May 23, 2013

ஒரு கவுண்ட பையனும் வண்ணா பொண்ணும்

ஒரு வாட்டசாட்டமான கவுண்டர் பையன். அசத்தலான உயரம். அட்டகாசமான அழகு. 

‘ஒரு பையன்னு சொன்னால் போதாதா? கவுண்டர் பையன்னு சாதியைச் சேர்க்கணுமா?’என்று யாராவது கேட்கக் கூடும். ஆனால் ‘கவுண்டர் பையன்’ என்ற விவரம் இந்த இடத்தில் முக்கியம். அந்தப் பையனுக்கு ஒரு வெளியூர் சோலி வந்துவிடுகிறது. கரூரோ காங்கேயமோ-ஊர்ப்பெயர் சரியாகத் தெரியவில்லை. சோலியை முடித்துவருவதற்காக செல்கிறான். தனியாகத்தான் செல்கிறான். 

ஆங்! சொல்ல மறந்துவிட்டேன். இது இன்றோ நேற்றோ நடந்த சம்பவம் இல்லை. பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் காலத்தில் வெளியூர் பயணங்களுக்கு குதிரை வண்டிப் பயணம்தான் என்பதால் ஒரு சவாரிக் குதிரையில் போகிறான். போகிற வழியில் குதிரையும் களைத்துப் போகிறது, பையனும் களைத்துப் போகிறான். சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தபடி தோதான இடத்தை தேடுகிறான். வண்ணாந்துறை ஒன்று கண்ணில்படுகிறது. குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அவனும் அங்கேயே படுத்துக் கொள்கிறான். சற்று தூரத்தில் வண்ணார்கள் துணி வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் களைப்பாக இருக்கிறான். படுத்துக் கொண்டும் இருக்கிறான். ஆனால் தூங்கலாம் என்று நினைத்தால் கண்ணை மூட முடியவில்லை. காரணம் ஒரு யுவதி. வண்ணார் கூட்டத்திலேயே அவள் மட்டும் தனித்து தெரிகிறாள். அவள் இடுப்பும், எடுப்பும் அவனை புரட்டிப் போடுகிறது. அவளும் துறுதுறுவென மழைத்தும்பி கணக்காக அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு அந்துசான அழகியை அவன் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்பதால் தனது மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்தவனாக அத்தனை உற்சாகம் அடைகிறான். அவளும் இவனை கவனித்துவிடுகிறாள். கண்ணும் கண்ணும் மோதிக் கொள்ள அவளுக்கு வெட்கமென்றால் வெட்கம், அத்தனை வெட்கம்.

என்ன இருந்தாலும் கவுண்டர் பையனை கட்டிக் கொள்ள வண்ணாத்தி பெண்ணை அனுமதிக்கமாட்டார்கள் அல்லவா? அவள் பயந்து அமைதியாகிவிடுகிறாள். அவள் அமைதியானாலும் இவன் விடுவதாக இல்லை. நூல் விடுகிறான். ஆரம்பத்தில் அவள் ஓடி ஓடி போகிறாள். ஆனால் விடுவானா? வெளியூர் வந்த சோலியை மறந்துவிட்டு இவளை ‘தேத்தும்’ சோலியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வண்ணார்களுக்கு அரசல்புரசலாக சந்தேகம் வருகிறது. ஆனால் கவுண்டரை கேள்வி கேட்க முடியாதல்லவா? அதனால் ஒன்றும் தெரியாதது போல இருந்துவிடுகிறார்கள்.

இவனுக்கு இன்னமும் தைரியம் வந்துவிடுகிறது. அவளோடு சாடை மாடையாக பேசுகிறான். அவள் ஒதுங்கிப் போனாலும் விடாமல் அருகில் போய் பேசத் துவங்குகிறான். அவளுக்கும் வயசும் வாலிபமும் இருக்கிறதே! எத்தனை நாளைக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்? எறும்பு ஊர ஊர பாறையும் தேயும் என்பது போல வழிக்கு வருகிறாள். அதன் பிறகு இருவரும் ஒளிந்து ஒளிந்து காதலை வளர்க்கிறார்கள். ஆற்றங்கரை, மொட்டைப் பாறை, கானகம் என்று வளர்ந்த அந்தக் காலத்துக் காதல் அது. நிலா, மரம், கிளி என அத்தனையும் ரொமாண்டி ஐட்டங்களாக மாறிப் போன காதல். எத்தனை நாளைக்குத்தான் ஒளிந்து கொண்டே  காதலிப்பது என யோசித்தவன் அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என நினைக்கிறான். அவளுக்கு பயம்தான். ஆனால் இவனை விட்டுவிட மனசில்லை. “நீங்க என்ன செஞ்சாலும் சரிதேன்” என்று சொல்லிவிடுகிறாள்.

