Apr 23, 2013

சோழியன் குடுமி


பெங்களூரில் திப்பசந்த்ரா என்று ஒரு ஏரியா இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீகளா? இந்த ஏரியா வழியாக போகும் போது நேரம் கெட்டுக் கிடந்தால் ட்ராபிக் நெரிசலில் சிக்கி மெர்சல் ஆகிவிட வேண்டியிருக்கும். அவ்வளவு வளர்ச்சி- நமீதா வளர்ச்சி. அந்த நெரிசலின் வழியாகத்தான் முன்பெல்லாம் அலுவலகம் போவது வழக்கமாக இருந்தது. நெரிசலாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் காரணம். இந்த இடத்தில் எந்த டபுள் மீனிங்கும் இல்லாமல் ‘மரங்கள் அதிகமாக இருக்கும்’ என்று புரிந்து கொள்வீர்களாக.

ஆனால் ஆன்னா ஊன்னா பைக்கோடு சேர்ந்து குட்டிக்கரணம் அடிப்பதும் யாராவது பார்த்தால் ‘கீழே விழுறது ஹாபிங்க’ என்று வழிவதுமாக பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கண்ணுக்கு குளிர்ச்சி முக்கியமா, தழும்பு இல்லாத மூட்டுகள் முக்கியமா என்ற பட்டிமன்றம் வைக்க வேண்டிய நிலை வந்த போது மூட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பாதையை நான் மாற்றிக் கொண்டது முக்கியமில்லை- அது இந்த இடத்தில் அவசியமும் இல்லை. ஆனால் இந்த திப்பசந்த்ரா வழியாக சென்று வந்து கொண்டிருந்த போது ரமேஷ் என்ற பெரிய மனிதரை அவ்வப்போது பார்க்க வேண்டியிருந்தது. அது முக்கியம்.

பெரிய மனிதர் என்றால் வசதி வாய்ப்புகளில் மட்டுமில்லை. ஆஜானுபாகுவான உடல், உருண்டையான உருளைக்கிழங்கு முகம், பென்ஸ் கார் என்று எல்லாவற்றிலும் பெரிய ஆள்தான். 

அவரது அலுவலகத்தைத் தாண்டித்தான் தினமும் போய் வர வேண்டியிருந்தது. அலுவலகம் என்றால் பெரிய வீடு அது. முன்புறமாக நிறைய காலி இடத்துடன் கூடிய பங்களாவாக இருந்தது. ஆரம்பத்தில் அந்த காலி இடத்தில் பந்தல் எதுவும் போட்டிருக்கவில்லை. கீழ் தளத்தில் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மேல்தளத்தில் ரமேஷ் இருப்பார்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு ரமேஷ் படம் ஒட்டப்பட்ட ட்ராக்டர்களை அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் நிறுத்தினார்கள். பின்னர் அந்த ட்ராக்டர்கள் தண்ணீர் டேங்கர்களாக மாற்றப்பட்டு இலவச தண்ணீர் வழங்கும் ஜலவூர்திகளாக மாறிப் போயின. திப்பசந்த்ராவில் இருக்கும் குடிசை வாசிகளுக்காக ட்ராக்டர்கள் ஓடாய்த் தேயத் துவங்கின.

இப்பொழுது அந்த அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது. எளிய மனிதர்கள் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருக்கத் துவங்கினார்கள். அவர்களின் கைகளில் மனுக்கள் இருப்பதையும் கவனிக்க முடியும். பெங்களூரில் கவுன்சிலரின் அலுவலங்களும், எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களும் ஈயாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் ரமேஷின் அலுவலகம் அத்தனை பிஸியாக இருந்தது.

பிறகு அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் அலுமினிய தகரம் வேயப்பட்ட மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. அந்தப் பந்தல் நூறு ஆட்கள் அமரக் கூடிய இடமாக மாறியது.  

