‘உலகத்திலேயே என்னை அடிச்சுக்க ஆள் இல்லை என்று யாராவது பீற்றிக் கொள்வார்களா?’ - இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் அதைவிட முட்டாள்த்தனமான கேள்வி வேறு இருக்கவே முடியாது. நாம் பார்க்கிற ஆட்களில் தொண்ணூற்றைந்து சதவீத ஆட்கள் இப்படித்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- இதை எழுதிக் கொண்டிருப்பவன் உட்பட.
புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை விற்பவர்களிலிருந்து டிவியில் சாயந்திரம் ஆனால் முகம் காட்டுபவர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் உலகம் என்னதான் ஆகும்? சத்தியமாகத் தெரியவில்லை. ஒரு நாள் இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் பூமாதேவி பெருமொத்தமாக வாயைத் திறந்து நம்மை எல்லாம் விழுங்கினால் தவிர இந்த கண்றாவிகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை போலிருக்கிறது.
‘ஒபாமாவைவிட சக்தி வாய்ந்த மனிதன் இருக்க முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அமத்தா ‘அவன் யாரு ஒவாமா?’ என்று நோஸ்கட் விடுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வேட்டைகாரன்புதூர் வரைக்கும் அறுநூற்று சொச்சம் கோடி மக்களுக்கும் தெரிந்த ஒரு பெர்சனாலிட்டி இருக்க வாய்ப்பிருக்கிறதா? யேசுநாதரைக் கூட தெரியாத ஆட்கள் வாழும் இந்த உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ‘ஆல் இன் ஆல்’ அப்பாடக்கருக்கு வாய்ப்பே இல்லை.
உலக அளவில் வேண்டாம். இந்திய அளவில்? அதுவும் சந்தேகம்தான். அமிதாப்பச்சனையோ அல்லது ஆமிர்கானையோ கூட எங்கள் ஊர் ஆட்களுக்குத் தெரிவதில்லை. ரூபாய் நோட்டில் இருக்கும் பொக்கை வாய் தாத்தாவைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் உலக அளவில் அல்லது இந்திய அளவில் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அத்தனை பேருக்கும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களா? வேண்டுமானால் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் சொல்லலாம்.
மற்றபடி ஜெயமோகனையும், நாஞ்சில்நாடனையும், மனுஷ்ய புத்திரனையும் மொத்தமாக எத்தனை பேருக்குத் தெரியும்? முப்பதாயிரம் பேருக்குத் தெரியுமா? அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அதிகபட்சமாக ஒரு லட்சம் பேருக்கு தெரியும் என்று வைத்துக் கொள்ளலாம். அதுவும் இந்த இண்டர்நெட்டும், ஃபேஸ்புக்கும், தனியார் சேனல்களும் வந்திருப்பதனால் தெரிந்து வைத்திருப்பார்கள். இல்லையென்றால் சிறுபத்திரிக்கைகள் வாசிக்கும் முந்நூற்று சொச்சம் பேர்களைத் தவிர்த்தால் இவர்களையெல்லாம் சீண்டுவதற்கு ஆளே இருந்திருக்க மாட்டார்கள்.
இந்த ரேஞ்சில் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு ஒருவர் “என் முன்னால் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது” என்று கேட்கிறார். இன்னொருவர் விகடன் பேட்டியில் “எனது ஃபேஸ்புக் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜக்ட் செய்யும் ஒருத்தன் இதுவரை பொறக்கலை. இனிமேலும் பொறப்பான்னு நினைக்கலை” என்கிறார். இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த அகங்காரமும், ஆணவமும் வந்து அமர்ந்து கொள்கிறது என்று புரியவில்லை.
சிங்கம் சிலுப்பிக்கிட்டு வருது, மீசையை முறுக்கிக்கிட்டு வருது அலம்பிக் கொண்டிருந்த ஜெயகாந்தனே கூட சென்ற ஆட்சியில் தன் மகனுக்கு அரசுப் பணி வாங்க குழைந்ததை பார்த்தவர்கள்தானே நாம்?
படைப்பு ரீதியாக இவர்கள் மீதெல்லாம் என் நம்பிக்கையும், மரியாதையும் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை. மனுஷ்ய புத்திரன்தான் எனது ‘நவீன இலக்கியத்தின் நுழைவாயில்’ என்று சொல்லிக் கொள்வதிலும், என்னளவில் சமகால நவீன தமிழ் இலக்கியத்தில் ஜெயமோகன்தான் மிக முக்கியமான ஆளுமை என்பதிலும் எந்தக் காலத்திலும் மாறுதல் வரப் போவதில்லை. ஆனால் இவர்கள் தங்களுக்குத் தாங்களே பீடம் கட்டிக் கொள்வதையும், பிம்பம் அமைத்துக் கொள்வதையும்தான் பார்க்க சகிக்கவில்லை.