காதல் பொங்கிய ஒரு நல்ல நாளாக பார்த்து இரண்டு பேரும் குதிரை ஏறிவிடுகிறார்கள். விதி வேறு மாதிரி இருக்கிறது. ஊரைத் தாண்டும் போது காவல்காரன் பார்த்துவிடுகிறான். விடுவார்களா? ஊரே மொத்தமாகச் சேர்ந்து துரத்துகிறது. சரியான ஓட்டம். பெண்கள் எல்லாம் ஓய்ந்து போக ஆண்கள் மட்டுமே துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் “இரண்டு பேரையும் கொன்று விடுவது”. வெகுதூரம் ஓடிய பிறகு காதலர்களின் குதிரை களைத்துப் போகிறது. இனிமேல் குதிரையை நம்பி பிரையோஜனம் இல்லை என நினைத்தவர்கள் குறுக்கே வரும் பவானி ஆற்றுக்குள் குதித்துவிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பவானி ஆறு முரட்டுத்தனமாக ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு நீச்சல் தெரியும். தாண்டிவிடுகிறான். அவளுக்கும் அது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. ஆற்றோரம் பிறந்து, நீரோடு வளர்ந்தவள் என்பதால் எந்தச் சிரமமும் இல்லாமல் ஆற்றைத் தாண்டி வட பக்கக் கரையை அடைந்துவிடுகிறார்கள்.

கரைக்கு அந்தப்பக்கம் வெறும் காடாக இருக்கிறது. வேட்டுவக் கவுண்டர்கள் நிறைந்த காடு. அவர்களுக்கு வேட்டைதான் தொழிலே. “நாங்க அப்டி அப்டி பேசுனோம்ங்க...அது இப்டி இப்டி ஆகிப்போச்சுங்க...அவியெல்லாம் எங்களை கொல்றதுக்குத்தான் வாராங்க” என்று வேட்டுவர்களிடம் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். துரத்திக் கொண்டு வருபவர்கள் கரையைக் கடந்து வருவதற்குள் அவர்களின் திருமணத்தை முடித்து வைத்துவிடுவதாக உறுதியளித்த வேட்டுவர்கள் தங்களின் வில்லில் இருக்கும் நரம்பை அறுத்து தாலியாகக் கட்டச் சொல்லிவிடுகிறார்கள். துரத்தியவர்கள் ஆற்றைக் கடந்து வடகரையை அடைவதற்கும், இவர்களின் திருமணம் முடிவதற்கும் சரியாக இருக்கிறது. சினிமாவின் க்ளைமேக்ஸ் மாதிரி பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் திரும்பிப் போகிறார்கள்.

இனி என்ன ஆகும்? அதுதான் வரலாறு. இப்படி நரம்பை அறுத்து தாலியாகக் கட்டிக் கொண்டதால் இவர்களுக்கு ‘நரம்புகட்டி கவுண்டர்கள்’ என்று பெயர். இதெல்லாம் பவானி ஆற்றின் வடகரையில்  நடந்ததால் வடகரைக் கவுண்டர்கள் என்ற பெயரும் உண்டு. நரம்புகட்டி கவுண்டர்கள் அந்தியூர்-கோபிச் செட்டிபாளையம் பகுதியைத் தவிர வேறு எங்குமே இல்லை. அதுவும் கூட மொத்தமாக இருபத்தைந்து ஊர்களில்தான் இருப்பார்கள். மொத்த மக்கட்தொகையும் பத்தாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். 

இந்தக் கதை எதிலாவது எழுத்துப் பூர்வமாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு தாத்தா சொன்ன ‘செவிவழி’க் கதையில் கொஞ்சம் உப்பு மிளகு தூவி இங்கு சொல்லிவிட்டேன். 

ஆனால் வேறு யாராவது இன்னொரு காரணத்தை எழுதி வைத்திருப்பார்கள் அல்லவா? ஆமா எழுதி வைத்திருக்கிறார்கள். கையில் கிடைத்த ஒரு புத்தகத்தில் வேறொரு கதை இருந்தது.அதில் “தாம் வேட்டையாடிக் கொன்ற புலியின் நரம்பை உருவியெடுத்து அதில் புலியின் பல், நகம் போன்றவற்றை கழுத்தில் கட்டிக் கொண்டதால் நரம்புகட்டி கவுண்டர் என்ற பெயர் வந்ததது” என்று எழுதியிருந்தார்கள். 

இப்பொழுது எந்தக் கதையை நம்புவது?