May 17, 2013

நீங்களும் உங்கள் சடங்குகளும்


மேட்டூர் அணையில் வெறும் 27.5 அடிக்குத்தான் தண்ணீர் இருக்கிறதாம். அது எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பெரும்பாலான அணைக்கட்டுகளில் இரண்டு மூன்று பக்கெட் அளவுக்குத்தான் தேறும் என்கிறார்கள். 

ஆனால் ரமணனை எப்பொழுது டிவியில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார். பல வருடங்களுக்கு முன்பாக ஊர்ப்பக்கங்களில் ‘மழை தொட்டச்சி’ என்ற ஒரு பூச்சி அவ்வப்போது தென்படும். XL சைஸ் வெட்டுக்கிளி. தொங்கிப் போன கிழவனைப் போல- I mean, தலை தொங்கிப்போன கிழவன் - தலையை அசைத்துக் கொண்டே நடக்கும். அதனருகில் சென்று ‘தொட்டச்சி தொட்டச்சி மாமன் ஊரில் மழை பெய்யுமா?’ என்றால் தலையை அசைக்கும். நாம் என்ன கேட்டாலும் அப்படித்தான் தலையை அசைக்கும்.எதுவுமே  கேட்காவிட்டாலும் கூட அப்படித்தான் அசைக்கும் என்பதால்‘மாமன் ஊரில் மழை பெய்தாலும் பெய்யும்’ என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தொட்டச்சிக்கு பதிலாக ரமணன் வந்துவிட்டார். தொட்டச்சி தலை அசைப்பதற்கு பதிலாக ரமணன் வாயை அசைக்கிறார். 

நமக்குத்தான் தெரியுமே! மழை இல்லை. வானம் பொய்த்துவிட்டது.

மழையே இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னமும் ஊர் ஊருக்கு மாரியம்மன் பண்டிகை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் எங்கள் ஊரில் ஐந்தாறு மாரியம்மன்ஸ். புதூருக்கு ஒன்று, பழையூருக்கு ஒன்று, வன்னியர்களுக்கு ஒன்று, போயர்களுக்கு ஒன்று என்று சித்திரை வந்தால் மாரியம்மன்ஸ் சந்தோஷம் ஆகிவிடுகிறார்கள். இத்தனை மழை அம்மன் இருந்தும் மழை வரும் பாட்டைத்தான் காணவில்லை. வெயிட்! இன்று நாஸ்திகம் பேசி புரட்சி செய்கிறேன் என யோசிக்க வேண்டியதில்லை. அது ஒரு Flow இல் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

மழைப்பாட்டை எதற்கு ஆரம்பித்தேன் என்றால் அபிலாஷின் ஒரு குறிப்பை படித்தனால். ஆர்.அபிலாஷை தெரியும்தானே? இப்பொழுது உயிர்மையில் அவர்தான் தொடர்ந்து கவர்ஸ்டோரியை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார். என்னையெல்லாம் புகழ்ந்து எழுதினால் நல்ல மனுஷன் என்று சொல்லாமல் என்ன சொல்வது? அவர் எழுதியதில் இரண்டாவது பத்தியில் கடைசி வரியை படித்துவிட்டு “அய்யய்ய அவரு உங்களை கலாய்க்கிறாருங்க” என்றார் உள்துறை அமைச்ச்சர். ஆனால் எங்கள் நட்பில் பங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் உள்நாட்டு சதி என்பதாக புரிந்து கொண்டு அதையும் பாராட்டாகவே எடுத்துக் கொண்டேன். 

அபிலாஷ் உண்மையிலேயே நல்ல நண்பர். இப்பொழுதெல்லாம் அவரை டென்ஷன் ஆக்குவதற்கு மிகச் சிறந்த உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறேன். ‘ராஜூமுருகனோட வட்டியும் முதலும் இருக்கு பாருங்க....’என்று ஆரம்பித்தால் போதும். அதன் பிறகு அவர் பேசத் துவங்கிவிடுகிறார். ராஜூமுருகன் எழுத்தின் மீது அவருக்கு அவ்வளவு பாசம். ஃபேஸ்புக்கிலோ அல்லது ஏதோ ஒரு கட்டுரையிலோ ராஜூமுருகன் சபரிமலைக்கு போவதாகவும், எழுத்தாளர்கள் சடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அபிலாஷ் எழுதியிருந்தார்.

