May 30, 2013

அதுவா? இதுவா?

கல்லூரிக்குள் நுழையும் போது கனவுகளும், கலர்களுமாகத்தான் காலடி எடுத்து வைத்திருப்போம். ஆனால் முதல் செமஸ்டர் வருவதற்குள்ளாகவே ருத்ரதாண்டவம் தொடங்கும் பாருங்கள்.ஸ்ஸ்ப்பா...!அதுவும் தமிழ் மீடியத்திலிருந்து கல்லூரிக்கு போயிருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. கனவுகளிலெல்லாம் கணக்கு வாத்தியார்தான் வருவார், கலரெல்லாம் காலியாகி வெறும் கறுப்பு மட்டும்தான் பல்லிளிக்கும்.....

                                                            ***

பள்ளியில் படிக்கும் போது வாத்தியார் ஆகிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்தச் சமயத்தில் டீச்சர் ட்ரெயினிங் பாடம் பயங்கர பாப்புலர். அதை முடித்துவிட்டு எங்கள் பள்ளியிலேயே வாத்தியார் ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது கட்-ஆஃப் மார்க் சுமாராக வந்துவிட்டது. சில முடிவுகள் நமது விருப்பத்தின் பேரில் இருக்காது அல்லவா? அப்படித்தான் ஆகிப் போனது. வீட்டில் பெரியவர்கள் கூடிப் பேசி பொறியியல் குட்டைக்குள் தள்ளிவிடுவது முடிவு செய்துவிட்டார்கள். அதுவும் கொங்கு, பண்ணாரியம்மன் போன்று வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கல்லூரிகளில் சேர்ந்தால் அடிக்கடி ஊருக்கு வந்து கெட்டுப்போவேன் என்பதால் தூரமாக ஒரு கல்லூரியில் சேரச் சொன்னார்கள். என் மீதும் எனது நண்பர்களின் மீதும் வீட்டிலிருந்தவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

அப்படிச் சேர்ந்ததுதான் சேலம் சோனா கல்லூரி. சென்னையில் கவுன்சிலிங்கை முடித்துவிட்டு  பூத் ஃபோனிலிருந்து அம்மாவிடம் கல்லூரி பற்றிய விவரத்தைச் சொன்னபோது அவருக்கு அது பற்றி பெரிய திருப்தி இல்லை. அந்த ஊரும் அவருக்கு பிடிக்கவில்லை. கல்லூரியும் பாப்புலர் ஆகியிருக்கவில்லை. “சேலமா? அது ரவுடிக ஊருன்னு சொல்லுவாங்களே” என்று இழுத்தார். எதனால் அப்படியொரு நினைப்பை வைத்திருந்தார் என்று தெரியவில்லை. இப்பொழுது நான் சொல்ல வந்தது அது பற்றி இல்லை. வேறொரு சமாச்சாரம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியத்தில்தான் படித்திருந்தேன். கல்லூரியில் சேர்ந்த போது எங்கள் வகுப்பில் தமிழ்வழி கற்றவர்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள். ஐம்பத்தைந்து பேர் இருந்த அந்த வகுப்பில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களை பொறுக்கி எடுத்தால் பத்து பேர் கூட தேறவில்லை. ‘யார் எல்லாம் தமிழ் மீடியத்தில் படித்தீர்கள்?’ என்று கேட்கவே தேவையில்லை. முகத்தை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். அதுவும் என்னையெல்லாம் சர்வசாதாரணமாக கண்டுபிடித்துவிடுவார்கள். ‘படிய வாரிய தலைதான் ஒழுக்கத்தின் குறியீடு’ என்று யாரோ சொல்லி  வைத்திருந்தனால் ஒவ்வொரு மாதமும் புதிதாக ஒரு பாராசூட் தேங்காய் எண்ணெய் பாட்டில் வாங்க வேண்டியிருந்தது. அத்தனை எண்ணெயை அப்பி அழுந்த சீவிக் கொள்வேன். ‘ரப்பர் செருப்பு அணிபவன் குடும்பத்தின் சூழலை அறிந்தவன்’ என்று இன்னொரு ஸ்டேட்மெண்டும் மனதிற்குள் பதிந்திருந்ததால் பாராகனில் ஐம்பது ரூபாய்க்கு வந்த வெள்ளை நிறமும் நீல நிறமும் கலந்த ரப்பர் செருப்புதான் அடையாளம். இந்த மாதிரியான அடையாளங்களை மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் குத்து மதிப்பாக உங்களுக்கு ஒரு உருவம் மனதில் வந்திருக்கும் அல்லவா? இதே ‘ஸ்டைலில்’இன்னுமொரு நான்கைந்து நபர்களை உருவகம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு கேசவன், பெரியசாமி, கிருஷ்ணன், மணிகண்டன் என்று பெயர் சூட்டிவிட்டால் அதுதான் எங்கள் தமிழ் மீடியம் ‘பேட்ச்’.