அரசியல்வாதிக்கு போஸ்டர் அடிக்க சில அல்லக்கைகள் எப்பொழுதும் இருப்பார்கள். சினிமாக்காரனுக்கு பாலாபிஷேகம் செய்ய குடும்பத்தை அடமானம் வைத்த சில தறுதலைகள் உண்டு. ஆனால் இந்த எழுத்தாளர்களின் நிலைதான் பரிதாபம். அவர்களுக்கென அல்லக்கைகள் யாருமே இருப்பதில்லை. தமக்குத்தாமே பாலாபிஷேகம் செய்து கொள்வதாக மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்குத்தானே போஸ்டர் அடிப்பதாக நினைத்து அடுத்தவர்களுக்கான ‘காமெடி பீஸாக’ தங்களை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ கவிஞர், காவியப்பேரரசு போன்ற பட்டங்களை சூட்டிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தம்மை என்னவோ உலகை ரட்சிக்க வந்த பிதாமகனைப்போலவும் எதிரில் நிற்பவர்கள் அத்தனை பேரையும் பாவிகளாகவும் நினைத்து அடுத்தவர்களை கலாய்ப்பதைப் பார்ப்பதற்குதான் கூச்சமாக இருக்கிறது.
யாராவது மொக்கையர்கள் ஓவராக பேசும் போது கோபமே வரக்கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால் ‘டேய்..நான் யார் தெரியுமா?என்கிட்டேயேவா?’ என்றெல்லாம் வெளிப்படையாக எழுதி தனக்கான ‘பில்ட் அப்’ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பிலிருந்து இந்த் வேலையை சாரு நிவேதிதா செய்துவந்தார். ‘ஃபோன் செய்து என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்; மின்னஞ்சலில் மொன்னையான கேள்விகளை கேட்கிறார்கள்’ என்று டபாய்த்துக் கொண்டிருந்த போது ‘பவர் ஸ்டார் வகையறா போலிருக்கிறது’ என்று அவரிடமிருந்து ஒதுங்கிப் போனார்கள். இப்பொழுது என்னடாவென்றால் ஆளாளுக்கு பவர்ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இவர்களிடமெல்லாம் ஏதாவது கேள்வி கேட்கலாம் அல்லது பேசலாம் என்று நினைப்பவன் கூட ‘இதைக் கேட்கலாமா? கூடாதா? இது நல்ல கேள்வியா? கெட்ட கேள்வியா’ என்ற குழம்பிப் போவான். எழுத்தாளர்கள் என்பவர்கள் உலகில் எழுதப்படும் ஒவ்வொரு வரியையும் வாசித்தவர்கள் என்று வாசகனை நம்பவைப்பதில் எழுத்தாளர்கள் அடையும் லாபம் என்ன? நல்ல வாசகர்கள் எழுத்தாளர்களை விடவும் அதிகம் வாசிக்கிறார்கள் என்பது தெரியாதா என்ன?
நூறு புத்தகங்களை எழுதியதாலும், பல புத்தகங்களை வாசித்திருப்பதாலும் மட்டுமே விவசாயியை விடவோ, கட்டட வேலைக்காரனைவிடவோ எழுத்தாளன் எந்தவிதத்திலும் உயர்ந்தவன் இல்லை. அவர்கள் ‘உருப்படியாக’ செய்யும் வேலையில் பத்தில் ஒரு பங்கு கூட So called எழுத்தாளர்கள் செய்வதில்லை என்பதுதானே நிதர்சனம்? வாள் முனையைவிட பேனா முனை உயர்ந்தது போன்ற ‘பிட்டு’க்களை இந்தக்காலத்திலும் நம்ப வேண்டியதில்லை என்று அனைவருக்குமே தெரியும். பிறகு எதற்கு பொதுவெளியில் இத்தனை அல்டாப்புகள்?
தினம் தினம் டிவியில் வருவதால் தான் பாப்புலர் ஆகிவிட்டதாக நம்புவதைவிடவும் காமெடி வேறு எதுவும் இருக்க முடியுமா? ராமராஜன் அடையாத ‘ரீச்’சையா இந்த டிவிக்கள் கொடுத்துவிடுகின்றன? ஆனானப்பட்ட அவரையே சீட்டியடிக்க வைத்ததுதான் இந்தச் சமூகம்.
அத்தனை அழிச்சாட்டியங்களையும், அலட்டல்களையும் நிறுத்திவிட்டு எழுதுவதை மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் கூட எழுத்தாளர்களுக்கான ‘உண்மையான’மரியாதை இருந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் என்னைப் போன்ற பொடியன் சொல்ல வேண்டுமா என்ன? பெரியவர்களுக்கு தெரியாததா? என்னமோ செய்யுங்க!
நேற்று பெய்த மழையில் இன்னும் முளைக்கவே முளைக்காத என்னைப் போன்ற காளான்கள் போலியாக கட்டமைக்கப்படும் பிம்பங்களை பற்றி ஏதாவது பேசப் போக ‘புளிச்ச ஏப்பம் விடும் இணைய மொக்கைகள்’ போன்ற வசவுகளை வாங்கிக் கட்ட கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் நேற்றைய எனது பிரார்த்தனையோடு இன்றைய பத்தியை முடித்துக் கொள்கிறேன்.
Oh My God! வறட்சி, பஞ்சம், பட்டினி, பவர்கட், குற்றச்செயல்கள், வன்மம், அக்கிரமம், துரோகம், சூதாட்டம், ஐபிஎல் என சகலத்தையும் என் மக்களே சமாளித்துக் கொள்வார்கள். நீ அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் தயவு செய்து இந்த எழுத்தாளர்களிடமிருந்து மட்டும் காப்பாற்றிவிடு!