நான் சபரிமலைக்கு போயிருக்கிறேன் என்பதால் ‘சுள்’ என்றது. என்னளவில் சடங்குகள் என்பவை வெறும் செயல்கள் மட்டும் இல்லை. அவை அனுபவங்கள். 

எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகையில் ஒவ்வொரு வருடமும் அக்னிக்கும்பம் எடுத்துவிடுகிறேன். பெயருக்குத்தான் பூச்சட்டி என்பார்கள். ஆனால் ஒரு மண் சட்டியில் கால்வாசி அளவுக்கு தவிட்டை நரப்பி அதன் மீது குச்சிகளைப் வைத்து நெருப்பை மூட்டி விடுவார்கள். அதை தூக்கிக் கொண்டு ஊரை வலம் வர வேண்டும். எங்கள் ஊரில் மாரியம்மன் பண்டிகை சித்திரை மாதம், அக்னிநட்சத்திரத்தில்தான்  வரும் என்பதால் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக நடுக்கமாக இருக்கும்.

அதுவும் இப்பொழுதெல்லாம் ஊரின் பெரும்பாலான வீதிகளை தார்ச் சாலை ஆக்கிவிட்டார்கள். கும்பத்தின் வெப்பம் கைக்கு சவால் என்றால் தார்ச்சாலை யின் வெப்பம் பாதத்துக்கு சவால். சாலையில் தண்ணீர் ஊற்றாமல் விட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ‘சாமிகள் வருகுது’ என்று தண்ணீரை ஊற்றிவிடுவார்கள். புகையைச் சேர்த்துக் கொண்டு சூடு கிளம்பும் பாருங்கள். யப்பா!

ஒரு வினாடி கூட நிற்கவே முடியாது. பறையடிக்கு ஏற்ப ஆடிக் கொண்டே வந்தாக வேண்டும். அவ்வப்போது நெருப்பு அணைந்து புகை கண்களைக் கருக்கும். இதில் நடுநடுவே நிறுத்தி நெய், வெண்ணெய் என்று சகட்டு மேனிக்கு கும்பத்திற்குள் ஊற்றிவிடுவார்கள். அது மேலே இருக்கும் சூட்டையெல்லாம் இழுத்துக்கொண்டு தவிடு வழியாக ஊடுருவி உள்ளங்கையில் கபடி ஆடும். 

இந்த ஊர்வலம் மொத்தமாக முடிய மூன்று மணி நேரம் ஆகும். மொத்த நேரமும் கிட்டத்தட்ட தியானம் போலத்தான். அத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு கோயிலை அடைந்து விட வேண்டும் என பற்களைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இது ஒரு enjoyment கூட.  

சித்திரை வெயிலில் மூன்று மணி நேரத்திற்கு கால் சூட்டையும் பொறுத்து, கும்பத்தையும் கீழே விட்டுவிடாமல் கோயிலை அடையும் போது மிகப்பெரிய நம்பிக்கை உருவாவதாக உணர்கிறேன். அந்த நம்பிக்கை அடுத்த வருடம் முழுவதற்குமான ஆன்ம பலத்தை தருகிறது என நம்புகிறேன்.

இது போன்ற நம்பிகைக்களாலும், திருப்தியினாலும் சடங்குகளின் மிகப்பெரிய விசிறியாக இருக்கிறேன்.  இது ஒரு சாம்பிள்தான். எந்த மதமாகவும், சாதியாகவும் இருந்தாலும்  சடங்குகள் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். பெரும்பாலான சடங்குகளில் நாம் கற்றுக் கொள்வதற்கும், தொடர்வதற்கும் ஏதாவது இருக்கும். அதை கண்டுபிடித்தால் போதும்- அனுபவிப்பதற்கும் அதில் ஏதோ ஒன்று இருக்கும்.