உண்மையிலேயே கல்லூரியின் முதல் வருடத்தில் கிருஷ்ணன், பெரியசாமி, நானெல்லாம் திணறிக் கொண்டிருந்தோம். இஞ்ஜினியரிங் படிப்பு எங்களையெல்லாம் மொத்தமாக அமுக்கி சாவடிக்க முயன்று கொண்டிருந்தது. Current என்பது மின்னோட்டம் என்றும், Voltage என்பது மின்னழுத்தம் என்பதையும் புரிந்து கொள்ளவே கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. அப்புறம் எங்கே எலெக்ட்ரிக்கல் எஞ்சினீயர் ஆவது? கண்ட்ரோல் ஸிஸ்டம், ஃபீல்ட் தியரி என்ற சொற்களை கேட்கும் போதெல்லாம் கட்டி வைத்து, கண்ணையும் மறைத்து பொடனி அடியாக அடிப்பது போலவே இருக்கும்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நம்புவதற்கு கூட சிரமம்தான். ஆனால் அப்பொழுது Prefix, Suffix என்பதற்கான வித்தியாசம் கூட பெருங்குழப்பமாக இருந்தது. ‘பி’(prefix) என்று தொடங்கினால் அது  பின்னாடி இல்லை- மாறாக முன்னாடி அதுவே ‘ச’(suffix) என்று தொடங்கினால் அது பின்னாடி என்று குருட்டு அடியாக ஞாபகம் வைத்திருந்தேன். இப்படியான குருட்டு அடி புரிதல்கள்தான் ஏகப்பட்டது இருந்தது.

இப்படி குருட்டு அடியும், முரட்டுப்படிப்புமாக துவங்கிய பொறியியல் கல்வியில் கணிதம் படுத்திய பாடு இருக்கிறதே. இப்பொழுது நினைத்தாலும் கூட ரத்தக் கண்ணீர் வருகிறது. ராஜேஸ்வரி என்று ஒரு ஆசிரியை பாடம் எடுத்தார். வகுப்பிற்குள் வந்தும் வராததுமாக கரும்பலகை பக்கமாக திரும்பி நின்றுகொண்டு வரிவரியாக எழுதிக் கொண்டே போவார். சத்தியமாக ஒரு எழவும் புரியாது. அதோடு விட்டுத் தொலைய மாட்டார். திரும்பி கேள்வி வேறு கேட்பார். பள்ளிப்படிப்பு வரைக்கும் வெறும் பையன்கள் பள்ளியில் படித்ததால் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் டென்ஷன் ஆகவே மாட்டேன். “உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது” என்று கமுக்கமாக சிரித்துக் கொள்வோம். ஆனால் கல்லூரியில் அப்படியில்லை. சுற்றிலும் கலர் கலரான பெண்கள் இருந்தார்கள். பதில் தெரியாமல் எழுந்து நிற்கும் போது வெட்கம் தலையைக் கடித்து துப்பிக் கொண்டிருக்கும். பதில் தெரியவில்லை என்றால் அமரச் சொல்லவும் மாட்டார். அடுத்த பல நிமிடங்களுக்கு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்க வேண்டும். ஆசிரியரைச் சொல்லியும் குற்றமில்லை. அதுவரைக்கும் differentiation, integration என்ற சொற்களைக் கூட கேள்விப்பட்டதில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் இதையெல்லாம் தமிழ்ச் சொற்களின் வழியாகத்தான் படித்திருந்தோம் என்பதால் இப்படி புதிதாகக் கேள்விப்படும் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லையும் தமிழாக்கம் செய்து நாங்கள் புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்து விடும். அவரது ஒவ்வொரு வகுப்பு முடிந்த பிறகும் முதல்வேளையாக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். பேயறைவது என்பதை நேரடியாக உணர்ந்த தருணம் இது. இப்படித்தான் கணிதம், Basic Engineering என்று ஒவ்வொரு பாடமும் கூடி எங்களை வைத்து கும்மியடித்தன.

ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு பாடம் புரிவதில் வேண்டுமானால் சிரமம் இருக்குமே தவிர மொழி புரிவதில் பெரிய பிரச்சினை இருக்காது என்பதால் அவர்கள் அசால்ட்டாக இருப்பதை பார்ப்பதற்கு வயிறு எரியும். அதே சமயம் எங்களது இயலாமையினை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். இந்த கருமங்களுக்கிடையே அவ்வப்போது வகுப்பில் ‘செமினார்’ எடுக்க வேண்டும். தமிழ் மீடிய பையன்களை ‘டெவலப்’ செய்ய வேண்டும் என எங்களையே குறி வைப்பார்கள். நாங்கள்தான் எடுக்க வேண்டும். ஒரு மணி நேர செமினாருக்கு மூன்று வாரத்திற்கு மேலாக உழைக்க வேண்டியிருக்கும். என்னதான் தயாரித்துக் கொண்டு வந்தாலும் மேடையில் ஏறி ஆங்கிலத்தில் ஓரிரு வரி பேசினாலே கூட ‘Grammar' சரியாகத்தான் பேசுகிறோமா என்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும். அடுத்த வரியை சாதாரணமாக பேச முடியாது. வாய் டைப் அடிக்கத் துவங்கிவிடும். ஒரு மணி நேர செமினார் சில நிமிடங்களிலெல்லாம் முடிந்துவிடும். 

இப்படித் திணறும் தமிழ் மீடிய மாணவன் குட்டிக்கரணம் அடித்தாவது இரண்டாம் ஆண்டு தொடங்குவதற்குள் தேறிவிட்டால் தப்பித்துவிடலாம். தப்பிப்பது மட்டுமில்லை பள்ளிகளில் படித்த அடிப்படை பாடங்களில் நல்ல புரிதல் இருக்கும் என்பதால் இஞ்ஜினியரிங் படிப்பிலும் பின்னியெடுத்துவிடுவான் -  கேசவன் அளவிற்கு கணித சூத்திரங்களை Derive செய்யும் ஆட்களை இதுவரை பார்த்தது இல்லை. பெரியசாமி அளவிற்கு மெஷினரிஸ் பற்றிய அறிவுடையவர்கள் மிகக் குறைவு. இப்படி எங்களில் சில பேர் தப்பித்துவிட்டோம். தப்பிப்பிழைத்தவர்கள் எல்லோருமே இப்பொழுது ‘டீசெண்டான’ வேலையில் இருக்கிறோம்.

ஆனால் ஒருவேளை தேற முடியாமல் ‘மிஸ்’ ஆகிவிட்டால் அந்த மாணவன் படும் சிரமம் சொல்லி மாளாது. ஒவ்வொரு செமஸ்டரிலும் அரியர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். கல்லூரி முடிக்கும் போது கூட பத்து, பதினைந்து அரியர்ஸ் வைத்திருந்த ஆட்களைத் தெரியும். 

இவை வெறும் மொழி புரிதல் குறித்தான பிரச்சினை மட்டுமில்லை. இந்த மொழிப்பிரச்சினை கல்லூரி பருவத்தின் ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு உருவாக்கும் மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை போன்றவை அவர்களின் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. எத்தனைதான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு ‘ஆளுமையை’யே சிதைந்து போவதை நேரடியாக பார்கக் முடியும். இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கும், ஆறாயிரம் ரூபாய்க்கும் வேலையில் இருக்கும் அவர்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி தொற்றிக் கொள்கிறது.

தமிழகத்தில் ‘ஆங்கில வழிக் கல்வியா? தமிழ் வழிக் கல்வியா’ என விவாதம் உருவாகும் போதெல்லாம் ‘தமிழ்தான் சிறப்பு’, ‘ஆங்கிலம்தான் பெஸ்ட்’ என்று பேசுகிற ஆட்களைத்தான் நிறைய பார்க்கிறோமே தவிர ஆங்கிலமோ, தமிழோ- uniformity தேவை என்பதை பற்றி பேசும் ஆட்களை பார்த்ததாக ஞாபகம் இல்லை. அப்படி uniformity பற்றி பேசும் போது எதிர்கொள்ளும் சிக்கல்களை சரி செய்ய முயன்றாலே கூட நம் கல்வி முறையில் இருக்கும் பெரும்பாலான குறைகளை களைந்துவிட முடியும் என நினைக்கிறேன். கல்வியியல் Intellectuals இது பற்றி பேசுவார்கள் என நம்புவோம்.