Apr 22, 2013

மரண வீட்டின் குறிப்புகள்

சேலத்தில் நடைபெற்ற கவிதை விமர்சனக் கூட்டத்தில் “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” தொகுப்பிற்காக கவிஞர் ராணிதிலக் வாசித்த கட்டுரை அவரது தளத்தில் கிடைத்தது.

அவருக்கு நன்றி.

                                                          *****

                                                  மரண வீட்டின் குறிப்புகள்


இந்தப் புத்தாண்டில் வெளியான கவிதைத்தொகுதிகளில் ஒன்றான வா.மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி பற்றி இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருக்கிறேன். அதற்குமுன்பு இத்தொகுதியின் சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறேன்.

1) மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன்

மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்

                                                 ***

2) இந்த வருடத்தின் முதல் தற்கொலை

உங்கள் மீதான அதீத நம்பிக்கையில்
என் அந்தரங்கங்களை
பூட்டாமல் விட்டுச் செல்கிறேன்
அல்லது
ரகசிய அறையின் சாவியை
உங்களிடமே கொடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இல்லாத நேரத்தில்
மிக அவசரமாக
என் ரகசியங்களை சோதனையிடுகிறீர்கள்

எப்பொழுதும்
என்னுடையதாகவே
இருந்திருக்க வேண்டிய
அந்தரங்கங்கள்
இப்பொழுது
நம்மிடையே
பொதுவானதாகிறது.

நேர்த்தியாக என் குற்றங்களை வரிசைப்படுத்துகிறீர்கள்
எனக்கு எதிராக எழுப்ப வேண்டிய வினாக்களை
தயார்படுத்துகிறீர்கள்
வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்
நான் தலை குனியத் துவங்கும் போது
உங்களின் வேகம் அதிகரிக்கிறது.

                                                ***

3) நான் தோல்வியடைகிறேன்

என்னிடமிருந்து
கண்ணீர் பெருகும்
கணத்திலிருந்து
நான்
நசுக்கப்படுகிறேன்

உங்களுக்கும் எனக்கும்
இடையில்
கட்டப்பட்ட
எனது பிம்பம்
சிதைந்து
கொண்டிருக்கிறது.

எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிறேன்.
கைகளை கிழித்துக் கொள்வதோ
அல்லது
நெருப்பினில் விரல் வைப்பதோ
உங்களை ஆசுவாசப்படுத்தும்
என நினைக்கிறேன்.

நீங்கள்
எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

வினாக்கள்
இன்னொரு வரிசையில்
விழத் துவங்குகின்றன.

நான் ரகசியமாக
வைத்திருந்த சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன.

எனது வானத்தில்
பறந்து கொண்டிருந்த
சிறு பறவைகளை
சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

எனது பாடல் வரிகள்
களைத்தெறியப்படுகின்றன.

நான்
உடைந்து கொண்டிருக்கிறேன்.
அல்லது
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

வீதிகளில்
எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று

பட்டாசுகள் வெடிக்கத் துவங்குகின்றன.

இப்பொழுது
என் அறை சாத்தப்படுகிறது
மெதுவாக
                                     ***

4) துளிகள்

(அ)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(ஆ)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(இ)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(ஈ)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்
                                                                     ***

இந்த ஆண்டு வெளியான கவிதைத்தொகுதிகளைப் பெரும்பாலும் வாசித்த எனக்குச் சில கோடுகள் கிடைத்திருக்கின்றன.  சுய அனுபவம், கற்பனை, அதிகார எதிர்ப்பு, கனவு என வியாபித்திருக்கும் இக்கவிதைக் கோடுகளில் வா.மணிகண்டன் கவிதைகளின் கோடும் ஒன்று. அதாவது ரத்தக்கோடு. மரணக்கோடு.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எதைப்பற்றிப் பேசுகின்றன? என்பதைத் தொகுதியின் பின்புறம் குறிப்பு எழுதி வாசித்தபோது எனக்குக் கிடைத்த வரிதான் ஒரு புத்தகத்தின் நான்கைந்து தாள்கள்.  அதாவது இங்கு தாள்கள் என்பது வெற்றுத் தாள் அல்ல.  ஒரு தாள் என்பது வன்மம், இரண்டாம் தாள் என்பது கொலை என்று அப்படி.... ரத்தத்தில் நனைத்த தாள்கள்.

