வாழ்க்கையில் ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதுவும் சஞ்சய் தத் காட்டும் டகால்ட்டிகளை பார்த்தால் ஜெயில் என்பது பெரிய விஷயமே இல்லை போலிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு, மெல்லிய மெத்தை, தலையணை எல்லாம் கொடுத்துவிடுகிறார்கள். எப்படியும் நியூஸ்பேப்பரையும், சில சஞ்சிகைளையும் கொடுத்துவிடுவார்கள். இது போக சிறைச் சாலைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதி கேட்டிருக்கிறாராம். பிறகு என்ன தேவை? புதிதாக கல்யாணமானவராக இருந்தால் பெண்டாட்டி மட்டும்தான் பாக்கியாக இருக்கும். திருமணம் ஆகி பல வருடங்கள் ஓடிவிட்டதால் இதனை தாதாபாய் மிகச் சிறந்த விடுதலையாக பயன்படுத்திக்கொள்ளுவார் என நினைக்கிறேன்.
தமிழ்நாட்டிலும் புழல் சிறை ஏகப்பட்ட வசதிகளுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு போலீஸ்காரர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. மற்றவர்களிடம் மரியாதையாக பேசும் போலீஸ்காரர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் படுகேவலமாக நடத்தும் போலீஸ்காரர்களை பார்த்திருக்கிறேன். ‘றேன்’ என்பதைவிட ‘றோம்’ பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை பேருமே பார்த்திருப்போம்.
சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது. பணியிலிருந்து ரிடையர்ட் ஆன பிறகுதான் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டியே பழகினார். அதுவரைக்கும் சைக்கிள், டிவிஎஸ் 50, சுசூகி மேக்ஸ் 100 ஆர் மட்டும்தான். கார் ஓட்டிப் பழகிய பிறகு- அதை ‘பழகிய பிறகு’ என்று சொல்ல முடியாது. குத்துமதிப்பாக ஓட்டத் தெரிந்த போது புத்தம் புது காரை எடுத்துக் கொண்டு பண்ணாரியில் கிடாவிருந்துக்கு போயிருக்கிறார். கூடவே அம்மாவும். போகும் போதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. விருந்துக்கு போன இடத்தில் ‘அதுக்குள்ள ஓட்டி பழகிட்டீங்களா?’ என்று ஆளாளுக்கு உசுப்பேற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. வெற்றிலை பாக்கு சிவக்க வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
வீட்டிலிருந்து பண்ணாரிக்கு நாற்பது கிலோமீட்டர் இருக்கும். ஆக, போக வர எண்பது கிலோமீட்டர். திரும்பி வரும் போது மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு பிரியும் சிறு சாலையில்தான் சனிபகவான் கட்டில் போட்டு படுத்திருக்கிறார். இன்னும் நூறு மீட்டர் தாண்டினால் வீடு வந்துவிடும் என்ற நினைப்பில் அப்பா வண்டியைத் திருப்ப, ஒரு பெண் இடது பக்கமாக வர அப்பா வலது பக்கமாக திருப்ப அந்தப் பெண் திடீரென்று வலது பக்கமாக நகர இப்படியே இட-வல-இட சடுகுடு விளையாடி டென்ஷனில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்து வேப்பமரத்தில் சாத்தித்தான் வண்டியை நிறுத்தியிருக்கிறார். பின்னால் ஸீட்டில் அமர்ந்திருந்த அம்மா ஒரு பல்டியடித்து முன்னாடி கண்ணாடியில் மோதி முன் மண்டை காயத்தோடு தப்பிவிட்டார். தினத்தந்திக்காரனுக்கு ‘அப்பளம் போல நொறுங்கிய கார்’ என்று நியூஸ் கொடுத்து உதவிய அப்பாவுக்குத்தான் கால் முறிந்துவிட்டது.
விபத்து பற்றி கேள்விப்பட்டு பெங்களூரிலிருந்து அவசர அவசரமாக பஸ் பிடித்து வந்த போது அப்பாவை தனியறையில் வைத்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அம்மா ‘ஓ’வென அழத் துவங்கினார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தது. இந்த விபத்தினால் பிரச்சினைதான்; ஆனால் பயப்படும்படியான பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றவுடன் அடிபட்ட காரை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மருத்துவமனையிலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு போன போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு கீறல் கூட விழாத மினுமினுப்பான கார் இப்பொழுது தகர டப்பாவைப் போல கிடந்தது.
