Apr 22, 2013

சச்சரவும் கண்ணாமூச்சியும்


பெரியார் திடல் புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை மாலையில் கூட்டமே இல்லை. மொத்தமாக இருநூறு பேர் இருந்திருக்கக் கூடும். அவ்வளவுதான். பஜ்ஜி கடை கூட காலியாகத்தான் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது திடலுக்கு வெளியே சற்று தூரத்தில் சச்சரவாக இருந்தது. 

நடுத்தர வயதுடைய மனிதருடன் வண்டியில் வந்த பெண்ணொருத்தியின் இடுப்பை பின்னால் பைக்கில் வந்த வேறொருவன் கிள்ளிவிட்டானாம். மூவரும் பைக்கை விட்டு இறங்கி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். கிள்ளி வைத்தவன் ஒரு பெரிய மாடு போல இருந்தான். முழு போதையில் வேறு இருந்தான். 

அந்தப் பெண்ணுக்கும் நடுத்தர மனிதனுக்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. ஆந்திராக்காரர்கள் போலிருந்தார்கள். அந்தப் பெண் “I am a lawyer” என்றாள். எனக்கு அந்த வாக்கியத்தின் மீது நம்பிக்கை வரவில்லை. அந்த போதையேறியவனுக்கும் நம்பிக்கையில்லை போலிருந்தது. அந்தப் பெண்ணிடம் ஏதோ உளறிக் கொண்டிருந்தான். ஆட்டோக்காரர்கள் சில பேர் கூடினார்கள். அவனுக்கு அடி விழும் என்று நினைத்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அந்த நடுத்தர வயதுக்காரரும் அந்த இடத்திலிருந்து நகர்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தார். அடுத்த சில வினாடிகளில் அந்த இடம் காலியாகிவிட்டது. போதைக்காரன் வெற்றியடைந்தவனுக்கான மனநிலையில் மற்றவர்களின் முகத்தைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். 

இந்த நிகழ்ச்சியின் காரணமாக இல்லை- ஆனால் திடீரென்று ஊருக்கு போக வேண்டும் என்று தோன்றியது. என்னிடம் பெரும்பாலும் லக்கேஜ் எதுவும் இருக்காது. அதிகபட்சமாக ஒரு பை மட்டும்தான் இருக்கும் என்பதால் எப்பொழுது நினைத்தாலும் பயணத்தின் திசையை மாற்றிக் கொள்ள முடியும். அப்பொழுதும் ஒரு பை மட்டும்தான் இருந்தது. சென்னையில் தங்குவதற்கு பதிலாக கோயம்பேடு சென்று பேருந்து ஏறிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

சிக்னலில் நின்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாத ஒரு பெண் வேகமாக வந்து கொண்டிருந்தார். சிவப்பு சிக்னல் எரிந்து கொண்டிருந்த போது வலது புறமாக Wrong இல் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. என்னைத் தாண்டும் போது “க...வி...தா...சொ...ர்...ண..வ..ல்..லி” என்று மெதுவாக அழைத்தேன். அவராக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்த மெதுவான அழைப்பில் ஒரு சந்தேகம் இருந்தது. வண்டியை நிறுத்தி “யெஸ்ஸூ” என்றார். அவரேதான். இதுவரை நேரில் பார்த்ததில்லை. Facebook இல் மட்டும் அவரது நிழற்படத்தை பார்த்திருக்கிறேன்.

“உங்களை அடையாளமே தெரியவில்லை. நாற்பது வயது ஆளாக இருக்கும் என நினைத்திருந்தேன்” என்றார். இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

“எங்கே போறீங்க?” என்றார். 

“கோயம்பேடு” 

“கே.கே.நகரில் இறக்கிவிடுகிறேன்” என்றார். சில வினாடிகள் யோசித்தேன். ஏற்கனவே எனக்கு ‘பைக்’கில் கண்டமிருக்கிறது என்பதால் வம்படியாக மாட்டிக் கொள்வேனோ என்று பயமாக இருந்தது. “உட்காருங்க” என்று தைரியப்படுத்தினார். ஏறிக் கொண்டேன்.

வழியில் சில வண்டிக்காரர்களைத் திட்டினார். சில கார்க்காரர்களை முறைத்தார். ப்ளாஸ்டிக் பாட்டிலின் மீது ஏறிய பைக் கார பெண்ணை நோக்கி ஏதோ சப்தமிட அவளும் திட்டிக் கொண்டே போனாள். திடீரென எதிரே இருந்த Divider இல் இடிப்பது போல சென்று கத்தியபடி “ஜெர்க்” கொடுத்தார். இத்தனை சாகசங்களுக்கும் இடையிடையே ஹலோ எஃப்.எம்மில் தான் நடத்தும்  ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சி பற்றி பேசினார், வேலைக்கு போகும் பெண்களைப் பற்றிச் சொன்னார், குடும்பம் பற்றி பேசினார் இன்னும் நிறைய நிறைய பேசிக் கொண்டேயிருந்தார். ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கே.கே.நகரில் இறங்கிய போது பின்னால் வந்த வண்டிக்காரர்கள் ஹார்ன் அடிக்கத் துவங்கியிருந்தார்கள்.  “தேங்க்ஸ்” என்று சொல்லிய அடுத்த சில கணங்களில் வண்டிகளுக்குள்ளாக கவிதா மறைந்திருந்தார்.

