May 22, 2013

மணியா வரலாறு தெரிஞ்சுக்கோணும்.


சிம்பு இமயமலை போகிறாராம். போனால் போகட்டும். ஆனால் ‘ஞானம் தேடிப் போகிறேன்’ என்று பீலா விடுவதுதான் டூ மச்சாகத் தெரிகிறது. இமயமலை போகிறவர்களுக்கெல்லாம் ஞானம் வருவதாக இருந்தால் சோனியா, மன்மோகனில் ஆரம்பித்து நத்தம் விஸ்வநாதன் வரைக்கும் அத்தனை பேரையும் குண்டு கட்டாக அமுக்கி இமயமலைக்கு தூக்கிச் சென்று திரும்பக் கொண்டு வந்து விட்டுவிடலாம். நம்மை ஆள்பவர்கள் ஞானமணிகளாகத் திரிந்தால் நமக்கும் நல்லதுதானே?

இமயமலை சென்று வருபவரெல்லாம் ஞானகுருக்கள் என்று சொல்லி ஏன் பில்ட்-அப் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தக்காலத்தில் இமயமலை சென்றார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஒரு வசதியும் கிடையாது. இமயமலை செல்வதென முடிவு செய்தால் தனது குடும்பம், சொத்து, சுகவாழ்க்கை என அத்தனையும் துறக்க வேண்டியிருக்கும். மாதக்கணக்கில் பயணம் செய்தாலும் கூட நிச்சயம் மலையை அடைந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. நடுவழியில் விலங்குகளிடம் சிக்கியோ, வெள்ளத்தில் மூழ்கியோ, நோய்வாய்ப்பட்டோ மொத்தமாக ‘மலையேறி’ விட வாய்ப்புகள் நிறைய உண்டு. அத்தனையும் மீறி இமயமலையை அடைந்தாலும் கூட திரும்ப வருவது சாத்தியமில்லை. ‘போனால் போனதுதான்’. அப்படியான பயணமாக இருந்தால் ‘ஞானம்’ வர வாய்ப்பு இருக்கிறது. 

அந்தக் காலத்தில் கைலாஷ் மலையை நோக்கி பயணித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பர் தனது கை,கால்கள்,மார்பெல்லாம் தேய்ந்து நகரக் கூட முடியாமல் கிடந்தாராம். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரப்பெருமான் நாயனாரும் கூட இமயமலைக்குச் சென்றதாக சேக்கிழார் எழுதி வைத்திருக்கிறார். அந்தப் பஞ்சாயத்துக்கு பிறகு வரலாம். 

இப்பொழுதெல்லாம் சென்னையில் இருந்து ‘ப்ளைட்’ பிடித்து காத்மண்டுவில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று சிவபெருமானுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு விரும்பினால், அடுத்த நாளே சென்னைக்கு திரும்பி முந்தின நாள் தூங்கின அதே மெத்தையில் கூட தூங்கலாம். ‘லீவ்’ நிறைய இருந்தால் பத்து பதினைந்து நாள் அங்கேயே நல்ல லாட்ஜில் தங்கிவிட்டும் வரலாம். 

திரும்பி வந்து ‘ஞானம் பொங்கி காது வழியாக வழிகிறது’ என பால் வடியும் முகத்தை வைத்துக் கொண்டு பேட்டியும் கொடுக்கலாம். ஆகட்டும்!

சேரப்பெருமான் நாயனார் இருக்கிறார் பாருங்கள். பிழைக்கத் தெரியாத மனுஷன். ஏகப்பட்ட ஃபிகர்களால் நிரம்பிய மலையாள- சேர நாட்டுக்கு மன்னனாக இருந்திருக்கிறார். ஆனாலும் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தக்காலத்து டவுன் பஞ்சாயத்து கவுன்சிலரே கூட வீதிக்கு ஒரு வீடும் அதில் ஒரு செட்டப்பும் வைத்திருக்க அந்தக் காலத்தில் அவர் மன்னனாக இருந்து என்ன பிரயோஜனம்? சரி போகட்டும்.