‘புதுக்கார் என்பதால் எண்பது சதவீதம் இன்ஷூரன்ஸ் வாங்கிவிடலாம், எதற்கும் ஒரு எஃப்.ஐ.ஆர் வாங்கிவிடுங்கள்’ என்று சொன்னார்கள். உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினேன். தனியாக போயிருக்கக் கூடாது. ஆனால் போய்விட்டேன். அதுவும் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டுமாக.
ஸ்டேஷனில் முரட்டுக்கிடாய்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு போலீஸ்காரரிடம் விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இரு...பார்க்கலாம்’ என்றார். அந்த ‘இரு...பார்க்கலாம்’மில் ஒரு தெனாவெட்டு இருந்தது பாருங்கள். வாழ்நாளில் அப்படியொரு இளக்காரத்தையும், தெனாவெட்டையும் பார்த்ததே இல்லை.
ஸ்டேஷனில் முரட்டுக்கிடாய்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு போலீஸ்காரரிடம் விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இரு...பார்க்கலாம்’ என்றார். அந்த ‘இரு...பார்க்கலாம்’மில் ஒரு தெனாவெட்டு இருந்தது பாருங்கள். வாழ்நாளில் அப்படியொரு இளக்காரத்தையும், தெனாவெட்டையும் பார்த்ததே இல்லை.
அவர் ‘இரு..பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக மணிக்கணக்காக ‘இரு’ந்தேன். ஆனால் அவர்தான் பார்க்கவில்லை. ஸ்டேஷனுக்குள் யாராவது வருவதும் போவதுமாக இருந்தார்கள். கரைவேட்டி கட்டியவர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் பம்மிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் கரைவேட்டிக்காரர்களும் பம்மிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு அவர்களுக்கு நடிக்கத் தெரிந்தது.
இனி யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகாக இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவரிடமும் மொத்த கதையும் சொல்ல வேண்டியிருந்தது. அவரோ ‘எஸ்.ஐ வரட்டும்’ என்றார். அடுத்த சில மணிகளில் எஸ்.ஐ வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் வரட்டும் என்றார். இப்படியே அடுத்தது டி.எஸ்.பி, எஸ்.பி என்று நீண்டு டி.ஜி.பி வந்தால்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்களோ என்று பிதுங்கிக் கொண்டிருந்தேன்.
இனி யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகாக இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவரிடமும் மொத்த கதையும் சொல்ல வேண்டியிருந்தது. அவரோ ‘எஸ்.ஐ வரட்டும்’ என்றார். அடுத்த சில மணிகளில் எஸ்.ஐ வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் வரட்டும் என்றார். இப்படியே அடுத்தது டி.எஸ்.பி, எஸ்.பி என்று நீண்டு டி.ஜி.பி வந்தால்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்களோ என்று பிதுங்கிக் கொண்டிருந்தேன்.
நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்தவுடன் ஒரு போலீஸ்காரர் போய் அவரை பார்த்துவிட்டு வந்து ‘டெத் இல்லைன்னா எஃப்.ஐ.ஆர் எல்லாம் போட முடியாது. அது எங்களுக்கு பெரிய பிரச்சினை’என்றார். இதுக்காக யாரைக் கொல்வது என்று புரியாமல் ‘இன்ஷூரன்ஸ் வாங்க தேவைப்படுதே சார்’ என்ற போது,
‘அப்போ உங்க அப்பாவை அக்யூஸ்ட்ன்னு எழுதட்டுமா’ என்றார். இந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பாவை குற்றவாளி என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.
‘வேறொண்ணு பண்ணலாம். இந்த இடத்தில் விபத்து நடந்துச்சுன்னு ஒரு ரெஸிப்ட் தர்றேன் அதை கொடுத்தா இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வாங்கிக்குவாங்க’ என்றார்.