கோயம்பேட்டில் பெங்களூர் பேருந்துகள் நிற்குமிடத்திலும் சலசலப்பு. பெரியார் திடல் அருகே இருந்த கூட்டத்தை விடவும் அதிகம். ஒருவனை ஏழெட்டு பேர் சேர்ந்து பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.அதே பிரச்சினைதான். ஒரு பெண்ணை சீண்டியிருக்கிறான். அடி வாங்கியவன் போதையில் இருந்தானாம். ஆனால் இப்பொழுது அதெல்லாம் தெரியவில்லை. பிய்ந்த முகமும் ரத்தமும்தான் தெரிந்தது. அடித்தவர்களில் ஒரு சிலரும் போதையில் இருந்த மாதிரிதான் தெரிந்தது. சீண்டப்பட்ட பெண் வெறி கொண்டவளாக அடித்தவர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள். “அடிங்க பரதேசி” “உங்க அம்மா மேல கை வைப்பியாடா?” என்றெல்லாம் அவள் கேட்க கேட்க அவனுக்கான அடிகளின் அளவு அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

ஒரு மனிதர் அவனை செருப்பில் அறைந்து கொண்டிருந்தார். பேருந்து நிலையம் என்பதால் அவனுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. உடனடியாக இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வந்து விலக்கிவிட்டார்கள். “வாம்மா ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடு” என்று கேட்டார்கள். “அடிச்சவங்கள்ல ரெண்டு பேரு கூட வாங்க” என்ற வார்த்தை போலீஸாரிடமிருந்து முழுமையாக வந்து சேருவதற்குள்ளாகவே ஆளாளுக்கு பேருந்துக்கு நேரமாகிக் கொண்டிருப்பது போன்ற பாவனையைக் காட்டியவாறு நழுவத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணும் கூட நழுவததற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்ததார்.

நின்று கொண்டிருந்த பெங்களூர் பேருந்தில் ஏறி தூங்காமல் விழித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். பாதை முழுவதும் சோடியம் விளக்குகளும் இருளும் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. ஆனாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். பெங்களூர் வந்து இறங்கிய போது இடையில் ஒரு வினாடி கூட தூங்காமல் வந்திருப்பது ஆச்சரியம் அளித்தது. 

ஞாயிற்றுக்கிழமையின் பகலில் வேண்டியவரைக்கும் உறங்கி விட்டு மாலையில் பத்திரிக்கையாளர் வினோத்தை பார்க்க அல்சூர் ஏரிக்குச் சென்றிருந்தேன். அவருடைய நண்பர் ராஜேஷூம் வந்திருந்தார். இரண்டு பேரையும் முதன் முறையாக சந்திக்கிறேன். அல்சூர் ஏரியில் நடந்தபடியே வினோத் தனது இலங்கை பயணம், வரவிருக்கும் தனது புத்தகங்கள், பத்திரிக்கை பணி என்று நிறைய பேசிக் கொண்டிருந்தார். பின்புறமாக நடந்து வந்த ராஜேஷ் ஃபோனில் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு அவர் எங்களிடம் வந்த போது நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.  “ஏதோ பிரச்சினை” என்று நினைத்துக் கொண்டேன். வினோத்துடன் பேசியிருந்தது நிறைவாக இருந்தது. 

வீட்டிற்கு வரும் போது அவர் பேசிய விஷயங்கள்தான் நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தது. இரண்டு நாட்களில் மூன்று நண்பர்களை முதன்முதலாக சந்தித்திருக்கிறேன். மூன்று பேருமே நம்பிக்கைக்குரிய இளைஞர்கள். நல்ல விஷயங்கள் யாவும் யதேச்சையாக நடக்கிறது என்றால் சந்தோஷமாகத்தானே இருக்கும்? ஆனால் எல்லா சந்தோஷங்களுக்கும் நீண்ட ஆயுள் இருப்பதில்லை.

இன்று முகநூலை திறந்தால் பெரிய அதிர்ச்சி. சனிக்கிழமையன்று முதன் முதலாக பார்த்த கவிதா, ஞாயிறன்று முதன் முதலாக பார்த்த ராஜேஷ் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்திருக்கிறார்.வினோத்தையும் சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு சுலபமாக ஜீரணிக்கவும் முடியவில்லை.

எதற்காக அடுத்ததடுத்த நாட்களில் இரண்டு வெவ்வேறு நகரங்களில் மூன்று பேரை புதிதாக சந்திக்க வேண்டியிருந்தது என்பதும், அடுத்த நாளிலேயே அவர்களுக்கு இடையே ஏன் பிரச்சினை உருவானது என்பதும் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப்பார்த்தால் இந்த நிகழ்வுகளை எந்தவிதத்திலும் இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் கண்ணாமூச்சி நடந்திருக்கிறது.