இவருக்கும் இன்னொரு நாயன்மாரான சுந்தரமூர்த்திக்கும் ப்ரெண்ட்ஷிப்ன்னா ப்ரெண்ட்ஷிப் அப்படியொரு திக் ப்ரெண்ட்ஷிப். ‘இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை’ என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே இன்னொரு ஆணுடன் பயங்கரமான நட்பு என்று சொல்வதால் ‘அப்படி இப்படி’யான நட்பாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நல்ல நட்புதான். சு.மூ நாயனார் தமிழ்நாட்டுப் பக்கம். சேர மன்னனோ மலையாளக்கரையோரம். அதனால் சு.மூ தனது நண்பரைப் பார்ப்பதற்காக இரண்டு மூன்று முறை கேரளாவுக்கு சென்றிருக்கிறார். போவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் ஏகப்பட்ட தங்கம், வெள்ளியென்று நண்பரிடமிருந்து வாங்கி வருவாராம். அப்படி போகும் போதும் வரும் போதும் சில பல கோயில்களுக்குச் சென்று அந்தக் கோயில்களைப் பற்றி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். அப்படி எழுதி வைத்துதான் அவிநாசி, திருமுருகன் பூண்டி போன்ற கோயில்கள் பற்றிய வரலாறுகள்.

ஓகே மேட்டருக்கு வருவோம். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின்படி சுந்தரர் வெள்ளை யானையில் பயணித்து கைலாய மலையை அடைகிறார். அவரது நண்பர் சேரப்பெருமான் நாயனார்  குதிரையில் ஏறி கைலாயத்தை அடைகிறார். நாட்டை அம்போவென விட்டுவிட முடியாதல்லவா? அதனால் கொங்கு நாட்டின் பூந்துறை நாட்டிலிருந்து இரண்டு பேரை அழைத்து வந்து ஒருவனை கள்ளிக்கோட்டைக்கும் இன்னொருவனை கொச்சிக்கும் மன்னனாக நியமித்துவிட்டு போகிறார். கைலாயம் சென்றால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது. அதோடு அவர்களின் கதை முடிந்துவிடுகிறது. நொடித்தான் மலையில் இரண்டு பேரும் சிவகணங்களாக இடம்பெறுகிறார்கள்.

இந்த வரலாறு உண்மையா என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? இரண்டு நாயன்மார்ளும் வாழ்ந்ததெல்லாம் உண்மைதான். ஆனால் குதிரையிலும், யானையிலும் கைலாயம் சென்றார்கள், அங்கு சேரப்பெருமானைப் பார்த்த சிவபெருமான் ‘அழையாமல் ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டார் போன்ற பூ சுற்றும்  கடைசி அத்தியாயம்தான் சந்தேகமானதாக இருக்கிறது. 

கேரளத்தில் வழங்கப்படும் கதைகளில் சேரப்பெருமான் இஸ்லாத்தை தழுவி கடல்வழியாக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார் என்று சொல்கிறார்களாம். சேரப்பெருமான் இஸ்லாம் மதத்தை தழுவுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் கி.பி.633லியே பிறந்துவிட்டார். சுந்தரமூர்த்தி/சேரப்பெருமானின் காலம் கி.பி.800 க்கு பிறகுதான். இருநூறு வருடங்களில் இஸ்லாம் கேரளத்தில் பரவியிருக்க நிறைய சாத்தியங்கள் உண்டு. தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்களிலும் கூட சேரப்பெருமானின் கடல்வழி பயணம்தான் ஓவியமாக இருக்கிறது. பெரிய புராணம் எழுதப்படுவதற்கு முன்பே தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டுவிட்டதால் பெரிய புராணத்தை விடவும் இந்த விஷயத்தில் அந்த ஓவியத்தை நம்பலாம். அப்படியானால் சேரப்பெருமான் கடல்வழி பயணம்தான் மேற்கொண்டிருக்கிறார். கேரளத்திலிருந்து இமயமலை போவதற்கு எதற்கு கடல்வழியில் பயணிக்க வேண்டும்? ஆக அவர் இமயமலை போகவில்லை. அப்படித்தானே?

ஒருவேளை சேரப்பெருமான் இந்துமதத்தை பரப்புவதற்காக அரபு நாடுகளுக்குச் சென்று தோல்வியுற்றிருக்கலாம் அல்லது இஸ்லாமிய மதத்தின் மீது ஆர்வம் கொண்டும் சென்றிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் ஏதோவொரு இடத்தில் வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது. 

எது உண்மை? சிவபெருமானுக்கும், நபிகள் நாயகத்துக்கும்தான் வெளிச்சம்.