அலுவலகத்திற்கு முன்பாக அவ்வப்போது விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு போஸ்டரிலும், பேனரிலும் ரமேஷின் சமூகச் சேவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டது. கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு அதற்கான போஸ்டர்கள் ஏரியா முழுவதும் ஒட்டப்பட்ட போது ஒவ்வொரு போஸ்டரிலும் ரமேஷ் சிரித்துக் கொண்டிருந்தார். இலவச மருத்துவ முகாம்களுக்கான விளம்பரங்களில் ரமேஷ் வாஞ்சையோடு ஏழைகளைத் ஆசிர்வதித்தார். இலவச கண் மருத்துவ முகாம்களுக்கான போஸ்டர்களில் ஒரு படி மேலே போய் கண்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார். 

அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்கு முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போன போது யாரும் தடுக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் “தலைவரை பார்க்க வேண்டும்” என்றேன். அமரச் சொன்னார்கள். சில நிமிடங்களுக்கு பிறகாக உள்ளே அழைப்பதாகச் சொன்னார்கள். பெரிய பந்தா எதுவும் இல்லை. முன்பு இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். 

“பேனர்களை பார்த்தேன். உங்களின் சேவைகள் பிடித்திருக்கிறது. வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது” என்றேன். தமிழில் பேசியது அவருக்கு புரியவில்லை. அருகில் இருந்தவர் அவருக்காக மொழிபெயர்த்தார். 

“சீக்கிரம் கன்னடம் பேசிப் பழகிக்குங்க” என்று கன்னடத்தில் சொன்னது புரிந்தது. சிரித்துக் கொண்டே இறங்கி வந்துவிட்டேன்.

உண்மையில் அவரது சேவை எதுவும் ஈர்க்கவில்லை. அவர் செய்த சேவைகளுக்கு செலவான தொகை அல்லது அதைவிடவும் அதிகமாகவும் கூட அதை விளம்பரப்படுத்துவதற்காக செலவு செய்து கொண்டிருந்தார். அத்தகைய மனிதனை ஒரு முறை நேரில் பார்த்துவிட என்றும் தோன்றியது. பார்த்தாகிவிட்டது. அவ்வளவுதான்.

கடந்த ஒரு வருடமாக சேவையும் விளம்பரங்களும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளில் பல கோடி ரூபாய்களை இரைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அலுவலகம் கனஜோராக மாறிவிட்டது. இன்ஸ்டண்ட் சேவகராக மாறியிருக்கிறார் என்று யாராலும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிற அளவில் படிப்படியாக தனது முகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

சமீபகாலங்களில் அந்தப் பக்கம் வழியாக போவதில்லை என்றேன் அல்லவா? நேற்று அந்த வழியாக போயிருந்தேன். ஒன்றுமில்லை- அவரது அலுவலகம் எப்படியிருக்கிறது என பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கனஜோராக இருந்தது. பயங்கர கூட்டம். ஆட்கள் படு உற்சாகமாக இருந்தார்கள்.

உற்சாகத்திற்கான காரணத்தை இந்நேரம் உங்களால் யூகித்திருக்க முடியும். இல்லையென்றால் அதற்கான விடை கடைசி பத்தியில் இருக்கிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்கிறார்கள். காங்கிரஸ் வென்றுவிடும் என்பதை விட பா.ஜ.க தோற்றுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும். அதனால் காங்கிரஸ் கட்சியில் ஸீட் வாங்க ஆளாளுக்கு தங்களால் இயன்ற தகிடுதத்தங்களைச் செய்துவிட்டார்கள். பெருந்தலைகளை  ‘கவர்’ செய்வதிலிருந்து, சல்லிப்பயல்களுக்கு ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்து கூட்டிக் கொண்டு போய் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் நின்று “எங்கள் அண்ணனுக்கு ஸீட் கொடு” என்றெல்லாம் கூவி கும்மாளம் அடிப்பது வரை கலக்கிவிட்டார்கள். அவ்வப்போது போலீஸ் தடியடி கூட நடந்தது.

இந்த களேபரங்களினால் சி.வி.ராமன் நகர் போன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நேரம் வரைக்கும் அறிவிக்கவில்லை.  திப்பசந்த்ராவும் சி.வி.ராமன் நகர் தொகுதியில்தான் வருகிறது. 

கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் தெரியும்தானே? Yes, You are right! 

“பி.ரமேஷ்”.

விட்டதை பிடிக்க வாழ்த்துக்கள் தல என்று நினைத்துக் கொண்டேன்!