May 31, 2013

லட்சுமிமேனன் பத்தாவது பாஸாமே?

அப்சல் குருவோ, பின்லேடனோ- ஒரு மனிதனைக் கொன்றால் அதைக் கொண்டாடுவதற்கு சில லட்சம் பேராவது சேர்ந்துவிடுகிறோம். இப்பொழுதும் அப்படித்தான். சட்டீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணி மீதான நக்சல் தாக்குதலில் இருபது முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெகுதூரத்தில் அது நடந்திருப்பதால் நமக்கு பெரிய பாதிப்பில்லை. பெரிய சலனமில்லையே தவிர அதையும் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள்.  ‘செத்தாண்டா காங்கிரஸ்காரன்’ என்று சிலரும், ‘பழிக்கு பழி வாங்கினோம்’ என இடதுசாரி சிந்தனையாளர்களும் புளாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மீது இடதுசாரிகளுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. “சல்வா ஜூடும்” என்ற பெயரில்-(இதற்கு அர்த்தம் சுத்தப்படுத்ததுலுக்கான வேட்டை) ஆயிரக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்படுவதற்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினப் பெண்கள் நாசம் செய்யப்படுவதற்கும் பின்னால் இருந்த மூளை மகேந்திர கர்மா என்பதால் அவரை போட்டுத் தள்ளியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டது போக அவரது உடலில் 78 இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். அவரது மகனை கோடாரியால் பிளந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், பாதுகாவலர்கள் என கையில் கிடைத்தவர்களையெல்லாம் பிளந்து கட்டிவிட்டு, “எங்கள் தாக்குதலில் இறந்து போன அப்பாவித் தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று அறிக்கையும் விட்டிருக்கிறார்கள். 

கத்தி எடுப்பதற்கும், துப்பாக்கியை தூக்குவதற்கும் ஒவ்வொருவருக்கும் காரணம் இருக்கிறது. சாலையில் போகும் யாரை வேண்டுமாலும் நிறுத்தி  ‘உனக்கு துப்பாக்கி கொடுத்தால் யாருடைய ஆயுளை முடிப்பாய்?’என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் இரண்டு மூன்று பெயர்களைச் சொல்வார்கள்.  இந்த கலவரத்தில் செத்தவர்கள் எல்லாம் புனிதர்கள் இல்லைதான் ஆனால் அதற்காக ஆளாளுக்கு தமக்கு எதிரான ‘அயோக்கியர்களை’ கொல்லத் தயாரானால் மொத்த மக்கட்தொகையில் தொண்ணூறு சதவீதமாவது காலியாகிவிடாதா என்ன? அடுத்தவனைக் கொல்லும் உரிமை அரசுகளுக்கும், இராணுவத்திற்கும் இல்லை என்று சொல்பவர்கள் துரதிருஷ்டவசமாக தங்களுக்கு மட்டும் அந்த உரிமை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் பேசினோம் என்று வையுங்கள், ‘சல்வா ஜூடும்’ செய்த கொலைகளின் போதும், ஊடகங்கள் அவற்றை மறைத்த போதும் உன் வாய் என்ன பின்னந்தலையிலா இருந்தது என்பார்கள். அரசு மக்களை வேட்டையாடுகிறதே அது மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரியாதா? என்று கேள்வி கேட்பார்கள். தெரியாமல் என்ன? தெரிகிறது. ஆனால் அதற்காக இருபது முப்பது பேரைக் கொன்றால் மட்டும் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது? ஒன்றுமில்லை. சாமானிய மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தை அதிகமாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வேட்டைக்காரன் படத்தில் ‘பயம்...பயம்’ என்று வில்லன் கூவுவாரே. அதேதான். இதே கான்செப்ட்டைத்தான் இங்கு ஒவ்வொரு அதிகார மையமும் அமல்படுத்துகிறது. மம்தா பானர்ஜியைப் பற்றி எழுதினால் கைது செய்துவிடுவார்களோ என்ற பயம், காங்கிரஸைத் திட்டினால் சி.பி.ஐ அமுக்கிவிடுமோ என்ற பயம்,ஜெயலலிதாவை விமர்சனம் செய்தால் போலீஸ் வந்துவிடுமோ என்ற பயம்,  இடதுசாரிக்கொள்கைகளைத் திட்டினால் புரட்சியாளர்கள் ‘டென்ஷன்’ஆகிவிடுவார்களோ என்ற பயம். 

அடுத்தவர்களுக்கு தங்கள் மீது பயம் இருக்க வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். வீட்டிலிருப்பவர்கள் தமக்கு அடங்கிப் போக வேண்டுமென சாமானியன் எதிர்பார்க்கிறான் அல்லவா?  இப்படித்தான் ஒரு ஏரியா தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லோக்கல் தாதா விரும்புவதில் ஆரம்பித்து, நக்சல்கள் மற்றவர்களின் தலையை உருட்டுவது, அரசு இராணுவப்படையை அனுப்பி வைப்பது வரை என எல்லா இடத்திலும் ‘பயம்...பயம்’தான்.

இந்த சட்டீஸ்கர் படுகொலைகளைக் கொண்டாடுபவர்களுக்கு சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ரிசானாவின் மரணத்தையும், அப்சல் குருவின் தூக்கையும் கண்டிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது என்று புரியவில்லை. தீவிர இடதுசாரிகளுக்கு மகேந்திரகர்மாவின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத குற்றச்சாட்டுகள் அப்சல்குருவின் மீது வலதுசாரிகளுக்கும், ரிசானாவின் மீது தீவிர இசுலாமியர்களுக்கு இருக்கிறது. 

இன்னொருவன் கொலை செய்யப்படுவதை விமர்சிக்க விரும்பினால் முதலில் நாம் அடுத்தவனை கொல்வதை நிறுத்த வேண்டும். தீர்ப்பு எழுதுவது பற்றியெல்லாம் பிறகு யோசிக்கலாம்.
                                        
                                                           ***********

ஸ்ஸ்ஸ்ப்பா...ஓவர் வெயில் தீடிரெனக் குறைந்து மழை பெய்ய ஆரம்பித்ததால் ‘ட்ராக்’ மாறிவிட்டேன் போலிருக்கிறது. மாதாமாதம் வெளிநாட்டுக்காரனிடம் கைகட்டி சம்பளம் வாங்கும் எனக்கு எதுக்கு புரட்சி, போராட்டம், வெங்காயம், விளக்கெண்ணெய் எல்லாம்? வழக்கமான ட்ராக்குக்கே வந்துவிடுகிறேன்.

இன்றைக்கு பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்திருந்தது அல்லவா? நடிகை லட்சுமி மேனன் பாஸ் என்று தெரிந்ததில் இருந்து அதிர்ச்சியடைந்து விரல்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாம். அந்தப் பெண் 'இனி மேலே படிக்க வேண்டும்' என  போய்விட்டால் தமிழ் சினிமாவை யார் காப்பாற்றுவார்கள்? லட்சுமி மேனனே கதி என்று கிடக்கும் வாலிப வயோதிக அன்பர்களின் கதி என்ன ஆகும்? இதையெல்லாம் யோசிக்காமல் மகேந்திரகர்மா, சட்டீஸ்கர் என்று எழுதிக் கொண்டிருக்கும் என்னை பசிக்காத புலி நுகர்ந்து பார்த்து திகில் ஊட்டட்டும்.