‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’- இந்தப் பழமொழி இப்பவும் அப்படியேதான் இருக்கிறதா?. சந்தேகமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் நாளைக்கு சாவதாக இருந்தால் நேற்றைக்கே பால் ஊற்றிவிடுகிறார்கள்.
சென்ற வாரத்தில் உறவினரின் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்திற்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். விபத்தில் இறந்தவர் இருபது வருடங்களுக்கு முன்பாகவே காதல் திருமணம் செய்து கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் அரும்பிய அழகான காதல் அது. பாவாடை தாவணியில், டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு வந்த பெண்ணிடம் தயங்கித் தயங்கி காதலைச் சொல்லி, பெரும் போராட்டத்திற்கு பிறகு அவளின் சம்மதத்தை பெற்று, வழக்கமான குடும்ப எதிர்ப்புகளை சந்தித்து இறுதியில் வெற்றி பெற்ற காதல். காதல் திருமணத்திற்கு பிறகு வழக்கமான அம்மாக்களைப் போல இவரின் அம்மாவுக்கும் மருமகளை பிடிக்கவில்லை. ஏதேதோ பிரச்சினைகள். கொஞ்ச நாட்களுக்கு பிறகாக அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இதே காரணத்திற்காகவோ என்னவோ அவரது அக்கா குடும்பத்துடனும் தகராறுதான். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களாக அம்மா, அக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை. போக்குவரத்தும் இல்லை.
அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. கணவரின் அத்தனை சிரமங்களுக்கும் மனைவியும் தோள் கொடுக்க தம் பிடித்து மேலே வந்துவிட்டார்கள். பிஸினஸில் கொடிகட்டியிருக்கிறார்கள். சொத்துக்களும் பெருகியிருக்கிறது. ஒரே மகள் என்பதனால் தாங்கித் தாங்கி வளர்த்திருக்கிறார்கள். அவளுக்கு பதினெட்டு வயதில் குடல் சம்பந்தமான பிரச்சினை. சில நாட்களுக்கு முன்பாகத்தான் அதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். மீண்டும் மருத்துவரைப் பார்ப்பதற்குத்தான் சென்றவாரம் கோயமுத்தூர் கிளம்பியிருக்கிறார்கள். அப்பொழுதுதான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. அவரும், அவரது மகளும், மனைவியின் அக்காவும் அதே இடத்தில் இறந்து போனார்கள். சரியாகச் சொன்னால் மனைவியின் அக்கா அதே இடத்தில் இறந்து போகவில்லை. பரிதாபமாகத்தான் இறந்திருக்கிறார். இரண்டு கண்களையும் தகரம் கிழித்துவிட பார்வையில்லாமல் கிடந்திருக்கிறார். ‘புள்ளைகளைக் காப்பாத்துங்க’ என்று அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கதறிக் கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர்கள் யார் சொன்ன ஆறுதலும் அவரது காதில் விழவில்லை போலிருக்கிறது. கதறிக் கொண்டே இருந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது இறந்து போயிருக்கிறார்.
அக்காவின் மகளும், இறந்தவரின் மனைவியும் மட்டும்தான் விபத்தில் தப்பித்தவர்கள். அக்காவின் மகளுக்கு கால்கள் இரண்டும் முறிந்ததோடு பெரிய பிரச்சினையில்ல- உயிருக்கும் ஆபத்தில்லை. ஆனால் இறந்தவரின் மனைவிக்கு நெஞ்சு எலும்பு உடைந்து நுரையீரலை கிழித்ததோடு இல்லாமல், பின் மண்டையில் அடிபட்டு கோமா நிலைக்கு போய்விட்டார். இரண்டு பேரையும் கோவையில் ஒரு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு இறுதிக் காரியங்களை ஆற்ற ஊருக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.
ஊரே திரண்டு கதறியிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு பிறகாக இறந்தவரின் அக்கா மகனும் ‘பெரிய காரியத்திற்கு’ வந்திருக்கிறான். ‘எனது மாமாவுக்கு நான் தான் கொள்ளி வைக்க வேண்டும்’ என பிடிவாதம் பிடிக்க யாரும் பெரிதாக மறுப்புத் தெரிவிக்கவில்லை. மூன்று சவங்களையும் ஒரே கட்டையில் போட்டு எரியூட்டியிருக்கிறார்கள்.
அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த ஏரியாவில் யாராவது இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் இதைப்பற்றித்தான் முதலில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் இது இன்னுமொரு விபத்து. ஆனால் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்று உயிர்களைக் காவு வாங்கிய பெரிய கோரம். தங்கள் கண் முன்னால் வளர்ந்தவர்கள், தங்களோடு நடமாடியவர்கள் ரத்தமும் சதையுமாக வீடு சேர்ந்தததையும், தீயின் நாவுகளுக்குள் கருகிப் போனதையும் அத்தனை சீக்கிரமாக ஜீரணிக்க முடியவில்லை. இதை அந்த ஊரில் இருந்த சில மணி நேரங்களுக்கு உணர முடிந்தது. இருபது வருடங்களுக்கு முன்பாக இத்தனை வாகனங்கள் இல்லை, இத்தனை விபத்துக்கள் இல்லை, இத்தனை சாவுகள் இல்லை, கேட்டுக் கேட்டு பழக்கமாகிப் போன 108ன் சப்தம் இல்லை. ஏதாவதொரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலும் கூட நடுங்கியவர்கள் அதிகம் - இப்படியெல்லாம் ஏதாவது ஒரு வாக்கியத்தை யாரிடமிருந்தாவது கேட்க முடிந்தது.
ஒரு பேரதிர்ச்சிக்கு பிறகு சிறு அமைதி நிலவும் அல்லவா? நிசப்தம். அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இன்னொரு அதிர்ச்சி வந்து விழுந்திருக்கிறது. இறந்தவரின் அக்கா மகன் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இறந்து போனவரின் குடும்பச் சொத்துக்கள் முழுவதற்கும் அவன் தான் வாரிசு என்று அது சொல்லியிருக்கிறது. இவர்கள் இறந்து மூன்று நாட்கள் ஆகாத நிலையிலும் கூட எந்தவிதமான தயக்கமும் வெட்கமும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இதில் முக்கியமான விஷயம் இறந்தவரின் மனைவி கோமாவில்தான் இருக்கிறாரே தவிர உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக சொத்துக்கான அடிதடியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.
இந்தக் குடும்பம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கிய போதும், கை ஊன்றி கர்ணமடித்து மேலே வந்த போதும் எந்தவிதமான ஆதரவையும் கொடுக்காத குடும்பம், இப்பொழுது சொத்துக்கான உரிமையைக் கோரியிருக்கிறது. அதுவும் இறந்தவரின் மனைவி உயிருடன் இருக்கும் போதே. நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட போது நாராசமாக இருந்தது. பாசம், அன்பு, மனிதாபிமானம் என சகலத்தையும் மறந்து போன ஒரு சமூகத்தோடுதான் நாம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறோம்; பணத்திற்காக எதைச் செய்யவும் தயாரான குடும்பங்கள் நம்முள் ஊடுருவிக் கிடக்கின்றன என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாலும் நேரில் பார்ப்பதற்கு மிகுந்த அருவெருப்பாக இருந்தது.
ஊருக்கு திரும்பி வரும்போது இதையேதான் பேசிக் கொண்டிருந்தோம். கோமாவில் கிடப்பவர் மீண்டு வரும் அவருக்கான ஆதரவு என்று யாருமே இல்லை என்பதைவிடவும் இவர்களோடு அவர் போராட வேண்டியிருக்கும் என்பது பெரிய சவாலாகத் தெரிந்தது. அம்மாவுக்கு தன்னையும் மீறி அழுகை வந்தது. அவள் பாவப்பட்ட ஜென்மம் என்று சொல்லியபடி கலங்கினார். நாங்கள் பேச்சை மாற்ற முயன்று கொண்டிருந்தாலும் நினைப்பு அவரிடம்தான் இருந்தது.
மாலை ஆறு மணியளவில் ஓசூரை அடைந்திருந்தோம். ஃபோன் வந்தது. ‘பத்திரமாக ஊர் சேர்ந்தாகிவிட்டதா’ என்பதை விசாரிக்கும் வழக்கமான அழைப்பாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதற்கான அழைப்பு இல்லை. கோமாவில் இருந்தவர் இறந்துவிட்டாராம். கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அழுதுவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் இப்பொழுது அவருக்காக அழுவதைவிடவும் இந்த உலகத்தில் இருந்து அமைதியாக பெற்றுக் கொண்ட விடுதலைக்காக ஆறுதல் அடைவதுதான் சரி என்பதாகப் பட்டது.