May 20, 2013

செத்தாண்டா ஸ்ரீசாந்த்


ஸ்ரீசாந்த் வசமாக சிக்கிக் கொண்டார் போலிருக்கிறது.  சூதாட்டம் பற்றிய மற்ற அத்தனை செய்திகளையும் விட அவரது லீலைகள் சார்ந்த குஜால் செய்திகள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. ‘ஸ்ரீசாந்த்தின் லேப்டாப்பில் மாடல்களின் நிர்வாணப்படங்கள் சிக்கின’, ‘அழகிகளுடன் விடிய விடிய கூத்தடித்தார்’, ‘கிரிக்கெட்டரின் டைரிகளில் கிடைத்த கிளு கிளு விவரங்கள்’ என்று பாம்புகளையும், தேள்களையும் ஒவ்வொன்றாக வெளியே விடுகிறார்கள்.

மீடியாவுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ‘மோசடி செய்துவிட்டான்’ என்று அழுவது போல நடித்தவாறே இந்தச் செய்திகளைக் கொண்டாடுகிறார்கள். ஆங்கில சேனல்களின் பாதி நேரத்தை இந்தச் செய்திகள்தான் தின்று ஏப்பம் விடுகின்றன. பத்திரிக்கைகளுக்கு பல பக்கங்கள் சர்வசாதாரணமாக நிரம்புகின்றன.

ஸ்ரீசாந்தின் அந்தரங்கத்தை பெருமளவில் முன்னிலைப்படுத்தும் இந்தத் தகவல்களுக்கு பின்னால் என்ன நோக்கம் என்று இருக்கக் கூடும் என்பதை கோக்குமாக்காக புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதான நோக்கம்,  செலிபிரிட்டிகள் பற்றிய கிளுகிளு செய்திகளுக்கு இருக்கும் நல்ல ‘மார்க்கெட்டை’ திறம்பட பயன்படுத்திக் கொள்வது. இன்னொரு நோக்கம், கிரிக்கெட்டின் சில்லரைத் தனங்களில் ஈடுபட்டிருக்கும் பெருந்தலைகளைக் காப்பாற்றுவதற்கான 'diverting agent'.

நம் நாட்டில் இப்படி ஒரு கலாச்சாரம் உண்டு- மனிதர்களைக் காப்பாற்ற ஆடுகளையும், கோழிகளையும் காவு கொடுத்துவிடுவார்கள். ‘அய்யாவுக்கு ஆயுசுல கண்டம் இருக்கு. ஒரு சேவலை அறுத்து போட்டுடுங்க’ என்ற கான்செப்ட்தான். ஆ.ராசாவை உள்ளே தள்ளி மற்ற அத்தனை பேரையும் காப்பாற்றியது போல, மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை கொடுத்துவிட்டு கேப்மாரி அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தப்பிக்கவிட்டுவிட்டது போல, ஹர்ஷத் மேத்தாவோடு சேர்த்து ஷேர் மார்கெட் ஊழல் மூழ்கடிக்கப்பட்டது போல, குவ்த்ரோச்சி ‘நல்லவர்’ என்று அறிவித்ததோடு ஃபோபர்ஸ் வழக்கு முடிவுக்கு வந்தது போல...இப்படியே போல போல என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.

இப்பொழுது ஸ்ரீசாந்த்தை அமுக்கிவிட்டார்கள். அதனால் மற்ற அத்தனை யோக்கியசிகாமணிகளும் பெருமூச்சு விடுவார்கள். இனி ஸ்ரீசாந்தின் கழுத்தை கருணையில்லாமல் அறுத்துவிட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஸ்ரீசாந்த் செய்தது குற்றமா இல்லையா என்பது இருக்கட்டும். உண்மையில் ஸ்ரீசாந்த் மட்டும்தான் குற்றவாளியா?

கிரிக்கெட்டை வணிகமாக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஆரம்பித்து, ஐபிஎல் என்ற ஆபாசத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சுரண்டிப் பெருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், ‘கிரிக்கெட் எங்களின் மதம்’ என்று பில்ட் அப் கொடுத்த மீடியா, ஐபிஎல் அணியின் ஓனர்கள், அவர்களுக்கு விளம்பரங்களின் மூலம் கொட்டிக் கொடுத்த விளம்பரதாரர்கள் என அத்தனை பேரை நோக்கியும் கை நீட்ட வேண்டும்.

