்டார். அத்தனை எடையோடு வண்டியை வேகமாக ‘யூ டர்ன்’ அடிக்க முடியாது. வண்டியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

வண்டியை நிறுத்தியவுடன் ‘திபுதிபுவென’ நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இஸ்மாயில் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து கொண்டிருந்தார். வந்தவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இஸ்மாயிலை வண்டியை விட்டு இறங்கச் சொன்னார்கள். ஆனால் எதுவும் பேச அனுமதிக்கவில்லை. “பாய், உசுரு வேணும்ன்னா இடத்தை காலி பண்ணிடுங்க” என்றார்கள்.  தன் கதைகளைச் சொல்ல முயற்சித்தார். அதில் ஒருவன் “தலைவர் ஜெயிலில் இருக்காரு...பேசாம போயிடுங்க” என்றான். இஸ்மாயில் சொல்வதை கேட்க அவர்கள் தயாராக இல்லை. இஸ்மாயிலுக்கு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவதுதான் நல்லது என்று தோன்றியது.

மனமே இல்லாமல் நகர்ந்தார். அவரது கால்கள் பாரமாக இருப்பது போலத் தோன்றியது. தனது மகளின் வாழ்க்கையை கைவிடுவதாக தயங்கினார். முரட்டு ஆசாமிகள் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் வந்துவிட வேண்டும் என இஸ்மாயில் எதிர்பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை. நூறு மீட்டர் தாண்டியிருப்பார். இப்பொழுது வேன் எரியத் துவங்கியிருந்தது. திரும்பிப்பார்க்கத் தோன்றவில்லை. நெருப்புச் சத்தம் காதில் கேட்கத் ஆரம்பித்திருந்தது. அந்தச் சத்தம் ஏனோ மும்தாஜ் அழுவது போலவோ ஷாஹினா சிரிப்பது போலவோ இருந்தது.