இக்கவிதைகளை என்னால் ஓரே மூச்சில் வாசிக்க இயலவில்லை.  மிகவும் கவனமாகவும் சிரத்தையுடனும் வாசிக்கவேண்டிய பிரதியாக இருக்கிறது.  ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்குள் நுழைவதற்குள் என்னிடம் குருதி வழிந்துவிடுகிறது.  நீங்கள் இந்தத் தொகுப்பை வாசித்தீர்கள் எனில், மரணம், கொலை, வன்மம், தற்கொலை, துக்கம், பிரிவு, குருதி வழிதல் என்கிற பதங்களை, அதன் சாயல்கள் ஏதாவது ஒன்றினை, ஒவ்வொரு கவிதையிலும் கண்டுவிடமுடியும். 

ஒரு கருத்து சார்ந்த கவிதைகளை வலிந்து எழுதியதுபோலவும் தோற்றமளிக்கிறது.. 

நேற்று-இன்று-நாளைகளில் எழுதப்படும் எல்லாக் கவிதைகளிலும் மரணமும் குருதியும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்கின்றன.  வலியும் பரிதவிப்பும் குற்றமும் பிரிவும் இதனுடன் பேசப்படுகின்றன. 

ஒரு தொகுதி முழுவதும் மரணத்தை மட்டும் வாசிக்கும்போது ஏதோ ஒரு சாவு வீட்டில் அமர்ந்துகொண்டு, எப்படி இறந்தான் இறந்தாள் என்று சாவு வீட்டாரிடம் கேட்க,  அவர்கள் சொல்வதுபோல் இருக்கின்றன கவிதைகள்.

நிகழ்ந்தது- நிகழ்கின்றது-நிகழலாம் என்கிற கோட்டில்  அமையும் கவிதைகள் இவை. மிகத் துல்லியத்துடன் கவனமாகவும் உத்திகளாலும் செதுக்கப்பட்ட கவிதைகள்தான் இவை.  சொல்முறைகள் மனுஷ்யபுத்திரனுடன் ஒத்துப்போகுபவை. ஒரு கவிஞனின் சாயல் நம்மீது விழுவது தவறில்லை. நாம் அந்தக் குடையிலிருந்து விலகி நடக்கத்துவங்கினால், நமக்கான குடை கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்

யாதார்த்தம் என்பதைக் கடந்து, இக்கவிதைகளைப் புனைவு என்கிற தளத்தில் நான் அணுகுகிறேன்.  நித்யம் அநித்யம், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி, மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன், செவ்வந்திப்பூக்கள் சிதிறய மயானம், கரப்பான் பூச்சிகள் புழங்கும் வீடு, மழைக்காமம், புனிதக் காதல், கொலை மேடைக்குதிரைகள் ஆகியவை இத்தொகுதியின் கோட்டினை வரையும் மையமான கவிதைகள். இம்மையங்கள் யதார்த்துடன் கலந்த கற்பனைக்கோடுகள். குருதி வழியும் கோடுகள்.

இவர் கவிதைகளில் மரணமும் பிரிவும் வலியும் பிறக்க ஏதாவது ஒரு காரணம் இருந்துவிடுகிறது.  இந்தக் காரணத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளில் கவித்வ பின்புலமோ, ஆன்மீகமோ, தத்துவமோ நீங்கள் காணமுடியாது. வாழ்வின்  கொடூர கணங்களை, நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத தீவினைகளின் சம்பவங்களை இக்கவிதைகள் மொழிகின்றன. இந்த அபூர்வம் எந்தப் பழைய மற்றும் புதிய கவிஞர்களிடம் என்னால் காண முடியவில்லை.

இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றினையும்  வாசிக்கும்போதும் நமக்குள் ஒருவித படபடப்பும் அச்சமும் பீதியும் அலைவதை உணர்ந்துவிடமுடியும். நாமே மரணத்தின் பிடியில் இருப்பதாகவும், நம் உடலில் குருதி வழிந்து பிணமாகிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். அதிர்ச்சியூட்டும் மரணத்தின் படிமங்கள் நமது இரத்தத்தில் கலந்து ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.  அவர் கவிதையில் வரும் பிணவறையில் மண்டையைப் பிளக்கும் சப்தம் நம் காதை நிலைகுலையச் செய்வது என்பது உறுதி.

இக்கவிதைகள் அனைத்தும் ஒற்றைக்குரலாக மாறிவிடுவதையும், அவ்வொற்றைக் குரலின் வெவ்வேறு தொனிகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்போது அச்சமும் பீதியும் ஏற்படுவது இயல்பாக நிகழ்ந்துவிடுகிறது. மரணத்தையும் பரிதவிப்பையும் திரும்ப திரும்ப வாசிக்கும்போது ஏற்படும்  அசௌகரியத்தை என்னவென்று சொல்வது?