‘சரி சார் எழுதிக் கொடுங்க’ என்றவுடன் மேலும் கீழும் பார்த்தார். அவர் ‘மேட்டர்’ எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.
இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்து ‘விண்ணப்பம் எழுதி கொடுத்துட்டு போ. போய்ட்டு நாளைக்கு யாராவது பெரியவங்களோட வா’என்றார்.
இதைவிட என்னை வேறு மாதிரி ‘இன்சல்ட்’ செய்திருக்க முடியாது. காரணம், அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருந்தது. ‘பெரியவன்’ என்று நம்பி திருமணமே செய்துவிட்டார்கள் ஆனால் இன்னமும் இந்த போலீஸ்காரர் என்னை பொடியனாக நினைக்கிறார் என்பதுதான் பெரிய டார்ச்சராக இருந்தது.
ஸ்டேஷனில் இருந்த சில மணி நேரங்களில் பார்த்த வரைக்கும் யாருக்குமே மரியாதை இல்லை. எல்லோரையும் ஏதாவதொரு விதத்தில் இளப்பமாக பார்க்கிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மட்டும் ‘அய்யா அய்யா’ என்று கூழைக் கும்பிடு போட்டார்கள். மற்ற அத்தனை பேரும் அவர்களைப் பொறுத்தவரை ‘அக்யூஸ்ட்’தான் போலிருந்தது.
விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டர் வெளியே போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் நான்கைந்து பேரைக் கூட்டி வந்தார்கள். ஒரே குடும்பம் போலிருந்தது. ஒரு முதியவர், அவரது மனைவி, அவர்களின் மகன் மற்று மகள். ஒரு போலீஸ் பெண்மணியிடம் இன்ஸ்பெக்டர் கண்ணிலேயே ‘என்ன?’ என்பது போலக் கேட்டார்.
‘அந்த மூலவாய்க்கால் திருட்டு கேசுங்க அய்யா’ என்றார். ‘ம்ம்’ என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியேறிவிட்டார்.
நான்கு பேரையும் அமரச் சொல்லிவிட்டு அந்த போலீஸ்கார பெண்மணி அறைக்குள் சென்றுவிட்டார். பெண்மணியும், மகனும், மகளும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வேஷ்டியும், பனியனும் அணிந்திருந்த அந்த முதியவர் மட்டும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது அந்த குடும்பத்திற்கு புதியதாக இருந்திருக்க வேண்டும். அந்த பெண்மணி துக்கம் தாளாமல் தனது வாயில் துணியைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மற்ற மூவரும் தலையை நிமிர்த்தவே இல்லை. அவர்களைப் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. விரைவாக ஸ்டேஷனை விட்டு நகர்ந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.
அவசரமாக விண்ணப்பத்தை எழுதி முடித்திருந்தேன். போலீஸ்காரரிடம் கொடுக்க போன போது மிக ஆவேசமாக போலீஸ் பெண்மணி அறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த முதியவரை அறைந்ததை பார்த்தேன். ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டது. திடீர்த்தாக்குதலை எதிர்பார்ககாத பெரியவர் நிலைகுலைந்து போனார். முதியவருடன் இருந்த பெண்மணி கதறிய போது, ‘வாயை மூடச் சொல்லி’ அவருக்கும் அடி விழுந்தது. அத்தனை பலத்தையும் திரட்டி தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார். எதற்காக அந்தக் குடும்பத்தைக் கூட்டி வந்திருக்கிறார்கள், இப்பொழுது ஏன் அடிக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. யோசிக்க விருப்பமும் இல்லாமல் இருந்தது. உண்மையைச் சொன்னால் அந்தச் சமயத்தில் நடுக்கமாக இருந்தது. அந்த ஸ்டேஷனின் சூழல், வெளிச்சம். அவர்களின் அதிகாரம் அத்தனையையும் மீறி பேசுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தோன்றியது.
ஸ்டேஷனை விட்டு வெளியேறுவதை விட எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. அந்தக் குடும்பத்திற்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது. அங்குதான் இருந்தாக வேண்டும். தொண்டையை அடைத்த கசப்புடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய போது ஸ்டேஷனில் இருந்த மரத்தில் பறவைகள் தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தன. இருள் சற்று தடித்திருந்தது.