அரசியலில் ‘கிங்மேக்கர்’ என்ப்படும் லாலுபிரசாத் யாதவ், ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் வணிகத்தின் அதிபரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு  அவர்களது ‘கிரிக்கெட் பிரியம்’ மட்டும்தான் காரணமாக இருக்கும் என்று நம்மால் நம்ப முடியுமா? ஐபிஎல் மூலம் கோடிகளை வாரிச்சுருட்டிய லலித் மோடி இப்பொழுது வாழும் லண்டன் ராஜவாழ்க்கையைப் பற்றி ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை?

எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் பின்னால் பல கோடிகள் புரள்கிறது. கிரிக்கெட் என்பது இங்கு விளையாட்டு மட்டும் இல்லை. அது பொழுது போக்காக, வணிகமாக, சூதாட்டமாக, கவர்ச்சியாக என அத்தனையுமாக இருக்கிறது. ஒரு சாதாரண அரசு அதிகாரியைக் கவர்வதற்காகக் கூட பணம், பெண், போதை என சகலத்தையும் வாரிக் கொடுக்கும் புரோக்கர்களும், வணிகர்களும் மலிந்த இந்த தேசத்தில் கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் வீரர்களை கவர்ந்திழுக்க என்னவெல்லாம் செய்வார்கள்?

கிடைத்த வாய்ப்பில் ஸ்ரீசாந்த் சறுக்க, வலை கட்டி அமுக்கிவிட்டார்கள். மற்றவர்கள் எல்லாம்? அவர்கள் ஒன்றும் சொக்கத்தங்கம் இல்லை. அவர்களுக்கு நல்ல நேரம். தப்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

‘கிரிக்கெட் கமர்ஷியலைசேஷன்’ வண்டவாளங்களைத் தோண்டியெடுத்தால் நிழல் உலக தாதாக்கள், வணிக முதலைகள், அரசியல் ஃப்ராடுகள், புரோக்கர்கள், விபச்சார ஏஜெண்ட்கள், விளையாட்டு வீரர்கள் என பெரும் கூட்டத்தையே பிடிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்களையெல்லாம் சிறைச்சாலைகளில் அடைப்பதாக இருந்தால் இந்தியாவின் பெரும்பாலான சிறைச்சாலைகளை அவர்களுக்காக காலி செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்கள் கிரிக்கெட்டில் முறையற்று சம்பாதித்த வருமானத்தையெல்லாம் பறிமுதல் செய்வதாக இருந்தால் பல ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக அடைத்துவிட முடியும். ஆனால் அதையெல்லாம் நம்மவர்கள் செய்யமாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.

எல்லா வழக்குகளையும் போலவே இதுவும் ஒரு வழக்கு. தேசத்தின் கவனத்தை சற்று நேரத்திற்கு திசைமாற்றும் வழக்காகக் கூட இருக்கலாம். கொஞ்ச நாட்களுக்கு இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். இன்னொரு பரபரப்பான விவகாரம் வந்தால் ஊடகங்கள் இதை கைவிட்டுவிட்டு அதைப் பிடித்துக் கொள்ளும். நாமும் ஊடகங்களின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீசாந்த்தை டீலிங்கில் விட்டுவிடுவோம்.

அப்படியானால் ஸ்ரீசாந்த் நல்லவனா என்றால், அப்படியெல்லாம் சொல்லவில்லை. இங்கு வாய்ப்பு கிடைக்காதவரைக்கும்தான் உத்தமன், பத்தினி எல்லாம். சிக்கிக் கொள்ளாதவரைக்கும்தான் யோக்கியன், நல்லவன் எல்லாம். ஒருவேளை சிக்கிக் கொண்டால் சிதைத்துவிடுவார்கள். இப்பொழுது இவன் சிக்கிக் கொண்டான். சிதைக்கிறோம். நாளைக்கு நானோ நீங்களோ சிக்கினாலும் கூட அதையேதான் செய்வார்கள்.