இன்றைய நவீன கவிதையின் ஆன்மாவை இக் கவிதைகள் சொல்கின்றனவா? இக்கவிதைகள் புதிய கவிதை இயலை உருவாக்குகிறதா? என்ற கேள்விகளை எல்லாம் இங்கே பேசவேண்டியதில்லை. இத்தொகுதி நவீன வாழ்வில் நடக்கும் துர் சம்பவங்களால் புனையப்பட்ட ஓர் அனுபவம். இத்துர்சம்பவங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சிறு சலனங்களே இத்தொகுதியின் சின்னஞ்சிறு உரையாடல்.

இந்த உரையாடல்களை கவிதைக்கு வெளியேயும் உள்ளேயும் நீங்கள் நிகழ்த்திக் கொள்ளலாம்.  அதற்கான மிகச் சிறந்த பாதையை இத்தொகுதி அமைக்கிறது.  அந்தப் பாதை கொஞ்சம் நிணத்தால் ஆனது....ரத்தம் வழியும் உடலால் ஆனது.  நீங்கள் தாராளமாக யாத்திரை மேற்கொள்ளலாம்.  நீங்கள் நீதிதேவனாய் இருக்கவேண்டியது இல்லை. நமது உண்மையான மனதைத் திறக்கும்போது, நாம் எவ்வளவு பெரிய சாத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள இத்தொகுதி வழிவகுக்கும்.

இத்தொகுதியின் துர்சம்பவங்களிலிருந்து வெளியேறி இருக்கும் பறவைகள் நகர்ந்துவிட்ட வானம், காணாத மீசை, சாதுவான பொன்னிற மீன், சொல்லப்படாத ரகசியம், சுழுன்று விழும் இலை, டைனோசர்களுடன் வாழ்பவன், செவ்வாய்க் கிழமையின் மதுச்சாலை கவிதைகள் கொஞ்சம் நிறைவை உருவாக்குகின்றன.  வாழ்வு இக்கவிதைகளில் இருக்கிறது. அதாவது புனைவற்ற நிஜ அனுபவங்கள்.  இந்த அனுபவங்கள்தான் கவிதையை சத்தியத்திற்கு அழைத்துச் செல்பவை  என்று நம்புகிறேன்.

சிறிது முடிவாகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. இக்கவிதைகள் தினசரிகளில் வரும் கொடூர செய்திகளை கவிதை வடிவில் விரிவாக்கிச் சொல்வதுபோல் இருக்கிறது.

2.       நவீன கவிதை எடுத்து இயம்ப தயங்குகின்றன சாத்தான் உலகத்தை இக்கவிதைகள் முழுதளவும் குறிப்பாகக் காட்டுகின்றன.

3.   மரணத்தைப் பற்றிப் பேசும் ஒற்றைக் குரலாக மட்டும் இத்தொகுதி மாறிவிடுவது நமக்கு அசௌகரியத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த அசௌகரியத்திலிருந்து விடுபடும்போது, நமக்கு இக்கவிதைகள் அந்நியமாகிவிடுவதை நாம் பார்க்கலாம்.

4.   மரணம் குறித்த உரையாடலை எஸ்.சம்பத் தன் நாவலில் ஏற்படுத்தியது போன்ற சிறு சலனங்களை வா.மணிகண்டன் தம் கவிதையில் தவறவிடுகிறார். ஏனெனில் மரணம் இவர் கவிதைகளில் நிகழ்வாக மட்டும் சித்தரிக்கப்படுகிறது என்பதால்.

5.  இந்த வகைமாதிரி கவிதைகளை இதுவரை அவர் எழுதியிருக்கலாம். இனிமேல் தொடரும்போது சலிப்பான பிரதிகளாக அவை கருதப்படலாம். அனுபவத்தின் பின்புலத்திலிருந்து எழுதுவதற்கும், தகவலின் பின்புலத்திலிருந்து உருவாக்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

என்றாலும், வா. மணிகண்டன் இக்கவிதைத் தெரிந்தோ தெரியாமலோ மரணத்தின் கொடூர முகங்களையும், வாழ்வின் அபத்தங்களையும் எழுதியிருக்கிறார். இந்த அபத்தத்தை நம்மால் மறுக்க இயலாது ஒன்று. அதனாலேயே அதிகமாய் ஏற்று, குறைவாக மறுக்கவேண்டியுள்ளது. தயவு செய்து வா.மணிகண்டன் கொஞ்சம் மரணத்திலிருந்து, ஒற்றைக்குரலிலிருந்து விலகிவிடுங்களேன்.  நீங்கள் எங்கள் சாத்தான் உலகத்தைப் பார்க்க வைத்தது போதும். குரூரத்தை எவ்வளவுதான் தாங்கிக்கொள்வது?